கோபுலு!
இந்தப் பெயரை கார்ட்டூன்களோடு மட்டுமே தொடர்புப்படுத்திப் பார்க்கத் தெரியும் எனக்கு. மதன் போல ஆனந்த விகடனின் முன்னாள் அரசியல் கார்ட்டூனிஸ்ட் / ஜோக் எழுத்தாளர் இவர் என்பது நான் இவர்பற்றி கொண்டிருந்த சித்திரம். எங்கள் அம்மாவழிப் பாட்டி வீட்டில் எண்பதுகளில் பார்த்த பைண்ட் செய்யப்பட வாஷிங்கடனில் திருமணம் புத்தகத்தில் வந்த ஓவியங்களில் இவர் பெயரைப் பார்த்திருக்கிறேன்.
நன்றி: http://chennaibookstore.com
”கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை” : கிழக்கு பதிப்பகத்தின் அதிரடித் தள்ளுபடி விற்பனையின்போது வாங்கக் கிடைத்த புத்தகம். "பின்னொரு நாளில் படித்துக் கொள்ளலாம்" என்று இந்தப் புத்தகத்தை வாங்கிப் போட்டிருந்தேன். வெள்ளை நிற அட்டையில் கருப்பு வெள்ளையில் கோபுலு ஓவியம் வரைவது போன்ற நேர்த்தியான, அழகான வடிவமைப்பு கொண்ட புத்தகம். புத்தக அட்டையை வடிவமைத்தவரும் நான் புத்தகம் வாங்க முக்கியக் காரணமாக இருக்கலாம்.
சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தபோது என் அலமாரியில் இப்புத்தகத்தைப் பார்த்த சுனீல் கிருஷ்ணன், "இந்த புக்கைப் பத்தியெல்லாம் எழுதுங்க கிரி. ", என்றார். புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். தொண்ணூறே நிமிடங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நம்மைப் படிக்கவைக்க வல்ல நடை.
கோபுலு ஒரு வேடிக்கைச் சித்திர ஓவியர் / கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல தேர்ந்த ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். முன்னாள் தஞ்சை ஓவியக்கல்லூரி மாணவர், ஆனந்தவிகடனில் மாலி, தேவன், சாவி, சில்பி போன்ற பிதாமகர்களுடன் பணிபுரிந்தவர், பின்னர் சில விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர், கடந்த நாற்பது வருடங்களாக ஆட்வேவ் (AdWave) என்னும் விளம்பர நிறுவனம் நடத்தி வருபவர்....
.....இந்தத் தகவல்கள் மட்டுமில்லை புத்தகம். இப்படித் தகவல்களோடு நிறைந்திருந்தால் பத்தோடு பதினொன்றான மற்றுமோர் வாழ்க்கை வரலாறுப் புத்தகாம இருந்திருக்கும் இந்தப் புத்தகம். ஆனால், வாழ்க்கையின் நெடிய பாதையைக் கடந்து வந்த ஒருவர் ஈஸிசேரில் சாவகாசமாக அமர்ந்தவாறு சொல்லும் ஒரு கதையை அவர் எதிரில் அமர்ந்து கேட்பதான பாவனையில் புத்தகத்தை வாசிக்க முடிகிறது நம்மால் எனபதுதான் புத்தகத்தின் சிறப்பு. புத்தகமும் அப்படித்தான் உருவாகியிருக்கிறது.
கோபுலுவின் வார்த்தைகளிலேயே விரிகிறது அவர் வாழ்க்கைக்கதை. அதை நேர்த்தியாகத் தொகுத்து நயம்பட தந்திருக்கிறார் சந்திரமௌலி. எண்பது வயது கடந்த ஒருவர் சொல்லச் சொல்லக் கேட்டு அதை ஒரு சுவாரசிய நடையில் புத்தக வடிவில் கொண்டு வருதல் எளிதன்று. சந்திரமௌலி இதைத் திறம்பட செய்திருக்கிறார்.
தன் குழந்தைப் பருவத்தைப் பற்றி கூறும்போது நிஜக்குழந்தையாகவே மாறிப் போகிறார் கோபுலு. குதூகலம் கொப்பளிக்கும் அந்த முதல் நான்கு அத்தியாயங்களை வாசிக்கையில் எங்கள் கிராமத்து வாழ்க்கைக்கே என்னைக் கொண்டு சென்றுவிட்டார் கோபுலு.
சின்னஞ்சிறுவர்கள் மனதில் தேங்கிப் போயிருக்கும் சில அசட்டு நம்பிக்கைகளும் அந்த அசட்டு நம்பிக்கைகளைச் சுற்றி அவரவர் இஷ்டத்திற்கு கட்டியெழுப்பும் புதுப்புதுக் கதைகளும் எல்லோர் வாழ்க்கையிலும் சகஜம். கோபுலு குறிப்பிடும் “பீரங்கிக்குள் ஐந்துதலை நாகம்” அத்தகையது.
சென்னை போன்ற நகரங்களில் இப்போது தடையில் இருக்கும் ”பட்டம் விடுதல்” கோபுலு வளர்ந்த தஞ்சை மாநகரில் எப்படி கனஜோராக நடந்தது என்பதை சொல்ல ஒரு அத்தியாயம். தஞ்சை மன்னன் கட்டிய பெரிய கோயிலின் பிரகார ஓரங்களின் மண்டபத்தை ஒட்டிய குழிகளெல்லாம் கோபுலு & கோ மாஞ்சா தயாரிப்பதற்கு பாட்டில் ஓடு அரைக்கப் பயன்பட்டிருக்கின்றனவாம். கோயில் வளாகத்திலேயே மாஞ்சா போட்ட நூலைக் காய வைப்பார்களாம் (1920 - 30 வருடங்கள்). கேட்கவே (படிக்கவே) வேடிக்கையாக இருக்கிறது.
தீபாவளி நேரத்தில் தெருத்தெருவாகச் சென்று வெடிக்காத பட்டாசுகளைச் சேகரித்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அவற்றைப் பிரித்தெடுத்து அவற்றினுள்ளே இருக்கும் வெடிமருந்தைச் சேகரிக்கும் வேலையைச் செய்தது? எனக்கென்னவோ இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு வெடிமருந்தின் நிறம் என்னவென்று தெரியுமோ என்பதே கேள்வியாக இருக்கிறது. கோபுலு தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிய / வெடித்த கதை இப்போது முப்பது வயதைக் கடந்த எல்லோரையும் தம் பால்ய வயதிற்கு நிச்சயம் கொண்டு செல்லும்.
இந்த பால்ய வயதின் பக்கங்களைப் பற்றி நான் விலாவரியாகப் பேசக் காரணமே, நான் முன்னமே குறிப்பிட்ட அவற்றின் குதூகலம் கொப்பளிக்கும் குழந்தைத்தன நடைதான்.
பால்ய வயதிற்குப் பின் ஓவியக் கல்லூரியில் பயின்றது, பணிநிமித்தம் மும்பை, சென்னை என்று பயணப்பட்டது. சென்னையில் விகடனில் பதினெட்டு வருடங்கள் பணிபுரிந்தது, அங்கே சந்தித்த பெரிய மனிதர்கள், அவர்களுடனான நட்பு, சில சுவாரசிய / ருசிகர அனுபவங்கள், படங்கள் வரைவதற்காக மேற்கொண்ட பயணங்கள் என்று அடுத்த ஆறு அத்தியாயங்கள் செல்கின்றன.
விகடனில் இருந்து விலகி ஒன்பது வருடங்கள் வெளியே விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவங்களும், அடுத்தது AdWave அத்தியாயங்களும் பேசி நிறைகிறது புத்தகம்.
இத்தனை சுவாரசியங்கள் தாண்டி புத்தகத்தில் ஒரு பெரும் குறை உண்டு. கோபுலு வரைந்த ஓவியம் ஒன்றேயொன்றைத்தான் மொத்தப் புத்தகத்திலும் நமக்குத் தந்திருக்கிறார்கள். இதற்கு நியாயமான காரணங்கள் இருக்கக்கூடும், எனினும், இதை ஒரு பெரிய குறையாகவே நான் காண்கிறேன்.
நன்றி: http://www.neerottam.com
கோபுலு கலைமாமணி விருது பெற்றவர், ஞானபாரதி அறக்கட்டளையின் அறங்காவலர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். தில்லானா மோகனாம்பாள் திரைப்படமானது விகடனில் தொடர்கதையாக வந்தபோது அதற்கு ஓவியம் படைத்தவர் என்பவை தாண்டி, ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் லோகோ மனிதரை உருவாக்கியவர், இப்போது நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் சன் டிவி’க்கான லோகோவை வடிவமைத்தவரும் அவரே.
புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிடுகிறார்கள்:
”ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளைத் திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்”
ஆம்! ஏகானுபவம்தான்!
கோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை
எஸ். சந்திரமௌலி
வாழ்க்கை வரலாறு
112 பக்கங்கள் / விலை ரூ.60/-
இணையம் வழியே புத்தகம் வாங்க: கிழக்கு
அன்புள்ள கிரி,
ReplyDeleteஅருமையான விமர்சனம். பொருத்தமாக நீங்கள் இணைத்துள்ள கோபுலுவின் ஓவியங்களும் அபாரம்.
சந்திர மௌலியின் அருமையான நடையில் வெளி வந்துள்ள இந்தப் புத்தகத்தை இது வரை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்பது எனக்கே நினைவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த பகுதிகள் - சாவி பற்றி கோபுலு குறிப்பிடுவது, சோடா குடிக்கும் ஆஞ்சநேயர், கோபுலு குத்து விளக்கேற்றி குங்குமம் பத்திரிகையை ஆரம்பித்தது மற்றும் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசி (“கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“ )
இந்தப் புத்தகத்தில் நீங்கள் குறிப்பிடும் குறை இப்போதுதான் என் கண்ணில் படுகிறது :-)
கிழக்குப் பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் தற்போது Out of stock என்று காண்பிக்கிறது :-(
கோபுலுவின் சித்திரங்களும்,கதாசிரியர்களின் கற்பனைகளும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அமைந்த நாவல்கள் எத்தனை எத்தனை??
ReplyDeleteகலைமணியின் ராவ் பகதூர் சிங்காரம்,தில்லானா மோகனாம்பாள் என பட்டியல் நீளும். கதையின் அருகில் கோபுலு படைத்த அந்த ஓவிய மனிதர்கள்...............அப்படி அந்த நாவல்களை மீண்டும் மீண்டும் படிப்பது அது ஒரு இனிமையான அனுபவம்.
பால்ஹனுமான்,
ReplyDeleteஉங்கள் ஊக்கம் தரும் ரொம்ப நன்றி. ஸ்பெஷல் ஆஃபர் செக்ஷனில் கிழக்கு தளத்தில் இந்தப் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஹரன் பிரசன்னாவிடம் கேட்கலாமே?
@மாணிக்கம்
வாங்க சார். நலமா? ரொம்ப நாளாச்சு உங்களண்ட கதைச்சு. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.