பிறக்க ஓரிடம், பிழைக்க வேறிடம் என்பது நம் இனத்தின் சாபக்கேடு,
சிலருக்கு வரமும் கூட. இப்போதெல்லாம் இன்னும் முன்னேறி, பிறக்க, பள்ளி, கல்லூரி,
வேலை கடைசிகாலத்தில் செட்டில் ஆவது என்று எல்லாமே வெவ்வேறான இடங்கள் தான். நிலையான
ஓரிடத்தில் மெல்ல மெல்ல ஏற்படும் சில மாறுதல்களை ரசித்துப் பழகாமல்,
மாறுதல்களே/மாற்றமே வாழ்க்கை என தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்கின்றனர்
அல்லது ஏற்றுக் கொள்கின்றனர் இந்த தலைமுறையினர். இவ்வாறாக நாம் வாழ்க்கைச் சுழலில்
கடந்து சென்ற பல இடங்கள் நமக்கு பல அனுபவங்களையும் பல மனிதர்களையும் தந்திருக்கும்.
எனினும் கடைசி வரை எஞ்சி இருக்கப் போவதென்னவோ அந்த இடங்களில் நினைவுகள் மட்டுமே.
இவ்வாறாக, அந்த இடங்களைக் குறித்து வாசிக்கையில் மனது உவகை கொள்வது நிச்சயம்.
இத்தகைய நிகழ்வுகளில் நாம் அந்த புத்தகங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே உணர்வோம்.
அப்படி எனக்கு ஒரு நெகிழ்வை ஏற்படுத்திய புத்தகம்தான் 18வது அட்சக்கோடு.
பூகோள உருண்டையின் மேல் ஆராய்ச்சியாளர்கள் வரைந்த கற்பனைக் கோடுகளில்
பதினெட்டாம் அட்சக்கோட்டில் அமைந்திருக்கும் இரட்டை நகரங்களில் ஒன்றான
செகந்தராபாத் தான் கதைக்களம். சுதந்திரத்திற்கு பின் ஹைதராபாத் நிஜாம் சுதந்திர
இந்தியாவோடு இணைவதற்கு முன் நிகழ்ந்த பிரச்சினைகள், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டது
போன்ற வரலாறும் அரசியலும் புத்தகம் நெடுக இழையோடுகிறது.
அசோகமித்திரனின் இளமைக்கால நிகழ்வுகள், பள்ளி முதல் கல்லூரி வரை, அவர்
பார்த்த செகந்தராபாத் அவர் எழுத்துகளில் ஓவியமாய் மிளிர்கிறது. வீடுகள், வீதிகள், மக்கள்,
மக்களின் இயல்புகள், புராதன சின்னங்கள், போராட்டங்கள் என அனைத்தையும் ஒருசேரக்
கொடுத்திருக்கிறார் சந்திரசேகரனாக. சிறுவனாக கிரிக்கெட்டில் ஆர்வம் கொள்வதில்
தொடங்கி, பக்கத்து வீட்டு வேற்றுமத சிறுவர்கள் கிண்டல் செய்வது, சண்டையில் பயந்து
ஒதுங்குவது என்பதில் துவங்கி ஏதோ ஒருநாள் கலவரத்தினிடையில் யாரிடமோ அடிபட அரசியல்
புரிகிறது. கல்லூரியில் அரசியல் கூட்டத்தில் பங்கேற்கிறான். காந்தி சுடப்பட்டது
தெரிந்து கதறுகிறான். எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டுமென விரும்புபவனுக்கு
இதெல்லாம் புதிதாகவும் வேதனை தருவனவாகவும் இருக்கின்றன.
சந்திரசேகரனிடம் வளர்ந்த பின்னரும் தொடரும் சிறுவனது மனநிலை,
முதிர்ச்சியின்மை, அனுபவமின்மை என அனைத்தையும் தெளிவுற விவரிக்கிறார். உண்மையில்
சந்திரசேகரனுக்கு பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. அவன் மனதில் சஞ்சலம்,
வளர்ந்தவனாகி விடவேண்டும் என்ற எண்ணம் மேலும் தான் பிரச்சினைகளில் இருப்பதாய்
உணர்வதுதான் அவனது பிரச்சினையே. ஒரு கட்டத்தில் ராணுவம் ரேஸ்விகளை தேடிக் கொள்ளும்
தருணங்களில் இவன் தாக்கப் படுவதற்கான சாத்தியங்கள் நிரம்ப உயிர் பிழைக்க
ஓடுகிறான். உயிர் தப்பிப் பிழைக்க ஒரு வீட்டுச் சுவரேறிக் குதிக்கிறான். அவனைக்
கலகக் காரனாக எண்ணிய அவ்வீட்டுக் குழந்தை ஒருத்தி, தன வீட்டாரைக் காக்க
நிர்வாணமாய் அவன் முன் நிற்கப் புழுவாகிப் போகிறான். பாலுணர்வு ரீதியாகவும்
மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு சமூகத்தை நினைத்தவாறே ஓடுவதாய் நாவல் முடிகிறது.
சிறுவனாய் இருப்பவன் வளர்வதில், அவனுக்கு உலகம் புரிவதில் ஏற்படும்
சங்கடங்கள் எனப் பல விஷயங்களை இதில் கூறியிருக்கிறார் அசோகமித்திரன். வெறும்
நினைவு கூர்தலாக மட்டுமல்லாமல் விஷயங்கள் வாசகனுக்கு உணர்வுப் பூர்வமாகவும்
இருப்பதே இந்நாவலின் வெற்றி. மேலும் இந்நாவல் நேஷனல் புக் ட்ரஸ்ட் ‘ஆதான் பிரதான்’
திட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட தேர்வு
செய்யப்பட்ட நூல். கன்னட மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகாதமியும் வாங்கியுள்ளது.
நாவல் | அசோகமித்திரன் | காலச்சுவடு | பக்கங்கள் 222 | விலை ரூ. 175
இணையத்தில் வாங்க: கிழக்கு
No comments:
Post a Comment