வெகுஜன பத்திரிக்கைகளில் ’பத்தி’ எழுத்தை பரவலாக அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. அதுவரை கட்டுரைகள் என்றால் - ஒற்றைச் சங்கதிகளை மையமாகக் கொண்டு தீவிரமானச் சமூகக் கட்டுரைகள் பாரதியார், வ.உ.சி போன்றவர்கள் தொடங்கி வைத்த உரைநடை பாணியில் இருந்தன. தமிழில் column என்பதைப் பிரபலமாக்கியதோடு மட்டுமல்லாது, அமெரிக்க நாளிதழ்களான டைம்ஸ், சயிண்டிஃபிக் அமெரிக்கன் போன்றவற்றில் வந்த பத்திகளின் பாணியில் கலவையான வடிவத்தைத் தொடங்கிவைத்தவரும் சுஜாதா தான். சிறுகதைகள் தவிர அவரது எழுத்து இன்றளவும் பேசப்படுவதற்கு பத்தியாளராக அவர் எழுதிய கடைசி பக்கங்கள், நீர்குமிழி, கற்றதும் பெற்றதும், இன்னும் சில எண்ணங்கள் போன்றவை முக்கியமானக் காரணம்.
சுருக்கமாகவும் அதே சமயம் மிக கூர்மையான அவதானிப்புகளைக் கொண்ட அவரது பத்தி எழுத்துகளைக் கொண்டே அவரது எழுத்துலக வாழ்வின் பரிமாணங்களை நாம் அளந்துவிட முடியும். இது முழுமையான வாசிப்பு இல்லையென்றாலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த படைப்பாளியை அணுக நம்மிடையே இருக்கும் பல சாத்தியங்களில் இதுவும் ஒன்று.
ஆரம்ப காலக் கட்டுரைகளைப் படித்து பின் அவரது அந்திமக் காலக் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு ஒன்று பிடிபடும். சராசரிகளை அனுசரிக்கும் போக்கு அறவே இல்லாத ஆரம்ப காலக் கட்டுரைகளில் காணப்படும் எள்ளல் ஒரு கட்டத்தில் மறைந்தது (’வாலியா! சொல்லவே வேண்டாம்.’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம் தான் சிறந்த படமென்றால் தமிழ் சினிமாவுக்கு விடிவில்லை என்பேன்’, சிறுகதையின் தொடக்கம் - ‘சார் போஸ்ட் சத்தம் கேட்டு ஈஸி சேரிலிருந்து எழுந்தான்’). குறிப்பாக அவரது ஆரம்ப காலப் பத்திகள், தமிழ் உரைநடையில் இருந்த மெத்தனத்தை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் சுட்டிக் காட்டின. மொழிக்குத் தேவையான உந்துதலுக்காக சமூக வெளியிலிருந்தும், தமிழ் பண்டிதர்களுக்காகவும் காத்திருக்காமல் நாமே புதுமைகளைப் புகுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தவர்.
தமிழ் மொழியின் நவீனத்தையும், உரைநடையின் நவீன பாணியையும் முன்வைத்த அதே சமயத்தில் மரபுக் கவிதைகளின் அழகையும், வெண்பா போன்ற அலங்காரங்களின் சுவையையும் சுட்டிக்காட்டுகிறார். அந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய உலகை முன்வைத்துப் பார்க்கும்போது சுஜாதா எப்பேர்ப்பட்ட புரட்சியை முன் எடுத்திருக்கிறார் எனப் புரியும். நவீன இலக்கியம் என்றாலே மரபிலிருந்து விலகிச் செல்லுதல் எனும் அபிப்ராயம் தீவிர இலக்கிய உலகிலும், வெகுஜன மக்களிடையேயும் பரவி இருந்த காலகட்டம். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாகராஜன் என வந்தவர்கள் எல்லாமே தமிழ் மொழி மரபைத் தாண்டி புதுமைகளைச் செய்யத் தலைப்பட்டவர்களாக இருந்தனர். முற்றிலும் ஒதுக்காமல் மரபிலிருந்து நமக்குக் கிடைக்கும் நன்மைகளை அவ்வப்போது கவிதையாகவும், உரைநடையில் புது சொற்களைப் புகுத்தியும் மாற்றங்களை சுஜாதா செய்தார். இன்று, ஊமையான மகனைக் கண்டு சொற்களை ஈன்றெடுத்த தாய் வருத்தப்படுவது போல சுஜாதா முதல் நாஞ்சில் நாடன் வரை பண்டைய சொற்களை உதாசீனப்படுத்துவதை வருத்தத்தோடு பல எழுத்தாளர்கள் பதிவு செய்கிறார்கள். சிலர் தமிழில் வார்த்தைகளே இல்லை என இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கவிஞர் ராஜசுந்தர ராஜன் தனது கட்டுரையில், எழுத்தாளர் சிவசங்கரி தமிழில் வார்த்தைகளே இல்லை, seagull என்பதுக்கு தமிழில் என்ன எனக் கேட்டதை நினைவுபடுத்தி கன்னியாகுமரிப் பகுதியின் மீனவச்சிறுவன் சொன்ன கடல்புள்ளு எனும் பதிலைக் கூறி ’தமிழ் படித்தவர்களை’ நினைத்து வருத்தப்படுகிறார். சமூகப் பொறுப்புகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடவேண்டும் என யார் சொன்னது?
கணையாழியின் கடைசி பக்கங்கள் தொகுப்பு (சுஜாதா தேசிகன்) நூலை சமீபத்தில் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது தோன்றியது - சுஜாதா எழுதாத விஷயங்கள் குறைவு எனப் பலர் சொன்னதைத் தாண்டி அவரது தமிழ் ஆர்வம் ஆரம்பம் முதல் இறுதி வரை நில்லாது இருந்திருக்கிறது என்பது தான் எனக்குச் சட்டெனத் தோன்றியது. ஒரு எழுத்தாளராகத் தனது மொழியின் பலம், பலவீனம் புரிந்த்தோடு மட்டுமல்லாது அதைச் சரியான தளத்தில் அறிமுகம் செய்தது அவரது மிக முக்கியமான பங்களிப்பு. அவரது பத்தி எழுத்துகளில் தெரியும் தமிழ் காதல் பற்றி ஒரு ஆய்வு செய்யுமளவு விஷயமிருக்கிறது. நாள்கணக்கில் பேசலாம். ஆழமற்ற எழுத்து, மரபுத் தமிழ் வாசிப்பை தவறான திசையில் அணுகியவர் எனும் குற்றச்சாட்டுகளைத் தாண்டியது இது.
வாசகர்களின் பங்களிப்பைக் கோரும் பல புதிர்கள், கேள்வி-பதில்கள், கணக்குகள், போட்டிகள் என பலவித நவீன யுத்திகளைக் கையாண்டு பத்திகளை புத்திசாலித்தனமாக மாற்றியதிலும் சுஜாதா முன்னோடி.
இன்றைக்கு எடுத்துக்கொண்ட புத்தகம் ‘ஓரிரு எண்ணங்கள்’. 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான சில கட்டுரைகளின் தொகுப்பு. எந்த வரிசையில் தொகுக்கப்பட்டது எனவோ, பத்திரிக்கையில் வெளியானதோ தெரியவில்லை.
‘இணையத்திலும் பல பொதுமேடைகளிலும் சுஜாதாவின் கட்டுரைகள் சென்ற ஆண்டில் வந்தன. இவைகளுடன் முன்பு எழுதிய ‘சின்னச் சின்னக் கட்டுரை’களையும் சேர்ந்து இந்தப் புத்தகம் வெளியிடப் பட்டிருக்கிறது.’
பெரும்பாலும் இணையத் தமிழ், கணினி, இலக்கியம், பொது அறிவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு. ஆரம்ப காலத்து கடைசி பக்கங்களில் தெரியும் எள்ளல் இதில் குறைவு என்றாலும், தன்னைச் சுற்றி நடப்பவை பற்றிய ஆர்வம் குறைவில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. எழுத ஆரம்பித்த காலத்தில் அன்றைய தமிழ் இலக்கிய புனைவு, பத்திரிக்கைகளின் உரைநடை போன்றவற்றால் சலிப்படைந்ததால் ஏற்பட்ட தார்மீகக் கோபத்தில் வெளியானவை நீர்க்குமிழிகள், கடைசி பக்கங்கள் போன்றவை என்பது என் யூகம். பின்னர் வாழ்வே படிப்படையாக ஒரு சமரசம் மட்டுமே எனும் அவரது வாழ்க்கைப் பார்வையை பிரதிபலிப்பது போல உலகைத் திருத்த அல்ல, நடப்பவற்றை உண்மையுடன் பதிவது மட்டுமே தனது நோக்கம் எனத் திருப்தி அடைந்துவிட்டார் எனத் தோன்றுகிறது.
சமீபத்தில் நியூயார்க் சென்றிருந்த நண்பர் அங்கிருந்த Bloomingdale's கடையை பற்றி பிரஸ்தாபிக்க நானும் விக்கிபீடியாவில் பிளந்த வாய் மூடாது அதைப் பற்றிப் படித்தேன். சுஜாதா கண்டிப்பாக இதைப் பற்றி எழுதியிருக்க மாட்டார் - அதுவும் சைஸ் ஜீரோ மாடல்கள் போகும் கடை பற்றி ஸ்ரீரங்கத்தில் பிறந்த ரங்கராஜனுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது (’ஸ்நாநப் பிராப்தி கூட இல்லை’) என நினைத்தால் மண்டையில் சொட்டேல் என ஒரு அடி. ஓரிரு எண்ணங்கள் தொகுப்பில் நியூயார்க் பற்றி எழுதியுள்ளார். இவ்வளவு பெரிய ஊரில் சொல்ல பல விஷயங்கள் இருந்தபோதும் Bloomingdale's பற்றி ரெண்டு வரி எழுதியிருக்கிறார்.
ஒரு சினிமா அனுபவம் எனும் தலைப்பில் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலைப் படமாக்க பலர் எடுத்த முயற்சி பற்றி மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். படிக்கும்போது அவரது எந்தக் கதையும் சினிமாவானது பற்றி நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லை எனத் தெரிகிறது.
கடைசி பக்கங்களின் ஆரம்ப காலகட்டத்திலும், 90களுக்கு முந்தைய கட்டுரைகளிலும் கூட தமிழ் மரபு மீட்பு என்பதை தமிழ் மொழியின் அழகுச் சுரங்கங்களை மீட்டு வருவது என்றளவில் மட்டுமே சுஜாதா முன்வைத்தார். தமிழ் பாரம்பரியத்துக்கும், தமிழ் மரபின் பண்பாட்டு வீச்சையும் தமிழ் காதலோடு குழப்பிக்கொள்ளாமல் இருக்க அவரால் முடிந்திருக்கிறது. தமிழ் மொழிப் பற்று என்றாலே தனித் தமிழ்நாடு கேட்கும் ஆளுதானே எனும் அரசியல் கலப்பை அவர் குழப்பிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார். நவீனத் தமிழ் மொழியின் பயன்பாடும், நமது பண்டைய மொழிச் செல்வங்களிலிருந்து கடன் வாங்கிக்கொள்ளும் சாத்தியங்களைப் பற்றியும் பலக் கட்டுரைகளில் பேசியுள்ளார். அவரது வைணவப் பற்று என்பது தமிழ் மொழி மீதான காதலின் எதிரொலியாக மட்டுமே இருந்திருக்கிறது - அவரது கடைசி காலங்களுக்கு முன்னர் வரை.
’சுஜாதாட்ஸ்’, ‘சின்னச் சின்னக் கட்டுரைகள்’ எனப் பலவிதமானத் தொகுப்புகளில் கட்டுரைகள் எழுதியிருந்தாலும் இவையெல்லாம் அவரது கடைசி பக்கங்கள் போன்றவைதான். அறிவியல், நவீன பயன்பாட்டு விஞ்ஞானம், வெண்பா, ஹைக்கூ, தமிழ் சினிமா, பாரதியார், ஸ்ரீரங்கம் என அவரது ட்ரேட்மார்க் கட்டுரைகள் பல உள்ளன. கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் எனச் சொல்லவேண்டுமா? (இந்த க்ளிஷேவை எதிர்த்தே அவர் ஒரு பத்தி எழுதியிருப்பார்!)
‘பாபு ஜக்ஜீவன்ராம்’ கட்டுரையின் தொடக்கம்:-
’பாபு ஜக்ஜீவன்ராம் இறந்து போனதற்காக தொலைக்காட்சியில் விம்பிள்டன் இறுதி ஆட்டத்தை சட்டென்று நிறுத்திவிட்டு தில்ருபா வாசிக்கத் துவங்கினார்கள்’
இப்படிப்பட்ட தொடக்கங்களுக்காகவே கையில் கிடைக்கும்போதெல்லாம் ஒருமுறை புரட்டிப் பார்த்துவிடலாம்.
ஓரிரு எண்ணங்கள்
ஆசிரியர் : சுஜாதாபதிப்பகம் - திருமகள் நிலையம்
பக்கங்கள்: 248
விலை: ரூ. 115
இணையத்தில் வாங்க - உடுமலை.காம்
Nalla review, nanri Guru- by Shishya
ReplyDeleteநல்லா இருக்கிங்களா பாலாஜி?
Deleteதங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள்.
அருமையான் பதிவு
ReplyDeleteநன்றி ஸார்.
Deleteஆசான் சுஜாதா புத்தகம் குறித்த சிறப்பான பதிவு.
ReplyDeleteஸ்ரீ....
ஸ்ரீ, தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி. வாழ்த்துகள்.
தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி ஐயா...
Deleteசுஜாதா பற்றிய விமர்சனமா அல்லது ஓரிரு எண்ணங்கள் புத்தகம் பற்றிய விமசர்னமா ? :))
ReplyDeleteஇரண்டும்தான்...
Deleteசரியாக இல்லையோ?
தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.
மிக்க நன்றி சிஷ்யா பாலாஜி, ஸ்ரீ, ராஜசேகர், ரத்னவேல் நடராஜன் - உங்க அனைவருக்கும் இந்த பதிவு பிடித்திருப்பது மகிழ்ச்சியா இருக்கு.
ReplyDeleteமாலோலன் - ரொம்ப பெரிய ஆளுங்க நீங்க- செமையா பிடிக்கிறீங்க சார். எப்படி எழுதலாம்னு சொல்லுங்களேன் பைராகி முயற்சி செய்து பார்ப்பார் - அவருக்கு இவ்வளவு தான் எழுத வருதாம்..அதுவும் அட்டகாசமா சிரிப்பானெல்லாம் போட்டு அசத்தறீங்க.
பைராகி
ஓம்!ஓம்!ஓம்!