பதிவர்: எஸ்.சுரேஷ் (@raaga_suresh)
முன்னிரவு. பறவைகளை நேசிப்பவன், பறவைகளைப் பற்றிக் கவிதைகள் எழுதுபவன் ஒருவன், தன் பண்ணையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை நோக்கிச் செல்கிறான். பருவகாலப் பயணம் செய்யும் பறவைகளை அவன் கவனித்தாக வேண்டும். சாக்கடை ஒன்றைக் கடக்க அதன் மீதிருக்கும் மரப்பலகையில் நடந்து செல்கையில் அது உடைந்து விழுகிறது, அவனும் சாக்கடைக்குள் விழுகிறான். அதனுள் கூராக்கக்கப்பட்ட மூங்கில்கள் செருகி வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் கூர்முனைகள் துளைத்து அவன் மெல்லச் சாகிறான். காவல்துறையினர் இது திட்டமிட்ட கொலை என்பதை அவதானிக்கின்றனர் - யாரோ ஒருவன் மரப்பலகையை உடைத்து, அதன் கீழிருக்கும் சாக்கடைப் படுகையில் கூர்முனைகளை ஊன்றியிருக்க வேண்டும்.
இதையடுத்து காவல் துறையினர் வழக்கை விசாரிக்கத் துவங்கும் இந்த ஆரம்ப நாட்களில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தன் பூக்கடைக்குள் யாரோ ஒருவன் திருட்டுத்தனமாக புகுந்திருக்கிறான் என்று அந்தப் பூக்கடையில் பணிபுரியும் உதவியாளர் புகார் செய்கிறார். ஒருவன் உள்ளே புகுந்தததற்கான தடயங்கள் கிடைக்கின்றன, ஆனால் கடையில் எதுவும் திருட்டுப் போகவில்லை - ஓரிடத்தில் ரத்தம் குளமாய் தேங்கியிருக்கிறது. இந்தக் குற்றம் குறித்து போலீசுக்கு இருக்கும் குழப்பம் வெகு நாள் நீடிப்பதில்லை.
அபூர்வ இன ஆர்சிட் மலர்களைத் தேடி ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பிய தன் முதலாளி அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்பதை பூக்கடை உதவியாளர் அறிய வருகிறார். பூக்கடைக்காரர் ஒரு பிணமாக, மரத்தில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறார். பஅவரைச் சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள் என்பதற்கான தடயங்கள் கிடைக்கின்றன. இந்த இரு வழக்குகளிலும் கொலையாளி ஒருவனே என்று காவல்துறையினர் நம்பத் துவங்குகிறார்கள். இரு கொலைகளுக்கும் தொடர்பு உண்டா என்று புலன் விசாரணை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்த மர்மத்தின் இறுதி முடிச்சு அவிழும்வரை விசாரணையில் அடுத்தடுத்து வெளிப்படும் எதிர்பாராத திருப்பங்கள் கதையைக் கொண்டு செல்கின்றன.
மான்கெல்லின் கதைசொல்லலை ஹிட்ச்காக்கிய பாணி என்று சொல்லலாம். திரையில் உள்ள பாத்திரங்களே அறியாத தகவல்கள் பார்வையாளர்களுக்குத் தரப்படுவதையே ஹிட்ச்காக்கிய பாணி என்று சொல்கிறேன். மான்கெல்லும் காவல்துறையினருக்குத் தெரியாத தகவல்களை நமக்குத் தருகிறார். தங்களிடம் உள்ள தரவுகளைக் கொண்டு, தர்க்கத்தின் பாற்பட்டுச் சரியான, ஆனால் பிழையான முடிவுக்கு காவல் துறையினர் வரும்போது வாசகனின் ஆர்வம் தூண்டப்பட்டு அவன் கதைக்குள் நுழைகிறான். தங்களைக் குற்றவாளியிடம் கொண்டு செல்லும் சரியான பாதையைத் தேடித் திரும்பும் புலனாய்வாளர்களின் தர்க்கத்தை மேலும் உன்னிப்பாக கவனித்து அவர்களது சிந்தனையை நெருக்கமாக தொடர்கிறான் அந்த வாசகன்.
கொலையாளி ஒரு பெண் என்பதை முதல் அத்தியாயத்தின் துவக்கத்திலேயே மான்கெல் வாசகனிடம் சொல்லிவிடுகிறார், ஆனால் கொலையின் கொடூரத்தைத் தங்கள் விசாரணையின் அடிப்படையாகக் கொள்ளும் காவல் துறையினரோ புத்தகத்தின் பெரும்பகுதி ஒரு கொலைகாரனைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். வாசகனின் அறிதலுக்கும் காவல்துறையினரின் முன்முடிவுகளுக்குமிடையே உள்ள இடைவெளி கதையின் இறுக்கத்தை அதிகரிக்கிறது, வாசகனின் கவனத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இந்த உத்தியைப் பயன்படுத்தி, நம் நாடி நரம்புகளெல்லாம் துடிக்கும் உச்சத்துக்குக் கதையைக் கொண்டு சென்று விடுகிறார் மான்கெல்.
நாம் கதையின் உச்சத்துக்குச் செல்லும் பாதையே ஒரு பெரும்வதை - பல இடங்களில் கதை முட்டுச்சந்துக்கு வந்து நிற்கிறது, புலனாய்வாளர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று, விட்ட இடத்திலிருந்து தங்கள் விசாரணையைத் தொடர்கின்றனர் - தூக்கமற்ற இரவுகளில் தடயங்களைச் சேகரிக்கின்றனர், கடந்தகால ஆவணங்களை அலசி ஆராய்ந்து, அங்கு கிடைக்கும் ஒவ்வொரு துப்பையும் தங்கள் உடல் தளர்ச்சியைக்கூட பொருட்படுத்தாமல் தீர விசாரிக்கின்றனர். காவல்துறையினரின் கடமை உணர்ச்சியும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இந்தப் புதிரின் சிதறிய துண்டங்களை ஒவ்வொன்றாக ஒன்று சேர்க்கத் துணை செய்கின்றன. இவ்வளவும் நடைபெறும்போதே கொலையாளி தன் அடுத்த கொலையைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள். இவர்களின் இரு பாதைகளும் ஒன்று சேரும்போது விறுவிறுப்பான முடிவை அடைகிறோம்.
மான்கெல்லின் நாவல்களில் ஒன்றின் பெயர், 'Faceless Killers'. மான்கெல்லின் பிரதான கவலைகளின் குறியீடாக இந்த இருச் சொற்களைக் கொள்ளலாம். மான்கெல் கொலைகாரர்களைப் பற்றி கவலைப்படுகிறார். சமூக அமைப்பின் சிக்கலான இடத்தில் நிற்கும் இந்தக் கொலையாளிகள், அரசு அமைப்பின் அக்கறையின்மை, சமூக அமைப்பின் நீதியின்மை முதலான மெய்யும் பொய்யும் கலந்த யதார்த்ததைக் கண்டு பரவலான சமூகத்தின் மேல் ஆத்திரம் கொண்டவர்களாக இருக்கின்றனர். கொலையாளிக்கும் அவனது ஆத்திரத்துக்குப் பலியாகும் அந்த அப்பாவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதபோதும் இந்த ஆத்திரம் அவர்களைக் கொடூரமானக் கொலைகளைச் செய்யவைக்கிறது. கொலையாளிகள் மட்டுமல்ல, அவர்களின் பலிகளும் முகமற்றவர்கள்தான். சமூக அமைப்பின் இயல்பையும் மானுட மனதின் ஆழங்களையும் விசாரிப்பதையும் தன் நோக்கங்களாகக் கொண்டிருந்தாலும், மான்கெல் இவ்விரண்டையும் விவரிப்பதில் போதுமான அளவு வெற்றி பெறுவதில்லை. குற்றத்தின் சுவையான பின்னணியாக மட்டுமே இவை இருக்கின்றன. கொலையாளி மற்றும் பலியானவர்களின் கடந்த காலம் அரைகுறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இருவரில் எவருடைய துன்பங்களிலும் நமக்கு புரிந்துணர்வு ஏற்படுவதில்லை.
ஆனால், கதாநாயகனின் மானுடத்தன்மையை நிறுவ, மான்கெல் நிறைய நேரம் செலவிடுகிறார். சோகமே உருவான இன்ஸ்பெக்டர் குர்த் வாலாண்டர் - நாம் அவரது குடும்ப வாழ்க்கையைப் பற்றி விவரமாகத் தெரிந்து கொள்கிறோம்: அவரது மனைவி அவரை விவாகரத்து செய்துவிட்டாள், அவருக்குத் தனது தந்தையுடன் இணக்கமான உறவு இல்லை, தனியாய் வாழும் தனது இளம் மகளை அவர் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார். வாலாண்டர் தன் தந்தையுடன், தனக்குப் புதிதாய்க் கிடைத்திருக்கும் துணையுடன், தன் மகளுடன் பழகுவதெல்ல்லாம் நாவலில் கணிசமான இடத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் நாம் இன்ஸ்பெக்டரை ஒரு மனிதனாக நன்றாக அறிந்து கொள்கிறோம் என்பது ஒருபுறம் இருக்கட்டும் : அவர் தனக்கேயுரிய பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார், ஒரு செக்யூரிட்டி ஆபிசருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்தைவிட மிகக் குறைவான சம்பளம் தரும் காவல்துறை வேலைக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டுமா என்ற கேள்வி அவரது நிம்மதியைக் குலைக்கிறது.
வாலாண்டரை மட்டுமல்ல, பொதுவாக காவல்துறையினர் அனைவரையும் புரிந்துணர்வோடு பார்க்கச் செய்வதாக இந்த விவரணைகள் இருக்கின்றன. எல்லாம் சரிதான். ஆனால் மறுபக்கம் இது கதையை இழுவையானதாகச் செய்து விடுகிறது. அதிலும் குறிப்பாக, கதைப்போக்கில் தொடர்ந்து சுவாரஸ்யம் கூடும் கிரைம் நாவல்களில் இந்த விவரணைகள் ஒரு வேகத்தடையாகவே இருக்கின்றன. மான்கெல்ளின் பெரும்பாலான நாவல்களைப் படிக்கும்போது இதில் ஒரு ஐம்பது பக்கங்களாவது குறைத்திருக்கலாமே என்ற உணர்வுதான் எனக்கு இருந்திருக்கிறது. அப்படியே பக்கங்களைக் குறைத்தாலும் அவரது நாவல்களின் தாக்கம் குறையாது. ஆனால் என்ன குறை சொன்னாலும் ஸ்கான்டினேவிய குற்ற புனைவுகளில் மான்கெல்லுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
உங்களுக்கு குற்ற புனைவுகள் பிடிக்குமென்றால் ஹென்னிங் மான்கெல்லின் குர்த் வாலாண்டர் தொடர் நாவல்களை நீங்கள் விரும்பி வாசிப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
The Fifth Woman, Henning Mankell
இணையத்தில் வாங்க : junglee.com
புகைப்பட உதவி : Booktopia
மொழிபெயர்ப்பு: பீட்டர் பொங்கல்
No comments:
Post a Comment