கற்றது கடலளவு
து.கணேசன்
பக்கங்கள்: 296
விலை: ரூ.115
விகடன் பிரசுரம்
National Geographic சேனலில் World's Toughest Fixes என்று ஒரு தொடர் வந்தது. கப்பல், அணுமின் கலம், விமானம், நீர்மூழ்கிக் கப்பல், காற்றாலை - என பல பிரம்மாண்ட அமைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி தீர்க்கிறார்கள் என ஒவ்வொரு பகுதியும் ஒரு மணி நேரம் காட்டியிருப்பார்கள். இந்த ஒவ்வொன்றிற்குள்ளும் நாமும் போய், அவற்றை எப்படியெல்லாம் வடிவமைத்திருக்கிறார்கள், அவை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கும் அரிய வாய்ப்பு. பிரம்மாண்டத்தைப் பற்றி அறிவதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது? தரைதட்டிய கப்பலை வெளியிலிருந்து பார்ப்பதற்கே அண்மையில் சென்னையில் எவ்வளவு கூட்டம் கூடியது என்று பார்த்தோம். அப்படிப்பட்ட கப்பலில் பல வருடங்களாக பணிபுரிந்த ஒருவரின் அனுபவமே இந்தப் புத்தகம்.
து.கணேசன் - கப்பல்களில் அடிமட்ட பொறியாளராக தன் பயணத்தை துவக்கியவர். தன் பணியில் பலவித துன்பங்களை சந்தித்து, படிப்படியாக முன்னேறி இன்று நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளவர். தன் நீண்ட கால கப்பல் பயண அனுபவத்தை இந்தப் புத்தகத்தின் வாயிலாக எழுதியுள்ளார். பல வருடங்களுக்கு முன் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் ஒரு தொடராகவும், அவரது வலைப்பதிவிலும் எழுதியவர். இவரே விகடன் முன்னாள் மாணவ பத்திரிக்கையாளராகவும் இருந்துள்ளார். பின் எழுத்து நடையில் கேட்கவேண்டுமா? மனிதரின் எழுத்து, புத்தகத்தை எடுத்துவிட்டால் முடிக்காமல் கீழே வைக்க முடியாதவாறு படு சுவாரசியம். பலவித சம்பவங்கள், பலரின் அனுபவங்கள், கப்பலில், துறைமுகத்தில், பல நாடுகளில் சந்தித்த மனிதர்களைப் பற்றிய பதிவுகள், இதைத்தவிர கப்பலைப் பற்றிய பல தொழில்நுட்பச் செய்திகள் என, கடல் / கப்பல் பற்றி அறிய விரும்புபவர்களுக்கும், கப்பல் துறையில் பணிபுரிய வருபவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
அவர் சொல்லும் ஒவ்வொரு சம்பவத்தையும் நிலத்தில் இருக்கும் நம் நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே, கப்பலில் வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்து கொள்ளலாம். நாம் காரில் போகும்போது, திடீரென்று வண்டி நின்று விடுகிறது. சாலையோரத்தில் நிறுத்தி, அதை சரிபார்த்து, மறுபடி எடுத்து ஓட்டிப் போகிறோம். இதே நடுக்கடலில், கப்பலில் பிரச்னை வந்தால்? அதுவும் இயந்திரம்தானே? பிரச்னை வரலாம்தானே? நினைத்தாலே பகீரென்கிறது. ஆனால் கணேசனோ, அதை மிகமிக சாதாரணமாக சொல்கிறார். - ”மிகவும் பழைய கிரேக்கக் கப்பல். கப்பல் முழுக்க மின்சாரம் கொடுக்கும் ஜெனரேட்டர்கள் அவ்வப்போது பிரச்னை செய்தன. கடலில் பயணம் செய்யும்போதும் சிலமுறை அவை செயலிழந்துவிட்டன. கப்பலை நிறுத்தி நிறுத்தி, பிரச்னையை சரி செய்து கொண்டு, மறுபடி ஓட்டிப் போனோம்”.
அதே போல், விடுப்பு, விடுமுறை, நோய்வாய்ப்படுதல், சொந்த பந்தங்களின் மரணம் - ஆகிய எதுவானாலும், நாம் உடனடியாக அலுவலகத்தில் சொல்லிவிட்டு ஓடிப் போகின்றோம். ஆனால், இவர்களால் அப்படி செய்யமுடியாது. உடம்பு சரியில்லையா? - கப்பலில் இருக்கும் மருந்து மாத்திரைகளையே சாப்பிட வேண்டும்; அப்படியும் குணமாகவில்லையா - அடுத்த துறைமுகம் வரும்வரை காத்திருக்க வேண்டும். மரணச் செய்திகளுக்கும் உடனடியாக விடுமுறை கிடைக்காது. ஒரு சமயம், இவரோடு பணிபுரிபவருடைய தந்தை, ஊரில் காலமாகி விட்டாராம். நண்பருக்கு மாற்று (replacement) வரும்வரை, தந்தையைப் பார்க்க அனுப்ப முடியாது என்று நிர்வாகம் மறுத்திருக்கிறது. இரண்டு / மூன்று நாட்கள் கழித்தே அவரால் ஊருக்குப் போக முடிந்ததாம். கொடுமை!
கப்பலில் பணிபுரிபவர்களின் படிநிலையை (hierarchy) தெரிந்து கொள்கிறோம். துவக்க நிலையாக ஐந்தாம் இஞ்சினியர். பிறகு படிப்படியாக நான்கு, மூன்று என்று உயர்ந்து பிறகு சீஃப் இஞ்சினியர் வரை போகலாம். அவரவர்க்குத் தகுந்தாற்போல் வேலையும் இருக்கும். ஐந்தாம் இஞ்சினியர், நாள் முழுக்க உள்ளே இயந்திரங்களிலிருந்து கசியும் எண்ணெய்களை சுத்தம் செய்யும் வேலையை செய்ய வேண்டியிருக்கும். உயர்நிலைக்கு வந்துவிட்டால், ஒரு தொலைநோக்கியை வைத்துக் கொண்டு, பாதையில் வரும் இதர கப்பல்கள், வானிலை ஆகியவற்றை பார்த்துக் கொண்டேயும் இருக்கலாம். (டைட்டானிக் படத்தில் பார்த்திருக்கலாம்!).
கப்பல் பயணம் என்றாலே புயல், மழை ஆகியவற்றை எப்படி சமாளிப்பார்களோ? கடும் புயல் சமயத்தில் கப்பல் கவிழ்ந்துவிடுமோ என்றெல்லாம் கேள்வி வரும். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தில் பதில் உள்ளது. கப்பலில் மேல் தளம் வரை வந்து விழும் அலைகள், இரு பக்கமும் ஆடி உடனே கவிழ்ந்துவிடுமோ என்று எண்ணும் வகையில் அடிக்கும் புயல், இவையெல்லாம் கப்பல் வாழ்க்கையில் மிக சாதாரணம் என்கிறார் கணேசன். ஆனாலும் ஒரு சமயம் - நம் இந்தியக் கப்பல்தான் - மூழ்கிப் போய், அதிலிருந்த பல பணியாளர்கள் கப்பலோடு மூழ்கி இறந்த சம்பவமும் உண்டு. அந்த விபத்தில் சில மணி நேரங்கள் கடலில் மிதந்து, பின்னர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய கணேசனின் நண்பர், மறுபடி சில நாட்களில் அதே பணிக்கு திரும்ப வந்தாராம். கேட்டதற்கு ’அவ்வளவு பெரிய விபத்தையே சமாளிச்சிட்டோம். இனிமே எதையும் சமாளிக்கலாம்னு தைரியம் வந்துடுச்சு’ என்றாராம்.
இயற்கைச் சீற்றங்கள் ஒரு புறமென்றால், கொள்ளையர்கள் மறுபுறம். சோமாலிய கடற்கொள்ளையர்களைப் பற்றி படித்திருக்கலாம். இத்தகைய படகுகள் அருகில் வருகிறது என்று தெரிந்தாலே, அனைத்து கதவுகளையும் அடைத்து உள்ளே பதுங்கி விடுவார்களாம். அப்படியும் உள்ளே நுழைந்துவிடுபவர்கள், பொருட்களை கொள்ளையடிப்பதோடு, மனிதர்களை கொல்லவும் தயங்க மாட்டார்களாம். ஒரு முறை கொள்ளையர்கள் வந்தபோது, ஒரு பணியாளரின் மனைவியைப் பார்த்துவிட்டு, அவரை தன்னுடன் இழுத்துச் செல்ல முயன்றார்களாம். யாராலும் தடுக்க முடியவில்லை. தடுத்தால் சுட்டு விடுவார்கள். பெரிய போராட்டத்திற்குப் பிறகு, அந்தப் பெண், கொள்ளைக்காரனின் பிடியிலிருந்து தப்பித்து, கப்பலிலிருந்து கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாராம். படிக்கும்போதே பதறுகிறது. அவருடைய கணவனுக்கு எப்படி இருந்திருக்கும்? இரண்டு/மூன்று நாட்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொண்ட நண்பர்கள் அசந்திருக்கும் வேளையில், அவரும் கடலில் விழுந்து மனைவியை அடைந்தாராம். இத்தகைய கொடுமையான சம்பவங்களைக் கடந்தே பலரும் இந்தப் பணியில் இருக்கிறார்கள் என்கிறார்.
இன்னொரு விதமான மக்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு தப்பியோடும் மக்கள் - இத்தகைய கப்பல்களிலும் திருட்டுத்தனமாக ஏறி ஒளிந்து கொள்வார்களாம். ஏதோ ஒரு பெரிய இயந்திரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, கப்பலில் கிடைக்கும் உணவுப் பொருட்களை இரவில் வெளியில் வந்து எடுத்து சாப்பிட்டு, இன்னொரு துறைமுகம் வந்துவிட்டால் மறுபடி இறங்கி ஓடிவிடுவார்களாம். இவர்களுக்கு Stow-aways என்று பெயர். இவர்களால் கப்பல் பணியாளர்களின் உயிர், உடமைக்கு ஆபத்து எதுவும் வரவில்லையென்றாலும், இப்படி செய்வது சட்டவிரோதமானது என்பதால், இவர்களைப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைப்பது நடக்குமாம். நீண்ட பயணங்களில் இவர்களை வைத்தே பல கடினமான வேலைகளை செய்து கொள்வதும் உண்டாம். பிறகு கரை வந்ததும் - போலீஸ்.
இவ்வளவு வருஷம் கப்பலில் வேலை செய்த கணேசனுக்கு நிறைவேறாத ஆசை என்ன தெரியுமா? எப்படியாவது நீச்சல் கத்துக்கணுமாம். என்னது? நீச்சல் தெரியாதான்னு நீங்களும் ஆச்சரியமா கேக்கறது எனக்கு கேக்குது. ஆம். அவருக்கு நீச்சல் தெரியாது. ஆமா, விமானம் ஓட்றவங்களுக்கு பறக்கத் தெரியணுமா என்ன?
இதைத் தவிர, துறைமுகங்களில் கிடைத்த திடீர் நண்பர்கள், அவர்களுடனான பொழுதுகள், கப்பலின் தொழில்நுட்பங்கள், இந்திய மற்றும் வெளிநாட்டுக் கப்பலில் பணிபுரிவதன் வேறுபாடுகள் என புத்தகம் முழுவதும் தகவல்களால் நிரம்பியுள்ளது. சுமார் 300 பக்கங்கள் போவதே தெரியாது. ஒரு புதிய உலகைப் பற்றி அறிந்து கொள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.
***
Good introduction!
ReplyDelete