சிறப்பு பதிவர் : ரா. கிரிதரன்
காப்பியங்களில் உயர்ந்ததான இரட்டைக் காப்பியங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆடற்கலையை அறிந்துகொள்ள கலைக் கருவூலங்களாக அமைந்திருக்கின்றன. ஆடற்கலையின் மேன்மையை உணர்த்தும் வகையில் ஆடல்வகைகள், அரங்க அமைப்பு, ஆடல் ஆசிரியன் (நட்டுவனார்) தகுதி, குழல், யாழ், தண்ணுமை ஆகியவற்றை இயக்கும் கலைஞர்களின் இயல்பு போன்றவற்றை விரிவாக விளக்கும் நூலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் திகழ்கின்றன. நாட்டிய நன்னூல், ஓவியச் செந்நூல் போன்றவை அந்த காலத்தில் நோக்கு நூலாக இருந்துள்ள செய்திகளை இவற்றின் மூலம் அறியமுடிகிறது.
சங்க காலம் தொடங்கி இசை நாடகம் இயல் போன்ற மூவகை மரபுகள் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ளதை மிகத் தெளிவாக நமது பண்டைய நூல்கள் முன்வைக்கின்றன. பல சங்கக்கவிதைகளைப் படிக்கும்போது அவை நிகழ்த்துவதற்கான களத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் வருமளவு ‘பாவங்கள்’ நிறைந்ததாக அமைந்துள்ளன. பக்தி காலகட்டத்தில் கோயில்களில் பொலிவுடன் தொடர்ந்த ஆடற்கலை, அந்நிய படையெடுப்பு காரணமாகவும், கோயில் ஆடற்கன்னியரது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நடந்த சம்பவங்களாலும் நலிந்த கலையாக மாறத்தொடங்கியது நமது வரலாற்றில் முக்கியமான காலகட்டம். மெல்ல தேவதாசிகளின் தொண்டு கோயிலைத் தாண்டி ஊர் பெரியவர்களது வீட்டுப் படியேறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் தொழிலை ஆங்கிலேய ஆட்சி தடை செய்யுமளவு நமது பண்டைய கலை வீழ்ச்சி அடைந்தது.
சங்க காலம் தொடங்கி இசை நாடகம் இயல் போன்ற மூவகை மரபுகள் தமிழர் வாழ்வோடு இணைந்துள்ளதை மிகத் தெளிவாக நமது பண்டைய நூல்கள் முன்வைக்கின்றன. பல சங்கக்கவிதைகளைப் படிக்கும்போது அவை நிகழ்த்துவதற்கான களத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ளதோ எனச் சந்தேகம் வருமளவு ‘பாவங்கள்’ நிறைந்ததாக அமைந்துள்ளன. பக்தி காலகட்டத்தில் கோயில்களில் பொலிவுடன் தொடர்ந்த ஆடற்கலை, அந்நிய படையெடுப்பு காரணமாகவும், கோயில் ஆடற்கன்னியரது வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க நடந்த சம்பவங்களாலும் நலிந்த கலையாக மாறத்தொடங்கியது நமது வரலாற்றில் முக்கியமான காலகட்டம். மெல்ல தேவதாசிகளின் தொண்டு கோயிலைத் தாண்டி ஊர் பெரியவர்களது வீட்டுப் படியேறியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவதாசிகள் தொழிலை ஆங்கிலேய ஆட்சி தடை செய்யுமளவு நமது பண்டைய கலை வீழ்ச்சி அடைந்தது.
சே. இரகுராமன் அவர்கள் பஞ்சமரபு தமிழ் நடனக் கலைக்கென எழுந்த முதல் நூல் எனக் குறிப்பிடுகிறார். கூத்திற்கு தரும் விளக்கமாக, ‘அகம் உயிர் ஆகச் சுவை உளம் ஆக இழை உடல் ஆக இயல்வது கூத்து’, வரும் பகுதி மிக அழகாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கிய மரபில் தோன்றிய நடனச் செய்திகளை மட்டும் எடுத்துக்காட்டாமல், அவற்றை வகுத்தும் தொகுத்தும் அக்கால மக்கள் வாழ்வியலில் ஆடற்கலை பெற்றிருந்த சிறப்பையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. ஐவகை நிலத்துக்கான தனித்தனி பண்ணும், பறையும் கூத்தும் இருந்தமையை சுட்டிக்காட்டுகிறார்.
தொல்காப்பியத்தில் நடனம் பற்றிய குறிப்புகள் தொடங்கி, பஞ்சமரபு, கூத்த நூல், பரதசேனாபதியம் எனும் பண்டைய நடன நூல்களில் வரும் குறிப்பிடத்தக்கச் செய்திகளை ஆசிரியர் விளக்கியுள்ளார். குறிப்பாக பஞ்சமரபு காட்டும் கூத்திலக்கண மரபுச் செய்திகள், ஆடும்பொழுது உடலுறுப்புகளின் நிலை, 16 வகையான தாண்டவங்கள், ஆண்/பெண்/அலி எனும் பாகுபாட்டை ஒட்டிய நடன முறைகள் என பலத் தலைப்புகளில் விவரித்துள்ளார்.
அற நூல்களான திருக்குறள், பதினெண்கீழ்க்கணக்கு, ஐந்திணை போன்றவற்றில் வரும் நடனச் செய்திகளை சங்க காலத்தின் எச்சங்கள் எனக்குறிப்பிடுகிறார். அற இலக்கியம் தோன்றிய காலத்தில் மிகக் கட்டுப்பாடான சமூகமாக தமிழர் இருந்திருக்கலாம் என்றும் நடனம் போன்ற கலைவடிவங்களில் வளர்ச்சி சற்று மட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுவது புதிய செய்தி.
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
எனும் குறள் மூலம் `கூத்தாட்டு அவை` எனும் ஆடலரங்கம் திருக்குறள் காலத்தில் இருந்திருக்க சாத்தியம் உள்ளதாகக் கூறும் ஆசிரியர், சமூக ஆய்வில் இலக்கிய ஆதாரங்களை இரெண்டாம் நிலை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளலாம் எனும் முடிபையும் உரைக்கிறார்.
இந்த ஆய்வு நூலில், மணிமேகலையும் நடனும் எனும் பகுதி எனக்கு மிக முக்கியமானப் பகுதியாகத் தோன்றியது. கோவலன் இறந்தபின்னர் , தவறானச் செய்தியை மன்னருக்கு அறிவித்த பொற்கொல்லருக்குத் தண்டனையாக ஆயிரம் பொற்கொல்லர்களை கொன்றார்கள் எனும் செய்தியைக் கேள்விப்படும் அதே நேரத்தில், மதுரைக்கு வர மறுத்து இந்திராவிழாவில் ஆடுவதற்கு மறுப்பு தெரிவிக்கும் மாதவியையும், மணிமேகலையையும் மக்கள் தூற்றுவதாக மணிமேகலை எனும் காப்பியம் தொடங்குகிறது.
மாதவியைப் போல மணிமேகலையும் தண்ணுமைக் கலையிலும், அபிநயம், தாண்டவம் கூத்து போன்ற நடனங்களிலும் மரபு மீறாது கற்றுணர்ந்தவள் எனும்போது ஆடற்கலையைத் தொடரக்கூடாது எனும் முடிவு மிக முக்கியமான சமூக மாற்றம். அதுவும் சமூகத்தில் மாதவி போன்ற ஆடற்கனிகையரின் இடத்தை பெரிதும் அசைத்துப்பார்க்கும் முடிவு. அப்படிப்பட்ட நிகழ்வுகளை காப்பியமாக எழுதியதில் நாட்டியம் சார்ந்த விவரணைகள் சற்று குறைவாக இருக்கும் என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த நூலில் இருந்த `நாட்டியமும் மணிமேகலையும்` எனும் பகுதி இதற்கு மாறானச் செய்தியை வழங்குகிறது.
மணிமேகலை காப்பியம் 30 கதைப் பகுதிகள் உள்ளது. இந்த காப்பியம் புத்த தத்துவத்தின்வழி நிற்கிறது என்றாலும் புத்த மதமும் இந்து மதமும் முரண்பட்டு நிற்கும் சித்திரங்களை அளிக்கிறது. மிக உயரிய பண்பாட்டு மற்றும் கலை சார்ந்த செய்திகளை உள்ளடிக்கிய காப்பியங்களில் மணிமேகலையை மிக உயர்ந்த இடத்தில் விமர்சகர்கள் வைக்கிறார்கள். மணிமேகலையில் வெளிப்படும் நடனம், ஓவியம், இலக்கணம் சார்ந்த தகவல்கள் மறைந்த மற்ற மூலநூல்களின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகிறது. குறிப்பாக நடனம், ஓவியம் குறித்த தகவல்கள் செழுமையான ஒரு பண்பாட்டு சித்திரமாக அமைந்திருக்கிறது.
மாதவியின் மகள் மணிமேகலை மிக உயிர்ப்பாக அமைத்திருக்கிறார் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன். சிலம்பில் கிடைக்காத பெண்மையின் சித்திரமான மணிமேகலை இருக்கிறாள். இதற்கு அவளது பாத்திரம் அடையும் உருமாற்றம் ஒன்றே காரணம் எனத் தோன்றுகிறது.
மணிமேகலை காப்பியம் 30 கதைப் பகுதிகள் உள்ளது. இந்த காப்பியம் புத்த தத்துவத்தின்வழி நிற்கிறது என்றாலும் புத்த மதமும் இந்து மதமும் முரண்பட்டு நிற்கும் சித்திரங்களை அளிக்கிறது. மிக உயரிய பண்பாட்டு மற்றும் கலை சார்ந்த செய்திகளை உள்ளடிக்கிய காப்பியங்களில் மணிமேகலையை மிக உயர்ந்த இடத்தில் விமர்சகர்கள் வைக்கிறார்கள். மணிமேகலையில் வெளிப்படும் நடனம், ஓவியம், இலக்கணம் சார்ந்த தகவல்கள் மறைந்த மற்ற மூலநூல்களின் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகிறது. குறிப்பாக நடனம், ஓவியம் குறித்த தகவல்கள் செழுமையான ஒரு பண்பாட்டு சித்திரமாக அமைந்திருக்கிறது.
மாதவியின் மகள் மணிமேகலை மிக உயிர்ப்பாக அமைத்திருக்கிறார் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தன். சிலம்பில் கிடைக்காத பெண்மையின் சித்திரமான மணிமேகலை இருக்கிறாள். இதற்கு அவளது பாத்திரம் அடையும் உருமாற்றம் ஒன்றே காரணம் எனத் தோன்றுகிறது.
உலக இயல்புக்குத் தகுந்தாற்போல பிறந்து வளரும் மணிமேகலை தனது தாய் மாதவியிடமிருந்து ஆயகலைகள் அனைத்தையும் பயில்கிறாள். துடிப்பானப் பெண்ணாக இருக்கும் அவளது பதின்ம வயதில் உதயகுமாரன் எனும் அரசனைப் பார்த்து காதலில் விழுகிறாள். பதின்ம பெண்டிரின் இயல்புக்கேற்ப, இலை மறை காய் மறையாக அவளது காதல் வளர்ந்தாலும் துறவறம் சார்ந்த சிந்தனைகளும் மாதவியினால் ஊட்டப்படுகிறது.
கூத்தின் இலக்கணத்தை அறிந்த கணிகையராக அவள் வளர்ந்தாலும் மனதில் எழும் காதலும், தனது தாயின் நிலைமை அறிந்து வருத்தமும் அவளை ஒருசேர அலைக்கழிக்கிறது. இறுதியில் துறவறம் ஏற்று உலக தாய்மையின் உருவாக மாறினாலும், அவளது கலை ஊக்கமும் பதின்ம ஏக்கமும் அவளது நிறைவேறாத ஆசையாகவே உள்ளாழ்ந்துவிட்டது.
அக்கால இயல்புக்கு இது ஏற்றதன்று. கணிகையரான மணிமேகலையை துறவு வழியில் செலுத்தியதால் ஊரார் மாதவியைத் தூற்றுகின்றனர். மாதவியின் நடன மேம்பாடுகளை ஊரார் எடுத்துரைக்கும்போது,
பொன்னேர் அனையாய் புகுந்தது கேளாய்
உன்னோடு இவ்வூர் உற்றதொன்று உண்டுகொல்
வேத்தியல் பொதுவியல் என்று இருதிறத்துக்
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
- பெற்றவளான மாதவி தனது புதல்வியை இப்படி மாற்று வழியில் செலுத்துகிறாளே என அங்கலாய்க்கிறார்கள்.
வேத்தியல் - அரசர்க்கு ஆடும் கூத்து பொதுவியல் - எல்லார்க்கும் ஒப்ப ஆடும் கூத்து
தூக்கு - தாளங்களின் வழியே வரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குகள்
துணிவு - தாள அறுதி.
மற்றொரு இடத்தில் மலர்களைப் பறிக்கச் செல்லும்போது மணிமேகலை பேடி ஒருத்தியின் நடனத்தைப் பார்த்து மெய்மறக்கிறாள். மன்மதனின் ஆட்டம் இப்படித்தான் இருக்குமோ என சிந்தை இழக்கிறாள்
இகந்த வட்டுடை எழுத்துவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறூகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்து பேடு காண்கு நரும்
அந்தகாலத்தில் ஆடுவதற்கு அரங்கங்கள் இருந்தன. அங்கு பெண்கள் அவிநயம், கூத்து போன்றவற்றைக் கற்று கைத்தலங் காட்டல் எனும் வித்தையை பொதுவியலுக்கு ஆடிக்காட்டுவர்
அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டனை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கியல் மகளிர்
அதே போல, உதயகுமரனைப் பார்க்கும்போது, நடன காணிகையராக எண்ணி ஆசிரியர் மணிமேகலைப் பற்றி கீழ்க்கண்டவாறு உரைக்கிறார்
ஆடவர் காண நல்லரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
ஆடவர் காண்பதற்காகவே அரங்கம் ஏறுவதும், அழகோடு ஆடலும் பாடலும் காட்டுவதால் தகுந்த ஆடவரை தன்வசப்படுத்தும் வித்தையும் கணிகையரின் வேலையாக இருந்ததாக ஆசிரியர் தெரிவிக்கிறார். ஆனால், இதெல்லாம் மாதவியின் கதையோடு பொருந்திப்போனாலும், தனது தாயின் வாழ்வைப் பார்த்து வளரும் மணிமேகலைக்கு இவை அனைத்தும் எதிர்மறையான விளைவையே செலுத்துகின்றன. அவள் பொதுநல மங்கை போல நடனம், ஓவியம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டாலும், தத்துவ நோக்கிலும், உலகியல் நோக்கிலும் பெரும் ஈர நெஞ்சுக்காரியாகவும், துறவு மூலம் விடுதலை அடைய நினைக்கும் பாவையாகவும் இருக்கிறாள்.
ஆடும் கூத்தர் அணியே போல
வேற்றோர் அணியொடு வந்தீரோ
கூத்தியல் மடந்தையர்
நாடக மகளிர்க்கு நன்களம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரைனூல் கிடக்கையும்
ஒருதனி ஓங்கிய திருமணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நன்னலம் கவினி
அக்காலத்தில் கூத்தின் இயல்போடு ஓவியத்தின் இலக்கணத்தையும் கணிகையர் அறிந்திருந்தனர் என்பது மணிமேகலை காட்டும் உட்கதை. கூத்தின் இலக்கணத்தைக் கூறும் பரதம் எனும் நூல் இதை விளக்கியுள்ளதாக சாத்தன் கூறுகிறார்
அரவு நர் அல்குல் அருந்தவ மடவர்
உரவோர்க்கு அளித்த ஒருபத்து ஒருவரும்
ஆயிரம் கண்ணேஎன் அவிநயம் வழூக்கொள
மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும்
ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த
ஓங்கிய சிறப்பின் ஒருநூற்று நால்வரும்
திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் தன்முன்
உருப்பசிமுனிந்த என்குலத்து ஒருத்தியும்
ஒன்று கடைனின்ற ஆறிரு பதின்மரித்
தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள்முதல்
என பலவிதமான கணிகையரை வகைப்படுத்துகிறது
நாடகக் கணிகையர் - 11
இந்திரன் கணிகையர் - 5
சயந்தன் கணிகையர் - 104
உருப்பசி முனிந்த கணிகை -1
மொத்தம் 121 வகையான கணிகையர் கலையை வளர்த்ததாக கூறுகிறது.
இந்த கட்டுரையை உன்னிப்பாகப் படிக்கும்போது சில முடிவுகளை நாம் எட்ட வேண்டியுள்ளது
1. கூத்து, நடனம், அவிநயம் போன்ற பலவகையான இலக்கணங்களை பண்டைய இலக்கியங்கள் அறுதியிட்டு வரையரை செய்திருக்கின்றன.
2. பேடி ஆடல், துடி ஆடல், ஆழிக் கூத்து, தாண்டவம் எனப் பலவகையான ஆட்டங்களை மணிமேகலை எடுத்துரைக்கிறது.
3. நடனப் பெண்கள் ஓவியத்தையும் அறிந்திருந்தார்கள் - மாதவி போல.
4. நடனத்தை பரதம் எனும் சொல்லால் குறிப்பிடுவதன் மூலம் பரதநாட்டியம் எனும் இன்றைய பிரயோகத்துக்கு ஒரு முன்வரைவு கிடைக்கிறது,
5. மரபு வழியாக 121 வகையான நடனக் கணிகையர் இருவிதமான கூத்தினை செய்துள்ளனர்.
முற்றிலும் அழிந்துவிட்ட இந்த மரபை இக்காலகட்டத்தில் மீட்க பலர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். தமிழரின் வாழ்வோடு இயைந்த இந்தக் கலையைக் கொண்டு நமது பண்டைய காலகட்டத்தை நாம் அசைபோட முடியும். அப்படி ஒரு அபூர்வமான திறப்பை இந்த நூல் நமக்கு அளிக்கிறது.
தலைப்பு - தமிழர் நடன வரலாறு
ஆசிரியர் - புலவர். முனைவர். சே. இரகுராமன் (அ.மா ஜெயின் கல்லூரி, சென்னை)
பதிப்பகம் - நந்தினி பதிப்பகம்.
விலை - ரூ 200/-
No comments:
Post a Comment