காட்டில் ஒரு மான்
அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
Photo courtesy: Amazon
குறிப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் நான் படிக்கும் புத்தகத்தில் தெளிவைக் காணவே எழுதப்பட்டது என்பதுதான். எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கும் நோக்கம் இல்லை. இதன் நோக்கமே அதுதான் என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை - என் மனசாட்சி எனக்குத் தெரியும்.
எல்லாரும் கருத்து சொல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள். விளக்கம் கேட்டால் உண்மையை நோக்கி ஓட வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி, ஒருத்தர் அப்படிச் சொல்கிறாரே, அந்தக் கருத்து தப்பில்லையா என்று கேட்டால், "அது அவருடைய கருத்து," என்று பதில் வருகிறது. "அதற்காக அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேட்டால், "உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் அதை எழுதாமல் இருக்க முடியாது, இல்லையா?" என்று பதில் வருகிறது.
அதுவும் சரிதான் என்று தற்போதைக்கு ஏற்றுக் கொள்வோம்.
அதுவும் சரிதான் என்று தற்போதைக்கு ஏற்றுக் கொள்வோம்.
ஏன் இவரைப் போன்றவர்கள் எதிர்மறை விமரிசனத்தைத் தாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் சிந்தித்த மாதிரியே எல்லாரும் சிந்திக்க வேண்டுமா? அப்படி என்றால், "இந்த கதை/ நாவல் எழுதும்போது இதுதான் எனக்கு தோன்றியது என்றோ இந்தக் கதாபாத்திரம் இந்த அர்த்தத்தில் படைக்கப்பட்டது," என்றோ இவர்கள் தங்கள் அபிமான எழுத்தாளரிடம் சொல்லி ஒவ்வொரு புத்தகத்தின் முன்னுரையிலும் எழுதிவிடச் சொல்லலாமே? என்னை மாதிரி பேக்கு வாசகன் அப்படியாவது இந்த எழுத்துகளை புரிந்துகொள்ள முயற்சி செய்வான், இல்லையா? விஷயத்துக்கு வருகிறேன்.
நிஜமாகவே எனக்கு இது புரியவில்லை. ஆண் எழுத்தாளர்கள் என்றால் பெண்ணின் மாரையும், யோனியையும் எழுத வேண்டும், பெண் எழுத்தாளர்கள் என்றால் ஆண்குறி, மற்றும் பிருஷ்டம் பற்றி எழுத வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? காமத்தைப் பேச இவர்களுக்கு இவ்வளவுதான் கிடைத்ததா? இந்த செக்ஸ் என்ன 365*24*7 நேரமும் ஆணும் பெண்ணும் பண்ணும் வேலையா? பசி, தாகம், வலி போல காமமும் ஒரு உணர்வுதான். ஆனால் அது மட்டும் ஏன் இப்படி இவர்கள் கையில் கிடந்து அல்லாடுகிறது என்று தெரியவில்லை. அதிலும் பெண் எழுத்தாளர்களும் சரி, ஆண் எழுத்தாளர்களும் சரி, கொங்கையை விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.
என்னுடைய அடுத்த பிரச்சனை இது. கதை எழுதுபவர்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் காவியங்களைத் தாண்டி எழுதினால் பரவாயில்லை. நான் ஒத்துக் கொள்கிறேன், இவை எல்லாம் கதைகள்தான், உங்கள் விருப்பத்துக்கு எழுத உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இதில் ஆண் எழுத்தாளர்கள் இந்த புராண காவியங்களை நீட்டிச் சொல்கிறார்கள், அதாவது exponentialஆக இழுத்துக் கொண்டே செல்கிறார்கள். பெண் எழுத்தாளர்கள் இதில் எல்லாம் பெண்கள் எப்படி துன்பப்பட்டார்கள், அதை எப்படி எல்லாம் தற்காலத்துக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் என்றும் யோசித்து எழுதுகிறார்கள்.
“Before Sunrise” என்கிற ஆங்கிலப் படத்தில் வரும் நாயகி இப்படி படத்தின் நடுவே சொல்வார்கள், “...that feminism was mostly invented by men so they could fool around more.” அது மாதிரி இந்த பெண் எழுத்தாளர்கள் பெண்கள்களுக்கு ஆண்கள்தான் வில்லன், அவர்களிடமிருந்து பெண் தப்பித்துக் கொள்வதே விடுதலை என்பது மாதிரி எழுதுவதிலிருந்து கொஞ்சம் விலகி எழுதினால் இன்னும் சிறப்பான கதைகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
சரி, அம்பையின் சிறுகதைத் தொகுப்புக்கு வருவோம். இதில் மொத்தம் 17 சிறுகதைகள். 90 சதவித கதைகள் பெண்ணை முக்கிய கதாபத்திரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு பல மொழிகள் பேசப்படும் பிரதேசங்களிலும் பல ஊர்களிலும் சுற்றிய அனுபவம் இருப்பது இந்தக் கதைகளில் தெரிகிறது. நகர வாழ்க்கையின் அலுப்பும் அதன் சோகங்களும், அதன் தீவிரமும் பல கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.
இதில் எனக்குப் பிடித்த கதை “பயணம்-3”. நான்கு வயது சிறுவனின் வாயில் வெளிப்படும் உண்மையும், அதை படித்தவுடன் ஏற்படும் ஆனந்தமும் (சிரிப்பும்), நன்றாக வெளிப்பட்டுள்ளன. “மல்லுக்கட்டு” கதை கிட்டத்தட்ட “அபிமான்” (ஹிந்தி) படக்கதை.
பயணம்-2 போன்ற கதைகள் பல பேரால் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் கதை திருமணமான ஒரு பெண்- மணமாகாத ஆண், இந்த இருவரிடையே உள்ள உறவு + குழந்தை பற்றி பேசுகிறது. “வாகனம்” கதை சைக்கிள் முதல் கார் வரை பல வாகனங்களை ஓட்ட ஆசைப்படும் பெண், அந்த ஆசை எதுவும் நிறைவேறாமல், எப்படி மௌசைக் கைபிடிகிறாள் என்று சொல்கிறது. “மினுங்கு” கதை மழையில் கூடும் ஆண்- பெண் பற்றியும், “திக்கு” கதை மதவாதிகளைத் தோலுரிக்கும் விதமாகவும் “கடற்கரையில் ஒரு காவிப் பிள்ளையார்” பெரிய பிள்ளையார்களைக் கடலில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பின்விளைவுகள் பற்றி ஒரு சிறு குழந்தை வாயிலாகவும் எழுதப்பட்டுள்ளன. “ஒரு எலி, ஒரு குருவி” நகர வாழ்க்கையின் பரிதாபங்களையும், அதன் சோகங்களையும் மிக நுட்பமாக, இயற்கையோடு, அதாவது பறவை மற்றும் எலியின் துணைகொண்டு சொல்கிறது.
இதில் ஒரே ஒரு கதையை மட்டும் மட்டும் கொஞ்சம் விரிவாக விமர்சனம் செய்ய கை பரபரக்கிறது - “பிரசுரிக்கப்படாத கைப்பிரதி” ஆணால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைக் கதை. திருமகள் முத்துக்குமரனை விரும்புவதாக தன் தந்தையிடம் சொல்கிறாள். அப்போது அவளது தந்தை, முத்துக்குமரனுக்கு கஞ்சா, மது அருந்தும் பழக்கம் உண்டு, என்று சொல்கிறார். அதையும் தாண்டி அவரை மணம் முடிக்கிறாள் “திரு”, இந்த இரண்டு கெட்டப் பழக்கங்களும் பாரதியாரிடம்கூட உண்டு என்று முத்துவை மணம் முடிக்கிற திரு, கொஞ்ச நாள் கழித்து முத்து தன் புத்தியைக் காட்டும்போது அவனது கொட்டையில் உதைக்கிறாள். திருமகளை அடித்துப் போட்டு மனநல மருத்துவமனையில் சேர்க்கிறான் முத்து. நல்லவர்கள் உதவியால் திரு வெளிவருகிறாள், முத்துவைப் பிரிகிறாள். முத்து கடைசியில் குடல் வெந்து சாகிறார் . நல்லா வேணும் அந்த ஆணாதிக்கவாதிக்கு என்கிற மாதிரி இருக்கிறது கதை. இதில் திரு ஆங்கில ஆசிரியர், முத்து தமிழ் கவிதை எழுதுபவர்.
“அடவி” என்ற கதையில் ருத்ரவீணைக்கு எடுத்துக்காட்டாக இப்படி எழுதுகிறார் அம்பை - ”பார்வதி மல்லாந்து படுத்திருந்தபோது அவள் இரு கொங்கைகளைக் குடங்களாகி அவற்றின் முகடுகளைத் தந்திகளால் இணைத்தால் ஒரு அபூர்வ வாத்தியம் அமையுமே என்று எழுந்த கற்பனையில் தோன்றிய இசைக்கருவி”. “பிரசுரிக்கப்படாத கைப்பிரதி”யில் முத்து எழுதும் கவிதையின் உருவகங்கள் “ஆண்குறி கத்தியாய் மாறி பெண்ணைக் கீறுவது போலவும் முலைக்காம்புகள் பிய்ந்து குருதி வடிவது போலவும் கருப்பையிலிருந்து ஊளையிட்ட வாறே நரிகளும் அலறிக் கனைத்தவாறே பன்றிகளும் வருவது போலவும் ஆண்குறி கல்லாக உறைந்து யோனியை அழுத்திச் சிதைப்பது போலவும் ..” கொஞ்சமாவது practicality, reality கதைகளுக்கு வேண்டாமா, அவை கற்பனையாகவே இருந்தாலும்?
கடைசியாக ஒரு நல்ல விஷயம் - இந்தத் தொகுப்பில் நிறைய கதைகளில் சீதா தேவி மற்றும் லக்ஷ்மி தேவி போன்ற கடவுளர்கள் அம்பை என்ற எழுத்தாளர் மூலமாக விடுதலை அடைகிறார்கள். அவர்களும் பாவம் எத்தனை யுகங்கள் கணவனின் காலடியில் உட்கார்ந்து சேவை செய்வது?
This comment has been removed by a blog administrator.
ReplyDelete