பாரதி கண்ட கல்வியும் பெண்மையும்
ஆசிரியர்: பேராசிரியர் டாக்டர் மு.கோவிந்தராசன்
பக்கங்கள்: 160
முத்துக்குமரன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை : 14
***
பாரதியின் படைப்புகளைக் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி நூல் இது என்றாலும், ஆசிரியரும் ஒரு கவிஞர் என்பதால் நடுநடுவே அவருடைய கவிதைகளோடும், தொல்காப்பியம், திருக்குறள் முதல் பற்பல நூல்களிலிருந்தும் தகுந்த மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியுள்ளார். கல்வி, பெண்மை ஆகிய இரண்டைப் பற்றி பாரதி பாடியுள்ள அனைத்தையும் அருமையாக தொகுத்து எழுதியுள்ளார். குழந்தைக் கல்வி, பெண் கல்வி, தேசியக் கல்வி ஆகியவற்றைப் பற்றி பாரதியின் கருத்து என்ன என்பதை இந்தப் புத்தகம் அழகாக விளக்கியுள்ளது. ’மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என ஆவேசப்பட்டு, ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என அறிவுறுத்தி, ‘காதல் செய்யும் மனைவியே சக்தி, கடவுள் நிலை அவளாலே எய்த வேண்டும்’ எனப் பெண்மையை போற்றும் பாரதியை ‘பெண்மை’ பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பாரதி பலவித தலைப்புகளில் நிறைய பாடியிருந்தாலும், இந்தப் புத்தகத்தில் கல்வி, பெண்மை ஆகிய இரண்டு கோணங்களை மட்டும் எடுத்து, தலா 80 பக்கங்களில் விவரித்திருப்பது மிக அருமை. கல்வியில் பாரதியின் தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்கச் செய்கிறது. பாரதியை விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது.
கல்வி
குடும்பத்திலுள்ள அனைவரும் கற்றவர்களாக இருப்பின் அக்குடும்பத்திலுள்ள குழந்தைகளும் கல்வியில் சிறந்தவர்களாக விளங்க முடியும் என்பதை உணர்ந்த பாரதியார், ’தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர்’ என்றார். அடுத்து, தேசியக் கல்வி. தேசம் என்பது குடிமக்கள் நிறைந்த தொகுதியாகும். அம்மக்களைச் சுற்றியே கல்வியெனும் செடி பரவி வளர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்க் கல்வியே இருக்க வேண்டும் - என்றும் கூறுகிறார்.
தொடக்கக் கல்வியில் / ஆரம்பக் கல்வியில் நாட்டம் கொண்டிருந்த தேசியக்கவி, ‘உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் ஸ்தாபனம் செய்யுங்கள்’ என்றிருக்கிறார். கல்வி இல்லாத ஊரை தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று பொருமுகிறார், ஆவேசப்படுகிறார்.
வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்களெங்கும் பலபல பள்ளி. (வெள்ளைத் தாமரை).
இந்தப் பள்ளிகளை யார் / எப்படி கட்டுவது? அதற்குண்டான தொகையை யார் கொடுப்பது? அரசா? தனியாரா? என்பதற்கெல்லாமும் பாரதியாரே பதிலும் தருகிறார்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
மதுரந்தே மொழி மாதர்களெல்லாம்
வாணி பூசைக்குரியன பேசீர்
எதுவும் நல்கியங் கெவ்வகையானும்
இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர் (வெள்ளைத் தாமரை)
குழந்தைகளிடையே படிப்பு, பாட்டு விளையாட்டு என்பன ஒரு நியதியாக இருத்தல் வேண்டும் என்கிறார். குழந்தைகள் கூடி வாழ்வதின் வாயிலாக ஒற்றுமையுணர்வையும், மற்றவர்களிடத்து அன்பையும் வளர்த்துக் கொள்ள இவை உதவி புரியும் என்பதனை பாரதி உணர்ந்திருந்தார்.
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா (பாப்பா பாட்டு)
பள்ளிகளில் வழக்கமாக கற்றுக் கொடுக்கும் பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்றுத் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அது இல்லையென்றால், கணக்கற்ற ஆண்டுகளை பள்ளியில் செலவழிப்பது வீணே என்றும் சாடுகிறார்.
வயிற்றிற்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் (முரசு)
நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கூடிவாழ, சரி நிகர் சமானமாக வாழ, நாட்டிற்குத் தேவை செல்வம் மட்டுமன்று; செழித்து வளரும் கல்வியும் நிறைந்திடல் வேண்டும் என்னும் பாரதியார்,
வாழி கல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர்ச
மானமாக வாழ்வமே (விடுதலை)
என்று பாடுகிறார்.
கல்வி கற்றலுக்கும் பக்திக்கும் தொடர்பு உண்டு என்கிறார் பாரதியார். பக்தியின் உதவியால் மனம் ஒருமுகப்படுத்தப்படுகிறது. அதன் பயனாய் அறிவினைப் பெரிதும் சீரிய முறையில் நேரிய வழியில் அடையமுடிகிறது. கவனம் பல வழிகளில் சிதறுகின்ற பொழுது கற்பது எவ்வாறு முடியும்? என்று கேட்கிறார். அப்படி கற்றபிறகு, கற்றவர்கள் தவறே செய்தல் கூடாது; பழிபாவங்களை கண்டு திருந்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான், ஐயோவென்று போவான் (புதிய கோணங்கி)
இப்படியாக கல்வியின் அவசியத்தை பல்வேறு பாடல்கள் மூலம் கூறிய பாரதி, அடுத்து பெண்மையை எப்படி புகழ்ந்து பாடியுள்ளார் என்று பார்க்கலாம்.
பெண்மை
இளவயது திருமணம், பெண்கள் விடுதலை, சொத்துரிமை, மறுமணம் புரிதல், உயர்தரக் கல்வி அளித்தல், அலுவலில் ஈடுபட உரிமை - இன்னும் பல தலைப்புகளில் பெண்களுக்காக பாரதியார் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவயதுத் திருமணத்தை எதிர்க்கும் இவர், ’இளைஞர்களே! இத்தகைய பால்ய மணத்தை செய்யாதீர்கள்’ என வேண்டுகோள் விடுக்கிறார்.
பெண்கள் தங்கள் மனதிற்கு ஒவ்வாத ஆடவனை மணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தல் கூடாது. இப்படி வற்புறுத்தி நடத்தி வைக்கப்படும் மணவாழ்வு தானாக பழுக்காமல் தடிகொண்டடித்துப் பழுக்க வைத்த பழமாய் விளங்குமே தவிர, இனித்திட வழியில்லை, அதனால் - ‘வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்’ (பெண்கள் விடுதலைக் கும்மி) என்று பாடுகிறார்.
மணம் செய்துகொண்ட பிறகும் கணவனைப் பிடிக்கவில்லையெனில், விலகும் உரிமையை பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை,
மாட்டை யடித்து வசக்கித் தொழிவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி (பெண்கள் விடுதலைக் கும்மி)
என்று கூறுகிறார்.
ஆணும் பெண்ணும் நிகரெனச் சொல்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம் (புதுமைப் பெண்)
என்று பெண் விடுதலைப் பற்றி பாடும் இவர், பெண்களுக்கு விடுதலை கிடைக்குமாயின் பூமி அறிவில் ஓங்கித் தழைத்துக் குலுங்கும் என்கிறார்.
பெண்களின் அழகை வர்ணிப்பதில் மற்ற புலவர்களுக்கும், பாரதிக்கும் நிறைய வேறுபாடுகளுண்டு என்கிறார் ஆசிரியர். மற்றவர்களின் வர்ணனைகளில் காமவுணர்வு இருக்கும். பாரதியின் பெண்களைப் பற்றிய பாடல்களில் தெய்வீகவுணர்வு மேலோங்கியிருக்கும் எனக் கூறுகிறார். இதற்கான அருமையான உதாரணம் இதோ:
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெரு நிலவு போன்ற வொளிமுகமும்
புன்னகையின் புது நிலவும் போற்றவருந்தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்! (அழகுத் தெய்வம்)
பெண்கள் பாடல்கள் என்று கூறிவிட்டு, கண்ணம்மாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா?
அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப் பொன்னொத்த நின்மேனியும்... (கண்ணம்மாவின் காதல்)
மற்றும்
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ -
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வாகைக் கருமை கொல்லோ?
என்று துவங்கி கண்ணம்மாவைப் பற்றி மிக அருமையாக பாடுகிறார்.
கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
என்ற அடிகளில் ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்று கூறும் பாரதிக்கு முன்னர் யாரும் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியதில்லை. அதுவும் பெண்கள் கற்பு நெறியினின்று பிறழ்வதற்கு ஆண்களே பொறுப்பு என அடித்துக் கூறுகின்றார். ஒரு ஆண் மகன் தவறு செய்கின்றான் என்றால் அங்கு ஒரு பெண்ணும் உடந்தையாய் இருந்து தவறு செய்கின்றாள் என்பதை ‘வீட்டைச் சுட்டால் நலமான கூரையுந்தான் எரிந்திடாதோ’ எனக் கூறி பெண்ணிற்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
இன்னும் குடும்பப் பொறுப்பு, இணைந்த வாழ்க்கை, பழங்கால நிலை, தாய்மை என பற்பல தலைப்புகளில் பாரதியின் பாடல்களைப் படிக்கப் படிக்க தெவிட்டாத இன்பம்.
உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
எனக்கூறி
பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று கூத்திடுவோடமா!
என்று பெருமை சேர்ப்பதுபோல் பாடிய பாரதி போல் நாமும் பெண்மையைப் பேணி, போற்றி, அவர்வழி நடப்போமாக.
***
நல்ல அலசல்... நன்றி....
ReplyDeleteஅடடே! பாரதி’ன்னு சொன்னதும் ஸ்கூல் பையன் வந்துட்டாரே! :)))
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்கூல் பையன்.