பதிவர் - ஸ்வப்னா அரவிந்தன்
பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் உள்ள இவரது கதைகள் ஏறத்தாழ எல்லாமே நெகட்டிவாக இருக்கின்றன. யாரையும் நம்ப முடியாது, எல்லாரும் துரோகம் செய்கிறார்கள், எல்லாம் செத்துக் கொண்டிருக்கிறது, எவன்டா ஏமாறுவான் என்று உலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போல் நினைக்க வைக்கும் கதைகள், ஒரு நண்பர் சொன்ன மாதிரி, "உலகம் மோசமாகிக் கொண்டிருக்கிறது என்ற தொனி,' இவற்றில் இருக்கிறது. கடைசி கதையில் மட்டும் கொஞ்சம் நம்பிக்கை - ஆனால் அதுவும் யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்ற முழுகிக் கொண்டிருக்கிறவனின் நம்பிக்கை.
பாராட்டி எழுதுவதற்கு இருக்கும் விஷயங்கள் இரண்டு. முதலாவது, வட்டார வழக்கு. இதிலுள்ள கதைகள் ஒரு வாழ்க்கை முறையை நமக்குத் தெரிவிக்கின்றன, இதன் பேச்சு மொழி தமிழுக்கு வளம் சேர்க்கிறது. இரண்டாவதாகப் பார்த்தால், இதிலுள்ள மத நம்பிக்கைகள். மரத்தின் உச்சிக்குப் போகும் சிறுவன் ஒருவன் மேகத்திலிருந்து ஒரு பாம்பு கிளை விட்டுக் கிளைக்குப் பறந்து தாவி வருவதைப் பார்த்து பயந்துபோய் இறங்கி விடுகிறான் - அல்லாஹூ தன் வீட்டை யாரும் பார்த்துவிடக் கூடாது என்று இந்த மாதிரி பாம்புகளை அனுப்பி வைப்பாராம், அவை கொத்துவது கண்களில் (பக்கம் 8). இதே மாதிரி ஜின்னுகளை வைத்துக் கொண்டு தகடு வைப்பது எடுப்பது, அரேபியா சார்ந்த நம்பிக்கைகள் என்று கொஞ்சம் இருக்கின்றன. இதெல்லாம் வாசிக்க சுவாரசியமாக இருக்கின்றன. தோப்பில் முஹம்மது மீரான் இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்திருக்கலாம்.
பொதுவாக இந்தக் கதைகளில் நல்ல மொழி வளம் இருக்கிறது. இயல்பான, ஆனால் கச்சிதமான வர்ணனைகள்.
"அன்று இரவு உறங்கிக் கொண்டிருந்த நூருன்னிசா, பாறைமேல் அவுலியா வந்து உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் நினைவாகக் கட்டப்பட்ட வெண்ணிக்கையான (தூய்மையான) பள்ளியை ஒட்டியுள்ள படித்துறையில், குளிப்பதற்காக உடை மாற்றினாள். பட்டுப் போன்ற நிலவில் தனிமையில் நின்று கொண்டிருந்த அவள் கண்ணுக்கு அலையெழுப்பாத கடலில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல் தெரிந்தது. கரையை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்த கப்பலைக் கண்டதும், குளியல் உடையோடு ஆற்றில் குதித்து அக்கரையில் உள்ள கடற்கரைக்கு நீந்தினாள். வெள்ளிக் கொலுசு கிலுகிலுங்க ஓடிச் சென்றாள்."(அப்துல்லா இப்னு அபூபக்கர்)
என்றெல்லாம் எழுதும்போது கதையைப் படித்துக் கொண்டிருப்பதை மறந்து நாமும் நூருன்னிசாவோடு செல்கிறோம். ரொம்பவும் சிரமப்பட்டு இதை எழுதிய மாதிரி தெரியவில்லை. இயல்பாக வந்திருக்கிற மாதிரிதான் இருக்கிறது. இது போன்ற விஷயங்கள் கதைகளில் நிறைய உண்டு.
இந்த அப்துல்லா இப்னு அபூபக்கர் கதை, தொகுப்பிலுள்ள மற்ற கதைகள் மாதிரி இல்லை. ஆனால் தவறாக இருந்தாலும் பரவாயில்லை என்று தீவிரமாக யோசித்தால் மற்ற கதைகளைவிட பயங்கரமான வீழ்ச்சியைச் சொல்லும் கதை என்று தோன்றுகிறது.
நூருன்னிசா கல்யாணமாகாத பெண். கப்பித்தான் அப்துல்லா இப்னு அபூபக்கர் அரபி கப்பலில் வந்து தன்னைக் கட்டிக் கொள்வான் என்ற கனவில், தனக்கு வரும் வரன்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லி கிழவியாகிறாள். அவளது கனவுகளில் கப்பல் காப்டன் மட்டும் தொடர்ந்து வருகிறான். கடைசியில் உண்மையை ஒருவாறு உணர்கிறாள்.
இதில் சில மாய மந்திர விஷயங்கள் இருக்கின்றன - அப்துல்லா இப்னு அபூபக்கர் 'புறப்படு' என்றதும் அவனுடன் அரேபியாவுக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து செல்கிறாள் நூருன்னிசா- 'சூரியனை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருக்கும் யானைப்பாறையின்மீது அவர்கள் ஏறிச் சென்றனர்'. ஆனால் துரதிருஷ்டவசமாக, 'இருள் மண்டலத்தை அடைந்ததும், எதிரில் எகிறிப் பறந்து வந்த யானைக் கழுகு மோதி, அவளுடைய சிறகுகள் உடலிலிருந்து அறுந்து தெறித்தன.'
கதையில் சொல்லப்படும் வரலாற்றில் அரபிகள், "இருந்த தகாலம்வரை இருந்திட்டு தாலி அறுத்துட்டுப் போவும்போ, சாக்குக் கணக்கில் பணம் அள்ளி இவளுகளுக்குக் கொடுத்தாவோ; அழகழகான அரபிக் குழந்தைகளை இவளுவோ பெத்துப் போட்டாவோ".
அரபி வசீகரத்தை விமரிசிக்கும் கதையாக - ஒரு எச்சரிக்கையாக நூருன்னிசாவின் ஏக்கத்தைப் படிக்கலாம், அது சரியா தப்பா என்ற கவலையை எல்லாம் விட்டால்.
ஆனால் இதில் உள்ள மற்ற கதைகள் எப்படி என்று கேட்டால், அடையாளங்கள் என்ற கதையைச் சொல்லி ஏறத்தாழ எல்லா கதையும் இப்படிதான் என்று சொல்லிவிட முடியும்.
அந்தக் கதையில் நாற்கரச் சாலை அமைக்கப்படும் பாதையின் ஓரத்தில் உள்ள கிராமத்தில் ஒரு பையன் குளமும் மரமுமாய் சந்தோஷமாக இருக்கிறான். கதை முழுசும் குளமும் மரமும். கதையின் திருப்பம் அவனது அப்பா அவனை ஹோட்டல் வேலை செய்ய வெளியூருக்கு அனுப்பும்போது வருகிறது.
ஹோட்டல் பாரடைஸில் வேலை செய்யும் அவன், 'மூதாட்டி மரத்தின் உசரத்தைப் பற்றியும் மொட்டையன் குளத்தில் வரால்கள் ஓடுவதையும் குளக்கோழிகள் நீந்தும் அழகைப் பற்றியும்..." சொல்லுவதைக் கேட்ட நண்பன் நாராயணன் ஆசை ஆசையாக பெருநாள் விடுமுறைக்கு இவனோடு ஊர் வருகிறான். ஆனால் ஏமாற்றம் - மரம் வெட்டப்பட்டு கிடக்கிறது, குளத்தைக் காணோம். தங்க நாற்சக்கர சாலைக்காக எல்லாம் போச்சு. அப்போது அவன், 'நான் ஒன்கிட்ட பொய் சொன்னேன்டேய். இங்கே மூதாட்டி மரமும் இல்லை; ஆம்பல் குளமும் இல்லை. நீ உன் ஊருக்கு பஸ் ஏறிப் போய்டு," என்று சொல்வது ஒரு அசாதாரணமான உச்சம் என்றால் மற்ற விஷயங்கள் கதைகளில் திரும்பத் திரும்பப் பேசப்பட்டு சாதாரண விஷயங்களாகின்றன.
இதில் இந்த மூதாட்டி மரத்துக்கு ஒரு தொல்புராணமும் சொல்லப்படுகிறது. பாண்டிய ராஜாவின் படைகளும் மலையாள ராஜாவின் படைகளும் இந்த மரத்துக்கடியில்தான் போரிட்டன; ஒரு வெள்ளைக்காரனை இதிலிருந்துதான் ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் சுட்டான்; இதில் ஒரு ஆவி இருக்கிறது; இது வானத்தைத் தொடுகிறது. இங்கு வெளிநாட்டு பறவைகளும் தங்கிச் செல்கின்றன.
இப்படியாகப்பட்ட மரம்தான் வெட்டப்படுகிறது.
கதையின் துவக்கத்தில் இது. குளத்தில் வரால் மீன்கள் குஞ்சு பொரிக்கின்றன. சூரிய வெளிச்சம் பார்க்க இந்த குஞ்சுகள் மேலே வரும்போது அவற்றை அரவணைத்துக் கொண்டு பெரிய வரால்களும் வரும். ஒண்ணரைக்கண்ணன் அனீபா இந்த சமயம் பார்த்து தூண்டில் போட்டு அந்த மீன்களைப் பிடித்து விடுவான். இதைப் பார்த்து கதையின் முக்கிய பாத்திரம் நினைப்பதாக இது: "ஒண்ணரைக்கண்ணன் அனீபாவை அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. கண் திறக்காத சின்னஞ்சிறு பாலகக் குஞ்சுகளை எத்தீமாக்கிவிட்டு (அனாதையாக்கிவிட்டு) தாயைப் பிடிச்சு சுடச் சுடப் பொரிச்சு திங்கற இந்த அநியாய பாவியை அல்லா விடுவானா?"
ஏறத்தாழ எல்லா கதைகளிலும் இதுதான் கேள்வி என்று சொல்லலாம். இதைக் கேட்காத, அல்லது நேரடியாகக் கேட்காத கதைகள் நன்றாக இருக்கின்றன.
மிஸ்டர் மார்டின் கதையில் ஒரு வெள்ளைக்காரர் கிராம மக்களை நம்ப வைத்து நயவஞ்சகம் செய்கிறார். இப்படிதான் ஆகும் என்று தெரிந்துவிடுவதால் பிரசாரக் கதை படித்த எஃபக்ட்தான். இதே போல், இரைகள் கதையில் ஹைவேஸ் ஆம்புலன்ஸ்கள் அடிபட்டு விழுந்தவர்களை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றன. அந்த மருத்துவமனைகள் இவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கின்றன.
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் கான்கிரீட் காட்டுவாசிகளுக்குப் பிடிக்கவில்லை, மரத்தை வெட்டச் சொல்கிறார்கள், கூட்டைக் கலைக்கச் சொல்கிறார்கள் என்ற கதை. கடைசியில் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மாமர மூட்டில் ஒரு பெண் செய்வினை செய்து தகடு வைத்திருக்கிறாள் என்று குறியும் பரிகாரமும் சொல்லும் ஜின்னும்மா, ஆவிகள் மாமரத்தில் வெண்பறவைகளாக குடியிருக்கின்றன என்று நம்பும் மனைவி - இதெல்லாம் சுவாரசியங்கள்.
நாராயண முதலித் தெரு 52ஆம் நம்பர் வீடு - உறவுகளை நம்பி ஏமாறும் கதை. "மனுசன்மாருடைய மனசு, இப்படிக் கல்லாய் இறுகிப் போவதற்கு, இந்தக் கால சுழற்சிக்கு ஏற்பட்ட தகராறு என்னவென்று புரியவில்லை. இன்னும் போகப்போக ஈர இதயம் இறுகிக் கல்லாகவே உறைந்து போகாது என்று சொல்ல முடியுமா?", "நீளாத கையும் மனைவி மக்களுக்குள்ளேயே சுருங்கிப் போய்விட்ட சிறு வட்ட உறவுகளைக் கொண்டு சுழல்கின்ற காலம்' என்பதெல்லாம் இதில் எல்லா கதைகளிலும் உள்ள விசனங்கள். இவை நிலத்தை விற்று பிள்ளையைப் படிக்க வைத்து, வீட்டையும் அவனுக்கு எழுதிக் கொடுத்து ஏமாந்து பள்ளிவாசலில் இறக்கி விடப்படும் அப்பாவைப் பேசும் தங்க வயல் கதையிலும் உண்டு, சொந்த பந்தங்களுக்காக எக்கச்சக்க தியாகம் செய்து அரை மணி நேரம் திண்ணையில் கிடக்கக்கூட அனுமதி மறுக்கப்படும் பிணத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் ஒரு சவ ஊர்தியின் நகர் வலம் கதையிலும் உண்டு.
இதில் 1100 ஆண்டு மகர மாசம் 18ஆம் தேதி வில் பத்திரம், தலையில் துண்டு கட்டிய பெண் ஆகிய இரண்டு கதைகளும் வித்தியாசமானவை. ஆனால் இவற்றிலும் முக்கிய பாத்திரங்கள் ஏமாற்றப்படுகின்றனர், இழப்புகளைச் சந்திக்கின்றனர்.
உலகம் மிகவும் மோசமானதாக இருக்கிறது, இன்னமும் மோசமாகக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையே ஒவ்வொரு கதையிலும் திரும்பத் திரும்பப் படிப்பதில் என்ன சுவாரசியம் இருக்கும் என்று கேட்கலாம். கதை என்ன என்று தெரிந்தவுடனேயே அது எப்படி முடியும் என்பதைச் சீக்கிரமே சரியாக யூகித்துவிட முடிகிறது. இதனால் கதைகள் சுவாரசியத்தை இழந்து விடுகின்றன என்பது உண்மைதான்..
ஆனால், அடுத்தது என்ன என்ற சுவாரசியம் இல்லாத குறையையும் பாத்திரங்கள் பேச்சு இதெல்லாம் புதுசாக இருந்தால் ஓரளவு சரிகட்ட முடியும் என்பதற்கு இந்தத் தொகுப்பு ஒரு உதாரணம்.
காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகமது மதிப்புரை
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
தோப்பில் முஹம்மது மீரான்,
அடையாளம் பதிப்பகம்,
திருச்சி.
தொலைபேசி எண் - 4332 273444
விலை ரூ.65
இணையத்தில் வாங்க - உடுமலை
புகைப்பட உதவி - உயிரோசை
No comments:
Post a Comment