பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
மௌனமே எவரும் எதிர்கொள்ளக்கூடிய ஆகப்பெருஞ்சுவர். ஹக்கான் நசெர் எழுதிய இந்த நாவலில் இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன் தகர்க்கமுடியாத மௌனத்தையே தன் விசாரணைகளில் எதிர்கொள்கிறார்.
ஸ்வீடனில், சொர்பினோவோ என்றழைக்கப்படும் தொலைதூர, அழகிய கிராமத்துக்கு வெளியே தனித்திருக்கும் காடுகளில் ஒன்றில் 'தூய வாழ்வு' என்ற மதக்குறுங்குழு ஒன்று 12 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான சம்மர் கேம்ப் நடத்துகிறது. இந்த முகாமில் இருக்கும் சிறுமிகளில் ஒருத்தி காணாமல் போய்விட்டாள் என்ற தகவலை தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாத பெண் குரல் ஒன்று தொலைபேசியில் காவல் துறையை அழைத்துச் சொல்கிறது. 'தூய வாழ்வு' முகாமைக் காவல்துறை தொடர்பு கொண்டு விசாரிக்கும்போது அங்கு எல்லா பெண்களும் பத்திரமாக இருக்கின்றனர், எந்தச் சிறுமியும் காணாமல் போகவில்லை என்று தெரிய வருகிறது.
இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அதே பெண் போலீசை மீண்டும் அழைக்கிறாள். காணாமல் போன பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறாள். அந்த ஊரின் போலீஸ் தன் விசாரணையில் உதவச் சொல்லி இன்ஸ்பெக்டர் வான் வீட்ரன்னுக்கு அழைப்பு விடுக்கிறது.
குளங்களும் வனங்களும் நிறைந்த சொர்பினோவோ வந்து தன் விசாரணையைத் துவக்குகிறார் வான் வீட்ரன். அவர் முதலில் ப்யூர் லைஃப் கல்ட்டின் நிறுவனர் ஆஸ்கார் எல்லினெக்கைச் சந்திக்கச் செல்கிறார். வான் வீட்ரன் குறுக்கிடுவது அவருக்குப் பிடித்தமாயில்லை, இன்ஸ்பெக்டரின் கேள்விகளுக்கு விளக்கமான பதில் சொல்ல மறுக்கிறார் அவர். ஆஸ்கார் எல்லினெக்குடன் இணைந்து முகாமை நடத்தும் பெண்மணிகள் மூவரையும் விசாரிக்கும் வீட்ரன் அங்கும் மௌனத்தையே எதிர்கொள்கிறார். அதன் பின்னர், முகாமில் உள்ள சிறுமிகளில் இருவரை விசாரிக்கும்போது அவர்களும் மௌனமாகவே இருக்கின்றனர். யாரும் காணாமல் போகவில்லை என்ற ஒன்றை மட்டுமே அனைவரும் சொல்கின்றனர்.
விசாரணையை இனி எந்த திசையில் கொண்டு செல்வது என்ற குழப்பத்தில் இருக்கும் வான் வீட்ரனுக்கு முகம் தெரியாத அந்தப் பெண்ணிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வருகிறது. காட்டில் ஒரு பெண்ணின் உடல் இருக்கிறது என்கிறாள் அவள்.
காட்டுப்பகுதிக்கு விரையும் காவல்துறையினர் அங்கே வான் வீட்ரன் முன்னர் விசாரித்த சிறுமிகளில் ஒருத்தியின் உடலைக் கணடெடுக்கின்றனர். அவள் வன்புணர்ச்சிக்குப் பின் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டிருக்கிறாள். குறுங்குழுவின் தலைவர் ஆஸ்கார் எல்லினெக்கும் காணாமல் போகிறார்.
இதைத் தொடர்ந்து முகாமை வழிநடத்தும் பெண்களையும் முகாமில் உள்ள சிறுமிகளையும் மீண்டும் விசாரிக்கிறது போலீஸ். இப்போதும் முழுமையான மௌனத்தையே பதிலாகப் பெறுகின்றனர். கிடைக்கும் பதில்களும் அவர்கள் ஆஸ்கார் எல்லினெக்குக்குப் பூரண விசுவாசம் கொண்டவர்களாகவே இன்னும் இருக்கின்றனர் என்பதை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. காவல்துறை எப்படி இந்த மௌனத்தைக் கலைத்து குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறது என்பதுதான் இந்த நாவலின் இனிவரும் பகுதி.
ஆன்மிகக் குறுங்குழுக்கள் எவ்வாறு இயங்குகின்றன, அதன் உறுப்பினர்கள் தம் கொள்கைகளை எவ்வளவு தீவிரமாகக் கடைபிடிக்கின்றனர் என்பதை நன்றாக விவரிக்கிறார் ஹக்கான் நெசெர். 'தூய வாழ்வின்' உறுப்பினர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். தாங்கள் மட்டுமே தூய வாழ்வு வாழ்வதற்கான நெறியை அடைந்துவிட்டவர்கள் என்று தீவிரமாக நம்புகின்றனர். அதற்கான பயிற்சிகளையே கோடை முகாம்கள் இந்தச் சிறுமிகளுக்குக் கொடுக்கின்றன. இந்த முகாமில் சிறுமிகள் ஆடையின்றி காட்டிலுள்ள குளங்களில் நீந்த வைக்கப்படுகிறார்கள். விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கத் தவறும்போது அவர்களுக்கு ஒழுக்கம் 'புகட்டப்படுகிறது'. எல்லினெக்கின் கடுமையான அட்டவணையில் உள்ளவை அனைத்தையும் அவர்கள் செய்தாக வேண்டும். யாரும் எதிர்ப்பு காட்டக்கூடாது.
இது போன்ற குறுங்குழுக்கள் தம் உறுப்பினர்களைத் தீவிரமான நம்பிக்கை கொண்டவர்களாக எப்படி மாற்றுகின்றன என்பதை நெசெர் நன்றாகவே விவரித்திருக்கிறார். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது, முதலில் எதையும் சொல்ல மறுப்பது, பின்னர் தங்கள் இளம் வயது காரணமாக மெல்ல மெல்ல இவர்களின் உறுதி குலைவது என்று இளம்பருவ மனம் விசாரணையை எதிர்கொள்வதை நன்றாக சித்தரிக்கிறார் நெசெர்.
வெளியாட்கள் இந்த முகாமை நடத்தும் பெண்கள் அனைவரும் எல்லினெக்கின் ஆசை நாயகிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முகாமைச் சேர்ந்த பெண்களோ தங்கள் குருவின்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கதையின் முடிவு வரை அவர்கள் காவல்துறைக்கு தகவலேதும் தருவதில்லை. தங்கள் மௌனத்தால் விசாரணையைத் தோற்கடிக்கின்றனர். எல்லினெக்குக்கு எதிராகச் சொல்லப்படும் அனைத்தையும் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
வான் வீட்ரன் மற்றும் அவரது சகாக்களால் இதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கண்ணெதிரே தெரியும் உண்மையையும் மறைக்கக்கூடிய குருட்டுத்தனமான தீவிர நம்பிக்கையின் இயல்பு அவர்களுக்குப் புரிவதில்லை. முகாமுக்குத் தங்கள் பெண்களை அனுப்பி வைக்கும் பெற்றோரும்கூட அங்கு அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறுவதைக் கண்டு கலங்குவதில்லை. அந்த அமைப்பில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அவ்வளவு தீவிரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. எந்த ஒரு குறுங்குழுவிலும் இது இயல்பான ஒன்றே என்பதை கல்ட்டுக்கள் பற்றி கவனமாக அவதானிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம். இங்கும்கூட எத்தனையோ சாமியார்களின் கள்ளத்தனங்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும், அவர்களுடைய பக்தர்களின் எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக தொடர்ந்து அதிகரிப்பதை நாம் காண்கிறோம்.
இந்தக் கதையில் ஹக்கன் நெசெர் இரண்டு முக்கியமான விஷயங்களை சுட்டிக் காட்டுகிறார் - இதுபோன்ற குறுங்குழுக்களை பொதுமக்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது ஒன்று, கொடூரமான குற்றங்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதற்கான நிர்பந்தம் மற்றொன்று.
பொதுமக்களால் தூய வாழ்வு என்ன செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. கட்டுப்பாடற்ற கலவியும் இன்னபிற சங்கதிகளும் அவர்களுடைய 'ஆலயத்தில்' நடைபெறுகின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள். பெண் காணாமல் போவது, கொலையாவது போன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மக்கள் தூய வாழ்வு ஆலயத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இது நம்மை இன்னொரு விஷயம் பற்றி யோசிக்க வைக்கிறது.
மிகவும் கொடூரமான, பொது மனசாட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் குற்றங்களுக்கு விரைவில் தீர்வு கண்டாக வேண்டிய நிர்பந்தம் காவல் துறைக்கு இருக்கிறது. மக்கள் குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடித்து தண்டிக்கபாட்டாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். முகாமில் இருந்த சிறுமிகள் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டபின் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவரும்போது இவர்களே மிகவும் கோபப்படுகிறார்கள். காவல்துறைக்கு இதனால் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் விசாரணையில் பிழைகள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. பொதுமக்கள் குற்றவாளிகள் என்று நம்பும் எவரும், அவர் அப்பாவியாகவே இருந்தாலும்கூட தண்டிக்கப்படலாம். எனவே, தான் ஒரு அப்பாவியைக் கைது செய்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுடன் வான் வீட்ரன் தன் விசாரணையைத் தொடர்கிறார்.
இத்தனை சொன்னாலும், இது த்ரில்லர் வகையைச் சேர்ந்த ஒரு மர்மக் கதைதான். இதனால் இது போன்ற விஷயங்கள் நாவலில் ஆழமான ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. மாறாக விசாரணைக்கு சுவாரசியமான பின்னணியைக் கொடுக்கவே இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் விசாரணையும்கூட பெரிய அளவில் இல்லை. வான் வீட்ரன் தன் தொடர்முயற்சியாலும் அதிர்ஷ்டத்தாலும்தான் உண்மையைக் கண்டறிகிறார்.
மர்மக்கதைகளைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் கதையின் முடிவை ஒரு மைல் தூரத்தில் வைத்தே கண்டுபிடித்து விடுவார்கள். இந்த நாவல், இது விவரிக்கும் சூழலுக்காக வாசிக்கப்பட வேண்டியது. துப்பு துலக்குதலின் சுவாரசியத்துக்காக அல்ல, பாத்திரப் படைப்பில் வெளிப்படும் மன இயல்புகளை ரசிக்க இதை வாசிக்கலாம்.
ஹாக்கன் நெசெரின் தொனி அவரது நாவலுக்கு நாவல் வேறுபடுகிறது. 'Hour of the Wolf' போன்ற ஒரு நாவலில் அவரது குரல் இருண்மையும் அவநம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது. 'Woman With a Birthmark' போன்ற நாவல்கள் அவ்வளவு இருட்டாக இல்லாவிட்டாலும் குரலில் ஒரு தீவிரத்தன்மை இருக்கிறது. 'Inspector and Silence' நாவலின் குரலில் ஒரு சிரிப்பு இருக்கிறது.
வான் வீட்ரனின் பாத்திரம் முந்தைய நாவல்களைப் பார்க்கும்போது இதில் இன்னமும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. 35 ஆண்டுகளாக புலனாய்வு செய்து இந்த நாவலில் களைத்துப் போயிருக்கிறார் வான் வீட்ரன். இனி விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய் விடலாமா என்று தீவிரமான யோசனையில் இருக்கிறார். அவரது சகாக்களின் பாத்திரங்களும் நன்றாக விவரிக்கப்படுகின்றன. அவர்களது விளையாட்டுத்தனமான பேச்சு நாவலுக்கு ஒரு நகைச்சுவை உணர்வை அளிக்கிறது. நெசெர் புத்தகம் முழுதும் இந்த நகைப்பைத் தொடர்கிறார். இது குற்றத்தின் கொடூரத்தை சமன் செய்வதாக இருக்கிறது.
எவ்வளவு கற்பனை செய்து பார்த்தாலும் இந்த நாவலில் ஒரு கிளாசிக்குக்குத் உரிய இயல்புகள் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் உங்களுக்கு ரயிலிலோ விமானத்திலோ பொழுது போகவில்லையென்றால் இதை வாசிக்கலாம், தப்பு செய்து விட்டோம் என்று வருத்தப்பட வேண்டியிருக்காது.
The Inspector and Silence,
Hakan Nesser,
Knopf Doubleday Publishing Group,
மொழிபெயர்ப்பு: பீட்டர் பொங்கல்
No comments:
Post a Comment