ராஜீவ் கொலை வழக்கு.
ஆசிரியர்: கே.ரகோத்தமன். தலைமைப் புலனாய்வு அதிகாரி. சி.பி.ஐ (ஓய்வு).
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 232
விலை: ரூ. 130.
ஆசிரியர்: கே.ரகோத்தமன். தலைமைப் புலனாய்வு அதிகாரி. சி.பி.ஐ (ஓய்வு).
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 232
விலை: ரூ. 130.
ராம்: வாங்க சோம், எப்படியிருக்கீங்க? கையில் என்ன புத்தகம்?
சோம்: நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? இதுவா, இது ‘ராஜீவ் கொலை வழக்கு’ புத்தகம். நீங்க படிச்சிருக்கீங்களா?
ராம்: ஓ. இல்லை. யார் எழுதியது?
சோம்: ரகோத்தமன்னு ஒருத்தர். இந்த கொலை வழக்கில் தலைமை புலனாய்வு அதிகாரியா இருந்து சதித்திட்டம் தீட்டினவங்களை கண்டுபிடிச்சவரு. அப்புறம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகு இந்த புத்தகத்தை எழுதியிருக்காரு.
ராம்: இந்த சம்பவம் 1991ல் நடந்ததுதானே? வழக்கும் அப்பவே முடிந்திருக்குமே? இவருக்கு ஏன் இவ்வளவு வருடம் ஆச்சு இதை எழுதறதுக்கு?
சோம்: அதுக்கு காரணம் இருக்கு. ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி பிரபாகரன். அடுத்த நிலைக் குற்றவாளி பொட்டு அம்மன். இவர்களை இந்திய அரசு தேடிக் கொண்டிருந்தது. எப்போ அவங்களை பிடிச்சிருந்தாலும், இவரையே சாட்சிக்காக கூப்பிட்டிருப்பாங்களாம். அப்போ இந்த வழக்கு சம்மந்தமான விஷயங்கள் மறுபடி தோண்டி எடுக்கப்பட்டு, விவாதத்திற்கு வந்திருக்கும். அதனால், ரகோத்தமனால் இதை வெளியே சொல்ல முடியவில்லை.
ராம்: இப்போ மட்டும்?
சோம்: பிரபாகரன், பொட்டு அம்மன் இருவரும் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவிச்சி, அந்த வழக்கையே மூடிவிட்டார்களாம். ஆகவே, இந்த வழக்கைப் பற்றி பொதுவில் பேச, எழுத எதுவும் தடை இல்லாததால், இந்த புத்தகம் எழுதியிருக்காரு.
ராம்: சுருக்கமா சொல்லேன். அப்படி என்னதான் சொல்லியிருக்காரு இந்த புத்தகத்திலே?
சோம்: May 21, 1991 அன்னிக்கு ஸ்ரீபெரும்புதூர்லே ராஜீவ் கொல்லப்பட்டாரு. அப்போ ஆரம்பிச்ச புலனாய்வு, அடுத்த சில மாதங்களில் பல்வேறு ஊர்களில், பல குற்றவாளிகளைப் பிடித்து ஒரு பரபரப்பான த்ரில்லர் கதை போல் நடந்தது. அதை அப்படியே விறுவிறுப்பாக சொல்லியிருக்காரு. இவங்களுக்கு கிடைச்ச தகவல்களின் அடிப்படையில் இவங்க கண்டுபிடிச்சதை படிச்சா பயங்கர வியப்பா இருக்கு.
ராம்: குற்றவாளிகள்? அவங்க யார்யாருன்னு சொல்றதுக்கு முன்னாடி, அதில் அரசியல்வாதிகள் யாரும் இருக்காங்களான்னு சொல்லுங்க.
சோம்: நிறைய அரசியல்வாதிகள் மேல் இவருக்கு சந்தேகம் இருந்தாலும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த கடைசிவரை அனுமதியே கிடைக்கலேன்னு சொல்றாரு. வைகோ, கருணாநிதி, மரகதம் சந்திரசேகர், அவரது மகன் மற்றும் பலரை மேலதிகாரிகள் விசாரித்த விதத்தில் திருப்தியே இல்லைன்னும் சொல்லியிருக்காரு.
ராம்: ம்ம். எதிர்பார்த்ததுதான். சரி, அவங்களை விசாரிக்க விடலே. ஆனா, பொதுவா வழக்கு விசாரணையிலாவது முழு சுதந்தரம் கிடைச்சதா இல்லையா?
சோம்: எங்கே? புத்தகம் முழுக்க அதைப் பற்றியும் புலம்பியிருக்காரு ரகோத்தமன். அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையே நிலவும் அலட்சிய மனோபாவம், பொறுப்பற்ற தன்மை, திடுக்கிடச் செய்யும் சில முடிவுகள், அரசியல் சூழ்ச்சிகள், ரகசிய பேரங்கள் ஆகிய எல்லாத்தையும் சமாளிச்சே வழக்கை நடத்த வேண்டியிருக்குன்னு அவர் சொல்றதை, இந்த புத்தகத்தைப் படிச்சாலே தெரியுது.
ராம்: இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், வழக்கை விரைவா முடிச்சிருக்காங்க. இல்லையா?
சோம்: ஆமாம். சேலம், சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் இப்படி பல இடங்களில் பல குழுவா வேலை பார்த்து ஏகப்பட்ட விஷயங்களை கண்டுபிடிச்சிருக்காங்க. முக்கிய குற்றவாளிகள் மொத்தம் 41 பேர். அதில் 26 பேரோட புகைப்படங்கள் புத்தகத்தில் இருக்கு.
ராம்: அதில் எவ்வளவு பேர் இன்னும் உயிரோட இருக்காங்க?
சோம்: அது தெளிவா தெரியல. ஆனா முருகன், நளினி ஆகியோர் இன்னும் சிறையில் இருப்பது உனக்கு தெரியும்தானே?
ராம்: கரெக்ட். ஆனா, எனக்கு ஒரு முக்கிய சந்தேகம். நம் நாட்டு உளவுத்துறைக்கு இந்த சம்பவம் பற்றி தெரியவே தெரியாதா? ஏன் அவங்களால் இதை தடுக்க முடியலே?
சோம்: ஏற்கனவே சொன்ன மாதிரி அதிகாரிகள் இடையே நிலவும் அலட்சிய மனோபாவம்தான் காரணமாம். இதற்கு ஒரு உதாரணம் சொல்றாரு. முன்னதாக ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் வந்து சேர வேண்டிய நேரம் மாலை 6 மணி. ஆனால், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிறிது நேரம் தாமதமாகி 6 மணிக்குதான் அவர் விசாகப்பட்டினத்திலிருந்தே கிளம்பியிருக்காரு. இந்த தகவல் உளவுத்துறை, காவல்துறைக்கே தெரியாதாம். ஆனால், சிவராசனுக்கு தெரிந்திருந்ததாம். அவர் இறந்தபிறகு அவருடைய ஒரு குறிப்பிலிருந்து கண்டுபிடிச்சிருக்காங்க.
ராம்: சரி, இதையெல்லாம் விட முக்கிய கேள்வி. ஏன் ராஜீவ் மேல் அவ்வளவு கோபம்? ஏன் அவரை கொலை செய்யணும்?
சோம்: 1987ம் ஆண்டு இலங்கை போய் இறங்கிய IPKF - இந்திய அமைதிப்படைதான் பிரச்னையின் துவக்கமாம். போர் நிறுத்தத்தை கண்காணிக்க இலங்கைக்கு வந்திருந்தாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரினால், இவர்கள் மேல் விடுதலைப் புலிகளுக்கு தீராத கோபம் இருந்ததாம். இந்தியாவில் ஆட்சி மாறி வி.பி.சிங் வந்ததும், அமைதிப்படையை திரும்பப் பெற்றாலும், அடுத்த தேர்தலில் ராஜீவ் காந்தி மறுபடி வந்துவிட்டால் பிரச்னை வலுப்பெறும்னு நினைச்சாங்களாம். அதனாலேயே, அவரை கொலை செய்துடணும்னு நினைச்சி, அதுக்காக தேர்ந்தெடுத்த இடம்தான் ஸ்ரீபெரும்புதூர்.
ராம்: சரி, இந்த புத்தகத்தைப் பற்றி இன்னும் சொல்லுங்க.
சோம்: அது சரி, விட்டா முழுப் புத்தகத்தையும் மனப்பாடமா சொல்லச் சொல்லுவே போலிருக்கே? சுருக்கமா சொல்றேன். கேட்டுக்கோ.
* கொலைக்கான காரணங்கள்
* கொலை நடத்த திட்டமிட்டவர்கள்
* அதை எப்படி நிறைவேற்றினார்கள்
* ரகோத்தமன் தலைமையில் குழுவினர் அவர்களை எப்படி கண்டுபிடித்தார்கள்
* அவர்களுக்கு கிடைத்த துப்புகள்
* வழக்கிற்குப் பிற்பாடு அரசால் நியமிக்கப்பட்ட இரு விசாரணை கமிஷன்கள்
* கொலையாளிகள் பற்றிய விவரங்கள், அவர்களின் புகைப்படங்கள்
* கொலையாளிகள் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள்
* கொலை நடத்த திட்டமிட்டவர்கள்
* அதை எப்படி நிறைவேற்றினார்கள்
* ரகோத்தமன் தலைமையில் குழுவினர் அவர்களை எப்படி கண்டுபிடித்தார்கள்
* அவர்களுக்கு கிடைத்த துப்புகள்
* வழக்கிற்குப் பிற்பாடு அரசால் நியமிக்கப்பட்ட இரு விசாரணை கமிஷன்கள்
* கொலையாளிகள் பற்றிய விவரங்கள், அவர்களின் புகைப்படங்கள்
* கொலையாளிகள் ஒருவருக்கொருவர் எழுதிய கடிதங்கள்
ஆகிய அனைத்தும் விவரமா இதில் எழுதியிருக்காரு. இந்தா, புத்தகத்தை படிச்சிட்டு தா. அப்பதான் உனக்கு எல்லாமே புரியும். வரட்டா. அப்புறம் பார்க்கலாம்.
***
அருமையான பதிவு.
ReplyDeleteஇந்த புத்தகத்தை படித்திருக்கிறேன்.
நன்றி.