பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
“Tell him I
sent you," she implores him as the train mercifully pulls out. "He is a
graduate but democratic. Everyone in Berlin knows Sasha," which to Mundy
sounds as convincing as everybody in Bombay knows Gupta.
“Go
to Kruzeberg,” Ilse is howling after him, as he waves his last tragic
farewells from the carriage window. “Ask for him there. And look after
him Teddy”, she commands as a peremptory afterthought, which he has no
time to explore before the train conveys him to the next stage of his
life."
அவனது
வாழ்வின் அடுத்த கட்டம் அவனை சாஷாவுக்கு நெருக்கமாக கொண்டு செல்கிறது.
அவனும் சாஷாவும் 'பூரண நண்பர்களா’கின்றனர் (Absolute Friends). நாவலின்
தலைப்பு உணர்த்துவது போல், இது ஒரு பூரண உறவைப் பற்றிய நாவல். சாதாரண மனித
தர்க்கத்துக்கு அப்பால் இந்த உறவுகள் செயல்படுகின்றன என்பதே இதன்
அடிப்படைப் பொருள்.
நாவலின்
துவக்கத்தில் டெட் மண்டி நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஜெர்மானிய
மன்னர் லுட்விக்கின் லிண்ட்ராஃப் கோட்டைக்கு வரும் ஆங்கிலம் அறிந்த
சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிறான் அவன். குழந்தை
ஒன்றுக்குத் தாயாய் தனித்திருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணைத் தன்
உயிர்த்துணையாக கண்டடைந்திருக்கிறான், அவளது மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறான். இறந்த காலம், மண்டியின் நெடுங்கால நண்பன்
சாஷாவின் உருவில் இவர்களின் அமைதியான வாழ்வுள் மெல்ல நுழைகிறது.
அங்கே
துவங்குகிறது நாவலின் பயணம் - இப்போது கதை டெட் மண்டியின் இறந்த காலத்துள்
செல்கிறது, அவனது குழந்தைப் பருவத்தை, அவனது விடலைப் பருவத்தை
விவரிக்கிறது. ஒரு புரட்சியாளனாக அவன் வாழ்ந்த கல்லூரிக் காலத்தை, அதன்பின்
பிரிட்டிஷ் உளவுத் துறையில் ஒரு இரட்டை உளவாளியாக அவன் ஆற்றிய பணியை,
அவனது திருமணத்தை, அதைத் தொடர்ந்த விவாக முறிவை விவரித்துப் பின்
நிகழ்காலத்துக்கு வருகிறது. தன் மனைவி ஜாராவுடனும் அவளது மகன்
முஸ்தபாவுடனும் அவன் ஒரு சாதாரணனாக இயல்பு வாழ்வு வாழ்ந்து
கொண்டிருக்கிறான். மண்டியின் இந்த வாழ்வில் சாஷா அடியெடுத்து வைத்தபின்
தொடரும் நிகழ்வுகளை நாவலின் பிற்பகுதி விவரிக்கிறது. என்றாலும்,
உணர்வளவிலும் தாக்கத்திலும் நிகழ்காலத்தைவிட இறந்தகாலமே நாவலின்
பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது.
60களின்
கிறக்கமான ஹிப்பி நாட்களில், பெர்லின் நகரில், மண்டிக்கும் சாஷாவுக்குமான
நட்பு துவங்குகிறது. முரண் இயல்பு கொண்ட இவ்விருவருக்குமிடையே அசாத்தியமான
ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. மண்டி உயரமானவன், சுவாரசியமற்ற ஒரு ஆங்கிலேயன்.
சாஷா குள்ளமானவன், சிறிதளவு தாங்கித் தாங்கி நடக்கும் வசீகரமான
ஜெர்மானியன். உருவத்தில் மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கைத் தத்துவங்களிலும்
அவர்கள் வேறுபட்டே நிற்கிறார்கள்.
மண்டியும்
சாஷாவும் முரண்பட்ட இருவேறு ஆளுமைகள். மண்டிக்கு இயல்பு வாழ்க்கையே
போதுமான லட்சியமாக இருக்கிறது. ஆனால் சாஷாவோ காலம்காலமாக கதைகளிலும்
சரித்திரத்திலும் நாமறிந்த புரட்சிக்காரன். அதிகார அமைப்புக்கு எதிரான
இளைஞர் குழு ஒன்றின் வசீகர தலைவனான சாஷா, உலகத்தைத் திருத்தும் உத்தம
நோக்கத்தில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் உற்சாகமாக இருக்கிறான்.
மாறுபட்ட இயல்பு கொண்டவர்களாக இருந்தாலும் இந்த இருவரும் ஒருவரின்பால்
ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். முதலில் ஒத்த தன்மை கொண்ட தங்கள் ரகசிய கடந்தகாலத்தைப் பகிர்ந்து கொள்ளும் இவர்கள், தங்கள் வாழ்வில் இணையும் அந்த ஒரு
பெண்ணையும் பின்னர் பகிர்ந்து கொள்கின்றனர்.
உறவின்
நேசத்தை தர்க்கத்தைக் கொண்டு புரிந்து கொள்பவர்களுக்கு இது: இவ்விருவரின்
தந்தைகளும் இவர்களைக் கைவிட்டதன் ஏமாற்றக் கொந்தளிப்பின் உலையில் இறுகிப்
பிணைந்து இந்த நட்பு உருவானது என்று ஒரு காரணம் கற்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் அடிப்படையில் காரண காரியங்களின் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நட்பு
இது என்பதுதான் உண்மை.
மண்டியின்
அப்பா ராணுவத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட மேஜர். அவன் சுதந்திரத்துக்கு
முற்பட்ட இந்தியாவில் ஒரு தாதிப் பெண்ணுக்குப் பிறந்தவன் என்ற உண்மையை அவர்
மறைத்திருக்கிறார். அவனைப் போலவே சாஷாவும் தனது தந்தையை வெறுக்கிறான். ஒரு
லூதரிய சர்ச்சில் ஃபாதராக இருக்கும் அவரது விழுமியங்கள் அனைத்தையும் சாஷா
எதிர்க்கிறான். சர்ச் ஒன்றில் இறைபணி ஆற்றுபவர் என்ற வேடத்தில் தனது அப்பா
கிழக்கு ஜெர்மனியின் உளவாளியாக மேற்கு ஜெர்மனியில் வாழ்கிறார் என்பதை
அறியவரும்போது அவனது ஆத்திரம் மேலும் அதிகரிக்கிறது.
லெ
கெர்ரெ எப்போதும் தந்தைகள் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்தும்
தாக்கத்தைத் தன் நாவல்களில் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அவரது சிறந்த நாவல்களில் ஒன்றான ‘The Perfect Spy’ நாவல் அதன் நாயகனின் கதை
என்று சொல்லும் அளவுக்கு அவனது ஏமாற்றுக்காரத் தந்தையின் கதை என்றும்
சொல்லலாம்.
தனது
தந்தையின் துரோகத்தால் ஆத்திரப்படும் சாஷா, இரட்டை உளவாளியாக மாறுகிறான்.
கிழக்கு ஜெர்மனியின் உளவுத்துறையில் இணைந்து அதன் ரகசியங்களை பிரிட்டனுக்கு
அளிக்கிறான். மண்டியைத் தன் சகாவாக பிரிட்டிஷ் உளவுத்துறையில்
அமர்த்துகிறான். பெர்லின் சுவர் இடிக்கப்படும்வரை இவர்கள் இருவரும்
உளவாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்கின்றனர். இரு ஜெர்மனிகளும்
ஒன்றாகும் போது அவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது.
சாஷாவைப்
'பாதுகாக்கும்' கடமை தனக்கு இருப்பதாக மண்டி எப்போதும்
உணர்ந்திருப்பதுதான் இந்த நாவலின் மையக் கரு. கதையின் போக்குக்கு முரணான
ஒன்றாக இது வெளிப்பார்வைக்குத் தெரியலாம். ஏனென்றால் மண்டி ஒரு சாதாரணன்,
சாஷா தலைமைப் பண்புகள் கொண்டவன். ஆனால் முதலில் இல்சேவும் பின்னர் அவனோடு
படுத்துக் கொள்ளும் வேறொரு பெண்ணும் ஒரே விஷயத்தை அவனிடம் சொல்கின்றனர்,
"சாஷாவைப் பார்த்துக் கொள்". எப்போதும் ஏதோவொன்றுக்கு எதிரான போராட்டத்தில்
இருக்கும் சாஷா தன்னை கவனித்துக் கொள்ளத் தெரியாதவன், அவனுக்கு அன்பும்
அக்கறையான பாதுகாப்பும் தேவைப்படுகின்றன என்பதை இந்தப் பெண்களின்
உள்ளுணர்வு அறிந்து கொண்டது போன்ற ஒன்று இது.
தனக்கு
சாஷாவைப் பாதுகாக்கும் கடமை இருக்கிறது என்று மண்டியும் ஏற்றுக்
கொள்கிறான். தன் இயல்பு வாழ்வு இதனால் சிதைந்து போகும்போதும், தனக்கும்
தனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கும் இதனால் ஆபத்து ஏற்படும்போதும், அவன் இந்தக் கடமையை மறுப்பதில்லை. மண்டி ஏன் இப்படி நடந்து கொள்கிறான்
எனபதை ஊகித்து நாம் தர்க்கபூர்வமாக விளக்க முயற்சிக்கலாம் என்றாலும்,
தர்க்கங்களுக்கும் விளக்கங்களுக்கும் அப்பாற்பட்ட செயல்கள் இவை என்பதுதான்
உண்மை. மானுட உறவுகள் எப்போதும் தர்க்கத்துக்குட்பட்டவையல்ல.
லெ
கெர்ரெ மண்டியின் பாத்திரத்தை விரிவாக விவரிக்கிறார். அவனது கடந்த காலம்
குறித்த தகவல்கள் அனைத்தையும் தருகிறார். ஆனால் அவர் சாஷாவை ஒரு புதிரான
பாத்திரமாகவே படைத்திருக்கிறார். சாஷாவின் கடந்த காலம் தொடப்படுகிறது,
ஆனால் பெரிய அளவில் விவரிக்கப்படுவதில்லை. இதனால் மண்டி- சாஷா உறவுக்கு
அந்நியமான ஒரு பார்வையாளனாக மட்டுமே வாசகனால் இருக்க முடிகிறது. மண்டி ஏன்
சாஷாவைவிட்டு விலகாமல் இருக்கிறான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள
முடிவதில்லை. இந்தப் புதிர்த்தன்மையே நாவலுக்கு ஆழம் சேர்க்கிறது -
அவர்களின் உறவின் தர்க்கத்தை விளக்க லெ கெர்ரெ முற்படுவதில்லை.
எப்போதும்
போல லெ கெர்ரெவின் எழுத்து அருமையாக இருக்கிறது. நிதானமான கதை சொல்லல்,
துல்லியமான சொற்தேர்வு, லெ கெர்ரெவுக்கே உரிய பாணியில் மெல்ல மெல்ல
ரகசியங்கள் வெளிப்படுதல், தொய்வில்லாமல் மெல்ல இறுகி தவிர்க்க முடியாத
உச்சத்துக்கு இட்டுச் செல்லும் அழுத்தம் - எல்லாமே நாம் நெடுங்காலம்
அறிந்து ரசித்த லெ கெர்ரியின் முத்திரைகள்.
இவரது
எழுத்தில் மாற்றமில்லை என்றாலும் லெ கெர்ரெவின் அரசியல் நிலைப்பாடு
காலப்போக்கில் மாற்றம் கண்டிருக்கிறது. அவரது முன்னாளைய கார்லா கதைகள்
மூன்றோடும் ஒப்பிடும்போது இப்போது அவர் மையம் சார்ந்த இடதுசாரி அரசியலில்
இன்னும் சற்றே கூடுதல் இணக்கம் கொண்டவராக மாறியிருக்கிறார் என்ற
விமரிசனங்கள் உள்ளன. நாம் வாழும் இன்றைய உலகில் கேள்வி கேட்கும் வலு கொண்ட
தேசம் எதுவுமின்றி, அமெரிக்கர்கள் நவகாலனியாதிக்கவாதிகளாக அதிகாரம்
செலுத்துவது லெ கெர்ரெவை கோபப்படுத்துகிறது. தொழில் நிறுவனங்களுக்கும் அரசு
அமைப்புகளுக்கும் உள்ள உறவு நாளுக்கு நாள் வலுப்பெறுவதும் அதன் விளைவாக
உலகின் வளங்கள் கட்டுப்பாடற்று கொள்ளை போவதையும் அவரால் கோபப்படாமல்
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இனி தனி நபர் ஒரு பொருட்டல்ல என்று நினைக்குமளவு
அரசு அதிகாரம் வளர்ந்திருப்பது குறித்து லெ கெர்ரெவுக்கு கோபங்கள்
இருக்கின்றன.
இந்த
அரசியல், நாவலில் நுழைந்திருப்பதுதான் எனக்கு பிரச்சினையாக இருந்தது.
ஆனால் இதே அரசியல் விமரிசனப் பார்வைக்காக வேறொருவர் இந்நாவலை விரும்பக்கூடும்.
லெ கெர்ரெவின் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தும் கதையின் முடிவு
திணிக்கப்பட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது. தன் கருத்துகளை வெளிப்படுத்தவே லெ கெர்ரெ கதையை இப்படியொரு முடிவை நோக்கிக் கொண்டு சென்றது போலிருந்தது.
அதுவரை மனிதர்களின் கதையாக மட்டுமே இருந்த நாவல், அதன் முடிவை அடையும்போது
அரசியல் சாயம் பூசிக்கொள்கிறது. கதையின் மையச் சரடின் தாக்கம் இதனால்
வலுவிழந்து போகிறது. அரசியல் இல்லாத நாவலொன்றை லெ கெர்ரெவிடமிருந்து
எதிரிபார்ப்பதற்கில்லைதான். ஆனால் இந்த விஷயத்தில் அரசியல் பூச்சு இல்லாமல்
கதையை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று
நான் நினைக்கிறேன். துயரின் சாயை கொண்ட உணர்வெழுச்சியை கதையின் இறுதி
உச்சத்தில் அது கொடுத்திருக்கும்.
லெ
கெர்ரெவின் படைப்புகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, அவரது பிற்காலத்திய
நாவல்களான 'Night Manager', 'Our Game' முதலானவற்றைவிட இது உயர்ந்த நாவல்
என்று சொல்வேன். 'A Perfect Spy' நாவலின் கிறுகிறுக்க வைக்கும் உயரங்களை
இது தொடுவதில்லை என்பது உண்மைதான், ஆனால் அதுவோ எக்காலத்துக்கும் உரிய ஒரு
கிளாசிக். லெ கெர்ரெவின் எழுத்தை வாசித்துப் பழகியவர்களுக்கு இந்த நாவலை
எந்த தயக்கமும் இல்லாமல் பரிந்துரைப்பேன். இதுவரை அவரை வாசிக்காதவர்கள் லெ
கெர்ரெவின் எழுத்துக்குத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். அவர்களுக்கு
'Tinker Tailor Soldier Spy' ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.
Absolute Friends - John le Carré | Hodder & Stoughton | 448 Pages | Rs. 399 | Buy Online
மொழிபெயர்ப்பு: பீட்டர் பொங்கல்
மொழிபெயர்ப்பு: பீட்டர் பொங்கல்
No comments:
Post a Comment