பதிவர் : எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
ஐஸ்லாந்திலிருக்கும் ஒரு ஏரி மர்மமான முறையில் வற்றிக் கொண்டிருக்கிறது; அந்த ஏரிக்குள் இறங்கும் பெண்ணொருத்தி ஒட்டுக் கேட்கும் கருவியொன்று கட்டப்பட்டிருக்கும் ஒரு எலும்புக் கூட்டை காண்கிறாள். காவல் துறை சம்பவ இடத்துக்கு வருகிறது; அந்த ஒட்டுக் கேட்கும் கருவியில் "Made in Russia" என்று பொரிக்கப்பட்டிருப்பதை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்; உளவறியும் நோக்கங்களுக்கு அது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். கருவியின் தொழில்நுட்ப விபரங்களைக் கொண்டு மேலும் துப்பு துலக்கி, அந்த எலும்புக்கூடு 1970களிலிருந்தே ஏரியில் கிடக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் எர்லண்டர் ஸிவன்ஸன் தலைமையில் விசாரணை துவங்குகிறது; 1970களில் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறார்கள். காவல் துறைக்கு இந்த விசாரணையில் எந்த ஆர்வமும் இல்லை. விசாரணையைக் கைவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எர்லண்டர் அதெல்லாம் முடியாது என்று விசாரணையைத் தொடர்கிறார். பல தசாப்தங்களுக்கு முன்னர் நடந்திருக்கக்கூடிய என்ற ஒரு கொலையை, எந்தவொரு துப்பும் இல்லாமல், எப்படிப் படிப்படியாக எர்லண்டர் கண்டுபிடிக்கிறார் என்பது இந்த மர்ம நாவலில் ஒரு இழை.
இந்நாவலில் இரண்டு வெவ்வேறு இழைகள் ஓடுகின்றன. ஒன்று, விசாரணை இழை. மற்றொன்று கொலைக்கு பின்னாலிருக்கும் காரணத்தை விளக்கும், கடந்த காலத்தைத் திரும்பக் கோர்க்கும் இழை. இரண்டாவது இழைதான் ஆர்வமூட்டுவதாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. அது, லட்சியவாதியான ஒரு இளம் மாணவனைப் பற்றியது. கம்யூனிசத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்படும் அவன், பனிப்போர் காலத்தில் கிழக்கு ஜெர்மனியின் லைப்சிஷ் நகரத்தில் தன் மேற்படிப்பைத் தொடர முடிவு செய்கிறான். தீவிரமான கொள்கைப் பிடிப்புள்ள இளமையின் ஆர்வத்தோடு லைப்சிஷ் வரும் அவன், தன்னுடைய கம்யூனிசக் கொள்கைகளால் உலகையே தன்னால் மற்றிவிட முடியும் என்று நம்புகிறான். ஆனால், அவனுடைய நிஜ உலகம் அவனுடைய லட்சிய உலகத்தைக் காட்டிலும் வித்தியாசமாய் இயங்குகிறது என்பதைப் பின்னர்தான் உணருகிறான். தொடர்ந்த கண்காணிப்பு, அரசுக்கும் அதன் லட்சியங்களுக்கும் தான் விசுவாசமாக இருப்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவை, எப்போதுமிருக்கும் பயமும் மூச்சுமுட்டலும் - கிழக்கு ஜெர்மனியின் ஃபாசிசப் போக்கு அவனுக்கு புரியத் தொடங்குகிறது. அந்தச் சூழலில், யாரையுமே - நெருங்கிய நண்பர்கள் உட்பட - யாரையுமே நம்ப முடியாது. பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய உளவாளிகள் மூலம் மட்டுமல்ல, உங்களுடைய நண்பர்கள், அக்கம்பக்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரைக் கொண்டும் பெரியண்ணன் உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கிறார்.
இந்தச் சூழலில், அமைப்புக்கு எதிரான கொள்கைகள் கொண்ட ஒரு பெண்ணைக் காதலிக்கத் தொடங்குகிறான். அங்கு நிலவும் அரசியல் போக்குகளை அவள் ஏற்றுக் கொள்ளாததோடு, ஒரு சதிகாரக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறாள். அந்தக் குழுவினர் ரகசியமாக சந்தித்துக் கொள்கின்றனர். இந்த இளைஞனும் அவர்களின் கூட்டங்களுக்குப் போகத் தொடங்குகிறான், ஆனால் சீக்கிரத்திலேயே நிலைமை உயிருக்கே உலை வைப்பதாகிறது. ஒருநாள் அந்தப் பெண் மாயமாய் மறைந்து விடுகிறாள். அவளைக் காவல்துறையினர் கூட்டிக்கொண்டு போனார்கள் என்று அக்கம்பக்கத்தவர்கள் சொல்லும் தகவல் மட்டுமே அவனுக்குக் கிடைக்கிறது. அதிகாரத்தின் சுவர்களில் எவ்வளவு முட்டியும் மோதியும் அவனால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. கடைசியில் அவனும் ஐஸ்லாந்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறான். தங்கள் குழுவில் உள்ள யாரோ ஒருவர்தான் தனக்கும் தன் காதலிக்கும் துரோகம் இழைத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிகிறது. இதன் பின்னர் என்ன நடந்தது என்பது இந்த இழையின் தொடர்ச்சியாக சொல்லப்படுகிறது.
அர்லண்டர் இண்ட்ரியாஸனின் எழுத்து நடை, பெர் வாஹ்லூ, மாயி கொவால் நடையைப் போலவே இருக்கிறது. உச்சங்கள் இல்லாத அடக்கமான கதை சொல்லல், அவர்களின் பாரம்பரிய போலீஸ் பாணி விசாரணை: சின்னச் சின்ன துப்புகளை இணைப்பது, அலைச்சலோ அலைச்சல் மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம். இந்நாவலிலும், Voices மற்றும் Silence of the Graves முதலான நாவல்களிலும் சரி, இண்ட்ரியாஸன், விசாரணை இழையை ஒத்த, அல்லது அதைவிடவும் சுவையான ஒரு ஃப்ளாஷ்பேக் கதையையும் வைத்திருக்கிறார். பொதுவாக அவரது பார்வை இருண்மை நிறைந்தது, பின் கதைகள் துயரம் மிகுந்தவை. புத்தகம் முழுவதும் ஊடாடியிருக்கும் சோகம் இந்நாவலை மற்ற துப்பறியும் நாவல்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது.
இன்ஸ்பெக்டர் எர்லண்டரின் பாத்திரத்தை உருவாக்குவதிலும் அர்லண்டர் அதிகம் உழைத்திருக்கிறார். இன்ஸ்பெக்டரின் மனைவி அவரை விட்டுப் பிரிந்துவிட்டார்; அவளால் இன்ஸ்பெக்டரை சகித்துக் கொள்ளவும் முடிவதில்லை, அவரைப் பார்க்கவும் பேசவும் மறுக்கிறாள். அவருடைய மகள் போதைக்கு அடிமையாகி விட்டவள், மகனோ உருப்படியாய் ஒன்றும் செய்வதற்கில்லாதவன். இன்ஸ்பெக்டரின் குடும்பம் பற்றிய தகவல்கள் இவருடைய அனைத்து புத்தகங்களிலும் கவனமாக விவரிக்கப்படுகின்றன. இது இன்ஸ்பெக்டரின் பின்னணியை அறிந்து கொள்ள உதவினாலும், கதையோட்டத்தில் தொய்வு ஏற்படுத்துகிறது. மிகவும் சோகமான எர்லண்டரின் மறுபக்கமே அவர் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கான உந்துதலாகவும் இருக்கிறது. எர்லண்டரின் குழுவில் இருப்பவர்களுக்கும் அவரவருக்கும் ஒரு கதை உண்டு, ஆனால் அவை நமது நினைவில் நிற்கும் அளவுக்கு ஆழமானவை அல்ல.
நான் பரிந்துரைக்கும் அர்லண்டரின் மற்ற நாவல்கள்: சோகமான ஆனால் மன எழுச்சியைத் தரக்கூடிய, திரும்பத் திரும்ப அடிவாங்கும் ஒரு குடும்பத் தலைவியின் கதையான Silence of the Grave, மீடியம்களும் காணாமல் போனவர்களும் உலாவும் Hypothermia, மிக இளம் வயதிலேயே புகழின் உச்சத்தை எட்டி அதைவிட சீக்கிரமாக அது மறைவதைக் காணும் இளைஞன் ஒருவனின் சோகக் கதையான Voices. எல்லா நாவல்களும் சம அளவில் சிறப்பானவை; இவற்றுக்கு The Draining Lake ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும். இண்டிரியாசன், ஸ்காண்டினேவியன் போலீஸ் நடைமுறையின் பெருமையை உயர்த்துவதில் வெற்றி பெற்றவராக இருக்கிறார்.
The Draining Lake | Arnaldur Indriðason | Random House | 384 Pages | Rs. 450 | Flipkart.com
No comments:
Post a Comment