பதிவர் : சரவணன்
தமிழவன் தமிழின் முக்கியமான இலக்கியத் திறனாய்வாளர்களில் ஒருவர். பின் நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவற்றைத் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடி. இவருடைய 'படைப்பும் படைப்பாளியும்' என்ற முதல் புத்தகம் சுவாரசியமான ஒன்று. அதில், கவிஞர் இன்குலாப், 'போராடு', 'புரட்சிசெய்' என்கிற ரீதியில் தொழிலாளிக்குச் சொல்வதுபோல எழுதிய கவிதை ஒன்றைக் கட்டுடைத்து, தொழிலாளிக்கு ஆதரவானதுபோலத் தோன்றும் அக்கவிதை உண்மையில் எப்படி தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரானதாக இருக்கிறது என்று காட்டியிருப்பார். அப்புராணித் தொழிலாளி கவிதையில் எங்கும் பேசுவதில்லை, நிஜ உலகைப்போலக் கவிதையிலும் குரலற்று இருக்கிறான் என்று அவர் சுட்டிக்காட்டியதைப் படிக்கும்போது, 'அட, சரிதானே' என்று தோன்றும். அதற்குப் பின் தமிழவன் எழுதிய புத்தகங்கள் அதே சுவாரசியத்தை எனக்குத் தரவில்லை.
பரிசோதனைகள் இல்லாமல் அறிவியல் வளர முடியாது. அதேபோல இலக்கிய வளர்ச்சிக்கும் பரிசோதனைகள் அவசியம். தமிழைப் பொருத்தவரை இன்றைக்குச் சாதாரணமாக இருக்கும் நாவல், சிறுகதை, புதுக்கவிதை, ஏன் உரைநடையேகூட ஒருகாலத்தில் சோதனை முயற்சிகளாக ஆரம்பிக்கப்பட்டவைதானே. இந்தக் காரணத்தாலேயே இலக்கியத்தில் சோதனை முயற்சிகளை வரவேற்க வேண்டும். மேலும் அறிவியலோ, இலக்கியமோ— பரிசோதனைகளில் தோல்வி என்ற ஒன்று கிடையாது, விளைவு எப்படியிருந்தபோதிலும் அதிலிருந்து எதையேனும் கற்றுக்கொள்ளவே செய்கிறோம் என்பதால்.
தமிழவன் கதைகள் தொகுதியில் 13 கதைகள் அடங்கியுள்ளன. தலைப்பில் சிறுகதைகள் என்ற பிரயோகம் தவிர்க்கப்பட்டு, 'கதைகள்' என்றே குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. இவற்றில் ஒன்றிரண்டு தவிர மற்ற கதைகள் யதார்த்த பாணியில் எழுதப்பட்டவையல்ல. அப்படிப்பட்ட கதைகளை நான் முழுதாகப் 'புரிந்துகொண்டு'விடவும் இல்லை. இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை, புரிந்தவரை அவற்றைப் பற்றிய என் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. கதைகளை புத்தகத்திலிருக்கும் வரிசையில் அல்லாமல் எனக்குத் தோன்றிய வரிசையில் கூறுகிறேன்.
இன்னொன்று, தமிழவன் பிரதானமாகப் புனைகதையாளர் அல்ல என்பதால் நல்ல கதையாக வந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடு உள்ள சில கதைகள் சரிவர உருப்பெறாமல் போயிருக்கின்றன. அதாவது, வேறு புனைகதையாளர்கள் நன்றாகக்கொண்டு வந்திருக்கக்கூடிய கதைகளை, தான் ஒரு ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்பதால் அப்படியெல்லாம் நேரடியாக எழுதிவிடக் கூடாது என்று வேண்டுமென்றே ஒரு சிரமமான நடையை வலிந்து உருவாக்கி எழுதியிருக்கிறார் தமிழவன் என்றே தோன்றுகிறது! இந்தக் கதையின் மேற்பரப்பை இலேசாகச் சுரண்டிப் பார்த்தால், உள்ளே இருப்பது வழக்கமாக நாம் வாசித்துப் பழக்கப்பட்ட ஒரு சிறுகதை, வலிந்து புரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எண்ணம் பல கதைகளைப் படிக்கையில் ஏற்படவே செய்கிறது.
அப்படிப்பட்ட கதைகளை, இந்தக் கதையை மட்டும் தமிழவனுக்குப் பதில் வேறொருவர் எழுதியிருந்தால் மீட்டிருக்கலாம் என்று தோன்றியது. அப்படி வேறு யார் எழுதியிருக்க வேண்டும் என்பதையும் (சற்று அதிகப்பிரசங்கித்தனமாக) குறிப்பிட்டிருக்கிறேன்! ஒரு சுவாரசியத்துக்காகத்தான் .
தொகுதியிலேயே எனக்கு ஆகப் பிடித்த கதை வேஷம். பெங்களூரில் ஏதோ ஒரு திராவிடக் கட்சிக்காகப் பேரணிகளில் அறிஞர் அண்ணாவைப் போல உடலில் பெயிண்ட் அடித்துக்கொண்டு செல்லும் அடிமட்டத் தொண்டனின் (இவனே கதைசொல்லி) கதை. ஒருநாள் ஒரு ஊர்வலத்தில் கன்னட அமைப்புகளால் கலவரம் ஏற்படுகிறது. இவன் அடிவாங்கி, இரத்தகாயத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் தன்னை விடுவித்து அழைத்துச்செல்ல வரப்போகும் வட்டச் செயலாளர் சிவப்பிரகாசுக்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது ஒரு கான்ஸ்டபிளிடம் தனக்கும் மணமான கன்னடப் பெண் ஒருத்திக்கும் தொடர்பிருப்பதாகக் கதைபோல விவரிக்கிறான். நிஜத்தில் வட்டச்செயலாளரும், கதைசொல்லியின் மனைவியும் சேர்ந்து அவனுக்குத் துரோகமிழைக்க, அதைத் தட்டிக்கேட்க முடியாத கையாளாகாதவனான அவன் போடும் அந்த வேஷம் (வாசகன் முன்) கலைவதுடன் கதை முடிகிறது. யதார்த்த பாணியில் ஓரளவு நன்றாகவே எழுதப்பட்ட கதை. (இதை சுஜாதா எழுதியிருந்தால்..!)
ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும் 1991 இறுதியில் கர்நாடகத்தில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதை நிகழும் இடமோ, காலமோ குறிப்பிடப்படவில்லை. கலவரங்களுக்குத் தப்பி வேறு ஊருக்கு நடந்துவரும் ஒருவன், சாலையோர சாப்பாட்டுக் கடை ஒன்றில் சாப்பிடச் செல்கிறான். அப்போது அவன் பார்க்கும் சாதாரணமான விஷயங்கள்கூட பயங்கரமாகத் தோன்றி அவனைப் பயமுறுத்துகின்றன. இனக் கலவரத்தில் தப்பி உயிருக்குப் பயந்து ஓடுபவனின் அச்ச உணர்வைக் காட்சிகள் வழியே படம்பிடித்துக் காட்டுவதே இக்கதை. இதே கதையை அசோகமித்திரன் எழுதியிருந்தால் ஒரு மறக்கமுடியாத கதை கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.
பிடிக்காத நிறம் பூசப்பட்ட போலீஸ்வேன் ஸ்திரபுத்தியற்ற தோத்தாங்குளி (loser) ஒருவனின் சித்திரத்தைத் தரும் கதை. கதைசொல்லி, கல்லூரிக் காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தாலும், தோற்றுப்போனவனிடம் அடி வாங்கி அவமானப்படுகிறான் (அதுவும் அடித்தவனின் காதலி பார்க்கையில்). பிறகு இவனது காதலியின் அண்ணன், 'இப்படிப்பட்ட ரவுடிப்பயலையா காதலிச்சே?' என்று அவள் முன்னிலையில் இவனை அடிக்கும்போது அவள் தடுப்பதில்லை (இவன் ரவுடியும் அல்ல). பின்னாளில் யாரோ லைப்ரரியனாக வேலை பார்க்கும் பெண்ணை மணந்துகொண்டிருக்கிறான் என்று அறிகிறோம். இவனுக்கு வேலை வாங்கித்தர அவள் எவ்வளவோ முயற்சி எடுத்தும் இவன் அக்கறை காட்டுவதில்லை. அவள் பொறுமைபோய் இவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட, குறிக்கோளின்றி அலைந்து திரிகிறான். அப்போது ஒரு வங்கியில் அனாவசியத்துக்குப் பைக்குள்ளிருக்கும் சிகரெட் பாக்கெட்டைத் துப்பாக்கிபோலக் காண்பித்து கலாட்டா செய்கிறான். நோக்கம் கொள்ளையடிப்பதல்ல; யாரோ முகமறியாத ஒரு பெண்ணை காஷியர் வசைபாடியதற்குப் பழிவாங்கவே இப்படிச்செய்கிறான். கடைசியில் போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்லப்படும்போது அந்த ஜீப்புக்கு வேறு நிறம் பூசியிருக்கக்கூடாதா என்பதே அவனது பிரதான கவலையாக இருக்கிறது. (இந்தக் கதையை விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்க வேண்டும்!)
பெயரும் கண்ணாடியும் அங்கதக் கதை. மாநில அமைச்சர் அருஞ்செழியன், கி.மு. பத்தாயிரத்தில் (பத்தாயிரமா, பதினைந்தாயிரமா என்று அறிஞர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லையாம்!) ஆட்சிசெய்த, தன் ஆறாம் வயதிலேயே ஆரியர்களையும், திராவிடர்களையும் (?), வந்தேரிகளையும், பகை அரசர்களையும் கொன்று குவித்த மன்னனின் 150 அடி உயரச்சிலையைத் திறந்துவைக்கிறார். அவர் மகன் சேரன் செங்குட்டுவன் ஆங்கிலப் பள்ளியில் படிப்பவன்; பாரில் மது அருந்தித் தன் வயதையொத்த சிறுவர்களுடன் ஆங்கிலத்தில் சண்டை போடுபவன். அமைச்சர் சிலையைத் திறந்துவைத்து ஆற்றிய உரை டேப்பில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்க, சேரன் செங்குட்டுவனின் முகம் சாட்சாத் வரலாற்று சேரனின் முகமாக ஆகிவிடுகிறது! (இதை எழுதியிருக்க வேண்டியவர் இந்திரா பார்த்தசாரதி!)
புளியமரத்திலிருந்து கதை முழுக்கவும் கதைசொல்லி, வாசகரை நோக்கி வளவளவென்று பேசிக்கொண்டேயிருக்கிறான். கடைசியில் இவ்வளவு நேரம் நம்முடன் பேசியது ஒரு இரத்தக் காட்டேரி என்று தெரியவருவது எதிர்பாராத திருப்பம். இருந்தாலும் அதுவரை படிப்பதற்குச் சற்றே பொறுமை வேண்டும். (விக்கிரவாண்டி இரவிச்சந்திரன்?)
காடு கதையில் வருவது நிஜமான காடு அல்ல. காங்கிரீட் ஜங்கிள்தான். நகர மார்க்கெட்டில் ஒரு பையனுடன் கரும்பு (பையனுக்கு), தேங்காய் என்று வாங்கியபடி அலைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிய கதை. இடையில் ஒரு பொறுக்கியுடன் நடக்கும் சில்லறைத் தகராறு, செருப்பு அறுந்து போவது, பேருந்தைத் தவற விடுவது என்று சாதாரண சம்பவங்களாக வந்தபடி இருக்கின்றன. கதை நகரச்சூழலில் அந்நியமாகும் அனுபவத்தைப் பேசுவதாகக் கொள்ளலாம். இது எந்த வாசக அனுபவத்தையும் படிப்பவர்களுக்குத் தருவதில்லை. இம்மாதிரி சம்பவக்கோவையாகச் செல்லும் கதைகளை அசோகமித்திரன் சிறப்பாக எழுதுவார். அதில் வரும் சம்பவங்கள் படித்தவர்களுக்குப் பல வருடம் ஆனாலும் மறக்காது. தமிழவனிடம் அப்படி ஒரு படைப்பை உருவாக்கும் படைப்பாற்றல் இல்லை.
காரல் மார்க்சும் தாணு ஆசாரியும் யதார்த்த பாணிக் கதைதான். காரல் மார்க்ஸ் போன்ற தோற்றம் கொண்ட ஒரு கிராமத்து ஆசாரி (இரும்புக் கொல்லன்) பற்றிய கதை. ஆசாரியின் பேச்சு மனிதர்களின் ஆழமான குணங்களைத் தொட்டுச் செல்லுமாம். ஏதோ அவரைப்பற்றிய பிம்பம் உடைவது பற்றிக் கதை பேசுகிறது. என்னதான் ஒரு ஆள் பணம் சம்பாதிப்பதில் ஆசை வைத்தவரில்லை என்றாலும், மகன் ஒரு வேலையும் செய்யாமல், தொழிலையும் கற்றுக்கொள்ளாமல் சுற்றிக்கொண்டிருந்தால் யார்தான் கவலைப்பட மாட்டார்கள்? இதில் என்ன பெரிய பிம்பம் உடைந்துவிட்டதாம்? இதில் கதைக்குத் தேவையே இல்லாமல் தாமஸ் வைத்தியர் என்ற மனநிலை தடுமாறிய பாத்திரம் வேறு. (இந்தக் கதைக்கு சா.கந்தசாமிதான் சரி!)
பூட்ஸ் கால்களில் சிக்கிய நட்சத்திரங்கள் கதை ஈழத்தமிழர், காஷ்மீரிகள் போன்று இராணுவ அடக்குமுறைக்கு ஆளாகி அச்சத்தில் வாழ்ந்துவரும் மக்களினம் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. புரியாத மொழியில் பேசும் அடக்குமுறையாளர்கள் அடிக்கடி அவர்களில் யாரையாவது ஒரு மலையைத்தாண்டி இழுத்துச் செல்வதும், துன்புறுத்திக் கொல்வதும், வீடுகளைச் சூறையாடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதை எளிய நடையில் 'உருக்கமான' கதையாக எழுதியிருந்தால் வெற்றி பெற்ற ஆக்கமாகியிருந்திருக்கும். புறவயமான தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகும் பாணி இதற்குப் பொருந்தவில்லை. (ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் யாராவது எழுதியிருக்கணும்!)
கைது செய்பவர்களும் காத்திருப்பவனும் கதை, தன்னைக் கைதாகாமல் காப்பாற்றி அழைத்துச்செல்ல வரவேண்டிய தனது இயக்கத்தைச் சேர்ந்த ஆளுக்காகக் காத்திருக்கும் ஒரு புரட்சிக்காரனைப் பற்றியது. இதில் அவனுக்கு இரண்டு தலைகள் என்று சர்வசாதாரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இதனால் உருவாக்கப்படும் மாயத்தன்மை முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. எனவே 'இரண்டு மனம்' என்று சாதாரணமாகச் சொல்லப்படுவதையே இரண்டு தலை என்று ஆசிரியர் குறியீடாகச் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். (ஆயாசமும், உளவியல் சிக்கலும்—இது கோபிகிருஷ்ணன் ஏரியா!)
ஸ்கொயர் கதையில் ஒரு நகரத்தின் சதுக்கத்தில் மக்கள் அரட்டையடித்துக்கொண்டு, கொறித்துக்கொண்டு, கடைகளில் விலை விசாரித்துக்கொண்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது இளைஞர்கள் குழு ஒன்று ஏதோ புரியாத மொழியில் எழுதப்பட்ட பதாகைகளை வைத்துக்கொண்டு அங்கு வந்து நிற்கிறது. ஒரு போலீஸ்காரன் ரைபிளுடன் அலைந்துகொண்டிருக்கிறான். ஜனங்கள் ஏதோ நடக்கப்போகிறது என்று பயம் கலந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஒரு நாய் சதுக்கத்தில் குறுக்கே ஓடுகிறது. ஒரு சிறுவன் ஏதோ பாடலைப்பாடிவிட, அங்கு பயம் உச்சநிலையை அடைகிறது. அது ஏதேனும் தடைசெய்யப்பட்ட பாடலாக இருக்கலாம். அவனது தந்தை அவன் பாடுவதைத் தடுக்கச் செய்யும் முயற்சி பலிப்பதில்லை. சதுக்கத்தை நகரோடு இணைக்கும் சிமெண்ட் பாதையில் பாடிக்கொண்டே ஓடுகிறான் சிறுவன். அங்கிருந்து அவன் பாடல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சிறிது நேரத்தில் அங்கிருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. நல்லவேளையாகச் சுடப்பட்டது அந்த நாய்தான் (குறுக்கே ஓடியதே) என்று தெரியவருகிறது. இந்தக் கதையை மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் அரச பயங்கரவாதம் பற்றிய கதையாகப் படிக்கலாம். இதில் தேவையில்லாத பகுதிகளை நீக்கி, சரளமாகப் படிக்கும் விதத்தில் மாற்றி எழுதினால் ஒரு நல்ல கதை கிடைக்கலாம். இப்போதைய வடிவில் படிக்கிற நமக்கு எந்தப் பதட்டத்தையும் கதை ஏற்படுத்துவதில்லை.
தகரக்கொட்டகை மற்றும் தவளை மனிதர்கள் ஒரு ஃபான்டஸி கதை. வரலாற்றில் எப்போதோ தகரக்கொட்டகை மனிதர்களுக்கும் (இவர்கள் மனிதத்தோற்றம் உடையவர்கள்), தவளை மனிதர்களுக்கும் (இவர்கள் தவளைகள் போன்றவர்கள்) இடையில் நிலவிய பகை, போர்ப்பிரகடனங்கள், சமாதானங்கள் போன்றவற்றைப் பற்றிப் பேசுகிறது. இதன் நடை படிப்பதற்கு மிகவும் சிரமம் தரக்கூடியது -
“இன்று தகரக்கொட்டகையைச் சுற்றி தவளை மனிதர்களுக்குச் செத்த காட்டு மிருகங்களின் ஆவிகளைக் கொணர்ந்து வர்ணம் தீட்டுவதென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. சரியாய், காலை ஏழு மணிக்குச் சூர்யக் கதிர்களின் நெருப்புச்சூடு சங்கீதத் திவலையாய் தவளைகளின் பச்சை நரம்புகளில் படர ஆரம்பித்தவுடன் தவளைகள் ஆலோசனையின்றி அசைய ஆரம்பித்தன. சற்றுநேரம் ஆயிரமாயிரம் தவளைகள் பற்களுக்கிடையில் இருளையும் சப்தத்தையும் கடித்தபடி அசைந்தன.” (பக் 46)
. தமிழவனையும், புத்தகத்தை அச்சுக் கோர்த்தவரையும் தவிர எத்தனை பேர் இதை முழுதும் படித்தார்கள் என்பது பெரிய கேள்விக்குறியே!
தொகுப்பின் முதல் கதையான சிதறியபடி ரூபங்கள் அதிகார மையங்களின் அடக்குமுறை பற்றிய அங்கத முயற்சி. அங்கதத்துக்குத் தேவையான நகைச்சுவை இதில் இல்லை -
“‘ஜாப் அப் கப்’—காதுகள் நீளமான ஒருவன் வந்து அழைத்தான். தன் பெயரைக்கேட்டு மஞ்சள் சட்டை உள்ளே நுழைந்தான். மிக விரைவில் அவன் வெளியே வந்தபோது தன் நகங்களை வெட்டி சுத்தம்செய்து அனுப்பினர் என்றான். பல மஞ்சள் சட்டைகள் அவமானம், அவமானம் என்று முகம் சுழித்தனர். அது எப்படி அவமானமாகும், சுகாதார நிபுணர்கள் பரிந்துரை செய்யும் காரியமாயிற்றே என ஒருவனிடமு கேட்க அவன் அந்த ஊரில் அவமானகரமான விஷயங்கள் பல பிற ஊர்களில் அப்படி இல்லை என்றான். பலர் வாசலை நெருங்கினர். அப்போது ஒருவன் ஜன்னல் கம்பியிலிருந்து கீழே விழுந்தான். மிண்டும் குரங்குபோல ஏறிக் கடலையைத் தின்னலானான். தரை எங்கும் வெற்றிலையைத் துப்பிப் போட்டிருந்தனர்.” (பக் 10)
(ஞாநி, நாடகமாக!)
கடைசிக்கதையான சொற்பொழிவுகள் மேடைப் பேச்சுகளைப் பகடி செய்கிறது. 'மேடை. அகலம் 10 அடி. நீளம் பதினைந்து அடி. மேடை தரையிலிருந்து மூன்றடி உயரம். உயரம். உ+ய்+அ+ர+ம். ரம். 'ரம்' அடித்தால் போதை. போதை. போதை. போதையில் 'போ'வுக்குக் கால் போனால் பேதை.' என்று ஆரம்பித்து அதே போல அர்த்தமற்றுச் சென்று முடியும் வரிகள். மேடைப்பேச்சைத்தான் நச்சென்று நாலைந்து வரியில், இதற்குப் பல ஆண்டுகள் முன்பே ஞானக்கூத்தன் பகடி செய்துவிட்டாரே, போதாதா?
ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால், எந்த பாணிக் கதை என்றாலும் 'அடுத்தது என்ன?' என்ற சுவாரசியம் முக்கியம். 'ஒரு ஊர்ல ஒரு நரியாம்' என்றதும் இந்த சுவாரசியமே அடுத்தவரியை நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. கஷ்டப்பட்டுப் படிப்பதற்கு ஒரு சிறுகதைத்தொகுதி என்பது பாடப்புத்தகம் அல்லவே? இந்தத்தொகுப்பில் ஒருசில கதைகள் தவிரப் பெரும்பாலானவை அந்த சுவாரசியத்தைத் தரவில்லை. தமிழவனிடம் ஆர்வமூட்டக்கூடிய மொழிநடையும் இல்லை; அல்லது அப்படியெல்லாம் ஆர்வமூட்டுவதுபோல எழுதிவிடக்கூடாது என நினைக்கிறார் போலும். வேஷம் கதையில் ‘அறிஞர் அண்ணா’ என்பதைக் கன்னட கான்ஸ்டபிள் சொல்லத்தெரியாமல் ‘ஆர்ஞ்சண்ணா’ என்றே குறிப்பிடுவது மாதிரியான ரசிக்கத்தக்க நகைச்சுவையை ஓர் இழையாக மற்ற கதைகளிலும் பின்னியிருந்திருக்கலாம். ஆனாலும் பின்னட்டைக் குறிப்பில் கூறப்படுவதுபோல 'இது ஒரு புதுவித கதைத்தொகுப்பு' என்ற அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழவன் கதைகள்
காவ்யா
முதல் பதிப்பு டிசம்பர் 1992 பக்கங்கள் 122
பெங்களூர் 560 038
No comments:
Post a Comment