நல்ல இலக்கியம் என்பது உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக் குரல்களையும் முகங்களையும்போல சாயல்களும் தனித்தன்மையும் வளமாகக் கொழிக்கின்றன. உண்மையைக் காணத் திராணியில்லாதவர்கள் வேறு எவற்றுக்கெல்லாமோ ஆசைப்பட்டுத் தங்களையே நகல்களாக்கிக் கொண்டு விடுகிறார்கள்.
தி.ஜானகிராமன்
பார்த்துப் பார்த்துத் தீராதவையான கடல், கானகம் போன்றவற்றின் பட்டியல்போல வாசித்துமாளாத சில தமிழ்ப் படைப்புகளின் வரிசை என் மனதுக்குள் இருக்கிறது. அதில் ஒன்று தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’.
மீசை அரும்பத் தொடங்கிய பருவத்தில் முதன்முதலாக வாசித்த இந்த நாவலை மீசைவெளுத்திருக்கும் வயதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் வாசிக்க நேர்ந்திருக்கிறது. அந்தந்த வயதின் அறிவுக்கும் உணர் வுக்கும் ஏற்ப நாவலை அணுகும் விதங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பது வயது வாசிப்பின்போது நாவல் விருப்பத்துக்குரியதாக இருந்ததன் காரணம் அதன் இலக்கியக் குணம் மட்டுமல்ல. ‘முன்னங்கையின் சதைத் திரட்சியும் மென்மையும் - தண்ணென்று நெருக்கிக் கட்டிய ஜவந்தி மாலைபோல - மார்பிலும் முதுகிலும் அழுந்திய’ அரூபப் பெண் ஸ்பரிசம் தந்த ரகசியக் கிறக்கமே அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டியது. கிறக்கம் கலைந்த பின்னாள் வாசிப்புகளில் நாவல் வெவ்வேறு பொருள்களில் விளங்கியது. அதற்குள் இயங்கும் சிந்தனைத்தளம் தொடர் வாசிப்புக்கு ஈடு கொடுத்தது. நுண் தகவல்களும் காலத்தை மனவியக்கமாக மாற்றியிருக்கும் நேர்த்தியும் பாத்திர உருவாக்கத்தில் செலுத்தியிருக்கும் உளவியல் பின்னல்களும் அதை ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்பித்தன. கடல்போல ஆழ்ந்தும் கானகம்போல அடர்ந்த வழிகளைக் காண்பித்தும் மனதில் நிரந்தர இருப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது; இருக்கிறது. முந்தைய வாசிப்பில் கவனிக்க மறந்தவையும் பிடிபடாமல் பதுங்கியவையுமான நுட்பங்களை மறுவாசிப்பில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பின்வரும் உதாரணத்தைச் சொல்லலாம்.
தாய் என்ற நிலையில் போற்றப்படும் அலங்காரத்தின் ‘பிறழ் உறவே’ நாவலின் மையப் பிரச்சனை. அவள் பிற ஆடவனின் உறவில் தோய்ந்திருப்பதையும் அந்த உறவின் சாட்சியங்களாக மூன்று பிள்ளைகளைப் பெற்றிருப்பதையும் கணவர் தண்டபாணி அறிந்திருக்கிறார். ஆனால் அவரால் அதை ‘என்ன பண்றது?’ என்ற மழுங்கிய கேள்வியுடன் சகித்துக்கொள்ளத்தான் முடிகிறது. ஹைகோர்ட் ஜட்ஜையும் கல்லூரிப் பிரின்சிபாலையும் பாங்க் சேர்மனையும் தன் சொல்லுக்குப் பணிகிறவர்களாக அறிவால் அதிகாரம் செய்யமுடிந்த தண்டபாணியால் அலங்காரத்தை உதாசீனம் செய்யவோ குற்றப்படுத்தவோ புறக்கணிக்கவோ முடிவதில்லை. அதற்குக் காரணம் அவரது மனநிலைதான். ‘சாதாரணமாக எல்லாப் பெண்களிடமும் காண்பதைவிட எல்லாமே சற்றுக் கூடுதலாக இருக்கும். உயரம், தலையளவு, கைகால் நீளம், உடல் திரட்டு, தலைமயிர் எல்லாமே. சில சமயம் இவளைக்கட்டி ஆண்டுவிட வேண்டும் என்று தண்டபாணிக்கு வெறி வந்துவிடும்’. அந்த ஆளும் வெறியே அலங்காரம் அவரிடமிருந்து விலகக் காரணமாக இருந்திருக்கலாம். தான் ஆளத் தோதானவனாக சிவசுவைக் காண அந்த விலகலே அலங்காரத்துக்கு ஊக்கமளித்துமிருக்கலாம். நாவலில் இது ஓர் அவிழாப்புதிர். கதைப் போக்கின் எந்த இடத்திலும் சிவசு அலங்காரத்தின் சொல்லை, சரியாகச் சொன்னால் கட்டளையை மீறுவதேயில்லை; மிகவும் கீழ்ப்படிதலுள்ளவனாகவே சித்தரிக்கப்படுகிறான் என்பதைக் கவனத்தில் கொண்டால் இது புரியும். அலங்காரத்தை ஆளும் வேட்கை மறுக்கப்படும்போது தண்டபாணிக்கு ஏற்படும் குமைச்சல் குற்ற உணர்வாகவும் தன்னிரக்கமாகவும் மாறுகிறது. ‘அலங்காரம் என்று பெயர் வைத்தார்களே சரியாக - லக்ஷ்மி, சரஸ்வதி, விசாலம், கௌரி, சங்கரி என்று இத்தனை பேர்களை விட்டுவிட்டு அலங்காரமாம் அலங்காரம். தேவடியாளுக்கு வைக்கிறாற்போல’ என்று புலம்புகிறது. இந்த மனநிலைதான் அவரைக் ‘கையாலாகாதவராக’ இருக்கச் செய்கிறது.
மீசை அரும்பத் தொடங்கிய பருவத்தில் முதன்முதலாக வாசித்த இந்த நாவலை மீசைவெளுத்திருக்கும் வயதுவரை பல்வேறு சூழ்நிலைகளில் வாசிக்க நேர்ந்திருக்கிறது. அந்தந்த வயதின் அறிவுக்கும் உணர் வுக்கும் ஏற்ப நாவலை அணுகும் விதங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்திருக்கின்றன. பதினெட்டு, பத்தொன்பது வயது வாசிப்பின்போது நாவல் விருப்பத்துக்குரியதாக இருந்ததன் காரணம் அதன் இலக்கியக் குணம் மட்டுமல்ல. ‘முன்னங்கையின் சதைத் திரட்சியும் மென்மையும் - தண்ணென்று நெருக்கிக் கட்டிய ஜவந்தி மாலைபோல - மார்பிலும் முதுகிலும் அழுந்திய’ அரூபப் பெண் ஸ்பரிசம் தந்த ரகசியக் கிறக்கமே அதைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டியது. கிறக்கம் கலைந்த பின்னாள் வாசிப்புகளில் நாவல் வெவ்வேறு பொருள்களில் விளங்கியது. அதற்குள் இயங்கும் சிந்தனைத்தளம் தொடர் வாசிப்புக்கு ஈடு கொடுத்தது. நுண் தகவல்களும் காலத்தை மனவியக்கமாக மாற்றியிருக்கும் நேர்த்தியும் பாத்திர உருவாக்கத்தில் செலுத்தியிருக்கும் உளவியல் பின்னல்களும் அதை ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப்பித்தன. கடல்போல ஆழ்ந்தும் கானகம்போல அடர்ந்த வழிகளைக் காண்பித்தும் மனதில் நிரந்தர இருப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது; இருக்கிறது. முந்தைய வாசிப்பில் கவனிக்க மறந்தவையும் பிடிபடாமல் பதுங்கியவையுமான நுட்பங்களை மறுவாசிப்பில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பின்வரும் உதாரணத்தைச் சொல்லலாம்.
தாய் என்ற நிலையில் போற்றப்படும் அலங்காரத்தின் ‘பிறழ் உறவே’ நாவலின் மையப் பிரச்சனை. அவள் பிற ஆடவனின் உறவில் தோய்ந்திருப்பதையும் அந்த உறவின் சாட்சியங்களாக மூன்று பிள்ளைகளைப் பெற்றிருப்பதையும் கணவர் தண்டபாணி அறிந்திருக்கிறார். ஆனால் அவரால் அதை ‘என்ன பண்றது?’ என்ற மழுங்கிய கேள்வியுடன் சகித்துக்கொள்ளத்தான் முடிகிறது. ஹைகோர்ட் ஜட்ஜையும் கல்லூரிப் பிரின்சிபாலையும் பாங்க் சேர்மனையும் தன் சொல்லுக்குப் பணிகிறவர்களாக அறிவால் அதிகாரம் செய்யமுடிந்த தண்டபாணியால் அலங்காரத்தை உதாசீனம் செய்யவோ குற்றப்படுத்தவோ புறக்கணிக்கவோ முடிவதில்லை. அதற்குக் காரணம் அவரது மனநிலைதான். ‘சாதாரணமாக எல்லாப் பெண்களிடமும் காண்பதைவிட எல்லாமே சற்றுக் கூடுதலாக இருக்கும். உயரம், தலையளவு, கைகால் நீளம், உடல் திரட்டு, தலைமயிர் எல்லாமே. சில சமயம் இவளைக்கட்டி ஆண்டுவிட வேண்டும் என்று தண்டபாணிக்கு வெறி வந்துவிடும்’. அந்த ஆளும் வெறியே அலங்காரம் அவரிடமிருந்து விலகக் காரணமாக இருந்திருக்கலாம். தான் ஆளத் தோதானவனாக சிவசுவைக் காண அந்த விலகலே அலங்காரத்துக்கு ஊக்கமளித்துமிருக்கலாம். நாவலில் இது ஓர் அவிழாப்புதிர். கதைப் போக்கின் எந்த இடத்திலும் சிவசு அலங்காரத்தின் சொல்லை, சரியாகச் சொன்னால் கட்டளையை மீறுவதேயில்லை; மிகவும் கீழ்ப்படிதலுள்ளவனாகவே சித்தரிக்கப்படுகிறான் என்பதைக் கவனத்தில் கொண்டால் இது புரியும். அலங்காரத்தை ஆளும் வேட்கை மறுக்கப்படும்போது தண்டபாணிக்கு ஏற்படும் குமைச்சல் குற்ற உணர்வாகவும் தன்னிரக்கமாகவும் மாறுகிறது. ‘அலங்காரம் என்று பெயர் வைத்தார்களே சரியாக - லக்ஷ்மி, சரஸ்வதி, விசாலம், கௌரி, சங்கரி என்று இத்தனை பேர்களை விட்டுவிட்டு அலங்காரமாம் அலங்காரம். தேவடியாளுக்கு வைக்கிறாற்போல’ என்று புலம்புகிறது. இந்த மனநிலைதான் அவரைக் ‘கையாலாகாதவராக’ இருக்கச் செய்கிறது.
இதே பாத்திர மனநிலை தமிழில் இன்னொரு நாவலிலும் இடம்பெறுகிறது. நீல. பத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுர’த்தில். கணவன் அனந்தன் நாயர் மனைவி கார்த்தியாயினியிடம் கொண்ட உறவிலும் இதே உளச்சிக்கல் இழையோடுகிறது. பெண்பார்க்கச் சென்று ‘அந்த அபூர்வ நொடியில் நெடுஞ்சாண் கிடையாக அவள் முன்னால் விழுந்து அவள் தளிர்ப்பாதங்களை நனைக்க வேண்டுமென்று தன் அந்தக் கரணத்தில் எழுந்த அந்த வெறிதான் எவ்வளவு பைத்தியக்காரத்தனமானது’ என்று பின்னர் யோசிக்கும் அனந்தன் நாயர் அந்தத் தருணத்தில் சொல்வது ‘அம்மே இந்தப் பெண் வேண்டாம்’ என்றுதான். ‘ஆலயத்தில் வைத்து ஆராதனை செய்ய வேண்டிய அழகைப் பள்ளியறையில் சிறை செய்வது முறையாகுமா?’ என்ற தடுமாற்றம்தான் அந்த உறவைக் குலைக்கிறது. கார்த்தியாயினி வேறு ஒருவரை நாடிப்போகிறாள். எஞ்சிய வாழ்க்கை முழுவதும் அவர் தன்னிரக்கத்திலும் மனைவியாக இருந்தவள்மீதான குற்றச்சாட்டிலும் கழிக்கிறார்.
தன் ஆளுகைக்குப் பெண்ணை உட்படுத்த விழையும் ஆண்நிலையும் அதற்கு எதிரான பெண்ணின் மனத்திருப்பமும் வெளிப்பட்டது மறுவாசிப்பில்தான். அலங்காரத்தை உந்துவது காமம் மட்டுமல்ல; தன் உடல்மீதான உரிமையைத்தானே நிர்ணயிக்கும் உரிமை. அதை அவளே எடுத்துக்கொள்கிறாள். மூன்றாவது பிள்ளையான அப்பு பிறந்த பிறகு அவனைக் கவனிக்கவே அவளுக்குப் பொழுது சரியாயிருந்தது. அப்புவின் தம்பியான வேம்புவுக்குப் பிறகு கணவனுடனான ஈடுபாடு குறைந்து நின்றே போகிறது. ‘வேதாந்தமெல்லாம் வாயைக் கிழிச்சுண்டு பாடம் சொல்லியாறது. போறும்னு நான் சொன்னா உடனே புரியலேன்னா என்ன பண்றது?’ என்று விலகும் அலங்காரம் அதன் பின்னரும் பிள்ளை பெறுகிறாள். ‘கடைசி மூணும்தான் அவ மனசோட பெத்த குழந்தைகள்னு தோண்றது’ என்று அப்புவின் சகோதரி சொல்கிறாள்.
தன்னுடைய உடல்மீதான உரிமையை நிலைநாட்டுவது; தன் இச்சைப்படி மகப்பேறை நிர்ணயிப்பது. இந்த இருநிலை உளவியல் வேட்கையை அலங்காரம் நிறுவிக்கொண்டிருக்கிறாள் எனலாம். இது இன்றைய பார்வை. நாவல் எழுதப்பட்ட காலத்தில் இந்தப் பார்வைக்கான அறிகுறி இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜானகிராமன் அந்த நோக்கில் சிந்தித்திருக்கவும் முகாந்திரமில்லை. ஆனால் இந்தப் பார்வையைப் பொருத்திப் பார்க்க இப்போது நாவலில் இடம் இருக்கிறது. செவ்வியல் படைப்பின் இலக்கணங்களில் ஒன்று புதிய பார்வைக்கு இடமளிப்பதாக அது இருக்க வேண்டும் என்பது. ‘அம்மா வந்தாள்’ அதை நிறைவேற்றுகிறது என்றே எண்ணுகிறேன்.
மேற்சொன்ன பார்வையின் தொடர்ச்சியாகவே இன்னொரு கருத்தையும் அடைய முடியும். தன் விருப்பத்தின் பேரிலும் சரீரத்தின் மீதான தன்னுரிமையாலும் அல்லது ‘காலைச் சுத்தின பாம்பானா விடாம வந்து தொலைச்சிண்டேயிருக்கு’ என்ற நிர்ப்பந்தத்தாலும் தனது உறவைத் தொடர்கிறாள். மரபுகளும் சமூகமும் சொல்லும் பொருளில் அதைக்குற்றம் என்று உணர்கிறாள். பாவம் என்று மறுகுகிறாள். அதற்குப் பிராயச்சித்தம் பண்ணிக்கொள்ளவே அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள். இந்த ஒப்புக்கொள்ளலுக்கு வேறொரு விளக்கமும் மறுவாசிப்பில் தோன்றுகிறது. பிற ஆடவனுடனான உறவைக் கைவிடாமலேதான் அலங்காரம் தண்டபாணியுடனான குடும்ப உறவிலும் இருக்கிறாள். தன்னைத் தீண்ட அனுமதிக்கப்படாத மனிதருடன் - கணவர் தண்டபாணியுடன் - அவரது பராமரிப்பில் வாழ்வது அவருக்குச் செய்யும் வஞ்சனை என்ற அற உணர்வு அலங்காரத்துக்கு இருக்கிறது. அந்த அறக் குரலால் உந்தப்பட்டுத்தான் அவள் பாவத்தைக் கழுவக் காசிக்குப் போகிறாள். தண்டபாணியைப் பற்றி அவள் அப்புவிடம் சொல்லும் வார்த்தைகள் - “அப்பாவுக்கு எதுக்குடா காசி? அது ஞான சூரியன். கருணாமூர்த்தி. என்னைக் கருக்கிப் போடாம இருந்ததே இத்தனை நாளா? அதுவே பெரிசு” - இதை உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கருத்தை நாவலின் பக்கங்களில் பொருத்தும்போது படைப்பு ஓர் ஆன்மீகத் தளத்துக்கு இயல்பாகவே உயர்கிறது.
‘அம்மா வந்தாள்’ நாவலின் முதல் பதிப்பு 1966இல் (வாசகர் வட்டம் வெளியீடு) வெளிவந்தது. அந்த ஆண்டையொட்டிய காலத்திலோ அல்லது அதற்கு முன்னோ அதை தி. ஜானகிராமன் எழுதியிருக்க வேண்டும். ஒரு நாவலாகவே கச்சிதமான வடிவத்தில் எழுதப்பட்ட ஜானகிராமன் படைப்பு இதுவாகவே இருக்கும். மூன்று பெரிய அத்தியாயங்கள். அதற்குள் சிறு பகுப்புகள். காவிரிக்கரைக் கிராமமான சித்தன் குளத்திலிருந்து சென்னைக்குச் சென்று மீண்டும் கிராமத்துக்கே திரும்பும் கதையோட்டம். மூன்று அத்தியாயங்களிலும் முன்னும் பின்னுமாக அலைவுறும் காலம். சரியாகச் சொன்னால் பிள்ளைப் பருவத்தில் வேதம் படிக்கச் செல்லும் அப்பு அதே வேத பாடசாலையில் கற்பிப்பவனாக மாறுவதற்கிடையிலான சம்பவங்களில் காலம் விண்டுவைக்கப்படுகிறது.
நாவலின் கதையை இப்படிச் சுருக்கலாம்.
பாவம் செய்துவிட்டதாக நினைக்கும் அலங்காரம் பாவத்திலிருந்து விடுபடவே தன்னுடைய பிள்ளை அப்புவை வேதம் கற்க அனுப்புகிறாள். காவிரிக் கரையிலிருக்கும் சித்தன் குளத்தில் பவானியம்மாள் நடத்தும் பாடசாலையில் கற்கிறான். பதினாறு வருட முடிவில் வேதத்தைத் தவிர வேறு எதையும் தெரிந்துகொள்ளாத அப்பு பெற்றோரிடம் - உண்மையில் அம்மாவிடம் - திரும்பத் தயாராகிறான். சிறு வயது முதல் அவனையே மனதுக்குள் கணவனாக வரித்துக்கொண்டிருக்கும் இந்து - அவள் இப்போது கைம்பெண் - அவன் பாடசாலையிலேயே தங்கிவிட விரும்புகிறாள். அவன்மீதான தன்னுடைய ஈடுபாட்டைச் சொல்லுகிறாள். புரிந்துகொள்ளத் தயங்கும் அவனுக்குத் தன்னுடைய வேட்கை ததும்பும் உடலாலும் சுட்டிக்காட்டுகிறாள். அவள் தனக்குத் தங்கைபோல. அவளை ஏற்பது அம்மாவுக்குச் செய்யும் துரோகம் என்று நம்புகிறான். அந்த நம்பிக்கையில் அவன் வார்த்து வைத்திருக்கும் அம்மாவின் பளிங்கு பிம்பத்தின்மீது படிந்திருக்கும் கறையை இந்து சுட்டிக்காட்டுகிறாள். சென்னை வந்து சேர்ந்த பின்னர் அவள் சொன்ன உண்மை புரிந்து அதிர்ச்சியடைகிறான் அப்பு. அவனுக்குப் புதிதாகத் தெரிய வரும் அந்த உண்மை அவனுடைய அப்பா தண்டபாணி, அதே வீட்டில் இருக்கும் சகோதரர்கள் கிருஷ்ணன், கோபு, வேம்பு, காவேரி எல்லாருக்கும் தெரிந்தே இருக்கிறது. அம்மாவின் கூடா உறவான சிவசு அடிக்கடி வீட்டுக்கு வந்து போவதை அவர்கள் மௌனமாக ஏற்கவே செய்கிறார்கள்.
தொலைவில் சேலத்திலிருக்கும் அக்கா பார்வதிக்கும் அந்த உறவு தெரிந்திருக்கிறது. அதனால் பிறந்த வீட்டுக்குவராமல் இருக்கிறாள். இந்த மௌன இறுக்கத்திலிருந்து விடுபட அப்புவுக்கு ஒரே ஒரு வழிதான் திறந்திருக்கிறது. மறுபடியும் பாடசாலைக்கு, இந்துவின் காதலுக்குத் திரும்புகிறான். ஆச்சாரங்களில் ஊறிய பவானியம்மாளும் அதை ஏற்றுக்கொள்கிறாள். தனது பாவ விமோசனத்தின் வழி அடைபட்ட அலங்காரம் பாவத்தைக் கழுவ காசிக்குப் போகிறாள்.
இப்படி ஒரு கதையோட்டமுள்ள புனைவுக்கு இன்று இடமில்லை. நாவலில் காட்டப்படும் கிராமம் இல்லை. வேத பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பும் சுமாரான வசதிகொண்ட குடும்பமும் இருப்பதற்கில்லை. விதவையை முடக்கிவைக்கும் மரபும் இல்லை. பழைய சமுதாய வழக்கங்கள் ஏற்கத் தகுந்தவையாக இல்லை. இந்த நாவல் இன்று எழுதப்படுமானால் காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகக் கருதப்படும்.
இது எழுதப்பட்ட அறுபதுகளையொட்டிய காலத்திலும் மேற்சொன்ன ‘இல்லைகள்’ இருந்திருக்க வேண்டும். எனினும் ‘அம்மா வந்தா’ளை எழுதியதற்காக தி. ஜானகிராமன் பிரஷ்டம் செய்யப்பட்டார். அவரது சொந்த கிராமமான தேவங்குடிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. ‘‘அம்மா வந்தா’ளைப் பற்றிச் சொல்ல ரகசியங்கள் ஏதுமில்லை. நூல்தான் முக்கியம். எப்படி, ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை. கலைப்படைப்பு என்ற நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றிவிட்டார்கள். நான் ‘பிரஷ்டன்’ என்றும் சொல்லிவிட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிருந்துதான் வருகிறது’ என்று அவரே குறிப்பிட்டார். அவருடைய படைப்பு மனநிலையின் ஆதார உணர்வாகவே இதைக் காண்கிறேன். விலக்கப்பட்டவர்கள் சார்பில் பேசும் குரல்கள் வலுவாக ஒலிக்கும் இன்று ‘அம்மா வந்தாள்’ நாவல் வாசிப்பு நியாயம் பெறுவது அது விலக்கப்பட்டவர்களின் சுவிசேஷமாக இருப்பதனாலுந்தான் என்று தோன்றுகிறது. இந்துவும் அலங்காரமும் இன்று பழைய தோற்றத்தில் இருக்கமாட்டார்கள். அவர்களது காலத்துக்குப் பின்பு காவிரியில் ஏராளமான வெள்ளம் பெருகியோடியிருக்கிறது. அவர்கள் வேறு வடிவில் இருக்கலாம். காலத்தை மீறிய மானுட இயல்பின் இந்த நிரந்தரச் சித்திரம்தான் நாவலை செவ்வியல் ஆக்கமாக எண்ணச் செய்கிறது.
நுட்பமான விவரங்களால் பின்னப்பட்ட தளம் இந்த நாவலின் வலு. ஒவ்வொரு வாசிப்பிலும் அந்தத் தளங்கள் வெளிப்படுவது வாசிப்பின் தீவிரத்தைக் கூட்டுகிறது. அப்பு ஊர் திரும்புவதற்கு முன்பு இந்துவும் அவனும் வீட்டில் தனியாக இருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அன்று பார்த்து அப்பு காவிரிக் கரையில் வெகு நேரத்தைக் கழிக்கிறான். ஊரை விட்டுப்பிரியப் போகிறவனின் ஏக்கம் தீர்க்கும் செயலல்ல அது. அவனால் தனிமையிலிருக்கும் இந்துவை எதிர்கொள்ள முடியாத அச்சமே காரணம். அவனுக்குள்ளும் இந்துவின் மீதான ஈர்ப்பு இருக்கிறது. அதை அவன் புரிந்துகொள்வதே இல்லை. அம்மாவைப் புரிந்துகொள்ளாதது போலவே.
தனிமையில் இந்து அவனிடம் நெருங்கியபோது ‘அந்த ஸ்பரிசம் ஜில்லென்று மிருதுவாகத்தான் இருந்தது. அந்தப் பரவசக் கணத்துக்குப் பின்புதான் அது வேட்டியில் ஒட்டி ஊரும் இலைப் புழுவைக் கண்டது போலாகிறது’. பதினாறு ஆண்டுகள் தினமும் பார்த்துப் பேசிய, தன்னைப் பராமரித்த இந்துவின் அன்பை முழுமையாக ஒப்புக்கொள்ள அப்புவுக்கு அம்மா மீதான பாசத்தை மீற வேண்டியிருக்கிறது. இந்துவுக்கும் மனதில் பொத்தி வைத்திருக்கும் வேட்கையைச் சொல்ல எட்டுவருடம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவன் வராமலிருந்துவிடுவானோ என்ற தாபத்தில்தான் அதைச் சொல்கிறாள். இந்த உளவியல் கண்ணாமூச்சி விடுபடுவது தொடர் வாசிப்பில்தான். மரபுகளுக்குள் கட்டுப்பட்ட இருவருக்குமிருக்கும் இந்த மனத்தடை வண்டிக்காரன் தாந்தோணிக்கு இல்லை. ‘நான் அம்மாவா இருந்தேனுங்க, சின்னம்மாவை சாமிக்குக் கட்டிப்போட்டிருப்பேன் இந்த நேரம்’ என்று அவன் சொன்னதைக் கேட்டு எப்போதாவது புன்னகைக்கும் பவானியம்மாளின் முகத்தில் இப்போது புன்னகை வருகிறது. மீண்டும் சோகக் களை பாசிமாதிரி புன்னகை இருந்த இடத்தை அடைத்துக்கொள்கிறது.
ஒருவேளை அவள் இருவரின் அன்பையும் புரிந்து வைத்திருக்கலாம். உள்ளூர அதை ஒப்புக்கொண்டிருக்கலாம். அப்பு மறுபடியும் வந்ததும் பாடசாலையை அவன் பொறுப்பில் விடுவதற்கும் இந்துவை மானசீகமாக அவனுடைய துணையாக ஒப்புக்கொள்வதற்கும் தாந்தோணியின் பேச்சும் காரணமாக இருப்பதும் சாத்தியம்.
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் மையம். மனித உறவுகள் நியதிகளுக்குக் கட்டுப்பட்டவை; இல்லையில்லை அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தைக் கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலை நோக்கு. நாவல் தொடக்கமே அந்தத் தொனியில் அமைந்ததுதான். ‘சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒருநாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின் மேல்வருகிற ஆசை. கீழே கிடக்கிற, பல்பொடி மடிக்கிற காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம். அப்படியொரு மோகமல்லவா பிறந்திருக்கிறது இந்தக் காவேரிமீது’ என்று ஆரம்பிக்கிறது நாவல். செய்யக் கூடாது என்று விலக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யவே மனித மனம் வேட்கை கொள்ளுகிறது. அந்த வேட்கையைத்தான் ஜானகிராமன் தனது பெரும்பான்மையான நாவல்களிலும் கதைகளிலும் எடுத்தாளுகிறார். அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம்வகிப்பது ‘அம்மா வந்தாள்’. ஒருவகையில் வேட்கையின் இரு வடிவங்கள்தாம் அலங்காரமும் இந்துவும். இருவரும் தங்களுக்குப் போடப்பட்டிருக்கும் விலக்குகளை மீறியவர்கள். இன்னொரு வகையில் பவானியம்மாளும்.
தன் பிள்ளைகளுக்குத் தன்னுடைய பொருந்தா உறவு பிடிக்கவில்லை என்பது அலங்காரத்துக்குப் புரிகிறது. ‘இந்த மூணுக்கும், கோபு, வேம்பு, காவேரி, என்னைக் கண்டாபிடிக்கலெ’ என்கிறாள். எனினும் விலக்கப்பட்ட உறவைப் புறக்கணிப்பதில்லை. அவள் வாழும் பிராமணக் குடும்பச் சூழலில் வெறும் பிள்ளைபெறும் கருவியாகவும் வீட்டைப் பராமரிக்கும் தாதியாகவும் கணவனுக்குச் சயன சுகம் தரும் சரீரமாகவும் குறுகிப்போக விரும்பாமல் தனது பாலுணர்வைத் தனக்குத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டு தேடிப்பார்க்கும் வேட்கை கொண்டவளாக அலங்காரத்தைச் சொல்லலாம். இந்து இன்னொரு கோணம். “எல்லாருமா சேந்து யாரையோ கொண்டுவந்து என் கையைப் பிடிச்சுக்கச் சொன்னா. கழுத்திலே ஒரு சரடைக் கட்டச் சொன்னா. என்னைப் போன்னு தள்ளிவிட்டா. இந்த உடம்பு போச்சு. நாலு வருஷம் கழிச்சு அங்கேபோய் இருந்தது. மூணு வருஷம் இருந்தது. பெண்டாட்டி பெண்டாட்டின்னு எல்லாரும் சொன்னா, அது மாதிரியே இருக்கச் சொன்னா, இருந்தது. என் உடம்பை மாத்திரம் கட்டியாண்டா நான் பெண்டாட்டியா ஆயிடுவேனா? நான் ஆகலே’ என்று சொல்லுவது இன்னொரு மொழியில்; ஆனால் அலங்காரம் சொல்லும் பொருளில்.
ஆனால் இருவரின் முடிவுகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அலங்காரம் காசிக்குப் போகிறாள். ‘ஒண்ணு பிள்ளையோட கண்முன்னால் செத்துப்போகணும். இல்லேன்னா காசியிலே செத்துப்போகணும். நீ ரிஷியாயிட்டே உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நெனச்சேன். நீயும் அம்மா பிள்ளையாவே இருக்கே. இப்ப காசிக்குப் போய் இருக்கப் போறேன்’ இங்கே மீறலின் எல்லை மரணமா? ‘அம்மா இத்தனை அழகா இருக்காளே, எனக்குத் தெரியவே தெரியாதே’ என்று வியக்கும் இந்துவிடம் ‘அழகா இருந்தா ரொம்பக் கஷ்டம் இந்து’ என்கிறான் அப்பு. ‘ஒண்ணுமில்லே’ என்று அவனை ஒரு முறை இறுக அணைத்து விட்டு உள்ளே விரைகிறாள் இந்து. ஒருவிதத்தில் அம்மாவுக்குப் பதிலியாகிறாள் இந்து என்று சொல்லலாம். அவளுடைய இறுக்கமான தழுவலில் மூச்சுத் திணறும் அப்பு ‘சீ . . . என்ன இது அசுரத்தனம் . . . அம்மாவைக் கட்டிக்கிறாப்பல . . .’ என்கிறான். இந்துவைப் பெறுவதன் மூலம் அவன் திரும்பப் பெறுவது அம்மாவை. இங்கே மீறலின் விளிம்பு வெற்றியின் வெறுமையா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாவலில் விடை தேடும்போது படைப்பு ஆன்மீக விசாரணையாகிறது. அப்படியான சிந்தனைக்கு வலுச் சேர்க்கிறது பவானியம்மாளின் பாத்திரம். அவளால் அலங்காரத்தையும் இந்துவையும் அவர்களது நிலையை உணர்ந்து புகார் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் அவளும் பொது நியதிகளைக் கடக்கிறாள். அது பசிக்கு நைவேத்தியம் செய்ய. அப்புவின் வாழ்விலிருந்து அலங்காரம் விலகுவதும் இந்து நுழைவதும் வயிற்றுக்குச் சோறிடத்தான் என்று யோசிக்கும்போது பவானியும் வியப்புக்குரியவளாகிறாள். காமம் உடலின் பசி. பசி வயிற்றின் காமம். இரண்டுக்கும் உணவிடுவது ஆன்மீகமாகாதா என்ன?
தி. ஜானகிராமனின் படைப்புக் கலையைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் மீறல் என்ற சொல்லும் உடன்வரும். அவர் மரபு வழிக் கலைஞர்தான். நவீனத்துவரல்லர். ஆனால் அவரது படைப்பாக்கச் சிந்தனைகளின் ஊற்று, மரபையும் சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் அவை மரபு என்பதற்காகவும் அதனாலேயே அவை புனிதமானவை என்றும் பின்பற்றும் மனநிலைக்கு எதிரான மண்ணில் ஆழ்ந்திருக்கிறது. அவரது நாவல்களிலும் கணிசமான சிறுகதைகளிலும் இதைப் பார்க்கமுடியும். ஒரு மெல்லிய கோபத்தையும் ஆதங்கத்தையும் பெண்கள்பால் வாஞ்சையையும் அவர்களுடைய இருப்பின் மீதான கரிசனத்தையும் பார்க்க முடியும். இது கு.ப.ராவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட குணமாக இருக்கலாம்.
கு.ப. ராஜகோபாலன் மறைவையொட்டி எழுதிய இரங்கற்குறிப்பில் ஜானகிராமன் கு.ப.ராவை ‘தவம் நிறைந்த கலைக்கோபி’ என்று போற்றியிருப்பார். தி. ஜானகிராமனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் (நிகழ்இதழ் 1/1982) அவரையும் அதே சொற்களால் குறிப்பிட்டிருந்தேன். கலைஞனின் கோபமும் கலைதான். ‘அம்மா வந்தா’ளை மறு வாசிப்புக்கு - எத்தனையாவதுமுறை? - உட்படுத்தியபோது அந்த வார்த்தைகளும் அந்த மனநிலையும் சேதாரமாகாமலே இருக்கின்றன. இந்த நாவலைத் தமிழில் உருவான செவ்வியல் படைப்பு என்று சொல்ல இதைவிட வேறு அத்தாட்சி எனக்குத் தேவைப்படவில்லை.
திருவனந்தபுரம் சுகுமாரன்
21 டிசம்பர் 2011
அம்மா வந்தாள் | தி. ஜானகிராமன் | காலச்சுவடு (நவீனத் தமிழ் க்ளாசிக் நாவல் வரிசை) | விலை ரூ.130
இணையத்தில் வாங்க: NHM.IN, சென்னை ஷாப்பிங்
(இந்த முன்னுரை எழுத்தாளர் சுகுமாரன் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் அனுமதி பெற்று ஆம்னிபஸில் வெளியிடப்பட்டுள்ளது)
அருமையான முன்னுரை. பதிப்பிக்க அனுமதித்த காலச்சுவடு பதிப்பகம் மற்றும் திரு சுகுமாரன் முதலானவர்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇந்த முன்னுரையைப் பரிந்துரைத்த திரு சரவணன் அவர்களுக்கு ( http://omnibus.sasariri.com/2012/10/blog-post_28.html?showComment=1374915439266#c7257787627365136286 ) தனிப்பட்ட வகையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி சரவணன், நல்ல பரிந்துரை!
அட! ஃபீட்லி ரீடரில் 'மீறலின் புனிதப் பிரதி - சுகுமாரன்' என்று பார்த்ததும் இனிய அதிர்ச்சி! என் பரிந்துரையை இத்தனை விரைவில் நிறைவேற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை! ஆம்னிபஸ் குழுவினருக்கு நன்றி.
ReplyDeleteமேலும் இங்கு வெளியிட அனுமதி அளித்த காலச்சுவடு பதிப்பகம் மற்றும் சுகுமாரன் அவர்களுக்கும் வாசகர்கள் சார்பாக நன்றி.
நன்றி.
Deleteநீங்கள் டிக் http://digg.com/reader பாவிக்கலாமே? எளிமையாக இருக்கிறது.
தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.
டிக் பற்றித் தெரிவித்ததற்கு நன்றி! தனியாக சைன் அப் செய்யத்தேவையில்லாமல் கூகுள் அக்கவுண்டையே உபயோகிக்க முடிகிறது. தோற்றம், செயல்பாட்டில் ஃபீட்லிக்கும் இதற்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை! தொடர்ந்து பயன்படுத்திப் பார்த்தால் தெரியவரலாம்.
ReplyDeleteமுன்னுரை பதிவிற்கு 3 மணிநேரத்தில் 10 ஃபேஸபுக் லைக்ஸ், 6 ட்வீட்ஸ் கிடைத்திருப்பதைக் கவனித்தீர்களா? இரு ஒரு ஆம்னபஸ் ரெகார்ட் என்று நினைக்கிறேன்!
நிச்சயமாக. வாசக வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
DeleteDigg-ல் ஒரு தனிப்பெரும் சிறப்பு இருக்கிறது :)
சக்கரம் மாதிரி இருக்கும் செட்டிங்க்ஸ் பட்டனைச் சொடுக்கி கீழே வந்தால், Digg Reader Settings என்று இருக்கும். அதில் Privacy என்ற பகுப்பில் Diggs, Saved என்று இரண்டு லிங்குகள் இருக்கின்றன. அவற்றின் செட்டிங்கை பப்ளிக் என்று வைத்து விட்டு, அந்த லிங்க்கை வேண்டியவர்களிடம் கொடுக்கலாம். அது ஒரு RSS link.
நீங்கள் விரும்பும் பதிவுகளை Digg செய்தும் உள்ளூர விரும்பும், ஆனால் விரும்புவதாக வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கும் பதிவுகளை Save செய்தும் இந்த இரண்டு RSS Feedகளில் பகிர்ந்து கொள்ள முடியும். :))
நன்றி.
அம்மா வந்தாள் பற்றிப் பேசச் சொன்னால் டிக் புராணம் படிக்கிறீர்கள்? :-)
Deleteஆசையாக கேட்கிறீர்கள்... பேசிடுவோம் :)
Deleteநாவலில் எனக்கு குறுகுறுப்பான ஒரு விஷயம், அப்புவின் அம்மாவின் 'பளிங்கு பிம்பத்தின் மீது படிந்த கறை' இந்துவுக்கு எப்படித் தெரிந்தது என்பது. சித்தன்குளம் கிராமத்தில் அலங்காரத்தைப் பற்றித் தெரிந்தவர் பவானியம்மாள் மட்டுமே. அவரும் இன்னொரு பெண்ணின் நடத்தையைப் பற்றிப் புரணி பேசுபவர் அல்ல. அப்பு எண்ணிக்கொள்வதுபோல இந்துவிடம் 'கபடில்லாத ஆத்மாக்களுக்கு வரும் ஞான திருஷ்டி' இருந்ததா? அப்படியானால் 16 ஆண்டுகள் வேதத்தால் புடம் போடப்பட்ட அப்புவுக்கு அந்த ஞான திருஷ்டி வாய்க்காததன் காரணம் அவன் கபடு கொண்டவன் என்பதா? அவனிடம் இருந்த கபடு, இந்துவின் மேல் அவன் கொண்ட காதலை ஒப்புக்கொள்ளும் மனம் இல்லாததுதானா? அது மட்டும்தானா?
இன்னொன்று, அலங்காரம் - இந்து இருவரும் 'தங்களுக்குப் போடப்பட்டிருக்கிற விலங்குகளை மீறியவர்கள்' என்ற போதிலும் இருவராலும் அடுத்தவரது மீறலைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை என்பதைக் கவனித்தால், எல்லா மீறல்களையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும் (மரபில் ஊறிய) பவானியம்மாள் அவர்களைவிட உயர்ந்து நிற்கிறார் எனலாமா?
சிவசு மட்டுமின்றி, தன் மனைவியின் பிறழ்வைப் பொறுத்துக்கொள்கிற, வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்கிற தண்டபானியும் அலங்காரத்தின் காலைச் சுத்தின இன்னொரு பாம்புதானே?
இந்த இரண்டு பாம்புகளிடமிருந்து விடுபடவே அலஙகாரம் காசிவரை ஓடவேண்டியிருக்கிறது எனலாமா?
[நடராஜன் சார், இனிமே யாரையும் அம்மா வந்தாள் பற்றிப் பேசச் சொல்லுவீங்க :) ]
நன்றி சரவணன் சார்.
Deleteநான் ’அம்மா வந்தாள்’ படித்ததில்லை. நீங்கள் இதையே விரிவாக எழுதிப் போடுங்கள் சார்.
மீறல்கள் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள் சிலரே. என்பது என் எண்ணம்.
அட வாழ்த்துக்கள்..எழுத்தாளர் சுகுமாரனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு நன்றிகள் பல!
ReplyDeleteபைராகியின் ஆசிர்வாதம் எப்பாதும் உங்கள் அனைவருக்கும்
ஓம்! ஓம்! ஓம்!
:)
Deleteநன்றி சாமிஜி!
/// அது ஒரு RSS link.///
Deleteநன்றி நட்பாஸ். இதன் தாக்கம் சற்று தாமதமாகத்தான் சிங்க் ஆனது! அதாவது, இதை மற்றவர்கள் தமது ரீடரில் சேர்த்துக்கொண்டால் நாம் விரும்புகிற பதிவுகள் ஒரு ப்ளாக் போல அவர்களுக்கு அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். குட்! என்றுடைய பப்ளிக் ஃபீட் இது-
http://digg.com/user/4aeb396d9c1c4323851073e7b3818d79/diggs.rss
உங்கள் பப்ளிக் ஃபீடைத் தரலாமே?
துரதிருஷ்டவசமாக டிக் நாம் டிக்கு செய்த பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதில் ஏதோ கோளாறு செய்து வைத்திருக்கிறது.
Deleteஅதனால் சேவ் செய்த பதிவுகளின் பப்ளிக் ஃபீடைத் தந்திருக்கிறேன்:
http://digg.com/user/c029b099f2bb4ea58e0671fd102044fa/saved.rss
டிக் செய்வதையும் எதற்கும் இருக்கட்டும் என்று சேவ் செய்து வைத்துக் கொள்கிறேன், அதனால் எதுவும் விட்டுப் போகாது என்று நம்பிக்கை (ஃபீட் ரீடரே விட்டுப் போகும் காலத்தில் என்ன ஒரு அற்பத்தனமான நம்பிக்கை!)
நன்றி.
நன்றி!
Deleteநான் தி ஜா,ராவின் பரம விசிறி. அவரின் பெயர் போட்ட பதிவுகள் எங்கு இருந்தாலும் படிக்கும் அளவிற்கு. இந்த தளம் எனக்கு நிறைய எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது அதற்கு நன்றிகள பல...
ReplyDelete