சிறப்புப் பதிவர்: சந்தியா
உள்ளூர் நூலகத்தில் சில சமயம் நல்ல புத்தகங்கள் கிடைக்கும்;அவற்றை ரமணி சந்திரன், அனுராதா ரமணனோடு அம்மா பெரிய மனது பண்ணி வீட்டுக்கு எடுத்து வருவார். அப்படித்தான் தி.ஜானகிராமனின் 'உயிர்த்தேன்' வீட்டுக்குள் வந்தது.
தி.ஜாவை முதன்முதலில் செம்பருத்தியில் ஆரம்பித்தது, அப்போது அந்த எழுத்து போர் அடித்தது. மெதுவான விவரணை, அந்தக்கால உலகம் இரண்டும் சேர்ந்து பாதியிலேயே விட்டு விட்டேன். பின்னர் ஒரு முறை ஆனந்த விகடனில் வந்த ஸ்டெல்லா புரூஸின் உறவுக்காரப் பெண் (பெயர் மறந்துவிட்டது) எழுதிய நாவலில் தி.ஜாவின் ‘அன்பே ஆரமுதே’வை சிலாகித்திருப்பார். அதனால் அதையும் வாசித்தேன். அதுவுமே மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவ்வளவு ரசிக்கமுடியவில்லை. ஒரு நீண்ட இடைவேளைக்குப்பிறகு தி.ஜாவின் ‘முத்துகள் பத்து’ படித்து, பத்துமே பிடித்தது. அதனாலேயே ஆர்வத்துடன் உயிர்த்தேனை எடுத்தேன், முடிக்கும்வரையும் அந்த ஈர்ப்பு கலையவில்லை.
சென்னையில் (நல்ல முறையில்) நிறைய பணங்காசு பார்த்துவிட்டு தன் சொந்த ஊருக்கு வரும் பூவராகனைச் சுற்றியே கதை நடக்கிறது. ஆனால் கதை அவனை பற்றியது அல்ல. அந்த ஊரில் அனைவரையும் அன்பால் அரவணைக்க முற்படும் செங்கம்மாவைப் பற்றியது. இன்னும் சரியாக சொல்லப்போனால் எல்லோரையும் சரி தவறு பார்க்காமல் அன்பு செய்வதை பொறுத்தது. அல்லது அப்படி அன்பு செய்வதில் உள்ள நடைமுறை முரண்களைச் சொல்வது. பூவராகன், செங்கம்மா, அனுசூயா எல்லோரும் அப்படிப்பட்டவர்களே! கொஞ்சம் கதையை சுருக்கமாக பார்ப்போம்.
பூவராகன், அன்பான மனைவிக்கு சொந்தக்காரன், இரண்டு அறிவான பெண் குழந்தைகளின் அப்பா, ஆழ்வார்களை துதிப்பவன், ஆச்சாரியார் ஒருவரிடம் வைணவம் பயின்றொழுகுபவன். அன்பான விஷயங்கள் அனைத்தும் அவனுக்குப் பிடிக்கும். உம் - அனைவரிடமும் அன்பையே பொழியும் அவனது தோழி அனுசுயா, புன்னகை தவழும் முகமுடைய தோழன் ஆமருவி.
சொந்தமாக வியாபாரம் செய்து வெற்றிகரமாக இருப்பவன். அவன் கேட்காமலே இறைவன் பணத்தை அள்ளிக்கொடுக்கிறான். அது கொஞ்சம் அலுக்கிறது அவனுக்கு. சொந்த ஊருக்குப்போய் விவசாயம் பார்த்து தன் தந்தை காலத்து கோயிலை புதுப்பித்து, சோம்பிப் போயிருக்கும் ஊரை சுறுசுறுப்பாக்கி, ஊரின் மகசூலைப் பெருக்கி, புதுப்பித்த கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துகிறான். இதையெல்லாம் தந்தையின் நினைவுக்காக செய்கிறான்.
அவனுக்கு ஊரை திரும்ப அறிமுகப்படுத்தி நிலம் வாங்கிக்கொடுப்பது அவனது மாமன் மகன் சிங்கு, விவசாய வேலைகளில் உதவியாக இருக்கிறார் கார்வார் கணேசப்பிள்ளை. அவரது மனைவிதான் செங்கம்மா. முதன்முதலில் செங்கம்மாவின் அழகைப் பார்த்து அதிசயிக்கிறான், அவளது அழகு வெறும் அழகல்ல, தெய்வாம்சம் என்றே அவனுக்குப் படுகிறது. அவ்வளவு அழகனல்லாத கணேசப் பிள்ளையைப் போய் மணமுடித்திருக்கிறாளே என்று சின்னதாய் பூவராகன் மனசுக்குள் வருத்தம். அவளை தேவதையென தெய்வமென நினைத்து மனதுக்குள் மரியாதை செய்கிறான். அதனாலேயே அவள் மனைவி அவளை வீட்டு வேலை செய்ய நியமித்த செய்தியை சொன்ன தன் மகளையே கடிகிறான். அவளுள், அவளது செய்கையில், உருவத்தில் அவனது சினேகிதி அனுவையே பார்க்கிறான். கோவிலை புதுப்பிக்கிறான், அவனது தோழன் ஆமருவி வெளிப்பிரகார சிலைகள் செய்கிறான், அவனுக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவு இல்லை என்பது தெரிகிறது.
செங்கம்மாவின் யோசனைப்படி பூவராகன் சோம்பியிருக்கும் ஊரை, ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொள்ளும் ஊரை திருத்துவதற்காக அவனே அனைத்து வீட்டு விவசாயத்தையும் தன் செலவில் செய்கிறான். அவனது நல்லெண்ணம் புரிந்ததும் ஊர் மொத்தமும் அவன் பக்கம் நிற்கிறது, வேலுவைத் தவிர.
வேலுவுக்கு முன் பின் அறிந்திராத பூவராகன் மீது என்ன பகை? செங்கம்மா எல்லோருக்கும் ஓடியோடி உதவி செய்பவள் மட்டுமல்ல, ஊர் விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் அறிவும், திறமையும் அவளுக்கு இருக்கிறது என்றுணர்ந்து ஊர்ப்பொறுப்புக்கு அவளை நியமிக்கிறான் பூவராகன். ஊர்க்காசு வேலுவிடம் இருக்கிறது. வேலுவுக்கும் செங்கம்மாவுக்கு ஒரு பிணக்கு இருக்கிறது, அது வேலுவின் காதல், ஆம், இருவருக்கும் திருமணமாகியிருந்தும் செங்கம்மாவை வேலு விரும்புகிறான். அவனை சலனமுற செய்கிறது அவள் அழகு, அவள் தனக்கில்லை என்று தெரிவதாலேயே அவள் மீது ஒரு வெறுப்பும் அவள் சார்ந்திருக்கும் பூவராகன் மீது பழியும் உருவாகிறது. ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் கேட்டும் ஊர்ப்பணத்தை தர மறுக்கிறான்.
செங்கம்மா அவனை சந்தித்துப்பேசி தன் மனதையும் நியாயத்தையும் தெரியப்படுத்துகிறாள். உயிரளவு காதலில் மூழ்கியிருக்கும் அவனோ தன் காதலை அழுத்தமாக செய்கை மூலம் தெரியப்படுத்துகிறான். பிறகு ஊர்ப்பணத்தை தருகிறான். கோவில் குடமுழுக்கில் கலந்துகொள்ளாமல் ஊரை விட்டுப் போகிறான். திரும்ப வரவேயில்லை. என்ன ஆனது அவனுக்கு? ஓரளவுக்கு ஊகித்திருப்பீர்கள் என்றாலும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது கதாபாத்திரங்களை பார்ப்போம். முதலில் செங்கம்மா – எல்லோரையும் அன்பால் தேடி வாரி அணைத்துக்கொள்பவள். அன்னை தெரசாவுடையது போல சேவை செய்வது அல்ல அவள் கொண்ட அன்பு , அழகானவள், அறிவானவள் அதே சமயம் அவளுக்கு தெரிந்த உதவிகளை ஓடி ஓடி வேற்றுமை பார்க்காது எல்லார் வீட்டிலும் செய்பவள். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆகிப்போனவள். தான் செய்யும் இதே காரியங்களை அழகு குறைந்த ஒரு பெண் செய்தால் இவ்வளவு சட்டை செய்ய மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்தே இருக்கிறது. அதனால் அவள் அதற்கு பெருமைப்படுவதில்லை.
பூவராகனின் வீட்டில் வேலைக்கு சேரும் சமயம் அவளது தெய்வீகமான அழகால் முதலில் கொஞ்சம் தடுமாறி பின்னர் தெளிவாகிறான் பூவராகன். அவன் வேண்டாமென்று சொன்னாலும் பூவராகனுக்கு கை கால் பிடித்து விடுகிறாள் செங்கம்மா, தன் கணவன் மற்றும் பூவராகனின் மனைவி முன்னிலையிலே! அந்த இடத்தில் நாம் பூவராகன், செங்கம்மாவின் மன உறுதியைக்காட்டிலும், ரங்கநாயகி(பூவராகனின் மனைவி) , கணேசப்பிள்ளையின் நம்பிக்கையையே அதிகம் வியக்க நேரிடுகிறது. அவளது அழகு இன்னொருவரை தூக்கம் இழக்க செய்கிறது, கொலைக்குத் தூண்டுகிறது (யாரை என்பதை நாவலை முடிக்கும்போது அறிவீர்கள்).செங்கம்மாவின் இன்னொரு பரிணாமமே அனுசூயா. அனு - அவளும் எல்லாருக்கும் அன்பையே அளிக்கிறாள். அவளுக்கு பிடித்த விதத்தில்.
கதையில் சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ஆமருவி, கார்வார் கணேசப்பிள்ளை மற்றும் மிஸ்டர் வில்லன் வேலு. ஆமருவி - இந்த பெயரை நான் கேள்விபட்டதேயில்லை, ஒரு இடத்தில் ஆவும், பூவும் பேசிக்கொள்கிறார்கள் என்று ஆமருவியும் பூவராகனும் பேசிக்கொள்வதை சொல்லும்போது இந்த மோனைக்காகத்தான் ஆமருவி என்ற பெயரைக் கண்டுபிடித்தாரோ தி.ஜா என்று தோன்றுகிறது. ஆமருவி முதன்முதலில் வில்லனை counter செய்யும் இடம், சிலையாக வடிக்கும் இடம் சுவாரஸ்யம்.
செங்கம்மாவின் அழகுக்கு பொருந்தாதவராக இருந்தாலும் கார்வார் மனைவிக்கு சுதந்திரம் கொடுக்கிறார், அவளது அறிவு தெரிந்தே இருக்கிறது. செங்கம்மா மனம் குழம்பி கஷ்டப்படும்போது அவரையே நாடி ஒடுங்குகிறாள், அவரை அவள் உண்மையாக நேசிக்கிறாள் என்பதும் தெரிகிறது. வில்லன் கதையில் நுழைகையில் கொஞ்சம் பாண்டவர் பூமி நினைவுக்கு வந்தது. பிறகு செங்கம்மாவுக்கும் அவனுக்குமான தனித்த தருணங்களில் அவனது காதல் தெரிகிறது, கொஞ்சம் வெறி பிடித்து இருந்தாலும் காதலாகவே அங்கீகரிக்கப்படுகிறது, செங்கம்மாவாலும் நம்மாலும்.
வெளிப்படையாக பார்த்தால் கதாபாத்திரங்களை பற்றிய கதையாக இருந்தாலும் உண்மையில் இது எல்லாரையும் இழுத்து அணைத்துக்கொள்ளும் நல்ல மனிதர்களின் கதை. அன்பின் கதை. தோதுபடாத இடத்தில் சிக்கி அவதிப்படும் காதலின் கதை. எல்லோருக்குமே வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில், ‘என்ன வாழ்க்கை இது, அன்பை மட்டுமே கொடுத்து, அன்பை மட்டுமே வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என நினைத்திருப்போம். அப்படியொரு நிமிஷத்தில் தி.ஜா இந்தக் கதையை எழுதியிருக்கலாம்.
தி.ஜாவை எங்கே வியக்கிறேனென்றால் அனுவைப்பற்றித் தெரியும் போதுகூட அவள் மேல் அணுவளவும் அருவருப்பு ஏற்படுவதில்லை. அதைச்சொல்லுமுன் மெல்ல மெல்ல நம்மை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என தயார்படுத்தி விடுகிறார்.அனு, செங்கம்மா இருவரும் வாழும் விதம் வேறுபட்டு இருந்தாலும் இருவருக்குமிடையே ஒரு பிணைப்பு இருக்கிறது, மண்ணுக்கு மேலேயும் கீழேயும் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு நதிகளைப்போல அவர்களிருவரும் வெவ்வேறு வழிகளில் அன்பென்னும் கடலில் சேர்கிறார்கள். ஆர்ப்பரித்து மனசு விட்டு சிரிக்கும் அனு போல சிரிக்க முடிந்தால் எவ்வளவு நிம்மதி? செங்கம்மாவைவிட அனுவே என்னை பிரமிக்க வைக்கிறாள், அவளது குழந்தைமை மூலமாக! அவளுக்கு ஒவ்வொன்றும் அதிசயமே, ஊரில் உள்ள ஒவ்வொரு மரத்தையும் கொடியையும் பார்த்து அதிசயிக்கும் ரசனைக்காரி! இப்படியொரு கதாப்பாத்திரம் நிஜத்தில் சாத்தியமா என்று தோன்றுகிறது. அன்பையே வரித்துக்கொள்ளும் எந்த கதாபாத்திரம் தான் நிஜத்தில் சாத்தியம்?
புதினத்திலிருந்து சில மேற்கோள்கள்:
“யானை காதல் பண்ணினா, அன்பா, சத்தம் போடாம, அணைச்சுக்கும். பூனை காதல் பண்ணினா, குய்யோ, முறையோன்னு கத்தி மேலே விழுந்து பிறாண்டும்”
“செங்கம்மா – உங்க பூவ நம்பி எந்த பொம்பளையும் ஒப்படச்சிட்டு போலாம், ஒரு பாதிப்பு இருக்காது, தெய்வம் அவர்.
"அனு – மனுஷங்க மனுஷங்க மாதிரில்ல இருக்கனும், என்கிட்ட இருக்கும்போது அவன் அப்டித்தான் இருக்கான்!”
“உடம்பு ஒண்ணுதான்,உள்ளுக்குள்ள இருக்கிறதுதான் எல்லாத்தையும் பிரிச்சு தனித்தனின்னு காமிச்சிட்டிருக்கு. செங்கம்மா இதையெல்லாம் மீறின ஜந்து. அதுக்கு ஒரே நோக்கம் தான். எல்லாரையும் பிரியத்தினாலே கட்டி அமுக்கி நசுக்கி அழிச்சுப்பிடணும்…எல்லார் மேலேயும் தன் பிரியத்தையெல்லாம் கொட்டி கரைஞ்சு போய் அழிஞ்சு போயிடணும்னு பார்க்குது…”
“அன்று கிடைத்த அந்த நொடியை நினைக்கும் போது தேனை எதுவும் கலக்காமல் ஒரு கை குடிப்பது போல் இருந்தது. தேன் சாப்பிடும் போது இனிக்கின்றது. ஆனால் பிறகு வெகு நேரம் நெஞ்சின் சுவர்களில் தீயைத்தடவினாற்போல் காய்ச்சிக் கொண்டிருக்கும். உயிரின் முழுமை அத்தனையும் ஒரு கணத்தில் குடித்துவிட்ட எனக்கு இப்போது அப்படித்தான் இருக்கிறது. தீயாகக்காய்கிறது. இந்தத் தீ தான் இனிக்கிறது. சுட்டுச் சுட்டு இனிக்கிறது”
வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும்போது வரும் ஆசாரியாருடன் சேர்ந்து பூவராகனின் மகள்கள் பாடும் இடம் பிடித்திருந்தது. செங்கம்மா, ஊர் வயல், வெற்றிலை சாயபு, ஆமருவி, ஊர்ப்பெருசுகள் பற்றிய வர்ணனைகள் படுஜோர். கொஞ்சகொஞ்சமாக உளி கொத்துவது போல சர்ச்சைகள் நிறைந்த விஷயத்தை நாசூக்காக விரசமில்லாமல் (நாசூக்கு, நளினம் அல்ல!) சொல்லியிருக்கிறார். அந்த காலக்கட்டத்திற்கு இதுவே பெரிய தாண்டலாக இருந்திருக்க வேண்டும். அதுவே எனக்கு அவரது எழுத்தின் மீது பிரியம் எழ வைக்கிறது.
திஜா’வின் மற்ற நாவல்கள் வாசித்ததில்லை என்றாலும் அவர் சிறுகதைகளில் பார்த்த அதே அன்பின் அதீதம் உயிர்த்தேன். மொத்தத்தில் உங்களுக்கு தி.ஜா பிடிக்கும் என்றால் கண்டிப்பாக படிக்கலாம்.
உயிர்த்தேன் - தி.ஜானகிராமன்
ஐந்திணைப் பதிப்பகம்
பக்கங்கள்: 328
விலை ரூ. 110/-
இணையம் மூலம் வாங்க: கிழக்கு
No comments:
Post a Comment