ஆம்னிபஸ் வரலாறில் மிக முக்கியமான வாரம் இது; குறிப்பாக எனக்கு. கர்மசிரத்தையாக கடிவாளம் கட்டினாற்போல் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருந்த நாங்கள், இந்த வாரத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் விதம், அந்த அனுபவங்கள், அதற்கு உதவிய புத்தகங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
"டிவி பாத்துக்கிட்டே குழந்தைகள் தூங்கி விழுகிற நாட்டில் இப்படியும் ஒரு அம்மா" என்று தியானா எழுதிய பதிவைப் பற்றி குறிப்பிட்டார் நண்பர். எங்கள் வீட்டுச் சுட்டி சிலநேரங்களில் இப்படித்தான் இருக்கிறான் என்பதால், “பளார், பளார்” ஓசைகள் அவர் சொன்னதைப் படித்ததும் பின்னணியில் எனக்குக் கேட்டது.
லேனா தமிழ்வாணனிடம் அவர் எழுதிய “ஒரு பக்கக் கட்டுரைகள்” குறித்து ஒருவர் கேட்டாராம், ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதி அறிவுரையா சொல்லித் தள்ளறீங்களே, யாராவது ஒருத்தராவது இதனால கொஞ்சமாவது மாறியிருக்காங்களா?”,
லேனா கூலாக “கண்டிப்பா, நான் நிறைய மாறியிருக்கேனே”, என்றாராம்.
இதை இங்கே நான் குறிப்பிடும் காரணம், எங்கள் வீட்டுச் சுட்டி இப்போதுதான் நாங்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறான். ஆகவே, இனி கதை சொல்லிகளாக நானும் என் மனைவியும் மாறும் அவசியத்தை நிறையவே உணர்த்துகிறது இந்த வாரத்து ”பெற்றோர் - குழந்தைகள்” பதிவுகள். ஆக, இந்த சிறப்பு வாரம் யாருக்கு உதவியதோ இல்லையோ, எனக்கு நிறையவே உதவியிருக்கிறது. அதற்காக, இந்த சிறப்பு வாரக் கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் ஆம்னிபஸ் சங்கத்து சிங்கம் அண்ணன் நடராஜனுக்கு நன்றிக்கு உரியவன் ஆகிறேன்.
இந்த வாரத்துப் பதிவுகள் வாயிலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முறை சார்ந்த சூட்சுமங்களை நான் நிறையவே கற்றுக் கொண்டேன் எனலாம். கூடவே, புத்தகப் பரிந்துரைகளும் கிடைத்தன. நம் குழந்தைகளை எப்படிப் புத்தகப் பித்தர்களாக உருவாக்குவது என்பது குறித்துப் பேசிய என்.சொக்கனின் பதிவு இந்த வாரத்தின் இன்னொரு ஹைலைட்.
என் பிள்ளைப் பருவத்தில் எனக்கு தாத்தா, பாட்டி கதை சொல்லியதில்லை. அம்மா, அப்பா கதை சொல்லிய நினைவில்லை. பாட்டி வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி எப்போதும் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். எல்லா வயதினருக்கும் புத்தகங்கள் உண்டு. வாண்டுமாமாவும் இருப்பார், ராஜேந்திரகுமாரும் இருப்பார். பூந்தளிரும் இருக்கும், புஷ்பா தங்கதுரை நாவலும் இருக்கும்.
மூணாப்பு படிக்கும்போதே ராணிகாமிக்ஸ், கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா என்று எல்லா புத்தகங்களும் நமக்குக் கிடைத்துவிடும். எனவே நினைவு தெரிந்து கதை கேட்டு வளர்ந்ததை விட கதை படித்தே வளர்ந்தோம் எனலாம் (என்னே பெருமை என்னே பெருமை. ஓகே ஓகே).
மூன்று வயது அகில் இப்போது எது யானை எது பூனை என்று கண்டறியும் புத்தகங்களைத்தான் கிழித்துக் கொண்டிருக்கிறான். மேலே நான் சொன்னவைகளுள் கோகுலம் தவிர்த்து மீதமிருக்கும் புத்தகங்கள் இப்பவும் வருகின்றனவா எனத் தெரியவில்லை. எனவே, எனிவே... அந்தப் புத்தகங்களைத் தேட இன்னும் குறைந்தது நான்கு வருடங்களேனும் இருக்கிறது என்பதால் இப்போதைக்கு நாம் படித்து அவனுக்குச் சொல்லத்தக்க புத்தகம் ஏதும் தேடுவோம் என்று தேடியதில் ‘கிழக்கில்’ அகப்பட்டது ‘ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்’ எனும் இந்தப் புத்தகம்.
இரண்டு பக்கத்துக்கு ஒரு கதை என்று நூற்று நாற்பத்து சொச்ச பக்கங்களில் சுமார் எழுபது கதைகள். குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் ரெகுலராக எழுதும் பிரபு சங்கர் கைவண்ணத்தில் தொகுக்கப்பட்டவை இக்கதைகள். ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு நீதி. உம்: “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடாதே, ஏற்றுக் கொண்ட கடமையை செவ்வனே செய்”.
நாம் நம் வயதுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தால், “வாட் எ சில்லி புக் மேன்” என்றுகூட தோன்றலாம். எனினும் நிதானமாகப் படித்தால் இதிலுள்ள கதைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அழகான நீதி சொல்லும் கதைகள்.
நாம் காலப்போக்கில் மறந்து போன நீதிக் கதைகள் இதில் நிறைய. சில கதைகள் பெரிய குழந்தைகளுக்குப் பொருந்தும். இடையிடையே குட்டிச் சுட்டிகளுக்கும் சொல்லவல்ல கதைகள் உண்டு. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பொருள் தேடும் ஓட்டத்தில் பெற்றோர் இருவரும் இரு திசைகளில் ஓடிக்கொண்டிருக்க நம் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளைச் சொல்ல இங்கே யாரும் இல்லை. அதனால் தொலைக்காட்சி குழந்தைகளுக்கு இங்கே முக்கிய கம்பானியன் ஆகிப்போகிறது.
கீழே நான் கொடுத்திருக்கும் இரண்டு திரைப்படம் சார்ந்த கதைகளுக்கும் அடிப்படை நாம் எல்லோரும் பெரும்பாலும் அறிந்த நீதிக்கதைகளே.
முதல் கதை:
நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஏதோவொரு நகைச்சுவை தொலைக்காட்சியில் வடிவேலு தோன்றினார்.
வடிவேலு டீக்கடை ஒன்றில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் அடுத்தவர் “உனக்கு ஜார்ஜ் புஷ் தெரியுமா, பில் கேட்ஸ் தெரியுமா, பின்லேடன் தெரியுமா என்று உலகப் பிரபலங்கள் குறித்து கேட்பார். இவர் தெரியாது, தெரியாது, தெரியாது என்று சொல்ல; எதையும் தெரியாத முட்டாளா இருக்கியே என்று அடுத்தவர் வடிவேலுவைக் கிண்டலடிப்பார்.
“உனக்கு முனுசாமியைத் தெரியுமா?”
“தெரியாது. யார் அந்த முனுசாமி?”
வடிவேலு வாயைத் திறக்குமுன் நண்பரின் ஐந்து வயது அக்கா மகன், “அவன்தாண்டா உன் பொண்டாட்டியை வெச்சுட்டு இருக்கான்”, என்றான்.
வீடே விழுந்து விழுந்து சிரித்தது, நானும்தான்.
கதை இரண்டு:
”ரன்” திரைப்படத்தில் சிறுநகரம் ஒன்றில் தன் அப்பாவை எல்லா விதத்திலும் அவமானம் செய்துவிட்டு, பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார் விவேக். இந்தப் பெருநகரம் அவரை எல்லா விதத்திலும் வஞ்சிக்கிறது; அவரை கோவணத்தோடு சாலையோரத்திற்குத் தள்ளுகிறது. அவர் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் சிரிப்புத் தோரணம் கட்டப்பட்டு, நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது. கவனிக்கத்தக்க பன்ச் டயலாகுகள் அங்கங்கே (உம்.: காக்காக் கறி துன்னா காக்கா மாதிரி கொரல் வராம உன்னீகிர்ஸ்னன் போலவா வரும்?).
கடைசியில் தன்னிடம் மிஞ்சும் கோவணத்துடன் சாலையோர சாமியார் அவதாரம் எடுக்கிறார் விவேக். "அப்பா பேச்சைக் கேளு; அம்மாதான் எல்லாம்" என்று அருளுரை வழங்கிக் கொண்டு பக்தகோடிகள் மீது விபூதி வீசுகிறார் என அவரது கதை நிறைகிறது.
இந்த இரண்டு காமெடிக் காட்சிகளிலுமே நம் குழந்தைகள் நீதியை விட்டுவிட்டு பன்ச் டயலாகுகளை மட்டும் நினைவில் வைத்திருப்பதுதான் இன்றைய உச்சபட்சக் கொடூரம்.
சரி, அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அந்த இரண்டு காமெடி சீக்வென்ஸ்களுக்கும் உரிய ஒரிஜினல் நீதிக்கதையை உங்களால் கண்டறிய முடிந்ததா?
ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் | பிரபு சங்கர் | கிழக்கு | 144 பக்கங்கள் | விலை ரூ.60/-
இன்றைய குழந்தைகள் அப்படி... பெற்றோர்களும் முதலில் அப்படியே...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...
முதல் கதை , ஒரு படகோட்டியிடம் அவனுக்கு தெரியாத விசயங்களை பற்றி கேட்டு கேட்டு அவனை ஏளனம் செய்யும் பயணியிடம், படகோட்டி கப்பலில் ஓட்டை இருக்கிறது உனக்கு நீச்சல் தெரியுமா? என கேட்கும் கதை தானே?
ReplyDeleteஇரண்டாவது கதை எது என கண்டுபிடிக்க முடியவில்லை :)) @shanthhi