முழுசாய் நான் படித்த ஒரு பயணக் கட்டுரை என்று இதற்குமுன் ஏதுமில்லை. எனக்குத் தெரிந்த பயணக் கட்டுரைகள் எல்லாம் குமுதம் வார இதழில் வந்தவைகள்தாம். அவற்றிலும் ஏதேனும் ஒரு சுவாரசிய தலைப்பு, ஊர், புகைப்படம் பார்த்தால் மட்டும் அந்த அத்தியாயத்தை மட்டும் படித்து வைத்தவன்.
திஜா வாரம் என்று ஆம்னிபஸ்சில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சீரியல்... மன்னிக்கவும்.... சீரீஸ் ஓட்டியபோது அதற்காக வாங்கிய புத்தகம். ஆன்லைனில் ஆர்டர் செய்து சற்றே தாமதமாய்ப் புத்தகம் கிடைக்கப் பெற்று, சற்றே தாமதமாய்ப் படிக்க நேர்ந்ததால் சற்றே தாமதமாய் இந்தப் புத்தக அறிமுகம்.
”அடுத்த வீடு ஐம்பது மைல்” என்ற தலைப்பிலேயே தான் எந்த நாட்டிற்குப் போய் வந்தேன் என்ற க்ளூ’வைத் தந்துவிடுகிறார் திஜா. உங்களால் யூகிக்க முடிகிறதா? உலகின் எந்த ஒரு பிரம்மாண்ட நாட்டில் ஜனத்தொகை அத்தனைக் குறைவாய் இருக்கிறது (அல்லது திஜா எழுதிய காலகட்டத்தி இருந்தது) ?
ஆஸ்திரேலியா என்று நீங்கள் யூகித்திருந்தால் உங்கள் முதுகில் நீங்களே ஒரு செல்லத் தட்டு தட்டிக் கொள்ளலாம். திஜா’வின் ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரைதான் இந்த ”அடுத்த வீடு ஐம்பது மைல்”.
முதலில் புத்தகத்தின் குறைகளைச் சொல்லிவிடுகிறேன். ஆம்னிபஸ் வாசக அன்பர்களுக்கு புத்தகங்களின் நெகடிவ் ஸைடை நாங்கள் காட்டுவதில்லை என்பதில் ஆதங்கமான ஆதங்கம். அந்த ஆதங்கம் பேராதங்கமாய்ப் ப்ரவாகமெடுத்து நிறைய ஆதங்க்வாதிகள் (இந்த வார்த்தையை தசாவதாரம் பல்ராம் நாயுடு குரலில் படிக்கவும்) உருவாகிவிடா வண்ணம் இந்த நெகடிவிடிச் சுட்டலைச் செய்து விடுகிறேன்.
1) சாவி பதிப்பாக முன்னரே வெளிவந்த புத்தகம் என்று பதிப்பகத்தாரின் முன்னுரையில் தெரிகிறது. ஆகவே, இது சாவி புத்தகத்தில் தொடராக வந்ததா எனப் புரிந்து கொள்ளலாமா வேண்டாமா எனத் தெரியவில்லை. அந்த லாமா/டாமா முடிவை பதிப்பகத்தார் நம்மிடமே விட்டுவிடுகிறார்கள். இருந்தாலும் மொத்தமுள்ள பத்து அத்தியாயங்களும் இங்கேயங்கே என தொடர்பில்லாமல் பயணிப்பதால் இது பத்திரிக்கையில் வந்தது எனவே முடிவு செய்திடலாம்.
2) அத்தியாய வாரியாகப் படித்தால் சுவாரசியம் தந்தாலும் ஒரு கோவையாக இல்லாமல் புத்தகம் பிய்த்துப் பிய்த்துப் போட்டாற்போல் இருக்கிறது. கண்டின்யுட்டி ப்ராப்ளம் கொஞ்சம்.
3) இது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது பற்றின குறிப்பு இல்லை. அதை யூகிக்கும் புத்திசாலித்தனம் இந்த விமர்சன அறிமுகம் எழுதுபவருக்கும் இல்லை. இந்திய நாட்டில் பெரிய ஹோட்டல்களில் காபி கலந்து குடிக்க பால் பவுடர், காபி பவுடர், வெந்நீர் கூஜா ஆகியவற்றை வைக்காத, அப்படி வைக்கப்பட்ட ஒரு வெளிநாட்டை ஒரு இந்தியர் ஆச்சரியமாகப் பார்த்த காலகட்டம் என்பதைத் தாண்டி பெரிய க்ளூ ஏதுமில்லை.
4) இந்த பயணத்தின் நோக்கமென்ன என்றுஆசிரியர் தெளிவாக எங்கேயும் கூறவில்லை. அது நம் வாசிப்பை எந்த விதத்திலும் பாதித்துவிடவில்லை எனினும் அதுவும் ஒரு குறையே.
ஆச்சா ஆச்சா ஆச்சா? இப்போ புத்தகத்தின் மற்ற விஷயங்கள் பேசலாம்.
பயணக்கட்டுரை என்றால் ஏதோ ஆஹா ஓஹோவென பார்த்தவை ரசித்தவைகளைப் புகழ்ந்து தள்ளுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட ஒரு பயணக்கட்டுரை எழுதுவது மிகச் சுலபம். அதிலும் வெளிநாட்டுப் பயணம் என்றால் வசதியோ வசதி. வளர்ந்து நெடிசலாக நிற்கும் கட்டடங்களின் கம்பீரம், பெரிய பெரிய தீம் பார்க்குகள், கடற்கரையின் சுத்தம், சாலைகளின் அகலம், குண்டும் குழியுமற்ற வீதிகள், பசுமை நிறைந்த சாலையோரங்கள், எச்சில் துப்பாத மனிதர்கள், க்யூவில் நின்று பஸ் ஏறும் சிறுவர் சிறுமியர் என்று இவற்றைச் சுற்றியே ஜல்லியடித்துவிட்டு ஒரு பயணக்கட்டுரையை முடித்துவிடுதல் மிகச் சுலபம்.
ஆனால் இந்த லிஸ்டில் இருக்கும் விஷயங்களைத் தொட்டுக் கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார் திஜா. மற்றபடி தம் அனுபவங்களை, மனிதர்களை, அவர்களின் மனோநிலையை, அந்த நாட்டின் வரலாறை, அவர்கள் மனதில் இன்னமும் தங்கியிருக்கும் நிறப் பிரச்னைகளை, அவர்கள் கடைபிடிக்கும் தூய்மையின் பின்னணியை, எந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் நம் இந்தியர்கள் அந்த விஷயத்தில் கொண்டுள்ள மாற்றுநிலை விசித்திரத்தின் பின்னணியில் நிலவும் சைக்காலஜியை அல்லது அந்த அவலட்சண நிதர்சனத்தின் நியாயப் பின்னணியை என நிதானமாக ஏதோ நம்முடன் பர்சனலாகப் பேசுவதான தோரணையிலேயே கட்டுரைகள் உள்ளன.
கள்ளக்கடத்தல், தேசாபிமானம், தேசத்துரோகம் என்ற சொற்கள் உருவானதன் பின்னணியை சற்றே யோசித்துப் பாருங்களேன். நாடுகளின் எல்லைகள்தானே இவற்றை உருவாக்கின? தனித்தனியாக நாடுகள், அவற்றுக்கான எல்லைகள், அங்கு வாழும் மனிதர்களின் நிற வேற்றுமைகள், ஏற்றுமதி இறக்குமதி வரிகள் இவை ஏதுமற்ற ஒரு உலகினை ஒரு ஐந்து நிமிடங்கள் நினைத்துப் பாருங்களேன். முதல் மனிதன் தோன்றின போதே இவற்றை எல்லாம் வரையறுத்தானா என்ன? எது யாருடையது என்ற பிரிவுகள் எப்படி, யாரால், ஏன் கொண்டு வரப்பட்டது?
நாட்டு மக்கள் அடுத்தடுத்து பிள்ளைகளாய்ப் பெற்றுக் குவிப்பதை எப்படிக் குறைப்பது என்று யோசிக்கும் ஒரு தேசத்தில் இருந்து, “ப்ளீஸ், பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சிக் கூத்தாடும் ஒரு தேசத்திற்குச் சென்ற எழுத்தாளனின் அளவற்ற அவா, சிந்தனைதான் முந்தைய பத்தி.
அடுத்ததாக ஆஸ்திரேலியா - இந்தியா இடையே ஒரு சின்ன பலான கம்பேரிஸனை முன் வைக்கிறார் திஜா
நம் நாட்டின் “ஏ” படங்கள்: கதைகள், கதைச் சிக்கல்கள், கால்களின் நெளிவு சுளுவு நுணுக்கங்கள், தியாகங்கள் உள்ள படங்கள்.
அந்த ஊரின் “ஏ” படங்கள்: ஒரு ஆணும் பெண்ணும் ஐந்தாவது கண் பார்க்காத கதவுகள் மூடின தனி அறையில் செய்யும் காரியங்களை மட்டும் காட்டும் படங்கள்
|
காலங்கள் கடந்தும் இந்தப் பரிணாம வளர்ச்சி நம்மவர்களிடையே இன்னமும் மக்குத்தனமாகத்தான் இருக்கிறது என்பதை நினைக்கையில் நெஞ்சு விம்மத்தான் செய்கிறது.
திஜா’வின் புஸ்தகம் என்றால் அதில் சங்கீதம் இல்லாமலா? சர்வதேசக் குழுக்களில் ஒருவனாக வெளிநாட்டிற்குப் பயணப்படும் ஒருத்தன் தன் நாட்டின் இசை பற்றின தகவலை, அதன் பாரம்பரியத்தை, விஞ்ஞானத்தை, அது வளர்ந்த கதையை மற்றவனுக்கு விளக்க முற்படுகையில் நேரும் உணர்ச்சிகள் ஒரு அத்தியாயமாக உண்டு.
எழுபத்தியிரண்டே பக்கங்கள். சின்னஞ்சிறு புத்தகம்தான். இன்னமும் நான் இந்தப் புத்தகம் பற்றிப் பேச ஆரம்பித்தால் அது ஆம்னிபஸ்சின் தோஷப்பழக்கமாக ஏதோ கதைச் சுருக்கத்தைச் சொன்னது போலான தோற்றம் தந்துவிடும் அபாயம் இருப்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
அடுத்த வீடு ஐம்பது மைல் - தி.ஜானகிராமன்
ஐந்திணைப் பதிப்பகம்
72 பக்கங்கள் - விலை.ரூ.25/-
இணையம் மூலம் வாங்க: பனுவல் / உடுமலை / கிழக்கு
விமர்சனம் நன்று... நன்றி ஐயா...
ReplyDeleteவாங்கோ தனபாலன் சார். உங்க தொடர் ஊக்குவிப்புக்கு ரொம்போ நன்றி.
ReplyDelete