உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ - சுஜாதா
தொண்ணூறுகளில் பாக்கெட் நாவல்கள் பிரபலமாயிருந்த சமயம் என்று நினைக்கிறேன், அப்போது இந்த ஹைக்கூவானது தமிழின் கடைநிலை வாசகன் வரையினில் சென்று சேர்ந்தது, தப்புந்தவறுமாக. (இவற்றை ஹைக்கூ என்றே குறிப்பிட வேண்டுமாம், ஹைக்கூக் கவிதை என்றால் அது சுடுதண்ணி என்று சொல்வதற்கு ஒப்பாம்)
அப்போதெல்லாம் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு புத்தகத்தில் யாரேனும் ஒருவர் இப்படி ஒரு கேள்வி எழுப்புவார். டியர் அரசு / டியர் மதன் / டியர் குருவியாரே / டியர் அல்லி / டியர் ஜூனியர்.... இந்த ஹைக்கூ என்பது என்ன?
மூன்று வரிக் கவிதை. இரண்டு வரிகளில் ஒரு நிகழ்வை ஒரு முடிச்சுடன் விவரிக்க வேண்டும், மூன்றாவது வரியில் சரேலென ஒரு திருப்பம். படிப்பவரைத் திகைக்க வைக்கும் அந்தத் திருப்பத்தில் முடியவேண்டும் கவிதை. இதுதான் ஹைக்கூ என்று தவறாமல் பதில் தரப்பட்டது. இவற்றின் ஆதிமூலம் ஜப்பான் என்ற கூடுதல் தகவலும் சுமந்து வரும் அந்தப் பதில்.
இதை அப்படியே நம்பினர் நம் மகாசனங்கள். பின்னர் தினத்தந்தியின் குடும்பமலரிலும், ராணி வார இதழிலும் இந்த விதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் ஹைக்கூகள் எழுதித் தள்ளத் துவங்கினார்கள்.
கடவுளுடன்
ஒப்பிடமாட்டேன் உன்னை
அம்மா*
செத்த பின்னாலும்
சிரிக்கிறான்
புகைப்படத்தில்*
அணைத்தும் எரியுது
தீ, அணைத்தது
நீ*
இப்படியெல்லாம் எழுதித் தள்ளிச் சாகடித்தார்கள் நம்மவர்கள். இன்னமும் இன்னமும் இவை மற்ற பத்திரிக்கைகளுக்குப் பரவின. எல்லாப் பத்திரிக்கைகளும் ஹைக்கூ கார்னர் என்று பக்கங்களை ஒதுக்கத் துவங்கின. ஜானி வாக்கரில் பாக்கெட் வாட்டர் கலந்து அடித்தால் என்னவாகுமோ அப்படியாகிப் போனது நிலைமை.
ஆழ்வார்கள், சிலப்பதிகாரம், புறநானூறு எனப் பல ”எளிய அறிமுகங்கள்” எழுதிய சுஜாதா இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்தார். இந்த ஹைக்கூகளுக்கும் ஒரு அறிமுகம் தேவை என்று உயிர்மை’யில் எழுதியதே இந்த “ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.
சுஜாதா வார்த்தைகளில் இதுதான் ஹைக்கூ:
நம் தின வாழ்வில் ஆச்சரியகரமான வசீகரமான பரவசமான சோகமான கணங்கள் பலப்பல உள்ளன.காலை நடந்து செல்லும்போது குட்டி நாய் உன்று உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது.அல்லது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பாரத்துச் சிரித்துவிட்டு டாட்டா காட்டுகிறது.பஸ்ஸில் ஒரு இளம் பெண் உங்களை அதிகப்படியாகப் பார்க்கிறாள்.முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்.திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.அலுவலகத்து மாடிப்படியில் ஒருவருடன் மோதாமல் தப்பிக்கிறீர்கள்.அல்லது மோதிக்கொண்டு லேசாக நெற்றியில் வலிக்க தடவிக்கொள்கிறீர்கள்.இவ்வாறு எத்தனை கணங்கள் ! உன்னதக் கணங்கள்! சின்ன சின்ன இன்ப துன்பங்களை நமக்கு இறைவன் பரிசுப் பொருட்கள் போல தினம் தினம் கிடைக்கின்றன.
ஹைக்கூ எழுதுவதும் படிப்பதும் இவ்வகையான கணங்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான்.அனுபவம் உணர்வு இரண்டையும் பிறருக்கு தர முயல்வதுதான் ஹைக்கூ.
மூன்று மணிநேர சினிமாவை நாவல் எனவும், பத்துநிமிடக் குறும்படத்தை சிறுகதை எனவும், கொண்டால், முப்பது வினாடி விளம்பரம் ஹைக்கூ எனப் புரிந்து கொள்ளலாம். மூன்று வடிவங்களிலும் கலைஞனானவன் தன் உணர்வுகளை, தன் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறான். அது விளம்பரத்திலோ அல்லது ஹைக்கூவிலோ மிகக் குறுகிய காலகட்டத்தில் சொல்லப்படுகிறது.
இந்த சரேல் திருப்ப ஜல்லியடிகளையெல்லாம் மறந்துவிடுங்கள். அவை ஹைக்கூ அல்ல.
புத்தகத்தில் தமிழில் ஹைக்கூ என்றொரு அத்தியாயம். பாக்கெட் நாவல்களையும், குடும்ப மலர்களையும் சுஜாதா துணைக்கு அழைக்கிறார் போல என்று பார்த்தால்.... இல்லையில்லை. நம் பழங்காலப் பழமொழிகளிலும், இலக்கியங்களிலும், திருக்குறளிலும் கூட ஒளிந்திருக்கும் ஹைக்கூ வடிவங்களைப் புட்டுப் புட்டு வைக்கிறார்.
யான் நோக்கின்
நிலம் நோக்கும்
என்பதுவே நேரடி ஹைக்கூ என்கிறார். உண்மைதானே. இதைத்தானே இன்றுவரை நிஜம், நிழல், கவிதை, சினிமாப் பாடல் எல்லாவற்றிலும் ஜல்லியடிக்கிறோம். இந்த அனுபவம் எல்லோருக்கும் (இந்திய நாகரிகத்தில்) வாய்க்கக் கிடைக்கிறது. நோக்கி நோக்கும் அந்நிகழ்வில் நாம் கிறங்கித்தான் போகிறோம்.
உனக்கும் உண்டு அந்த அனுபவம், எனக்கும் உண்டு அந்த அனுபவம். நீ சொல்ற, எனக்குப் புரியுது. அவ்ளோதான் ஹைக்கூ.
இந்த ஜப்பானிய ஹைக்கூவின் ஒரிஜினல் வடிவம் என்பது சுருக்கமானதே ஒழிய அந்த மூன்று வரி வரையறைகள் எல்லாம் அவை மேற்கத்திய உலகிற்குப் போய்விட்டு நம்மவர்களை வந்தடைந்தபோது அறுக்கப்பட்ட வரை’யாம்.
நிஜத்தில் சம்பிரதாய ஜப்பானிய ஹைக்கூவானது தூண்போல ஒரே வரியில் நிற்குமாம். ஒரே வரி என்றால் நம் பாணியில் இடமிருந்து வலமாக எழுதப்படும் எழுத்துக்களின் ஒருவரி அல்ல. ஜப்பானியர்களின் சித்திர வடிவிலான எழுத்துகளில் ஒரு தூண். யோசித்துப் பாருங்கள்.
ஹைக்கூ அல்லாத மற்ற வடிவங்கள் குறித்தும் ஒரு அளவளாவல் இருக்கிறது. தென்கா, ரங்கா, சென்றியு என்று பேசுகிறார் சுஜாதா. இவையெல்லாம் ஹைக்கூ வடிவங்களேதான் என்றாலும் தனியாட்சி கேட்டுப் பிரிந்து போனவையாம்.
ரெங்கா வடிவம் ஒன்று:
கரை இடித்தது
முனகிவிட்டு நீரில்
படகு நகர்கிறது
சென்றியு என்னும் வடிவம் இது:
நள்ளிரவில் வாங்கினோம்
இன்னும்
விடியவில்லை
இந்த சென்றியு மனித மனங்களின் அபத்தம், நகைச்சுவைகளைப் பிரதிபலிப்பது. இந்த இதர வடிவங்களைப் புரிந்தால் படிக்கலாம். இல்லையேல் ஹைக்கூவே போதும் என்று விட்டுவிடலாம்.
நல்ல ஹைக்கூ, நச்’சென்ற ஹைக்கூ ஒன்றுக்கு சுஜாதா தரும் உதாரணத்துடன்தான் புத்தகம் துவங்குகிறது. அந்த ஹைக்கூவை இங்கே அளிப்பதன் மூலம் புத்தகத்தின் மைய சுவாரசியத்தைக் குலைக்க விரும்பவில்லை நான். எவையெவை நல்ல ஹைக்கூக்கள் என்பதை சுஜாதா எழுத்திலேயே வாசியுங்கள்.
கடைசியாக..... இல்லையில்லை புத்தகத்தின் முன்னுரையிலேயே ஒன்றை சொல்லிக் கொள்கிறார் சுஜாதா:
இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது
வாத்தியாரா கொக்கான்னேன்!
பிகு1*: மேலே எழுதப்பட்டுள்ள மூன்று மொக்கை ஹைக்கூக்களும் என் கலத்திலிருந்து கொட்டியவையே.
பிகு2: என் கைவண்ணத்தில் மேலும் சில மொக்கை ஹைக்கூக்கள் இங்கே
பிகு3: இவை எவையும் ஹைக்கூக்கள் அல்ல. தயை கூர்ந்து வாத்தியாரின் புத்தகத்தை வாங்கி வாசித்து விடுங்கள்.
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
கட்டுரைகள்
விலை ரூ.40/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
/// இதைப் படித்தபின் பல ஹைக்கூக்கள் எழுதப்படாமல் இருந்தால் இப்புத்தகத்தின் குறிக்கோள் நிறைவேறுகிறது...
ReplyDeleteவாத்தியாரா கொக்கான்னேன்...! ///
இதையும் ரசித்தேன்...
நன்றி...