Name : Best of O.Henry
Contents : Short stories
Author : O.Henry
Publishers :Rupa Publications
To buy : Bookadda
இந்த வாரம் முழுக்க எல்லாரும் சுஜாதா புத்தகங்களா எழுதும்போது நான் மட்டும், கொஞ்சம் வித்தியாசமா எழுதுவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஆனால் நான் இப்போது பேசப் போகிற எழுத்தாளர், மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர், சிறுகதை இலக்கியத்தின் முன்னோடி. இவருடைய கதைக்கருக்களை, நிறைய பேர் நிறைய விதமாக, மாற்றி எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் சிறுகதைகளிலும் இவரோட பாதிப்பு தெரியும், ஒரு சிறுகதை படிச்சுகிட்டே வரும்போது முடிவு சடாரென எதிர்பாரா திருப்பத்துடன் முடிந்தால், ஓ. ஹென்றி எழுதற கதை மாதிரி இருக்கிறது என்று சொல்வதுண்டு. வில்லியம் சிட்னி போர்ட்டர் என்ற இயற்பெயர் கொண்ட ஓ.ஹென்றியின் மிகச் சிறந்த சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த வாரத்திற்கான புத்தகம்.
மொத்தம் 24 சிறுகதைகள், இதில் எது சிறந்தது, எது மிகச் சிறந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஓ.ஹென்றி எழுதிய எல்லா சிறுகதைகளையும் படித்தது இல்லை, அதனால இது சிறந்த சிறுகதைத் தொகுப்பா என்ன என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத் தாண்டி, இந்த சிறுகதைகளில் என்னைக் கவர்ந்த அம்சம், இவற்றின் கதை மாந்தர்கள்- எல்லா விதமான கதைமாந்தர்கள் பற்றியும் சிறுகதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளுமே ரொம்ப எளிமையானவை, கடைசி இரண்டு பத்திகளில்தான், எதிர்பாரா திருப்பத்துடன் கதை முடிகிறது, இது வாசகர்களை, சுவாரசியமான கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு கதையையும் முழுசாகப் படிக்கத் தூண்டும் ஒரு உத்தியாக இருக்கலாம். ஆனால் அதைவிட முக்கியமாக, மனித மனதின் நிலையாமை எதிர்பாராத முடிவை அடையும் இந்தக் கதைகளில் வெளிப்படுகிறது - இதுவரை இருந்த தன் கொள்கைகளுக்கு மாறுப்பட்ட முடிவை சட்டென எடுக்கும் மனித பொது இயல்பை அடையாளப்படுத்துகிறது.
இந்தத் தொகுப்பில் ரொம்ப சின்ன கதை “ஒரு வித்யாசமான கதை “ (“ A strange story”), மகளுக்கு உடம்பு சரியில்லை என மருந்து வாங்கச் செல்லும் தந்தை, காணாமல் போகிறான். இருபது வருடங்கள் கழித்து அதே தினத்தில், தன் மகள் வயிற்று பேத்தி, உடம்பு சரியில்லாமல் கிடக்கும்போது மருந்துடன் வந்து, “நான் வண்டிக்காக காத்திருந்ததால் நேரம் ஆகிவிட்டது” என்கிறார்.
An Unknown Romance - வேட்டையாடுபவராக வேடமிட்டுச் செல்லும் ஒரு செல்வந்தர், காட்டு வழியில் செல்லும்போது ஒரு ஏழை பெண்ணை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். சில காலம் கழித்து,தனது திருமணத்தின்போது இதை நினைத்து, வருத்தப் பட்டுக்கொண்டே, அந்த ஏழை பெண் கொடுத்த வாடிய மலர்களை,வெளியே வீசி எறிகிறார். இதே சமயத்தில் அந்த ஏழைப் பெண்ணும், அவள் உண்மையில் மிகப் பெரிய செல்வந்தரின் மகள், பொய் வேஷத்தில் காட்டு வழியில் சென்ற வேட்டையாளர் கொடுத்த மலர்களை குப்பை தொட்டியில் வீசிவிட்டுச் செல்கிறாள். இந்த இருவருமே, மலர்களைக் கொடுத்தது யார் என்று தெரியாமலே, தங்கள் திருமணத்திற்கு தயாராகின்றனர்.
இந்தத் தொகுப்பில் எல்லா சிறுகதைகளுமே, கொஞ்சம் ஆச்சரியமும் கொஞ்சம் அதிர்ச்சியும் கொடுக்கக்கூடிய முடிவுகளாக இருந்தாலும், கதையின் சுருக்கம் நாலு வரிகளில் சொல்லி விடலாம். ஆனால் கதை மாந்தரை பற்றிய ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி, அதை எதிர்பாரா விதத்தில் முடிப்பதில், ஓ .ஹென்றி வல்லவர்.
“The Marionettes” ஒரே சமயத்தில் மருத்துவராகவும், இரவு வேளைகளில் கை தேர்ந்த திருடனாகவும் இருக்கும் கதை நாயகன், திருட்டு தொழில் முடிந்து வீடு செல்லும் வேளையில், சாகும் நிலையில் உள்ள ஒருவனுக்கு வைத்தியம் செய்கிறார். சூதாடி எல்லா பணத்தையும் அழித்துவிட்டு, மனைவியைக் கொடுமைப்படுத்துகிறான். தான் அன்று திருடிச் சேர்த்த செல்வத்தை, அந்த பெண்ணிடம் சேர்த்துவிட்டு, அந்த மருத்துவர்/திருடன் செல்லும்போது, மனத்தை என்னவோ செய்கிறது.
“After Twenty years” என்ற கதையில், இருபது வருடங்கள், முன்பு, இரு நண்பர்கள் நியூ யார்க் நகரின் ஒரு உணவகத்தில், ஒரு சத்தியம் செய்துகொள்கின்றனர், அதே இடத்தில் இருபது வருடங்கள் கழித்து சந்திப்பதாக. அதில் ஒரு நண்பர் அந்த இடத்தில் இருபது வருடங்கள் கழித்து காத்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரோந்து காவலரிடம், இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுகிறார். கொஞ்சம் நேரம் கழித்து வேறு ஒரு காவலர் அவரைக் கைது செய்கிறார். முதலில் வந்த காவலர்தான் அவரின் நண்பர். தனது நண்பர், இருபது வருடங்களில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறியும் போது, அவரோடு உறவாட முடியாமல், தனது கடமையை நிறைவேற்றுகிறார்.
வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் ஆயுதம் வாங்க வரும் ஒரு போர் தளபதி, அவரை ஏமாற்ற முயற்சிக்கும் ஒரு கூட்டமும், கடைசியில், தனது நாட்டை விட்டுவிட்டு, அந்த பணத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் குடியேறுவதும். இன்னொரு கதையில், கடைதெருவில், ஒரு துண்டு பிரசுரத்தை பார்த்துவிட்டு, தவறாக புரிந்துக் கொண்டு, அங்கே சென்று வருங்கால காதலி/மனைவியை சந்திக்கும் நாயகன். “நகரத்தின் மனிதன் யார்” என்ற அறிய முயற்சி செய்து கடைசியில், கதை நாயகனே நகரத்தின் மனிதன் ஆகும்போது கதை எழுதிய ஹென்றியின் புத்திக் கூர்மையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
ஓ. ஹென்றி வாழ்ந்த காலம் ஆன (1862-1910) கருத்தில் கொண்டு இந்த சிறுகதைகளை வாசித்தால், ஓ ஹென்றியை வெகுவாக ரசிக்க முடியும்
No comments:
Post a Comment