நம் வாழ்வில் நிகழும் ஒரு சம்பவம், ஒரு வினாடியில் கடந்துசெல்லும்
நபர், விபத்திலிருந்து தப்பிக்கும் ஒரு மைக்ரோ செகண்ட், பேருந்திலிருந்து
கிடைக்கும் குழந்தையின் கையசைத்தல் இவை போன்றதானதொரு மிகச்சிறிய சம்பவம் மனதில் ஒரு
மிகப்பெரும் இன்பத்தையோ அல்லது ஆழமான வடுவையோ ஏற்படுத்தவல்லதாகிறது. அதேபோலத்தான்
புத்தகங்களும். சில நேரங்களில் தடியான புத்தகங்களைப் படித்து முடித்த பின்னர் அப்பாடா
இவ்வளவு பெரிய புத்தகத்தை முடித்தாயிற்று எனும் ஒரு வெற்றிதான் தெரியுமே தவிர
அந்த புத்தகத்தை படித்ததற்கான ஒரு நிம்மதி வராது. அந்த நிம்மதியை ஏதோ பேருந்திலோ
ரயிலிலோ படித்து முடித்து விடக்கூடிய சின்ன புத்தகங்களால் தந்து விட முடியும்.
அப்படியான ஒரு சின்ன நாவல்தான் இப்புத்தகம்.
இல்லாதவர்கள் பொல்லாதவர்கள் என்றுதான் நாவல் துவங்குகிறது.
சினிமாத்தனமான டவுசர் பாண்டியை ஒத்த டேனி தான் இதில் ஹீரோ. உண்மையைச்
சொல்லப்போனால் ரவுடி ஒரு பொறுக்கி, ஆனால் நோஞ்சான். மேல் மட்டத்தில் இருப்பவர்க்கு
அவரவர் பிரச்சினை. ஆனால் அடித்தட்டு மக்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
போலும். அதுவும் ஒண்டிக் கட்டையாய் ரவுடியாய் சுற்றி வரும் டேனிக்கு. நீ பெரிய
மகான். நீ பெரிய தாதா என்று சொல்ல ஒரு கூட்டம் உடன் இருக்கும்போது டேனி
மிகப்பெரும் ரவுடியாய் உணர்கிறான். கொடிக்கம்பத் தகராறில் சண்டை முற்றி அடிதடியாகி
ஒருவன் கத்திக் குத்தேற்கிறான். அந்தப் பழி டேனியின் மீது விழுகிறது.
எப்பேர்பட்ட ரவுடியானாலும் போலீஸ் என்றால் பயம்தான். அதுவும் குற்றம்
செய்யாத போதுதான் மனசு ரொம்பவும் பயப்படும். ஓடி ஒளிய முற்படுகிறான். அவன்தான்
திருடனாயிற்றே, தலைமறைவாகும் முன் ஒரு வீட்டில் கொள்ளையடித்து அந்தப் பணத்தைக்
கொண்டு சுகமாய் வாழலாம் என்று முடிவெடுத்து ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப் புகுகிறான்.
அங்கிருக்கும் ஒரு கிழவரிடம் மாட்டிக் கொள்கிறான். கிழவர் அவனை வசமாக ஒரு அறையில்
வைத்து பூட்டி விடுகிறார். அவன் எப்படித் தப்பிக்கிறான், நடுவில் என்ன நடந்தது
என்பதே கதை.
உசுப்பேற்றுதல் என்பது ஒரு கலை. இதில் ஹீரோயிசம், தாதாயிசம் என
எல்லாவற்றையும் சேர்த்து ஒருவன் உருவகப்படுத்தப்படுகிறான். புகழுக்கு மயங்காதார்
உண்டோ! சுற்றி இருக்கும் நாலுபேர் நம்மைப் பற்றி ஜே போட்டுக் கொண்டே இருந்தால்
கேட்பதற்கு எப்போதும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நாலு பேரின் எண்ணம்
எல்லாம் பணம் அல்லது புகழாகத்தான் இருக்கும். பொழுதுபோக்காகவும் இருக்கலாம். எத்தனையோ காரணங்கள். அதாவது ஒருவனை மையப்படுத்தி,
வெளிச்சத்தில் நிறுத்தி வரும் உபரி வெளிச்சத்தில் தன்னை அடையாளபடுத்திக்கொள்வது
அல்லது சம்பாதிப்பது. இத்தகைய சம்பவங்களை நீங்கள் எங்கும் காணலாம். இப்படியான
சம்பவத்தின் க்ளைமாக்ஸ் எப்போது ஆன்டி-ஹீரோயிசம் தான். உசுப்பேற்றியவர்கள்
ஒதுங்கிக் கொள்ள ஹீரோ அகப்படுவான். இந்தக் கதையைப் பொறுத்தமட்டில் அது டேனி.
இருவர் மட்டுமே வாழும் இந்நாவலில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் அந்த
கிழவர். துடுக்குத்தனம் மிகுந்த கிழவரவர். சீட்டு விளையாட்டுப் பிரியர். ஆனால்
தனிமை. இச்சமயத்தில் வந்து மாட்டிய டேனியை விடுவாரா என்ன? வயதானாலே ஒரு
பிடிப்பின்மை வந்து விடும்போல. அது பொருட்களின் மீதோ, வாழ்வின் மீதோ, உறவுகளின்
மீதோ ஏதோ ஒன்றின் மேல். வயதானவர்களுக்குத் தேவை எல்லாம் அச்சமயம் மகிழ்ச்சி.
குறைந்தபட்சம் துக்கமின்மை அதாவது தனிமையின்மை மட்டும் தான். ஒரு சமயத்தில் டேனியை
தன்னுடனே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் அவன்தான் திருடனாயிற்றே. எதற்கும்
மசியாமல் தப்புவதில் குறியாக இருக்கிறான். இருந்தும் இவரின் செயல்களால் டேனியின்
மனதினுள்ளே ஒரு மாற்றம் நிகழ்கிறது, மனம் திருந்துகிறான்.
புத்தியற்று புகழுக்காக செய்யும் சம்பவங்கள் சில வாழ்க்கைக்கே
உலைவைத்து விடும் என்பதை சொல்லும் இந்த நாவலை, கிழவரின் கதாபாத்திரத்திற்காகவே
ஒருமுறை படிக்கலாம்.
ஜெயகாந்தன் | நாவல் | மீனாட்சி புத்தக நிலையம் | ரூ. 25 | 80 பக்கங்கள்
இணையத்தில் வாங்க: உடுமலை
No comments:
Post a Comment