பதிவர் : சரவணன்
மொத்தம் முப்பத்து மூன்றே பக்கங்கள். எண்ணிப் பார்த்தபோது முன்னூற்று முப்பத்து சொச்சம் வார்த்தைகள் மட்டுமே, மொத்தப் புத்தகத்திலும்! கவிதை நடை; கூடவே பக்கத்துக்குப் பக்கம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் படங்கள். இதற்குள்ளாக ஒரு அதிசய உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார் மௌரிஸ் சென்டாக். இதில் வருகிற மேக்ஸ் என்ற சிறுவனின் கற்பனை பெரிதா அல்லது அவனது கற்பனை உலகைக் காண முடிந்த கதாசிரியரின் கற்பனை பெரிதா என்ற வியப்பு ஏற்படுகிறது.
இது ஒரு சிறுவர் புத்தகம். ஒரு கதையைக் குழந்தைகள் அணுகுவதற்கும் பெரியவர்கள் அணுகுவதற்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு. குழந்தைகளுக்கு, கதை கேட்கையில் அல்லது படிக்கையில் புறவுலக தர்க்கம் சார்ந்த மனத்தடைகள் எதுவும் இருப்பதில்லை. ஒரு தவளையோ, மரமோ எப்படிப் பேசும் என்று அவர்கள் கேட்பதில்லை. புறவுலக தர்க்கம்தான் இல்லையே தவிர, கதைக்குப் புனைவுலக தர்க்கம் ரொம்பவே முக்கியம். அந்தத் தவளையோ, மரமோ வாயை மூடிக்கொண்டு பேச முடியாது! அப்படி நீங்கள் கதை சொன்னால், ‘அது எப்படி வாயை மூடிக்கொண்டு பேச முடியும்?’ என்று உடனே கேட்பார்கள். ஆக, கதைக்குள் செயல்படுவது புனைவுத் தர்க்கம் என்ற புரிதல் ஒரு குழந்தைக்கு இயல்பிலேயே உண்டு. அதே புரிதலோடு படிக்க வேண்டிய கதை இது.
இந்தப் புத்தகத்தில், கதை நிகழும் நாளில் மேக்ஸ், ஓநாய் போன்ற உடையை அணிந்திருக்கிறான். ரொம்ப விஷமம் பண்ணியதால் அவன் அம்மா அவனை ‘காட்டு ஜந்து’ என்று திட்டுகிறாள். அதற்கு மேக்ஸ் ‘உன்னைத் தின்று விடுவேன்!’ என்று அம்மாவை மிரட்ட, சாப்பாடு இல்லாமல் படுக்கைக்கு அனுப்பப்படுகிறான்.
இப்பொழுதுதான் அந்த அதிசயம் நடக்கிறது. அவன் அறைக்குள் செடிகொடிகள் மண்டி அது ஒரு காடாகிறது. சுவர்கள் காணாமல் போய்விடுகின்றன. ஒரு கடலும் அதில் ஒரு சிறு படகும் வருகின்றன. மேக்ஸ் அந்தப் படகில் ஏறி இரவும் பகலும், வாரக் கணக்கில், ஒரு வருடத்துக்குமேல் பயணிக்கிறான்— காட்டு ஜந்துகள் இருக்கும் இடத்துக்கு.
அங்கு பல விநோத ஜந்துகள் பல்லை நறநறத்தபடி உறுமிக்கொண்டு வருகின்றன. அவற்றைத் தன் மந்திரசக்தியால் (அதாவது கண்களை வெறித்துப் பார்த்து ஒருமுறை சிமிட்டுவது) அப்படியே உறைந்து நிற்கச் செய்கிறான் மேக்ஸ். அவை பயந்துபோய், ‘நீதான் எல்லாரையும்விடப் பெரிய காட்டு ஜந்து’ என்று கூறி, அவனைத் தங்கள் அரசனாக்கிவிடுகின்றன. சித்திரங்களின்படி, இதில் வருகிற காட்டு ஜந்துகள் அனைத்தும் கற்பனையே. நமக்குத் தெரிந்த எந்த விலங்கையும் குறிப்பிடுபவை அல்ல.
‘உம், தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!’ என்று மேக்ஸ் ஆணையிட, ஒரே கூச்சல், கும்மாளம்தான். சிறிது நேரத்தில் ‘போதும் நிறுத்துங்கள்!’ என்று உத்தரவிடும் மேக்ஸ், அந்த ஜந்துகளை சாப்பாடில்லாமல் படுக்க அனுப்புகிறான். பிறகு அவனைத் தனிமை வாட்டுகிறது. தன்னை எல்லாவற்றிலும் அதிகமாக நேசிக்கும் ஒருவர் இருக்கும் இடத்துக்குப் போக விழைகிறான். எங்கோ உலகிற்கு அப்பாலிருந்து அருமையான சாப்பாட்டு வாசனையும் வருகிறது. காட்டு ஜந்துக்கள் இருக்குமிடத்தின் அரச பதவியைத் துறக்கிறான்.
காட்டு ஜந்துக்களோ, ‘போகாதே, உன்னை நாங்கள் அவ்வளவு நேசிக்கிறோம்– உன்னை அப்படியே சாப்பிட்டுவிடுவோம்’ என்றபடி பல்லை நறநறத்து, உறுமிக்கொண்டு சூழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவற்றுக்கு டாடா காட்டிவிட்டுத் தன் படகில் ஏறிக் கிளம்பிவிடுகிறான் மேக்ஸ்.
ஒரு வருடத்துக்கு மேலாக, வாரக்கணக்கில், மேலும் ஒருநாள் பயணம் செய்து தன் அறைக்குத் திரும்புகிறான். அங்கு அவனுடைய சாப்பாடு அவனுக்காகக் காத்திருக்கிறது. அது சூடாகவும் இருந்தது என்பதுடன் கதை முடிகிறது.
இப்போது உங்கள் கேள்வி, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பதா? மேக்ஸ் தூங்கிப்போய்க் கனவு கண்டிருக்கலாம். அல்லது தூங்காமலே கற்பனை செய்திருக்கலாம். பல சமயங்களில் சிறு குழந்தைகளால் கனவு, கற்பனை, நிஜம் போன்றவற்றைப் பிரித்தறிய முடிவதில்லை என்பது உண்மைதானே? ‘இதெல்லாம் கனவு’ என்று ஆசிரியர் சொல்லாமல் விட்டிருப்பது கதையின் மதிப்பை உயர்த்துகிறது.
‘அதிசய உலகில் ஆலிஸ்’ போன்ற புத்தகம் இது. காட்டு ஜந்துகள் மிகுந்த கற்பனையுடன் வரையப்பட்டுள்ளன. பன்றித்தலை, கொம்புகள், மனிதக் கால்களுடன் ஒன்று; தவளை போன்ற உடல், பிடரி மயிர், முயல் வாலுடன் ஒரு ஜந்து; சேவல் போன்ற தலை, வால், ஓநாய் உடலுடன் ஒன்று; காண்டாமிருகம் மாதிரியான கொம்பு, தலையிலும் கொம்புகள், மனிதத் தலைமுடி மாதிரியான நீண்ட முடி, முதலைப் பற்களுடன் மற்றொன்று; ஏறக்குறைய பூனை மாதிரித் தலை, வளைந்த கொம்புகள், செதில்களுடனான கால்கள் என்று ஒரு ஜந்து... இப்படி. 1964ம் ஆண்டின் மிகச் சிறந்த படக்கதைப் புத்தகம் என்பதற்காக கால்டிகாட் மெடல் பரிசு பெற்றது இப்புத்தகம்.
இந்த மாதிரியான புத்தகம் தமிழில் எழுதப்படுமா என்ற சாத்தியமற்ற கேள்வியை விட்டுவிடுவோம். குறைந்தபட்சம் இந்தப் புத்தகத்தை (இன்னும் பல அருமையான உலக சிறுவர் புத்தகங்களை) யாராவது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டாலே எவ்வளவோ நன்றாக இருக்கும்.
இந்தக்கதை எப்படி நடந்திருக்கும் என்ற சாத்தியங்களை மேலே பார்த்தோம் அல்லவா? இன்னொரு சாத்தியமும் உண்டு— இந்த விஷயங்கள் நிஜமாகவே நடந்திருக்கலாம்! மேக்ஸைக் கேட்டுப் பாருங்கள், அப்படித்தான் சொல்வான். மேக்ஸைக் கண்டுபிடிக்க முடியவில்லையா, உங்கள் குழந்தையைக் கேட்டுப் பாருங்களேன்.
Where the Wild Things Are
Story and pictures by Maurice Sendak
Harper Collins Publishers
இணையத்தில் வாங்க அமேசான்
அட்டைப்படம் (ஸ்பானிஷ் பதிப்பு) Courtesy: Amazon.in
அவசியம் வாங்கி படிக்கிறோம் நாங்களே இன்னும் அப்படிதான் இருக்கிறோம் .நன்றி
ReplyDeleteகோவை மு. சரளா,
Deleteவருகைக்கும் இடுகைக்கும் நன்றி, தங்கள் தொடர்ந்த நல்லாதரவை நாடுகிறோம்.
நன்றி கோவை மு. சரளா அவர்களே. Your comment made my day!
Deleteஇது பராக் ஒபாமாவுக்கு மிகவும் பிடித்த புத்தகமாம். இதைப்பற்றி 10 விந்தையான ('wild') தகவல்களை வெளியிட்டிருக்கிறது த கார்டியன் செய்தித்தாள். பார்க்க- http://www.theguardian.com/childrens-books-site/2016/mar/29/10-wild-facts-about-maurice-sendaks-where-the-wild-things-are?CMP=share_btn_tw
ReplyDelete