சுப்ரமணிய பாரதியைப் பற்றி உணர்ச்சிவசப்படாமல் பேச முற்படுபவருக்கு ஒரு வருட டிடிஎச் கனெக்ஷன் இலவசமாகக் கொடுக்கலாம். முண்டாசு, இடுங்கிய கண்கள், ஆளுயரக் கைத்தடி, ஒடுங்கிய சரீரம் என மிடுக்கானத் தோற்றத்தைக் கற்பனை செய்ய நம்மிடையே எண்ணிலடங்கா திரைகாட்சிகளும், ஓவியங்களும் உள்ளன. ஆனால், நம்மை முதலில் வந்தடையும் இந்த சித்திரங்களையும் ஓரிரு கவிதை வரிகளையும் தாண்டி அவரது எழுத்தில் தெரியும் பாரதியாரோடு ஒரு நாள் பழக வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே எனும் ஏக்கம் நம் மனதில் நிச்சயம் இருக்கும். அவரது அருகில் நிற்க நமக்கு அருகதை இருக்கிறதோ, நேருக்கு நேர் விழிகளை நோக்கும் நேர்மை இருக்கிறதோ, அவரது கோபப் பார்வையை தாங்கும் சக்தி இருக்கிறதோ எனத் தெரியாது. ஆனால், தீயில் கருகும் விட்டில்பூச்சிகளான நமக்காகப் பகைவனுக்கு அருள்வாய் என சக்திதேவியிடம் மனமுருகிப் பாடியிருப்பார். புதுச்சேரி கடற்கரை மணற்பரப்பில், விரைந்தோடி வரும் அலைகளுக்கு அருளிய மானுடப் பாடல்களை இன்று வாசித்தாலும் நம்மால் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியாது. அதுவும் யதுகிரி அம்மாள் எழுதிய பாரதி நினைவுகளில் அவர் தினந்தோறும் மேற்கொள்ளும் கடற்கரை நடைப்பயணத்தைப் படித்ததிலிருந்து எனக்கு இவ்வகை சித்திரம் பெரும் உத்வேகத்தைத் தரும். பார்த்தீங்களா?! இலவச டிடிஎச்சுக்கு ஆசைப்பட்டு முறுக்கிக்கொண்டு நின்றாலும் கடைசியில் வழிக்கு வந்துவிடுவோம்.
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்
பொறையருந்துன்பப் புணர்பெலாம் நான்
நானெனும் பொய்யை நடந்துவோன் நான்
என பிரபஞ்சத்தின் முன் நிர்வாணமாய் நின்று தன்னை அறிய முற்பட்ட மகாகவி பாரதியின் வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடி பெருமை சேர்த்துக்கொள்கிறது.
`பாரதி கருவூலம்`, எனும் தொகுப்பு நூல் பதிப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி `ஹிந்து` நாளிதழில் வெளியான பாரதியின் எழுத்துகளைத் தொகுத்திருக்கிறார். இதுவரை அச்சில் வெளிவராத பாரதியின் பல ஆங்கிலக் கடிதங்களைத் தேடி எடுத்து, அவற்றுக்கான எதிர்வினையையும் தொகுத்திருக்கும் அரும் பணியை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி சிறப்பாகச் செய்துள்ளார். எதற்கான எதிர்வினையாக பாரதி கடிதங்கள் எழுதியுள்ளார் என்பதையும் முடிந்தளவு சாராம்சமாகக் குறிப்பிட்டுள்ளது கடிதங்களுக்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்துள்ளது. பாரதி வாழ்ந்த காலத்தில் எவ்விதமான அறிஞர்களும், தேசத் தலைவர்களும் இருந்திருக்கின்றனர் என்றும் சமூகத்தைப் பற்றிய அவர்களது மனப்பிரமை எப்படி அமைந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
பாடல் புனைவது, பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதுவது போன்ற செயல்பாடுகளுக்கிடையே கடிதங்கள் வழியாக ஞான விவாதங்களை பாரதி பலருடன் தொடர்ந்திருக்கிறார் எனும் செய்தியும் வெளிப்படுகிறது. பேராசிரியர் சுந்தரராம ஐயர் என்பவரும் அத்வைதம் மற்றும் கீதை பற்றி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் விவாதம் நடத்தியுள்ளார்.
இதைப் போல இந்த நூல் முழுவதும் பாரதியை புது வெளிச்சத்தில் காட்டுகிறது. பாரதியைப் பற்றி அறியாதவர் கூட அவரது ஒன்றிரண்டு கவிதைகளை மேடையிலும், சினிமா பாடல்களிலும் கேட்டிருக்க முடியும். ஆனால், இந்த கடிதங்களில் வெளிப்படும் பாரதி `இந்தியா` நாளிதழில் கட்டுரைகள் எழுதிய பாரதியல்ல, காக்கை-குருவி எங்கள் ஜாதி எனும் மானுடப் பொதுமையைப் பேசிய பாரதியும் அல்ல. வளர்ச்சி எனவும், காலமாற்றம் எனவும் சமூகத்தின் இயக்கங்களை முடமாக்கிப் போடும் பல தீய சக்திகளோடு நித்தம் சண்டையிடும் ஒரு சாமுராய் போல இக்கடிதங்கள் பாரதியைக் காட்டுகின்றன. தமிழில் அதிகம் பேசப்படாத பல கருத்துகள் முதல்முறையாக இக்கடிதங்களில் வெளிப்படுவதாக ஆசிரியர் கூறுகிறார்.
பிரமஞான சபை பற்றிய விம்ர்சனங்கள், புதுவையில் போலீசார் தரும் தொல்லைகள், அரசியல் விஷயங்களை பத்திரிக்கைகளில் எழுத முடியாத நிலை, இந்திய சமயங்கள் பற்றிய அபிப்ராயம், வெள்ளைக்காரர்களுக்கு சலாம் போட்டு `கடவுளாக்கிய` இந்தியர்களின் புரட்டுகள், இந்திய காங்கிரஸின் செயல்பாடுகள், தேசத் தலைவர்களான வி.எஸ்.ஐயர், திலகர் பற்றிய விரிவானப் பார்வை என இந்த நூல் முழுவதும் கீழ்மைகளைக் கண்டு வெகுண்டு எழும் குரலாக பாரதி இருக்கிறார்.
பாரதி வாழ்ந்த காலத்தில் வெளியான டைம்ஸ், லண்டன் செய்திகள் போன்றவற்றுக்கு எதிராக நாட்டு விடுதலைக்காக உழைத்ததில் `ஹிந்து` நாளிதழின் பங்கு கணிசமானதாகும். `இந்தியா`, `விஜயா`, `சூரியோதயம்` போன்ற இதழ்கள் தடைபட்ட நேரத்தில் அன்றாட சிக்கல்களையும், அரசியல் போராட்ட ஒருங்கிணைவுக்காக தனியொரு தளம் இல்லாத நிலையில் `ஹிந்து` இதழ் திட்டவட்டமாக இதில் இணைத்துக்கொண்டது. தனது குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் எனத் தெரிந்த சுதந்தரப் போராட்ட வீரர்கள் ஹிந்துவில் நாட்டு நடப்பு குறித்து விவாதித்தனர். நாட்டின் முக்கியமானத் தலைவர்களுடன் பாரதி இதில் தொடர்ந்து கடிதம் எழுதி விவாதித்திருப்பது தெரிகிறது. அந்த விஷயத்தில் ஹிந்து நாளிதழ் மிக முக்கியமான சுதந்தர காலத்து ஆவணமாகவும் விளங்குகிறது.
*
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்
`பொன்வால் நரி` என நம் காலத்தின் மிகப்பெரும் அறிவுலக மோசடி என பாரதியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிரம்ம ஞான சபையைப் பற்றி பாரதி எழுதியுள்ள கடிதம் அவரை உள்ளத்தில் உண்மையுள்ளவராக நமக்கு அடையாளம் காட்டுகிறது. அக்காலகட்டத்தில் பிரம்ம ஞானச் சபை என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள தத்துவ அறிஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒன்று. பிரம்ம ஞான சபையை விமர்சிக்கும் அனைவரையும் தேசத்துரோகிகள் எனப் பட்டம் கொடுத்துக்கொண்டிருந்தது. `வெள்ளைத் தோல்` இருந்தாலும், இந்திய தேசத்தின் மேன்மைக்காகவும், சுதந்தர இந்தியாவின் முதல் வெளிச்சக்கீற்றைப் பெற்றுத் தரத் தகுதியுள்ள ஒரே அமைப்பாகவும் பிரம்ம ஞான சபை இருந்துவந்தது எனும் பொய்யுரையை எதிர்த்து பாரதி கடிதங்கள் எழுதியுள்ளார். அரவிந்த கோஷ் சார்பாக அன்னி பெசண்ட் அம்மையாருக்கு பாரதி எழுதியுள்ள மறுப்புரை பொன் எழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று.
Your Mahatmas (not the whole genus, if you please) are a fiction. Firstly, because very few except the President and one or two more who are interested in the maintenance of the Mahatma cult have seen them in the physical, ethereal or any other matter...The statement that some of the leaders of the Theosophical movement are Hindu souls clothed in European and American flesh is an absurdity unless it is taken as a mere flash of rhetoric. For souls have no caste and no nationality according to our shastras..
Police Rule in India எனும் கடிதத்தைப் படிக்கும்போது காவல்துறையிலிருந்து தப்பிக்கவும், தன் மேல் சுமற்றப்பட்ட வழக்குகள் தவறேன்று வாதிடம் மட்டுமே பாரதி தனது வாழ்நாளின் பாதியை செலவு செய்திருக்கிறார் எனும் விஷயம் தெரியவருகிறது. காவல்துறையினரது ஆட்சி எனும் கடிதத்தில் தன்னைச் சுற்றி பிண்ணப்பட்ட பொய்வழக்குகள் எனும் வலையை அறுத்தெரிய வழிதெரியாமல் பல இதழ்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கி வருவதாகச் சொல்லியிருப்பது ஒரு சோகச் சித்திரம். இதனால் எத்தனை செயல்பாடுகள் முடக்கப்பட்டன? கவிதை வீச்சு ஓங்கி இருக்கவேண்டிய எத்தனை இரவுகளை இவை ஆக்கிரமித்திருக்கும்? சாதகமான வாழ்வை அமைத்துக்கொள்ள பாரதியின் அரசியல் தான் இடம் கொடுக்கவில்லை என்றால், அவரது ஞானத்தேடலும் உண்மைத்தேடலும் கூட ஒரு நொடியளவு கூட அவரை உறங்கவிடவில்லை எனத் தோன்றுகிறது.
Police Rule in India எனும் கடிதத்தைப் படிக்கும்போது காவல்துறையிலிருந்து தப்பிக்கவும், தன் மேல் சுமற்றப்பட்ட வழக்குகள் தவறேன்று வாதிடம் மட்டுமே பாரதி தனது வாழ்நாளின் பாதியை செலவு செய்திருக்கிறார் எனும் விஷயம் தெரியவருகிறது. காவல்துறையினரது ஆட்சி எனும் கடிதத்தில் தன்னைச் சுற்றி பிண்ணப்பட்ட பொய்வழக்குகள் எனும் வலையை அறுத்தெரிய வழிதெரியாமல் பல இதழ்களுக்கு தன்னிலை விளக்கத்தை வழங்கி வருவதாகச் சொல்லியிருப்பது ஒரு சோகச் சித்திரம். இதனால் எத்தனை செயல்பாடுகள் முடக்கப்பட்டன? கவிதை வீச்சு ஓங்கி இருக்கவேண்டிய எத்தனை இரவுகளை இவை ஆக்கிரமித்திருக்கும்? சாதகமான வாழ்வை அமைத்துக்கொள்ள பாரதியின் அரசியல் தான் இடம் கொடுக்கவில்லை என்றால், அவரது ஞானத்தேடலும் உண்மைத்தேடலும் கூட ஒரு நொடியளவு கூட அவரை உறங்கவிடவில்லை எனத் தோன்றுகிறது.
பிராந்திய மொழிகளை கல்விமொழியாக அமைக்கவேண்டும் எனும் பாரதியின் கனவு ஒரு கடிதத்தில் நமக்குக் கிடைக்கிறது். இன்று நமக்கு இருக்கும் சொற்களஞ்சியம் போதாது என்றாலும், பிற இந்திய மொழிகளிலிருந்து கடன்வாங்கி கல்விக்கான மொழியை உருவாக்கிவிட முடியும் என ஆர்வம் காட்டுகிறார். தீவிர தமிழ் ஆதரவாளர்கள் உயிரைத் துறக்க சித்தமாக இருக்கும் மொழிக்கலப்பைக் கூட ஒரு நடைமுறைவாதியாக பாரதி அணுகியிருக்கும் விதம் மிக ஆச்சர்யமாக இருந்தது.
Of course, we have no objection to teaching English as a secondary language in our schools and coleges. I think that any rational Englishman ought to be satisfied with this concession.
எப்படிப்பட்ட குசும்போடு கடிதத்தை முடித்திருக்கிறார் பாருங்கள்!
இப்படி அனைத்து கடிதங்களிலும் பாரதியின் ஆங்கிலம் மிகக் கறாராகவும் உயிர்ப்புடனும் வெளிப்பாட்டிருக்கிறது. மிகத் தீவிரமான விஷயங்களைக் கூட எள்ளலோடு அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.
1982இல் `பாரதியின் கடிதங்கள்` நூலை வெளியிட்ட ரா.அ.பத்மனாபன் பல கடிதங்களை இணைத்திருந்தாலும், ஹிந்துவில் வெளியானவை இப்போதுதான் முதல்முறையாக அச்சாகின்றன. இவையே இத்தொகுப்பின் முக்கியமானப் பகுதிகளாக அமைந்திருக்கின்றன.
கிட்டத்தட்ட தொன்னூறு சதவிகித நாடுகள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் அன்னியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற போராடின. ஆனாலும்,ரேடிகள் கட்சியினர் போல வெள்ளையன் ஒருவனே எதிரி எனும் கொள்கைகளைக் கொண்டவை. உலகச் சுதந்தரப் போராட்டச் சரித்திரத்திலேயே ஞானவான்களும், தத்துவத்தலைவர்களும், ஆயுதமேந்திய வீரர்களும் ஒன்றாக இணைந்து நடத்திய போராட்டம் நமது இந்திய சுதந்தரப் போராட்டம் மட்டுமே. அந்த விஷயத்தில் நமது நாடு மிகவும் புண்ணியம் செய்திருக்கிறது. அந்நியரை மட்டுமே வெல்லவேண்டும் எனும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நமது கொள்கை அல்ல. அந்நியரை விரட்டும் அதே சமயம், நமது சமுதாய கீழ்மைகளும், நமது தனிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நாம் எதிர்க்க வேண்டிய எதிரிகளே எனப் புரியவைத்த ஞானத்தலைவர்கள் போராடிய நாடு.
பாரதி போன்ற ஒரு கவிஞனுக்கு வாளாகக் கேடயமாக இருந்த அதே சமூகம் தான், தோல் மேல் பரவும் வியாதியாகவும் அமைந்திருக்கிறது. இரெண்டு விதமானப் போராட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும் என முழக்கம் செய்த ஞானி பாரதி. ஒரு பக்கம் நமது இந்து சநாதனத் தலைவர்களின் சாதிக்கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டியத் தேவை. வெள்ளைய ஆட்சிக்கு கூழை கும்பிடுவதையே தொழிலாக வைத்திருந்த இந்திய முதலாளிகளுக்கு சாட்டையடியாக இருந்தன பாரதியின் வரிகள். போலி தேசத்தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்களை எதிர்க்க வேண்டிய ரெண்டாவது கடமையை அவ்வப்போது பாரதி செய்துவந்திருக்கிறார். இவை ரெண்டுமே இரு கண்களிலும் பரவும் வியாதி என பாரதி இளமையிலேயே கண்டுகொண்டுவிட்டார். ஒன்றை குணப்படுத்த தெருவில் இறங்கினால் மட்டும் போதாது, மற்றொன்றையும் அதே நேரத்தில் குணப்படுத்த வேண்டும் எனும் தெளிவு அவருக்கு இருந்தது.
இதனாலேயே பின்னால் வெளியான சில ஆய்வுகள் இந்த மகாகவியின் வார்த்தைகளை குழப்பம் கொண்டு கவிப்பித்தனின் வரிகள் என முடிவெடுத்தன.
முன்னர் முனிவர் உரைத்த மறைப்பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?
என மறைப்பொருளின் ஞானத் திறப்பைப் பற்றி விதந்தோதிப் பேசும் அதே கவியுள்ளம், ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் என தனது உபாயத்துக்கு வழிபண்ண தெய்வங்களைத் துறத்தும் மனிதனின் பேதமையைச் சாடுகிறது. இருவேறு மாறுபட்ட கருத்துகளை பேசியதால் வீணுரைத்த கவி என நினைத்தலாகுமோ? பலவேறு தாவல்களை நிகழ்த்திய கவிமனதில் ஞானத்தின் கீற்று தொட்ட இடமெல்லாம் தமிழ் இலக்கியத்தின் நவீனத்துவ உச்சம் மட்டுமல்ல, மானுட மனசாட்சியில் வீற்றிருக்கும் உண்மையின் உரைகல்.
`பாரதியார் தேச பக்தராக வாழ்க்கையைத் துவக்கி, கவியாக மலர்ந்து, இறுதியில் பக்குவமான வேதாந்தியாகப் பழுத்ததாக` - புழுதியில் வீணை என ஆதவன் எழுதிய நாடகத்தைப் பற்றிய கட்டுரையில் நண்பர் நட்பாஸ் எழுப்பும் கேள்வியுடன் இதனை நாம் இணைத்துப் படிக்க முடியும்.
கண்ணனின் வாழ்க்கையை அணுஅணுவாக ரசிக்கவேண்டுமென்றால் பெரியாழ்வார் பாடிய பாசுரங்களை படிக்க வேண்டும் என நா.கண்ணன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதே போல, பாரதி எழுதிய கண்ணன் பாட்டுகளையும் பாசுரப்பாடல்களையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகளைப் படிக்கும்போது எப்படிப்பட்ட குழந்தைத்தனமுள்ள மனிதனாக பாரதி இருந்திருக்கிறார் என எண்ணி மனம் லேசாகிறது. ஒரு விதத்தில், குழந்தைத்தனமான உள்ளத்தில் மட்டுமே கவித்துவமும், மானுடன் உணர்வுகளும் பொங்கி வழியும் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு கள்ளமற்ற மனதில் விளையும் லட்சிய சமூகத்துக்கான பிம்பம் தன் முன்னாலேயே உடைந்துபோவதைப் பார்க்க பொருக்க மாட்டாதுதான் மகாஞானிகளும், மேதைகளும் இளம் வயதிலேயே இவ்வுலகை கைகழுவி விட்டுவிடுகிறார்கள் போலும்? ஜே.ஜே சில குறிப்புகள் பாலு சொல்வது போல, `மேதமைத்தனத்துக்கும் அற்பாயுசுக்கும் அப்படி என்ன தொடர்போ?`.
சிறகு விரித்து சிட்டுக்குருவி போல விட்டுவிடுதலையாகி நிற்கும் சில மகாகவிகள் பறவைகளில் தடங்கள் போல எதையும் விட்டுச்செல்ல விருப்பப்படுவதில்லை; நாற்று நடுவது போல நம்முள்ளே தான் எத்தனை ஆழமான உலகை விதைத்துவிட்டுப் போய்விடுகிறார்கள்!
தலைப்பு - பாரதி கருவூலம் (ஹிந்து நாளிதழில் பாரதியில் எழுத்துகள்)
பதிப்பாசிரியர்- ஆ.இரா.வேங்கடாசலபதி
பதிப்பகம்- காலச்சுவடு
விலை- ரூ 140/-
இணையத்தில் வாங்க - NHM
No comments:
Post a Comment