எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யோசிப்பதற்கான ஒரு ஆரம்பப்புள்ளியாய் மூன்று விஷயங்களைச் சொல்லியிருந்தேனல்லவா, அதில் ஒன்று இது : " ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது." இரா. நாறும்பூநாதனின் "கனவில் உதிர்ந்த பூ" (2002) சிறுகதைத் தொகுப்பைப் படிக்கும்போது, அவருக்கு இந்த விஷயத்தை அப்ளை செய்து அதன் விளைவுகள் எபப்டி இருக்கும் என்று பார்க்கலாம் என்ற விபரீத ஆசை வந்தது. திரு நாறும்பூநாதனிடம் மானசீக மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்த சோதனை முயற்சியை ஆரம்பிக்கிறேன்.
"கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமுஎச - வில் இயங்கிவந்தபோதிலும், இப்போதுதான் முதல் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு வர முடிந்திருக்கிறது. எனது சிறுகதைகளை வாசிக்கும் முதல் வாசகியான எனது மனைவி அளித்த ஊக்கமும் ஒரு காரணம். தொகுப்பின் சில கதைகள் செம்மலர், புதுவிசை இதழ்களில் வெளிவந்தவை" என்று முன்னுரையில் எழுதுகிறார் இரா. நாறும்பூநாதன். இதிலுள்ள கதைகளைப் படிக்கும்போது நாறும்பூநாதன் இயக்கத்துக்காக எழுதியதைவிட தன் மனைவி, அல்லது அவரைப் போன்ற ஒரு தனிமனிதருக்காகவே, இந்தக் கதைகளை எழுதியிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது. மனித நேயமும் சமூக நீதியும் நாறும்பூநாதனுக்கு கோட்பாடுகளாக இருப்பதாகத் தெரியவில்லை, அவற்றைப் பேசும்போது அவரிடம் பிரசாரத்தொனி இல்லை. அவருக்கு இந்த விஷயங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட அனுபவங்களாக இருக்கின்றன, அவரது எழுத்தில் இவை உணர்வுகளாக வெளிப்படுகின்றன. இதனால்தான் அவரது கதைகளில் இயக்கங்களை நோக்கி எழுதப்படாமல் தனி மனிதர்களை நோக்கி எழுதப்பட்டதான ஒரு குரல் கேட்கிறது.
பொதுவாக இந்தக் கதைகளின் சிறப்பு இதுவென்றால், குறை ஒன்று உள்ளது - எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சொல்லிவிடுகிறார். சிலபல விஷயங்களை வாசகனின் கற்பனைக்கும் அனுமானத்துக்குமே விட்டிருக்கலாம். இது ஒரு அழகியல் பார்வைதான், அதனால் காலத்தின் மாற்றத்துக்கு உட்பட்டது என்பது உண்மைதான். ஆனால், இன்று வாசிக்கும்போது நாம் இன்று நினைப்பதைதான் சொல்ல முடியும் - இந்தக் கதைகளில் பல வாசித்து முடித்ததும் முடிவுக்கு வந்து விடுகின்றன. பாத்திரங்களைக் குறித்தோ, அவர்களின் சூழல் குறித்தோ நினைக்க எதுவுமில்லாமல் போய் விடுகிறது.
உதாரணமாக, ஒற்றைப்பனை சிறுகதை பற்றி, "14 வயதில் பிரம்ம நாயகம் பிள்ளைக்கு இரண்டாந்தாரமாய் வாழ்க்கைப்பட்ட பாப்பம்மா சீக்கிரமே வெட்டவெளியில் 'ஒற்றைப்பனை'யாய் நிற்கிறாள்," என்று தன் அணிந்துரையில் எழுதுகிறார் கிருஷி. இதைச் சொல்லிவிட்டால் இதற்கு மேல் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது கதை - ஏனென்றால், இந்த விஷயத்தின் விவரிப்பாக மட்டுமே கதை நின்று விடுகிறது. ஆச்சியின் உணர்ச்சிகள் கதை நெடுக விவரிக்கப்பட்டிருந்தாலும், ஆச்சி ஒரு ஒற்றைப்பனை என்ற செய்திக்கான சித்திரமாகவே கதை உறைந்திருக்கிறது. இதிலுள்ள பெரும்பாலான கதைகளைப் பற்றி இப்படி சொல்லிவிடலாம்.
இன்னொரு கதையைச் சொல்ல வேண்டுமென்றால், கனவில் உதிர்ந்த பூ சிறுகதையைச் சொல்லலாம் - "வயிற்றைச் சுத்தம் செய்துவிட்டு ஆற்றாமையுடன் திரும்பும் பூமாவின் வயிற்றைத் தன் பிஞ்சு விரல்களால் வருடிப் பார்க்கும் கௌதம், 'அம்மா வயிற்றில் ஒண்ணுமில்லேப்பா' எனும் கள்ளமற்ற குரலில் அதிர்கிறது நம் மனம். 'பொம்பள ஜென்மமா பொறக்கவே கூடாது' என்று பூமாவின் மனம் வெடிக்கிறபோது - நம் பூமியில் படர்ந்து வரும் சூன்யம் நம் விழிகளை மறைக்கிறது. நேர் வார்த்தைகளுக்குள் வராத கனவில் உதிர்ந்த பூ கண்ணுக்குள்ளேயே நிற்கிறது." என்று இந்தக் கதையைப் பற்றி எழுதுகிறார் கிருஷி. கனவில் உதிர்ந்த பூ என்ற செய்தியின் விவரிப்பு மட்டுமே கதை, அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை - பூமா ஏன் இப்படிச் செய்தாள் என்பதற்கான சமூகச் சூழலைப் பதிவு செய்யும் கதை. தனி மனித உறவுகள் ஒரு சூனியத்தில் கரைந்து அழிவதுதான் கதை. பூமாவல்ல.
என் நண்பர் ஒருவர் synchronic - diachronic சங்கதியை விளக்குமுகமாக ஒன்று சொன்னார், களத்தைப் பேசுவது முன்னது, காலத்தைப் பேசுவது பின்னது என்று. நாறும்பூநாதனின் கதைகளில் பெரும்பாலானவை கதாமாந்தர்களின் உணர்வுகளுக்குள் நம்மை இழுத்துக் கொள்ளத் தவறி, அவர்களின் சூழலில் நம்மை இருத்துவதால், தமிழில் அவ்வளவாக ஒலிக்காத சின்க்ரானிக் குரலாக இருக்கிறார் அவர். நாறும்பூநாதன் இலக்கியத்தரத்தைத் தொடும் கதைகள் இந்தக் குரல் வெளிப்படும் கதைகளைக் கொண்டே. இது விளக்குவதற்குக் கொஞ்சம் கடினமான விஷயம் - கால மாற்றத்தையும் அதனால் ஏற்படும் சமூக நசிவையும் துயரத்தோடுதான் அவர் தன் கதைகளில் பதிவு செய்கிறார் - ஆனால் அவை நாஸ்டால்ஜியாவுக்கு எதிர்நிலையில் நிற்கின்றன, துயரத்தையும் அது சார்ந்த உணர்வுகளையும் முன்னிறுத்தாமல், அந்த உணர்வுகளின் களத்தை கவனப்படுத்தி. இது அவரது எழுத்தின் குறை என்று சிலர் நினைக்கக்கூடும், அவரது பார்வையின் தனித்தன்மை இது என்றுதான் நான் நினைக்கிறேன்.
வளையமிட்டபோது, மைதானம், அப்பா இருந்த வீடு ஆகிய மூன்று கதைகளையும் இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். சஷ்டித் திருவிழாவில் மகாப் பெரியவரைத் தூக்கிக் கொண்டு முருகனையே முட்டிச் சாய்ப்பது போல் ஆடும் பெரியண்ணத் தேவர் வெளிநடப்பு செய்வது களத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கண்டித்து. அப்பா இருந்த வீட்டில் கிணற்றைத் தேடி அது காணாமல் கலவரப்படும்போது கால மாற்றமோ அது மனிதர்கள் மனத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றமோ முன்னிலை பெறுவதில்லை : களம் மாறிவிட்டது என்பதுதான் பிரதானப்பட்டு நிற்கிறது. மைதானம் சிறுகதையின் விஷயம் ஜவஹர் மைதானத்தில் காலம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்தான் என்றாலும், கதையைப் படித்து முடிக்கும்போது நமக்கு களமே மாறிவிட்டது என்ற உணர்வுதான் மிகுதியாக இருக்கிறது. பவளமல்லிகை சிறுகதையின் நாயகர் எப்போதோ ஒரு புதிய களத்துக்கு தன்னைத் தயார் செய்து கொண்டவர் என்பதைக் குறிப்பிடவேண்டும்.
நாறும்பூநாதனின் சிறுகதைகள் இலக்கியமா இல்லையா என்றெல்லாம் கேட்பது அநாகரீகமான விஷயம். இன்ன இன்ன மாதிரி இன்ன இன்ன கதைகளை வாசிக்க இடம் இருக்கிறது என்றுதான் சொல்கிறேன். இதெல்லாம் இலக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமா, இதனால் மட்டும் இவை இலக்கியமாகுமா என்பதெல்லாம் என்னைவிட வாசிப்பனுபவமும் ரசனையும் உள்ள விமரிசகர்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு வாசகனாக நான் ஒரு எழுத்தாளரை, அவர் எழுதிய சில கதைகளை, அவற்றில் காணப்படும் தனித்தன்மை கொண்ட ஒரு பார்வையை முன்வைக்கிறேன், அவ்வளவுதான்.
இந்த சின்க்ரானிக் பார்வைக்கு அடுத்தபடியாக, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் சூழல் சார்ந்த பிரச்சினைகள், அரசு நடவடிக்கைகள் சாதியை மையப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டுவதில் உள்ள குறைகள் - இவை இரண்டையும் நாறும்பூநாதன் நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். கனவில் உதிர்ந்த பூ, கனவு மெய்ப்பட, நசுக்கப்பட்ட கேள்விகள் - இந்த மூன்று கதைகளும் இப்படிப்பட்டவை.
இவை தவிர, ஓர் இரவு மற்றும் இற்றுப் போன கண்ணிகள் ஆகிய இரு சிறுகதைகளும் நாம் மேற்சொன்ன வகைமைகளுக்கு உட்படாத தனித்துவம் கொண்டிருக்கின்றன. இந்த இரு சிறுகதைகளும் நவீன சிறுகதைகளின் பாணியில் அமைந்திருகின்றன. மற்ற கதைகளைப் போலில்லாமல் இவற்றின் நாயகிகள் நம் கவனத்தைக் கோருபவர்கள்.
இந்தத் தொகுப்புக்குப் பத்தாண்டுகளுக்குப்பின் "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது. நாறும்பூநாதனின் எழுத்தில் கடந்த பத்தாண்டுகள் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். இதை எழுதும்போது, சின்க்ரானிக் சங்கதியைத் தன் பார்வையாய் கொண்ட ஒருவர் இந்த இரு தொகுப்புகளையும் எப்படி அணுகுவார் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
கனவில் உதிர்ந்த பூ, இரா. நாறும்பூநாதன்
சிறுகதை தொகுப்பு,
சப்தா பதிப்பகம் (2002)
விலை ரூ. 35

No comments:
Post a Comment