பெயர் : இவான்
ஆசிரியர் : விளதீமிர் பகமோலவ்
தமிழில் : நா. முகம்மது செரீபு எம்.ஏ
பதிப்பகம் : ராதுகா பதிப்பகம், மாஸ்கோ-ரஷ்யா
பத்துப் பதினோரு வயசில் நாம என்ன செஞ்சு இருப்போம்? ஸ்கூலுக்கு போவோம்; விளையாடுவோம்; எதோ முடிஞ்சா கொஞ்சம் படிப்போம். நான் சொல்றது பத்து, பதினஞ்சு வருஷம் முன்னாடி. இப்பத் தான் எல்லோரும் ஸ்கூல் முடிஞ்சா டியூஷன், ஸ்கூலுக்கும் டியூஷனுக்கும் நடுவுல ஒரு கிளாஸ், டியூஷன் முடிஞ்சு ஹிந்தி கிளாஸ், இப்படி வகை வகையா அனுப்பறாங்க. நான் எல்லாம் ஸ்கூல் முடிஞ்சு வந்தா ஸ்கூல் பையை ஒரு ஓரம் தூக்கி வீசிட்டு இருட்டற வரை விளையாடுவேன். கவலையே இல்லாத வாழ்க்கை.
கதையின் காலம், இரண்டாம் உலகப் போர். ஜெர்மனி மிக கடுமையாக ரஷ்யாவை ஆக்கிரமித்து போர் செய்துக் கொண்டிருந்த காலம். இவான் என்ற பதினோரு வயது மதிக்க தக்க சிறுவன் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட ரஷ்ய பகுதியை தாண்டி , ரஷ்ய எல்லைக்குள் நுழையும் போது கைது செய்யப்பட்டு, எல்லைக்காவல் ரோந்துப் படை அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுகிறான். அந்த அதிகாரியின் (காலத்செவ்) எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுக்கும் அதே வேளையில், ரஷ்ய இராணுவ தலைமையகம் ஆன எண் ஐம்பத்தி ஒன்றுக்கு "போன்தரேவ்" இங்கு இருப்பதாக தகவல் அனுப்ப சொல்கிறான். சிறிது நேர முயற்சிக்கு பின், இராணுவ தலைமையகத்தில் இருந்து தொலைப்பேசி மூலம் போன்த்ரேவ் என்கிற இவானை தக்க முறையில் உபசரிக்கும் படி செய்தி வருகிறது.
அதற்கு அடுத்த சில மணி நேரங்களில், இராணுவ வேவு பிரிவு அதிகாரி ஹோலின், இவானை மாஸ்கோவிற்கு அழைத்து செல்கிறார். இவான், ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட பகுதியில் இருந்து கொண்டு, அந்தப் படைகளின் நடமாட்டம், அவர்களது எண்ணிக்கை, அவர்கள் உபயோகிக்கும் எந்திரங்கள், எவ்வளவு உணவை அவர்கள் ஆக்கிரமித்த பகுதியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள் போன்ற விஷயங்களை அறிந்துக் கொண்டு வருபவன். இவான் முதலில் மாணவர்களுக்கான இராணுவ பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தவன். போர் ஆரம்பித்தவுடன், தானும் போரில் கலந்துக் கொள்ள ஆர்வம், ஆனால் சிறுவன் ஆனதால் தடை, பள்ளியில் இருந்து ஓடிப் போகிறான், இராணுவத்திற்காக வேவு பார்க்கிறான், ஒவ்வொரு முறையும் அவனை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது மிக கடினமான செயலாகயிருக்கிறது. இந்த முறையும் அவனை எப்படியாவது சாரணர் பள்ளியில் படிக்கும் படி ஹோலின் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும், இவான் போர் முடியும் வரை படிக்க மறுத்து விடுகிறான்.
சிறிது காலத்துக்கு பின் ஹோலினும் காலத்செவும் இவானை அக்கரையில் விட்டு விட்டு வருகிறார்கள். அவனிடம் இருந்து செய்தி வருவதே இல்லை. அதே சமயம் போரும் உச்சகட்டத்தை அடைகிறது. ரஷ்ய படை ஜெர்மனியை நோக்கி மீண்டும் படை எடுத்துச் செல்கிறது; இன்னொரு பகுதியில் இருந்து அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் ஜெர்மன் மீது தாக்குதல் நடத்துகின்றன. கால்த்செவும் புறக் காவல் படையில் இருந்து விலகி, நேரடி போர் முனைக்கு செல்கிறார்.
ரஷ்ய-பிரிட்டிஷ்-அமெரிக்க படைகள் ஜெர்மனியை வெற்றி கொள்கின்றன. கால்த்செவ் போரில் காயம் அடைந்ததால், ஆவணங்கள் பாதுகாக்கும் மொழிபெயர்க்கும் பணியை ஏற்றுக் கொள்கிறார். பெர்லின் நகரம் சரண் அடைந்தவுடன் ஜெர்மனி இராணுவ தலைமையகத்தில் பாதுக்காக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஆராய்கிறார். அதில் ஜெர்மன் படையால், சுட்டுக் கொல்லப்பட்ட வேற்று நாட்டு வீரர்கள் பட்டியலில் இவான் பெயரும் - அவன் பற்றிய எந்த வித ஆதாரமும் இல்லாத பட்சத்திலும், ஜெர்மன் அரசுக்கு எதிராக பேசியதால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற செய்தியுடன் முடிவடைகிறது.
இந்த புத்தகத்தை மொழிப் பெயர்த்து இருப்பவர். நா.முகம்மது செரீபு. சிறப்பான மொழிப்பெயர்ப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் படிக்கும் போது எந்த இடத்திலும் ஆயாசம் ஏற்படவில்லை. இந்த குறு நாவல் முழுக்க கால்த்செவின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது. நேர்கோணக் கதை. நாவல் இறுதியை அடையும் போதே ஒரு விதமான கெட்ட செய்தியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். அது மாதிரியே முடிந்ததாலும், படித்து முடித்த வெகு நேரம், ஒரு விதமான வெறுமை சூழ்ந்து இருந்தேன். நாவல் ,உண்மையான சம்பவத்தைக் கொண்டே எழுதப்பட்டு இருக்கிறது. ரொம்ப நேரம் மனம் ஒரு பதினோரு வயது பையனுக்கு இருக்கும் மன தைரியம் நாட்டுக்காக போராடும் குணம் மனத்தை கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தது.
இந்த குறுநாவலை , சோவியத்-ரஷ்யாவின் புகழ்ப் பெற்ற இயக்குனர், கதையாசிரியர் ஆன -Andrei Tarkovsky "Ivan'childhood" என்ற பெயரில் படம் ஆக்கி உள்ளார். இந்த படத்தை Youtubeஇல் காண http://www.youtube.com/watch?v=X-cOMy9k-6s&feature=watch-now-button&wide=1
No comments:
Post a Comment