கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்
இரண்டு
மூன்று மாதங்கள் முன்னால் ”கோபல்லபுரத்து மக்கள்” படித்த நினைவுகள்
இன்னும் மனதை விட்டு அகலாத நிலை. நூலகம் முழுக்க ரெண்டு மூன்று தடவை
சுற்றியும், எனக்குப் பிடித்த மாதிரி எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை.
இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றித் திரிந்தபோது ரொம்ப மெலிதான இந்த புத்தகம்
கிடைத்தது - “கோபல்லபுரத்து மக்கள்” புத்தகத்தின் ஆரம்பத்தில், “கோபல்ல
கிராமம்” புத்தகத்தின் தொடர்ச்சி இந்தப் புத்தகம் என்றும், அதில் வரும்
சம்பவங்கள் சில ஏற்கெனவே “கோபல்ல கிராமம்” புத்தகத்தில் வந்துள்ளது என்று
குறிப்பிட்டிருந்தது இதைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது.
இந்த
புத்தகத்தை பற்றி இரண்டு வார்த்தையில் சொன்னால் “டாப் கிளாஸ்”. ட்விட்டர்
மாதிரி 140 எழுத்துகளுக்குள் சொல்லலாம் என்றாலும் சொல்லலாம். ஆனால் எனக்கு
வார்த்தையே வரமாட்டேன் என்கிறது.
போன வருடம்
“மிட்நைட் இன் பாரிஸ்” என்று ஒரு ஆங்கில திரைப்படம் வெளிவந்தது. என்னுடைய
அபிமான இயக்குனர் வூடி ஆலன்(woody allen) இயக்கியது. அதில் வரும் நாயகன்,
ஒரு எழுத்தாளன், தான் எழுதும் நாவலின் இறுதிகட்டப் பணிக்காக பாரிஸ்
வருகிறார். இரவு சரியாக பனிரெண்டு மணிக்கு வரும் வண்டியில் ஏறி தன்னுடைய
(1920களில் வாழ்ந்த Scott Fitzgerald, Hemingway போன்ற) அபிமான
எழுத்தாளர்களை தினமும் சந்திக்கிறார். அந்த உலகத்திலே வாழ ஆசைப்படுகிறார்.
கடைசியில் உண்மை புரிந்து நிகழ்காலத்திற்கு வருகிறார்.
முன் சொன்ன
படம் மாதிரி இந்த புத்தகம் படிக்கும்போது, நானும் கோபல்ல கிராமத்திற்கே
போய்விட்டேன். அந்தக் கதைமாந்தர்களுடன் கூடவே செல்கிறேன். அவர்களுடன் உணவு
அருந்துகிறேன். உறங்குகிறேன். வயலுக்குச் செல்கிறேன். இரவில் வரும்
திருடர்களை அடித்து விரட்டுகிறேன். அவர்களின் இன்பதுன்பங்களில்
பங்கேற்கிறேன். புத்தகத்தை பாதியில் விட்டு எழும்போது நிகழ்காலத்திற்கு
வருகிறேன், மீண்டும் தொடரும்போது கடந்த காலத்திற்கு திரும்புகிறேன்.
ஒரு கிராமம்
எப்படி உருவாகிறது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? நான் இந்த புத்தகம்
முடியும் வரையில் நினைத்தும்கூட பார்த்ததில்லை. ஆனால் படித்து
முடிக்கும்போது, "அடடா! எவ்வளவு கஷ்டப்பட்டு, அதே சமயம் அழகாக, ஒரு
கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள்!" என்ற வியப்பு.
ஆந்திராவின்
துருக்க இராஜாவுக்கு பயந்துகொண்டு தங்கள் ஊரைவிட்டுக் கிளம்பும் கூட்டம்,
தெற்கு நோக்கி பயணப்படுகிறது. நெடுநாள் பயணத்திற்குபின், இந்தப் பகுதியை
வந்தடைகின்றனர். முதலில் பெரும் காடாக இருக்கும் இப்பகுதி, இம்மக்களின்
உழைப்பால் வளமான பூமியாக உருவாகிறது.
இந்த கிராம
வரலாறுகூட முன் - பின் கதையாக சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனால்
இந்த புத்தகத்தை முடிக்கும்போது அந்த கிராம மக்கள் அனைவரோடும் வெகு காலம்
நெருங்கிப் பழகி அறிந்துக்கொண்ட உணர்வு ஏற்படுகிறது. முதல் இரண்டு மூன்று
அத்தியாயங்களில் கோபல்ல கிராமத்தில் வாழும் நாயக்கர்கள் அனைவரையும்
அறிமுகபடுத்தி விடுகிறார் ராஜநாராயணன். அவர்கள் எல்லோருக்கும் ஏதோ ஒரு
புனைப்பெயர் இருக்கிறது. அதற்கு ஒரு சுவையான சம்பவமும் சொல்கிறார்.
நாவலின் ஆரம்பத்தில் ரொம்ப அழகாக குளத்தின் அருகே இருக்கும் விலங்கின் வாழ்க்கை வட்டத்தை (Life cycle), எவ்வளவு அழகாகச் சொல்கிறார்:
“நண்டு தனது சொளகரியத்துக்காக வலை தோண்டி
வைத்திருக்கிறது. ஆனால் அங்கே இந்தக் குரவை மீனுக்கு என்ன சோலி? அந்த வலை
நீரின் நிலையை ஒட்டி அதன் சிற்றலைகள் அந்த வலைக்குள் சென்று வரும்படியாக
அமைந்திருக்கும். மண்ணும் தண்ணீரும் சேர்ந்து பதப்பட்டிருக்கும், அந்த
சொதமண்ணில் வசிக்கும் மண்புழுவைத் தின்ன குரவை மீனுக்கு ரொம்பப் பிரியம்.
அந்த குரவை மீனைப் பிடித்துத் தின்ன நாரை ஒற்றைக்காலில் நிற்கிறது. நாரையை
பிடித்துத் தின்ன நரி பதிபோட்டுக் காத்து நிற்கிறது. வேட்டையாடுகிறவன் கூட
நீர்நிலையில் வந்துதான் காத்துக் கொண்டிருக்கிறான்.....”
சென்னா
தேவியின் வரலாற்றை மங்காத்தாயாரு கூறும்போது பாண்டஸியை கலந்து சொல்கிறார்.
கண்டுபிடிப்புகளிலும் ‘கோபல்ல கிராம” மக்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை
அக்கையா கண்டுபிடித்த ரெட்டைக்கலப்பை முறை பற்றி படிக்கும்போது அப்படியொரு
குதூகலம். கதை ஒரு கொலையுடன் ஆரம்பிக்கிறது, கொலையாளனை குளக்கரையிலிருந்து
பஞ்சாயத்துக்கு இழுத்து வருவதற்குள் கிராமத்தின் மொத்த வரலாற்றையும் சொல்லி
முடித்து விடுகிறார்.
ஆப்பிரிக்காவில்
அடிக்கடி வெட்டுக்கிளி (லோகஸ்ட்-locust) தாக்குதல் பற்றிய செய்திகள்
படித்து இருக்கிறேன். இந்தியாவில் நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. கி.ரா
இந்த மக்களின் வரலாற்றை விவரிக்கும்போது, ஒரு சமயம் இவர்களின் பயிரை
வெட்டுக்கிளிகள் மொத்தமாக தாக்கி அழித்து விடுகிறது என்ற தகவல் தெரிகிறது,
அந்த மக்களின் பெரிய மனது ஊரின் நன்மை, போன்றவற்றை நாயக்கர்களின் செயல்கள்
மூலம் அறிய முடிகிறது.
இந்த
நெடுங்கதை, கும்பினி ஆட்சியாளர்களின் (ஆங்கிலேயர்) வரவுடன் முடிகிறது.
அவர்களைப் பற்றி முதலில் நல்ல எண்ணத்துடன் மக்கள் இருந்தாலும், தங்களின்
கஷ்டத்தை ஆட்சியாளர்கள் தீர்க்காததும், தங்களின் பயிரை விற்பதற்கு
ஏற்படுத்தும் தடையும், நாடு முழுவதும் அவர்களுக்கு எதிராக ஏற்படும்
கிளர்ச்சியும், மெதுவாக கோபல்ல கிராமத்தில் பரவுகிறது.
இப்போது
வரையில் வாசித்த எந்தப் புத்தகத்தையும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற
எண்ணம் வந்தது இல்லை, (சில புத்தகங்கள் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை) -
ஆனால் இதை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது.
it reminded me of marquez' one hundred years of solitude - very similiar stories!
ReplyDeleteOh is it ?, I didn't read one hundred years of solitude
ReplyDeletethanks for your valuable comments :-)