A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

24 Jul 2013

உலகம் ஒரு புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்கிறது - பி.ஏ. கிருஷ்ணனின் கட்டுரைகள்

பதிவர் : நம்பி 

அமெரிக்காவில் அரசுப் பள்ளி ஒன்றில் படிக்கும் எனது ஒன்பது வயது மகன் பள்ளியிலிருந்து திரும்பி வந்து கட்டுரை எழுதும் பெரும் தலைவலி பற்றிப் புலம்புகிறான். இந்தியப் பள்ளிக் கல்வி சார்ந்த எனது ஏமாற்றங்களைப் பற்றிய என் நினைவுகளில், ஒவ்வொரு வாரமும் கட்டுரைகள் (காம்பொசிஷன்) எழுதுவதில் இருந்த அலுப்பை நினைவூட்டும் நினைவுகளுக்கு ஓர் இடம் உண்டு. உலகெங்கும் ஆசிரியர்கள் கட்டுரைகள்மீது ஒரு வெறுப்பைத் தூண்டுவதில் அமோக வெற்றி அடைந்திருப்பதைப் பார்க்கையில் மக்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் கட்டுரையின் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையும் அதில் இருக்கும் ஏராளமான சாத்தியங்களும் எதற்கும் அசையாத உறுதியை அதற்குக் கொடுத்திருக்கின்றன. தினமும் காலை அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது நான் அவ்வப்போது சுந்தர ராமசாமியின் அல்லது புதுமைப்பித்தனின் கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்கிறேன். என் சக பயண வாசகர்களும் '2006இன் சிறந்த அமெரிக்கக் கட்டுரைக'ளைப் படிப்பதைப் பார்க்கும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. கட்டுரை என்ற எழுத்து வகையைப் பற்றிச் சில அறிமுகக் குறிப்புகளோடு தொடங்குகிறேன்.

Essay என்னும் சொல் குறிக்கும் பொருள்களில் ஒன்று, 'முயலுதல்' அல்லது 'முயற்சி'. அதன் சொற்பிறப்பு, கட்டுரை வடிவத்தின் ஆராய்ந்து பார்க்கும் பண்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆக, கட்டுரையாசிரியர் தனக்கு முழுமையாகத் தெரியாத ஒரு விஷயத்தை (இது ஒரு புத்தகத்தைப் படிக்கும் அனுபவம், கிரிக்கெட் மேட்ச் பார்த்த அனுபவம், கவிதையின் தன்மை, காதலித்தல் என்று எதைக் குறித்து வேண்டுமானாலும் இருக்கலாம்) பற்றி எழுதத் தொடங்குகிறார்; அதை ஒரு கட்டுரையாக எழுதித் தனக்குத் தெளிவுபடுத்திக்கொள்ள முயல்கிறார். ஒருவகையில் பார்த்தால், நன்றாக எழுதப்படும் எல்லா எழுத்துக்கும் இது பொருந்தும்; ஆனால் கட்டுரை என்னும் மிக வாகான ஒரு வடிவத்திற்கு இது இன்னும் நன்றாகவே பொருந்துகிறது.

கட்டுரைகள் வழக்கமாக இரண்டு பரந்த வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதலாம் வகையில் அமைதியான நடை, நீளம், நோக்கத்தில் ஒரு தீவிரம் ஆகியவை புலப்படுகின்றன. இந்த வகைக் கட்டுரை கவனமாகக் கட்டமைக்கப்படுகிறது; இதில் அனைத்தும் முதன்மை நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தயார்படுத்தப்படுகிறது. வழக்கம்போல் நடையும் விளைவும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்கு ஏவல் செய்கின்றன. இன்னொரு வகையான முறைசாராக் கட்டுரையை நகைச்சுவை, அமைப்பில் ஓர் உரையாடல் தன்மை, நேர்த்தியான நடை, அதைவிட முக்கியமாகச் சொந்த விஷயங்களைப் பேசும் தன்மை ஆகியவை போன்ற சில முத்திரை அம்சங்களை வைத்து இனம் காணலாம். தனது எண்ணங்கள், பிரியங்கள், ஆசைகள், புகார்கள் ஆகியவற்றை வாசகருடன் பகிர்ந்துகொள்வதே ஒரு முறைசாராக் கட்டுரையாசிரியரின் குறிக்கோள். நெருக்கம் என்ற விஷயம்தான் இங்கே முக்கியம். இந்த வகைக் கட்டுரை, அதன் கவர்ச்சிகரமான சூழலைக் கொண்டு வாசகரை இழுக்கிறது. படிக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், வாசிப்பின் சாராம்சமான இன்பமான சுய அடையாளம் காணல் வாசகருக்குக் கிடைக்கிறது. நடையின் எளிமையும் தன்னை அடையாளம் கண்டுகொள்வதற்கான கூறுகளும் வாசகரிடம் தவிர்க்க முடியாத ஒரு நமட்டுப் புன்னகையையும் "இதை நானேகூட எழுதியிருப்பேன்" என்ற உணர்வையும் வரவழைக்கின்றன. வேறுபடுத்திப் பார்ப்பது எப்போதுமே தனிப்பட்ட விருப்பம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு படைப்பாளிக்கு இந்த இறுக்கமான எல்லைகளைப் பற்றிக் கவலை இல்லை. அவர் தனது தேவைக்கேற்ப வடிவத்தைக் கைக்கொள்கிறார். கிருஷ்ணனின் கட்டுரைகள் முறைசார்ந்த கட்டுரைக்கே அதிகம் பொருந்துகிற தலைப்புகளில்கூட வாசகரிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன; அவற்றில் உரையாடல் போன்ற தொனி அமைந்திருக்கின்றன. எனவே அவற்றைப் பொதுவாக முறைசாராக் கட்டுரை வகையில்தான் சேர்க்க வேண்டும்.1

நானும் கிருஷ்ணனும் பல வருடங்களாகப் பல முறை பேசியிருக்கிறோம். இந்த உரையாடல்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு பல்லவி - பத்திரிகை பாஷையில் சொல்வதென்றால் - எங்களுக்குப் பிடித்த விஷயங்களையும் எழுத்தாளர்களையும் பற்றிப் போதுமான கவரேஜ் இல்லை என்பதுதான். சகஜமான, நிதானமான, பரந்த ரசனை கொண்ட, பண்பட்ட கட்டுரைகளையே இருவரும் எதிர்பார்த்தோம். சங்க இலக்கியம் பற்றி, தமிழ் எழுத்தில் நடை மற்றும் நகைச்சுவையின் பரிணாம வளர்ச்சி பற்றி, அதே சமயம் வோடவுஸ், ஷேக்ஸ்பியர், கிரிக்கெட் பற்றி நெவில் கார்டஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்பது பற்றிய கட்டுரைகளையும் எதிர்பார்த்தோம். அதையெல்லாம்விட, மென்மையான, உறுத்தாத நடையில் எழுதப்பட்ட, அளவுக்கு மீறிய சுய அக்கறையாலோ அளவுக்கதிகமான போதனைகளாலோ மிரட்டாத கட்டுரைகளைத்தான் நாங்கள் விரும்பினோம். எழுதுவதற்கு மிகக் கடினமான விஷயங்களைக்கூட நடை மற்றும் அன்னியோன்யத்தின் பலத்தைக் கொண்டு சராசரி வாசகருக்கும் சுவாரஸ்யமானவையாக ஆக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். ('உலகிலேயே மிக உயர்ந்த சிம்மாசனத்தில்கூட நாம் நம்முடைய புட்டத்தின் மேல்தான் அமர்ந்திருக்கிறோம்' என்று கட்டுரை மேதை மோன்டேன்2 ஒரு முறை சொல்லியிருக்கிறார்).

இதெல்லாம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. வையவிரிவலை வந்த பின் இந்த நிலைமை அடியோடு மாறிக்கொண்டிருக்கிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பிரமிப்பூட்டும் அளவிற்கு வகைவகையான விஷயங்களைப் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் சிலர்தான் நடையில் கவனம் செலுத்துகிறார்கள் என்றாலும் இவ்வளவு மாறுபட்ட தலைப்புகளில் இவ்வளவு கட்டுரைகள் எழுதப்படுவது தமிழ்க் கட்டுரையின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. தமிழ் எழுத்தின் இந்த அற்புதமான மறுமலர்ச்சியின் முன்னணியில் இருக்கிறார் கிருஷ்ணன். இந்த இலக்கிய வடிவத்தை மேலும் பல வாசகர்களிடம் எடுத்துச் செல்லத் தேவையான எல்லா கூறுகளும் - (மனிதநேயமும் உற்சாகமும் கூடிய பாசாங்கற்ற எழுத்து நடை, பல விஷயங்கள் தெரிந்திருந்து அவற்றில் ஆர்வம் கொண்டிருப்பது, இவற்றையெல்லாம்விட வாசகரிடம் அக்கறை, வாசிப்பு அவருக்கு சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க வேண்டும் என்ற கவனம்) அவரிடம் இருக்கின்றன. சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரையிலான தமிழ் நகைச்சுவைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவரும்படி அவரை நீண்ட காலம் தொல்லை செய்துகொண்டிருந்தேன். என் ஆசைப் பட்டியலில் இன்னொரு ஐட்டத்தைச் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்: தமிழ்க் கட்டுரைத் தொகுப்பு!

II

பி.ஏ. கிருஷ்ணனின் Tiger Claw Tree நாவலைப் படித்த பெரும்பாலானோருக்கு ஒரு தமிழ் நாவலை ஆங்கிலத்தில் படித்ததுபோன்ற ஒரு விநோத உணர்வு இருந்தது. அந்த நாவல் ஆங்கிலத்தில் மிக நன்றாகவே வந்திருந்தது. ஆனால் அவர் ஏன் அதைத் தமிழில் எழுதவில்லை என்ற கேள்வி மட்டும் மறையவில்லை. பிறகு கிருஷ்ணன் இந்தப் பிரமாதமான அறிமுகத்தை அடுத்து அந்த நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எழுத்தாளராக அவர் அடைந்த வளர்ச்சியில் இருக்கும் இரட்டைக் கூறுகளை இது பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் தங்கள் ஓர் அடையாளத்தை நிறுவிக்கொள்ள மிகச் சில எழுத்தாளர்களுக்குத்தான் முடிந்திருக்கிறது.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஆசாரமான ஐயங்கார் குடும்பம் ஒன்றில் பிறந்த கிருஷ்ணனுக்குப் பள்ளிக் கல்வி முழுவதும் தமிழிலேயே அமைந்தது. அவரது தந்தை (என் தாத்தா!) அசாதாரணமான ஒரு தமிழறிஞர். கம்பராமாயணத்தின் வைணவ நுணுக்கங்களை ஆராய்வதிலேயே தன் வாழ்க்கை முழுவதையும் கழித்திருந்த அவர் கிருஷ்ணனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது இயற்கைதான். எழுபதுகளில், அவரது நட்பு வட்டத்தில் இருந்த பலர் இடம்பெயர்ந்து அல்லது இறந்துவிட்டிருந்த காலத்தில்கூட அவர் சில உறவினர்களுடனும் நண்பர்களோடும் பழைய தமிழ் எழுத்துகளில் புதைந்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. கிருஷ்ணனின் வீட்டில் பெ.நா. அப்புசாமி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் (கிருஷ்ணனின் புது தில்லி வீட்டில் அப்புசாமியின் செய்யுள்களை இருமொழிப் பதிப்பு ஒன்றில் படித்தபோதுதான் சங்க இலக்கியம் எனக்கு முதன்முதலில் அறிமுகமானது) எந்நேரமும் காணப்பட்ட அந்தப் பொன்னாட்களைக் கற்பனை செய்துதான் பார்க்க முடியும்.

கிருஷ்ணனுடைய தந்தையின் நண்பர்களாக இருந்த அறிஞர்கள் பரந்த ரசனை கொண்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மிக விசாலமான அறிவைக் கொண்ட அவர்கள், தமிழ் இலக்கியத்தின் மேன்மையை உலக இலக்கியப் பின்புலத்தில் வைத்துத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார்கள். அசாதாரணமான தலைவர்கள் மற்றும் நிகழ்வுகள் மூலம் (நேருவிடமும் காந்தியிடமும் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் கிருஷ்ணனுக்கு இப்போதும் படுதீவிர ஆர்வம் உண்டு) வரலாறு சாமானியரின் பிரக்ஞையை வியாபித்த 1947ஆம் ஆண்டு நமக்கு இன்றும் நெருக்கமாகவே இருக்கிறது. பின்னர் திராவிட இயக்கமும் (பிரதானமாகப் பெரியார் என்ற வசீகரமான ஆளுமை மூலம்) மார்க்சியமும் அவரது வரலாற்றுக் கல்வியைப் பூர்த்திசெய்தன. இது அவர்மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின. சென்னையில் இயற்பியல் மாணவராகவும் விரிவுரையாளராகவும் இருந்த கல்லூரி நாட்களையும் புது தில்லியில் அதிகாரப் படிநிலைகளில் நீண்ட காலம் பொறுப்பு வகித்ததையும் இந்தக் கல்வி அனுபவத்தில் சேர்த்துக்கொண்டால் கிருஷ்ணன் என்ற எழுத்தாளர் உருப்பெறுவதில் பங்காற்றிய கூறுகளைப் பார்க்கலாம். என் பார்வையில், கிருஷ்ணனின் எழுத்து இரண்டு அம்சங்களால் ஆனவை: ஒன்று, செவ்வியல் தமிழில் மிக வலுவான அஸ்திவாரம்; இன்னொன்று, மேற்கத்திய மனிதநேயப் பாரம்பரியத்தின் மிகச் சிறந்த கூறுகளை நீண்ட காலம் உள்வாங்கியதில் உருவான உலக நோக்கு.

III

கட்டுரைகள், கிருஷ்ணனின் எழுத்து வாழ்க்கையில் முக்கியமான படிக்கற்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எங்கள் உரையாடல்களில், அவருக்குத் திருநெல்வேலியில் கிடைத்த ஆரம்பகால அனுபவங்களைப் பற்றி எழுதும்படி உசுப்பிக்கொண்டே இருந்தது எனக்கு நினைவில் இருக்கிறது. அவற்றை எழுதுவதற்குத் தேவையான எல்லா அம்சங்களும் தயாராக இருந்தன. இருந்தாலும் ஆழம் பார்க்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. அவர் பல்வேறு ஆங்கிலச் செய்தித்தாள்களுக்கும் நிறுவனப் பத்திரிகைகளுக்கும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதித் தொடங்கினார் (நினைவுகளைக் கிளறும் கட்டுரை ஒன்றை என்சிசி பத்திரிகையில் படித்த ஞாபகம் இருக்கிறது). அவர் தன்னுடைய 'முத்திரை' எது என்று அறிந்துகொள்ளத் தொடங்கியிருந்தார் என்று சொல்லலாம். அதைவிட முக்கியமாக, எழுத்தாளர் ஆவதற்கான தகுதிகள் தன்னிடம் இருந்தன என்ற தன்னம்பிக்கை அவரிடம் உருவானது.

இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை புத்தகங்களைப் பற்றியவை: எரிக் ஆம்ப்லர், பர்த்ருஹரி, பால் ஜான்சன், ஃப்ரான்சிஸ் வீன், அலெக்சாண்டர் வெர்த், ட்ரேசி ஷெவாலியர், ராம் குஹா, ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஆச்சார்யா, சு.ரா., ஜெயமோகன், அசோகமித்திரன், முத்துலிங்கம், ஜூடித் பிரவுன்... பல வகையான பெயர்களைக் கொண்ட சுவையான பட்டியல் இது. (தலைப்புகளின் பரந்த தன்மையைக் கவனியுங்கள்: மர்மக் கதைகள், சமஸ்கிருதக் கவிதை, மேற்கத்தியக் கலை, வாழ்க்கை வரலாறு, வரலாறு, மேற்கத்திய நாவல், கிரிக்கெட், மக்கள் அறிவியல், சமூகவியல், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள், மற்றும் கட்டுரைகள்).

கட்டுரைகள் இறுதியில் புத்தகங்களில் போய் முடிந்தாலும் அவை பத்திரிகைகளில்தான் வாழ்க்கையைத் தொடங்குகின்றன என்ற உண்மையைப் பற்றி அமெரிக்கக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் சூசன் சான்டாக் எழுதுகிறார். இந்தத் தொகுப்பும் விதிவிலக்கல்ல. இடப் பற்றாக்குறையும் வாசகர்களின் தேவையும் அலாதியான ஒரு விதத்தில் கட்டுரைகளின் நீளத்தையும் நடையையும் தீர்மானிக்கின்றன. இது எல்லாச் சமயங்களிலும் மோசமான விஷயம் என்று சொல்ல முடியாது! கிருஷ்ணனின் கட்டுரைகள் தெளிவாக, எளிமையாக, நேரடியாக, கச்சித அளவில், உரையாடல்போல் இருக்கின்றன. சராசரி வாசகரின் அனுபவத்தை உயர்த்திவிடும் ஒரு பண்பட்ட வாசகரின் (அதோடு எழுத்தாளரின்) ஆழமான பார்வைகள் நிறைந்திருக்கின்றன. கனமான தியரிகளையோ இசங்களையோ எடுத்து வீசாமல் அவர் வெறும் புத்தக மதிப்புரைகளை 'வாசிப்பிற்கான அழைப்புக'ளாக மாற்றிவிடுகிறார். அவை எல்லாமே உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களிடம் வந்து, 'நான் போன வாரம் இந்தப் புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தேன். இது உனக்கும் நிச்சயம் பிடிக்கும். ஏன் தெரியுமா...' என்று சொல்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது எளிதான காரியம்போல் தெரியும். ஆனால் இந்த எளிமைக்குப் பின்னால் அதிநுட்பமான ஒரு கலை இருக்கிறது. வாசகரைத் திணறடிக்காமல் விஷயத்தைச் சொல்வதில் கவனம் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லும் சாமர்த்தியத்தைக் கையாளும் கலை அது. வாசகர், குறிப்பிட்ட ஒரு புத்தகத்தைப் படிப்பதில் உள்ள இன்பத்தின் ஊற்றுக்கண்ணுக்கே அழைத்துச் செல்லப்படுகிறார்; மிக நுட்பமாக ஈர்க்கப்பட்டு அந்தப் புத்தகத்தைப் படிக்கவைக்கப்படுகிறார்.

கிருஷ்ணன், பிரிட்டிஷ் பாணி ஊமைக் குசும்பின் பரம ரசிகர் (திருநெல்வேலிக் குசும்பு என்றும் சொல்லலாம்!). இந்த நகைச்சுவை அவரது மதிப்புரைகளில் அவர் தேர்ந்தெடுக்கும் மேற்கோள் துண்டுகளில் வெளிப்படுகிறது:
"நீங்கள் மார்க்ஸிஸ்டா?"
"இல்லை."
"நானும் இல்லை. நான் ஒரு ஏமாற்றுப் பேர்வழி."
-திமித்ரியாஸின் முகமூடி, எரிக் ஆம்ப்லர்

இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பல விமரிசனங்கள் வந்திருக்கின்றன.
அவற்றில் எனக்குப் பிடித்தது இது:
"நான் படித்த போதனைப் புத்தகங்களில் சிறந்த போதனைப் புத்தகம் இது. எங்களுக்குப் போதித்துக்கொண்டே இருங்கள். ரெவரெண்ட் டாக்கின்ஸ் அவர்களே, உங்கள்மேல் எறியப்படுபவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்."
விமரிசனம் எழுதியவரின் பெயர் ரிச்சர்ட் ஹாலவே. எடின்பரோ நகரத்தின் பிஷப்.
-A Devil's Chaplain, Richard Dawkins, Phoenix, UK., 2004
இந்தக் கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்தவை அவற்றின் சரளமும் அநாயாசமான வீச்சும் (பல நூற்றாண்டுகளுக்கும் பல்வேறு மரபுகளுக்கும் பண்பாட்டுக் கூறுகளுக்கும் பரவியது). 17ஆம் நூற்றாண்டு டச்சு ஓவியர் யான் வெர்மீரைப் பற்றிய ட்ரேசி ஷெவாலியரின் புத்தகத்தைக் குறித்த கிருஷ்ணனின் கட்டுரை, கபிலரின் அற்புதமான ஐங்குறுநூறு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கூர்மையான ஒரு முத்தாய்ப்பில் முடிகிறது.
க்ரீட் தேன் கலந்த பாலை அருந்தியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் கலங்கல் நீரைக் கண்டு அருவருப்பு அடைந்திருக்கிறாள். இது எப்படி மாறுகிறது என்பதை அழகாகச் சொல்வதே இந்த நாவலின் தனித்தன்மை என எனக்குத் தோன்றுகிறது.
-முத்துக் காதணி அணிந்த பெண்
கிருஷ்ணன் மூலக் கவிதையை முழுவதுமாக மேற்கோள் காட்டுகிறார். இது விஷயம் தெரிந்த வாசகருக்கு சுவாரஸ்யத்தைக் கொஞ்சம் குறைத்துவிடுகிறது. ஆனால் வேறு சில இடங்களில் அவர் மூலத்தை (நம்மாழ்வார்) முற்றிலும் வேறான ஒரு பின்புலத்தில் பயன்படுத்துகிறார்.
அப்போது என்னுடைய உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையெல்லாம் ஸோபர்ஸ்.
-கேட்டதும் கண்டதும்
ஒவ்வொரு வாசகரும் படிக்கும்போது தன்னைத்தான் படிக்கிறார் என்று ப்ரூஸ்ட் ஒரு முறை சொன்னார். இதன் தொடர்ச்சியாக, தான் படித்துக்கொண்டிருப்பதை தான் அதுவரை வாசித்தவற்றின் பின்புலத்தில் உள்வாங்கவும், தான் படித்துக்கொண்டிருப்பதை வைத்து அதுவரை படித்தவற்றை மறுவாசிப்புக்கு உட்படுத்தவுமான சாத்தியக்கூறு, ஒவ்வொரு வாசிப்பிலும் இருக்கிறது என்று சொல்லலாம். ஒரு நல்ல எழுத்தாளரிடம் இந்தக் குறுக்கு வாசிப்புகளெல்லாம் இயல்பாகவே வெளிப்பட்டு மற்ற பகுதிகளுடன் உறுத்தாமல் கலக்கின்றன. முத்துலிங்கத்தின் "கனடாவில் வீடு" கட்டுரை, கிருஷ்ணனுக்கு ஜரோம் கே. ஜரோமின் "Three Men in a Boat" நாவலைப் பற்றிய நினைவுகளைக் கிளறுகிறது. கிளறப்பட்ட காரணம், சுத்தியல் குறி தவறி விரலைப் பதம் பார்க்கும் ஸ்லாப் ஸ்டிக் நகைச்சுவையின் வர்ணனை (மறக்க முடியாத இந்த நகைச்சுவையை என் சிபிஎஸ்சி ஆங்கிலப் பாடநூலில் படித்த ஞாபகம் இருக்கிறது (அதைப் பற்றி ஆசிரியர் கேட்ட அறுவைக் கேள்விகளைத்தான் ரசிக்க முடியவில்லை). இந்தக் கட்டுரையின் இறுதியில் இன்னும் நுட்பமான ஒரு குறுக்கு வாசிப்பு நடக்கிறது. முத்துலிங்கத்தின் எழுத்துக் கலையின் ஆழத்தைப் புகழ்வதற்குக் குறுந்தொகையிலிருந்து ஒரு முத்து உருவியெடுக்கப்படுகிறது:
முத்துலிங்கத்தின் உலகம் நிலத்திலும் பெரிது. நீரிலும் ஆழமானது. அது அவர் உள்ளம் சார்ந்தது.
-முத்துலிங்கத்தின் உலகம்
கிருஷ்ணன் தமிழ்ச் செவ்வியல் மரபின் ஊற்றுகளில் ஆழமாய் மூழ்கிக் குளித்திருப்பதால் அவரால் அந்த மரபின் மிகச் சிறந்த அம்சங்களைப் பயன்படுத்தி நிகழ்கால நடப்புகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த மரபு 21ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்திருப்பதை ஜெயமோகனின் 'காடு' நாவலுக்கான (சமீப சில வருடங்களில் நான் படித்த மிகச் சிறப்பான தமிழ் நாவல்களில் ஒன்று) அவரது மதிப்புரையில் செறிவான ஒரு கூற்றில் பார்க்கலாம்:
தமிழில் காடுகளைப் பற்றிப் பேசப்படும் நாவல்கள் அதிகம் இல்லை. சா. கந்தசாமியின் சாயாவனம் நாவலை நான் படித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நாவல் மருதம் சார்ந்து எழுதப்பட்ட ஒரு நாவல். ஜெயமோகனின் காடு குறிஞ்சி சார்ந்து எழுதப்பட்டது.
-வெந்து தணியாத காடு
நான் முன்பே சொன்னதுபோல, கிருஷ்ணன் ஒரு காந்திய மார்க்சிஸ்ட் (அவர் ஸ்டாலினிஸ்ட்டும்கூட, என்னதான் மூவருக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும்!). இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ரசிகர். வரலாறு தொடர்பான புத்தகங்களில் எவற்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை இயற்கையாகவே இந்த ரசனைதான் தீர்மானிக்கிறது. ஃப்ரான்சிஸ் வீன் எழுதிய மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு பற்றிய கட்டுரையில் கிருஷ்ணன் நூலாசிரியரின் புகழ் பாடுவதை கவனமாகத் தவிர்த்துவிட்டு மார்க்ஸை சாதாரண மனிதராகக் காட்டும் பகுதிகளில் கவனம் செலுத்துகிறார்.
அவர் காட்டும் ஒரு மார்க்ஸ் நம்மைப் போன்றவர். எவ்வளவு பணம் வந்தாலும் செலவழித்துவிட்டு அடுத்த வரவுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்;
-கார்ல் மார்க்ஸ்,  பிரான்சிஸ் வீன்
நேருவைப் பற்றிய கட்டுரை கூர்மையாகத் தொடங்குகிறது. அதில் கிருஷ்ணனின் தந்தை (என் தாத்தாவின் ஆளுமையைப் பல்வேறு கட்டுரைகளில் இடம்பெறும் துணுக்குகளை ஒட்டிப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்) நேருவின் மரணம் குறித்துக் கேள்விப்படுகிறார். வாலியை வர்ணித்துக் கம்பன் சொன்ன "சிறியன சிந்தியாதான்" என்ற வார்த்தைகள் இங்கு மறுசுழற்சிக்கு உள்ளாகி நேருவைப் புகழ்வதற்குப் பயன்படுகின்றன. ஆசிரியருக்குரிய தனிப்பட்ட அம்சங்கள் எப்படி ஒரு மதிப்புரையை ஓர் அனுபவக் கட்டுரையாக உயர்த்துகிறது என்பதற்கு இந்தக் கட்டுரை சிறப்பான ஓர் உதாரணம். இதற்கு முன் அவர் ஸ்டாலினைப் பற்றி எழுதிய கட்டுரையுடன் இதை ஓப்பிட்டாலே தெரியும். ஸ்டாலின் கட்டுரை உணர்ச்சியற்ற தொனியில் கச்சிதமாக அமைந்திருக்கிறது. பெரும்பாலான கட்டுரைகளில் நிரம்பியிருக்கும் உரையாடல் நேர்த்திக்குரிய சாதகமான அம்சங்கள் எதுவும் அதில் இல்லை. இந்தத் தலைவர்கள் தத்தம் கட்டுரைகளுக்கான நடையைத் தேர்ந்தெடுப்பதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

அனுபவக் கட்டுரைதான் கிருஷ்ணனின் முத்திரைப் பாணிபோல் தெரிகிறது. சு.ரா.வையும் சரத் சந்திர சின்ஹாவையும் குறித்த கட்டுரைகளில் அருமையாக வெளிப்படும் நினைவுகளைக் கிளறிவிடும் தன்மை இதை நிரூபிக்கிறது. பல வருடங்களுக்கு முன் சென்னையில் சு.ரா.வைச் சந்திக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலக்கியம் தொடர்பான எனது அரைவேக்காட்டு முத்துதிர்ப்புகளைக் கேட்பதில் அவர் காட்டிய ஆர்வம் எனக்கு ஆச்சரியம் தந்தது. சு.ரா.வை சான் ஹோசேயில் அவரது கடைசி நாட்களின்போது சந்தித்த மிகச் சில எழுத்தாளர்களில் ஒருவர் கிருஷ்ணன். அவரது கட்டுரையில், அடங்கிய தொனி, ஆச்சரியம் கலந்த மதிப்பு, நடக்கப்போவது குறித்த ஒரு முன்னுணர்வு ஆகியவற்றைப் பார்க்கலாம். அமெரிக்கப் புறநகர்ப் பகுதியொன்றில் ஒதுக்குப்புறமான இடத்தில் தொந்தரவின்றி வாழ்ந்துகொண்டு நாகர்கோவிலில் தனக்குப் பரிச்சயமான சமூக வட்டத்திற்காக ஏங்கும் முதிய தமிழ் எழுத்தாளர் ஒருவருடைய நிலைமையைக் கிருஷ்ணன் துல்லியமாகப் பதிவுசெய்கிறார். மார்ட்டின் லூதர் பற்றிக் கிருஷ்ணன் படித்துக்கொண்டிருந்த புத்தகம் குறித்த உரையாடல் துண்டுகளின் பதிவு ஒன்றில் கிருஷ்ணன் சு.ரா.வுக்கு மற்றவர்களிடம் இருந்த ஆர்வக் குறுகுறுப்பையும் அக்கறையையும் திறமையாகப் பதிவுசெய்கிறார்.
"என்ன புத்தகம் அது?"
"மார்ட்டின் லூதரைப் பத்தின புத்தகம், சார். இங்க லைப்ரரில எடுத்தது. இந்த ஊர் லூதர் இல்ல. பழைய லூதர் . . ." என்று தொடங்கி லூதர் எப்படி போப் ஆண்டவரை எதிர்த்தார், எப்படி அவர் கொண்டுவந்த சீர்திருத்தம் மேற்கத்திய அறிவியலும் தொழில்நுட்பமும் இலக்கியமும் வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்தது என்பதைப் பற்றியெல்லாம் பேசி முடிக்கும்போது அவர் கேட்பார்:
"படிச்சு முடிச்சுட்டேளா?"
"எங்க சார், ஒரு நாப்பது பக்கம் படிச்சிருப்பேன்."
"நாப்பது பக்கத்திலயே இவ்வளவு விஷயம் வச்சிருக்கானா?"
-சு.ரா.வுடன் சில நாட்கள்
நெகிழ்ச்சியுடன் எழுதுவதற்குரிய பாதகங்களை கவனமாகத் தவிர்க்கும் இந்தக் கட்டுரை பெரும் துயருடன் முடிகிறது. "காற்றில் கலந்த பேரோசை"யை எழுதியவருக்குத் தகுந்த சிறப்பான ஒரு கட்டுரை இது.

தனது தலைவர்களின் லட்சியவாதத்தை நேரில் காணும் அதிர்ஷ்டத்தைக் கொண்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். பிறகு வந்த தலைவர்களின் அயோக்கியத்தனம் அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு வேதனை அளித்திருக்கும். குறிப்பாக மையநீரோட்ட அரசியலிலிருந்து காந்தியம் சுருங்கி மறைந்ததும் உலகெங்கும் சோஷலிச தீபங்கள் மங்கியதும் கிருஷ்ணனுக்குப் பெரும் வேதனையாக இருந்திருக்கும். ஆனால் நம்பிக்கை ஊற்று வற்றுவதில்லை என்ற பழமொழிக்கேற்ப, காந்திய சோஷலிசத்தின் மொத்த உருவமான சரத் சந்திராவைச் சந்திக்கும்போது கிருஷ்ணனின் லட்சியவாதத்திற்குப் புத்துயிர் கிடைக்கிறது. வழக்கம்போல இந்தக் கட்டுரையிலும் ஒரு புத்தகம் - எரிக் ஹாப்ஸ்பாமின் Age of Empire - ஆஜர் ஆகிறது. தொண்ணூற்றி சொச்சம் வயதான சின்ஹா, கிருஷ்ணன் அவருக்குக் காட்டிய இந்தப் புத்தகத்தைப் பார்த்து ஒரு பத்தியை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக்கொள்கிறார். இந்தக் காட்சி, சோஷலிச நம்பிக்கை லட்சியபூர்வமாகப் புத்துயிர் பெறுவதாகச் சித்தரிக்கப்படுகிறது:
சாப்பாடு மேஜையில் ஹாப்ஸ்பாம் புத்தகத்தை வைத்துக்கொண்டு தன்னிடம் உள்ள குறிப்பேட்டில் நிதானமாக அந்த வரிகளைப் பதிவு செய்துகொண்டார். யாரிடம் சொல்லப்போகிறார்? எந்தக் கூட்டத்தில் இந்தப் புள்ளிவிவரங்களை அடுக்கப்போகிறார்? நம்பிக்கைக்கும் வயதிற்கும் தொடர்பு இல்லை என்று அன்று எனக்குப் புரிந்தது. சோஷலிஸத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை துளிர் விட்டது.
-ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
கிரிக்கெட் தொடர்பான கட்டுரைகள் அல்லது புத்தகங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. என் பள்ளிப்பருவம் முழுவதும் கிரிக்கெட்டை ஆர்வத்தோடு ஆடியும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் சமீபத்தில் சி.எல்.ஆர். ஜேம்ஸின் Beyond a Boundary-ஐயும் ராம் குஹாவின் A Corner of a Foreign Field-ஐயும் (இதன் மதிப்புரை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது) படித்தபோதுதான் கிரிக்கெட் பரிணமித்து வருகையில் இந்தியா போன்ற நாடுகளில் அதனுடன் இணைந்திருந்த வர்க்க, இன, அரசியல் பிரச்சினைகளை கவனமாக ஆராய வேண்டியது எவ்வளவு அவசியம் என்று உணர்ந்தேன். கிருஷ்ணன் தான் நேசிக்கும் இந்த விளையாட்டு பற்றி நினைவில் நிற்கும் வகையில் எழுதுகிறார். ஒவ்வொரு மேட்ச்சும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த அதீதங்களின் யுகத்தில், வானொலியில் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கான நேர்முக வர்ணனையைக் கேட்ட அனுபவத்தைச் சொல்லும் கிருஷ்ணனின் கட்டுரை, என்றோ மறைந்துபோன ஒரு காலத்திலிருந்து வந்த கதை போலிருக்கிறது.. ஆனால் மேற்கண்ட பதிவை உயர்த்துவது எது என்றால், கிரிக்கெட்டைப் பற்றிய சமூக மற்றும் சொந்தப் பின்புலத்திலான பார்வைதான்.
சென்னைக்கு நான் படிக்க வந்த காரணங்களில் ஒன்று கிரிக்கெட் போட்டிகளை நேரில் காணலாம் என்பது.
எனது ஆங்கில அறிவு வளர்ந்ததற்கும் கிரிக்கெட் ஒரு காரணம். ஆஸ்திரேலியாவின் பாபி சார்ல்டன், ஆலன் மெகில்ரே, இங்கிலாந்தின் ஜான் ஆர்லட், ப்ரியன் ஜான்ஸ்டன் போன்றவர்கள் இறக்கும் தறுவாயில் இருக்கும் போட்டியையும் தங்கள் வர்ணனைகளால் உயிர்பெற வைப்பவர்கள்.
-கேட்டதும் கண்டதும்
கிரிக்கெட்டைப் பற்றி எழுதுவது எளிதான ஒரு கலை அல்ல. இந்த விளையாட்டில் ஒரு வேட்கை, அதன் வரலாறு குறித்தும் கலாச்சார மற்றும் சமூக சக்தி என்ற முறையில் அதன் பங்கு குறித்தும் குறித்த ஆழ்ந்த பிரக்ஞை இருந்தால்தான் அதைப் பற்றிச் செறிவாகவும் சுவையாகவும் எழுத முடியும். எல்லைகளுக்கு அப்பாற்பட்ட, கோடிக்கணக்கானோரை வசப்படுத்திய விளையாட்டான கிரிக்கெட்டைப் பற்றி எழுதுவதில் இறங்கியிருக்கும் கிருஷ்ணனைப் பார்த்து மற்றவர்களுக்கும் அது குறித்து எழுத ஊக்கம் கிடைக்கும் என்று நம்புவோமாக.

கிருஷ்ணனின் அறிவியல் கட்டுரைகள் என்று வரும்போது, ஒரு மொழி தனது கலாச்சார மற்றும் சமூக வெளிக்குரிய எல்லா அம்சங்களையும் உள்வாங்கிக்கொண்டு தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற உறுதியான வாழ்நாள் கால நம்பிக்கையே அவற்றின் அடிச்சரடாக இருக்கிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தமிழில் கற்கவும் கற்பிக்கவுமான தேவை குறித்து நாம் எல்லோரும் உடன்படுகிறோம் என்றாலும் மிகக் கடினமான கருத்தாக்கங்களையும் கையாளக்கூடிய, அதே சமயத்தில் சாமானியனும் புரிந்துகொள்ள முடியும் அளவுக்கு எளிமையாகவும் இருக்கும் செறிவான, நேர்த்தியான ஒரு சொற்தொகுதியை உருவாக்குவதற்கான உழைப்பு, நேரம், அறிவுசார் மூலதனம் ஆகியவற்றைச் செலவழிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. யூக்ளிடின் ஐந்தாம் கூற்றின் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொள்ளுங்கள்:
இரு கோடுகளின் குறுக்காக செல்லும் மற்றொரு கோட்டின் பாகம் அந்தக் கோடுகளோடு ஒரு பக்கத்தில் ஏற்படுத்தும் கோணங்களின் மொத்தம் இரு செங்கோணங்களின் மொத்தத்திற்கு குறைவாக இருந்தால் அந்த இரு கோடுகளும் (கோணங்களின் மொத்தம் இரு செங்கோணங்களின் மொத்தத்திற்குக் குறைவாக இருக்கும் பக்கத்தில்) சந்திக்கும்.
(மூச்சு நின்றுவிடும் போலிருக்கிறது!)
-வடிவியலின் கதை
இழைக் கோட்பாட்டின் கணித நெளிவு சுளிவுகளை மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்று கற்னை செய்து பார்க்கத்தான் முடியும். ஆனால் அது செய்ய முடியாத காரியமல்ல. மற்ற நாடுகளில் செய்திருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். இதற்கு அரசிடம் நீண்டகால நோக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த எழுத்தாளர்களிடமும் அறிஞர்களிடமும் கூட்டுழைப்பும் ஈடுபாடும்தான் தேவை. இந்த நோக்கு அறிவியல், மொழியியல், அழகியல் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்; அழகாக வடிவமைக்கப்பட்ட, விளக்கப்படும் விஷயத்தை நீர்த்துப்போகச் செய்யாத எளிய நடை கொண்ட பாடநூல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இது போன்ற கட்டுரைகளை அந்தத் திசையை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் சில அடிகளாகக் கொள்ளலாம்.

IV

இந்தக் கட்டுரைகள் எனக்குப் பல விதங்களில் நெருக்கமானவை. இவற்றில் இருப்பதில் பெரும்பகுதியை நான் கிருஷ்ணனிடமிருந்து வந்த மின்னஞ்சல்களிலேயே படித்துவிட்டேன். இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களில் அங்குமிங்குமாகச் சிலவற்றை அவர் பேசக் கேட்டிருக்கிறேன். இந்தக் கட்டுரைகள் சிலவற்றில் என் தாத்தா, பாட்டி, அம்மா, சகோதரி, மற்றும் நானறிந்த பிறர் திடீர் திடீரென்று தலை காட்டுகிறார்கள். கிருஷ்ணனைப் பற்றிய என் நினைவுகளில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி, அவர் என்ன புத்தகங்களைப் படிக்கிறார் என்று தெரிந்துகொள்ள அவருடைய பிரீஃப்கேஸைக் குடைந்ததுதான். (லிடெல் ஹார்ட், ஜான் கியே, யான் மோரிஸ், ஃபிலிப் லார்க்கின், சு.ரா. ... இது முடிவற்ற, சுவையான பட்டியல்!) அந்தக் காலகட்டத்தில் நான் இருத்தலிய, மாஜிக் ரியலிச வாசனை இல்லாத எந்தப் புத்தகத்தையும் தொடவில்லை. பல வருட வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைத்த பிறகே அவரது மெருகேறிய புத்தக ரசனையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்த அருமையான ரசனையின் பலனைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பு இப்போது மற்றவர்களுக்கும் கிடைத்திருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

இந்தக் கட்டுரைகள் எல்லாவற்றையும் ஒன்றாகப் படிப்பது என் மாமாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இதைத்தான் அவற்றின் பலமாகக் கருதுகிறேன். "உலகம் புத்தகமாவதற்காகவே இருக்கிறது" என்று மல்லார்மே ஒரு முறை சொன்னார். இது ரொம்பவே பிரெஞ்சுத்தனமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இதில் எழுத்தாளருக்குச் சாதகமான ஓரவஞ்சனை தென்படுகிறது. எனவே, "உலகம் புத்தகத்தில் படிக்கப்படுவதற்காகவே இருக்கிறது" என்று கூடுதலாக ஒரு வாக்கியம் சேர்த்துக்கொள்ளலாம். ஆசிரியர், வாசகர், இருவரையுமே மனதில் வைத்துக்கொண்டால் நடையையும் உள்ளடக்கத்தையும் பற்றிய அர்த்தமில்லாத பேச்சைத் தவிர்க்கலாம். கிருஷ்ணனுக்கு உலகின் மீதுள்ள ஆர்வம் விரிவும் ஆழமும் கொண்டது என்பதை அவர் எத்தனை விஷயங்களைக் குறித்து மிகுந்த வேட்கையுடன் எழுதுகிறார் என்பதிலிருந்து தெரிகிறது. ஆனால் வாசகர்மீது அவருக்கு இருக்கும் அக்கறைதான் இந்தக் கட்டுரைகளை சுவாரஸ்யமானவையாகவும் சமநிலையிலும் வைத்திருக்கின்றன. (சில இடங்களில் அவர் தனது சமநிலை உணர்வை இழந்து கடுமையான, உரத்த குரலில் எழுதியிருக்கிறார். இந்தக் குரல் மற்ற கட்டுரைகளுடன் ஒட்டாமல் நிற்கிறது. 'நச்சுக் குப்பைக'ளில் வரும் வலிந்து எழுதப்பட்ட நகைச்சுவை ஓர் உதாரணம்.)

வெர்மீரைப் பற்றிக் கிருஷ்ணன் சொல்லியிருப்பதைச் சற்று மாற்றி எழுதினால், கிருஷ்ணனின் உலகம் "உங்களை எட்டிப் பார்க்க வைக்கும், எட்டிப் பார்த்தால் இழுத்துக்கொள்ளும் உலகம் அது." வாசகரே, உங்களுக்குக் கிடைக்கப்போகும் பல மணிநேர வாசிப்பு அனுபவத்தை நினைத்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது!

-நம்பி
பாஸ்டன், ஏப்ரல் 2007

(தமிழாக்கம் - திவாகர்)

 1கட்டுரைகளின் வகைப்பாடு பற்றி ஃபிலிப் லோபேட் The Art of the Personal Essay என்றபுத்தகத்திற்கு எழுதிய முன்னுரையில் விரிவாக அலசியிருக்கிறார். அதைத்தான் நான் இங்கே சுருக்கமாகத் தழுவி எழுதியிருக்கிறேன். அவரே ஹோல்மன் மற்றும் ஹார்மனின் A Handbook to Literature-இலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அனுபவக் கட்டுரையை முறைசாராக் கட்டுரையின் உட்பிரிவாக லோபேட் வகைப்படுத்துகிறார். ஆனால் நான் அவற்றை ஒரே பொருளைக் கொண்ட பதங்களாகப் பயன்படுத்தியிருக்கிறேன்.
2 Of Experience, மோன்டேன்

அக்கிரகாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன், கட்டுரைகள், 
காலச்சுவடு பதிப்பகம், 214 பக்கங்கள், 
விலை ரூ.175, 

கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையை  இங்கு இடுகையிட அனுமதியளித்த கட்டுரையாசிரியர் திரு நம்பி அவர்களுக்கும் காலச்சுவடு பதிப்பாளர் திரு கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள்.

ஆம்னிபஸ்ஸில் மாயக்கூத்தன் எழுதிய அக்கிரகாரத்தில் பெரியார் நூல் ;அறிமுகம் இங்கிருக்கிறது/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...