ஆம்னிபஸ்சில் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை எனும் அன்பர்களுக்கு இந்த நூல் அறிமுகத்தை சமர்ப்பிக்கிறேன்.
சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை
எல்லாம் பேசி தீர்க்கலாம் (வா...)
(பாடல்: காற்றைக் கொஞ்சம் - படம்: நீதானே என் பொன்வசந்தம்)
இப்படிப்பட்ட ஆழமான அர்த்தங்கள் கொண்ட ஒரு காதலனின் மனவோட்டத்தை இப்படி மிக அழகான வரிகள் கொண்டு சமைக்க நா.முத்துக்குமாரால் மட்டுமே முடியும் என்று தீவிரமாக நம்புபவன் நான். இந்த இரண்டு வரிகளிலும் நேரடிப் பொருள் இல்லை. மனசில் அசைபோட்டு ரசிக்கத்தக்க வரிகள்.
நா.முத்துக்குமாரின் “கண்பேசும் வார்த்தைகள்” புத்தகத்தை உருகி உருகி வாசித்ததை முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகம் வாசித்த பின் வந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் போட்ட புத்தகம் ”அ’னா ஆவன்னா”. வாங்கிப் போட்ட? ஆம்....! வாங்கிப் அலமாரியில் போட்டு நீண்ட நாள் வாசிக்காமல் வைத்ததொரு புத்தகம்.
நாற்பத்து நான்கு கவிதைகள் கொண்டு நிரப்பப்பட்டதொரு தொண்ணூற்று நான்கு பக்கப் புத்தகம்.
நல்ல கவிதை எது என்று யாராலும் "இதுதான்" என்று சுட்டிக் காட்டிவிட முடியாது. கவிதைக்கான இலக்கணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வகுத்துக் கொள்கிறார்கள்.
கல் நெஞ்சுக்காரி நீ
ஆதலால்தான்
உளிகொண்டு
செதுக்குகிறேன்
என் காதலை
என்கிறவகையிலான கவிதைகளை வாசித்தால், “ங்ங்ங்ஙே...” என்று நான் விழிக்கலாம். ஆனால் சிலருக்கு இது ஆஹாகாரம் போட்டு ரசிக்கத்தக்க கவிதையாய் இருக்கலாம்.
தேவதேவன் கவிதைகள் அத்தனையையும் நான் வாசித்தவனில்லை, எனினும் சொல்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் கொண்டாடும் தேவதேவனின் கவிதைகள் ஒன்று கூட என்னைக் கவர்ந்தது இல்லை. காரணம், நான் கவிதைகளுக்கு வரைந்து வைத்துள்ள இலக்கண எல்லைகளுக்குள் அவை அடங்காததே (இன்னமும் இரண்டொரு நாள்களில் விஷ்ணுபுரம் விருது வாங்கவிருக்கும் கவிஞரின் கவிதைகள் குறித்து நான் இப்படிக் குறிப்பிடுதல் சரியில்லைதான், எனினும் இது என் கருத்து ஆயிற்றே!).
இதோ இந்தக் கவிதையை நான் வாசித்த கவிதைகளுள் சிறந்த ஒன்று என்பேன்.
ஈரமற்ற இரும்பு
இதை எழுதியவர் நா.முத்துக்குமார் அல்லர். பின்னே? பின்னே சொல்கிறேனே.
நா.முத்துக்குமாரின் "கண்பேசும் வார்த்தைகள்" புத்தகம் படித்த பரவசத்தில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால், ஏதோ ஓர் ஆயாசமே மிஞ்சியது. பெரும்பாலும் வாழ்க்கையின் "முரண்" பற்றிப் பேசும் கவிதைகள். நெகடிவிடி பேசும் தொனியிலான சுவை என்று தோன்றியது எனக்கு! நான்கு கவிதைகளைத் தாண்டிப் போக விழையவில்லை மனம். புத்தகத்தை மடித்து அலமாரியில் கிடத்தியவன்தான், சமீபத்தில்தான் மீண்டும் தூசி தட்டி எடுத்து வாசிக்கத் துவங்கினேன்.
இந்தமுறை “கண்பேசும் வார்த்தைகளின்” எதிர்பார்ப்பு மனதில் இல்லை என்பதால் கவிதைகளை ரசித்து வாசிக்க முடிந்தது. சில கவிதைகள் நம் புருவம் உயர்த்த வைக்கின்றன. பல கவிதைகளில் இடையிடையே வரும் சில வரிகள் "அட" சொல்ல வைக்கின்றன.
முகம் பார்க்கும் கண்ணாடிகள் பிம்பங்களைச் சேமித்து வைத்தால் என்னாகும் என்று நம்மை யோசிக்க வைக்கும் ”பிரபஞ்ச ரகசியம்” கவிதை பிரமிக்க வைக்கிறது. ஓர் அமானுஷ்ய அர்த்தத்தைப் பொதித்து வைத்த கவிதையது.
”கல்யாண மண்டபத்தில் வரவேற்கும் பொம்மைகள்’ கவிதையில்....
....வேண்டாம்.... அந்தக் கவிதையை நீங்களே வாசித்துச் சிலாகிக்க வேண்டும். நல்ல கவிதை.
காதல் காலத்திற்கும் கல்யாண வாழ்க்கைக்குமான வித்தியாசம் பகரும் “செவிலித் தாய்க்குத் தலைவி சொன்னது” துறை சார்ந்த அகத்திணைக் கவிதை. மரபுக் கவிதையா அது என்று விற்பன்னர்கள்தான் சொல்லவேணும்.
திருமணத்திற்குப் பிறகு அம்மா வீடு வரும் அக்கா பற்றிப் பேசும் “தொலைந்து போனவள்” கவிதை எல்லா பெண் கவிதாயினிகளும் இதுவரை எழுதியிருக்கலாம்.... ஆனால் நா.முத்துக்குமார் அதை எழுதும் தொனியில், சுவையில் அது கவிதையாக இல்லாமல், நேரில் சந்திக்கும் வாழ்க்கையாக இருக்கிறது.
மயிலிறகுகள் தமிழ், ஆங்கிலம், கணக்கு என்று ”பாட வாரியாக” புத்தகங்களுக்குள் குட்டி போடும் கதை சொல்லும் ”ஆதிப்பிரசவம்” கவிதை நா.முத்துக்குமாரின் அக்மார்க்.
சில கவிதைகள் எனக்கு விளங்கவில்லை. என் வரையறைக்குள் அடங்காதவையாக அவை இருக்கலாம்.
ஆக.... இவர்களுக்குப் பிடிக்கும் அவர்களுக்குப் பிடிக்கும் என்றல்லாது இந்தப் புத்தகத்தின் நாற்பத்து நான்கு கவிதைகளில் எல்லோருக்கும் ”ஓஹோ” சொல்லத்தக்க சில கவிதைகள் நிச்சயம் கிடைக்கும். அப்படிக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து நிரப்பியிருப்பதுதான் புத்தகத்தின் வெற்றி.
குறை என்று பார்த்தால்..... புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லைதான். அதற்காக அச்சு அசல் உரைநடையையே கவிதையாகத் தருதல் சரிதானா என்ற கேள்வியை ஒரு சில கவிதைகள் வாசிக்கும்போது கேட்காமல் இருக்க முடியவில்லை.
தெருமுனைப் பெட்டிக் கடையில் நண்பர்களுடன் அரட்டையடிக்கையில் “பீடி குடிக்கும் பசங்களிடம் என்னடா ஸ்நேகிதம்?” என வாசலில் நிற்க வைத்து விசாரிப்பார்கள். எட்டிப் பார்த்து சிரிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் பார்வையில் நுரையீரல் பைகள் எங்கும் நிக்கோடின் மிதக்கும். குழந்தைப் பருவம் உன்னதமானது, கடவுளும் குழந்தையும் ஒன்று என்கிறார்கள். கடவுளின் குழந்தைப் பருவ உலகத்தின் சாவியும் கடவுளிடம் இல்லை. \அவரது பெற்றோர்களிடமே இருக்கிறது என்பதை மட்டும் யாரும் சொல்வதில்லை.
என்பதனை மடக்கி மடக்கி எழுத அது கவிதையாகிறது. சாரி சார்!
அ’னா ஆவன்னா - நா.முத்துக்குமார்
உயிர்மை பதிப்பகம்.
கவிதைகள். 94 பக்கங்கள். ரூ.60/-
இணையத்தில் வாங்க: நியூ புக் லேண்ட்ஸ்
(எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும் வாங்கலாம்)
அந்த ஈரமற்ற இரும்பை எழுதியவர் விமலாதித்த மாமல்லன்.
No comments:
Post a Comment