சுஜாதாவின் குறுநாவல்கள்
சுஜாதாவின் பல புத்தகங்களை மூன்று வருடங்கள் முன்பு தொடர்ச்சியாக வாசித்தேன். அதற்கு அப்புறம் சில பல வேலைகள் இருந்ததால் புத்தகம் வாசிக்கும் பழக்கமே நின்று போய், இப்போது ஆம்னிபஸ்க்காக தொடர்ச்சியாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் மீண்டும் தொற்றிக் கொண்டுவிட்டது. ஏனோ சுஜாதாவின் புத்தகங்களை மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனத்தின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தாலும், புதிய புத்தகங்களை படிக்க முடியாமல் போய் விடுமே என்ற பயம் இருந்ததால் இதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தேன். அதைப் போக்கும் பொருட்டுதான் சென்ற இரண்டு வாரங்களாக சுஜாதாவின் இரண்டு (இலக்கிய) புத்தகங்களை அறிமுகம் செய்தேன். அதைத் தொடர்ந்து இந்த வாரம் அவரின் குறுநாவல்கள் (கால வரிசைப்படி தொகுக்கப்பட்டது)
இந்த தொகுதியில் மொத்தம் பத்து குறுநாவல்கள். இந்தப் பத்து கதைகளில் மூன்று-நான்கு ஏற்கனவே படித்து விட்டேன். இந்தப் பத்து கதைகளையும் ஏற்கனவே வாசித்து விட்டேன் என வைத்துக் கொண்டு, இந்த மூன்று வருடங்களில் எவ்வளவு தூரம் சுஜாதாவின் பாதிப்பு என்னிடம் மீதம் இருக்கிறது என அறியவே இந்த முயற்சி.
முதலில் சில விஷயங்கள், இந்தக் குறுநாவல்களில் நான்கைந்து கதைகளில் பெரிய அளவில் கதைக் கரு கிடையாது, இவற்றைச்சிறுகதைகளாகவும் எழுதியிருக்கலாம். அதுவும் கண்டிப்பாக வெற்றி பெற்று இருக்கும். இந்தப் பத்துக் குறுநாவல்களில் எட்டுக் கதைகளில் கொலையோ, தற்கொலையோ நடைபெறுகிறது. இரண்டே நாவல்களில் மட்டும்தான் சாதாரண சம்பவங்களைக் கொண்டு கதை உண்மை புனையப்பட்டுள்ளது.
மேலே சொன்ன விஷயங்கள் என்னுடைய பார்வை மட்டுமே, இதை எதிர்க்கவும் கண்டிப்பாக எல்லோருக்கும் உரிமை உண்டு. இந்த நாவல்களின் கதையைவிட அதைப் புரியும்படி எழுதிய விதம்தான் இந்த நாவல்களின் பலம் என நான் நினைக்கிறேன். பல நாவல்களின் கதை எழுதிய காலக்கட்டத்தை மனதில் இருத்தி வாசித்தோம். ஆனால், கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்பு இந்த அளவுக்கு புரட்சிகரமான நாவல் என்று நினைக்க வேண்டாம், அதை எழுதிய விதம்/கையாண்ட விதம் என்னை வியக்க வைக்கிறது. முப்பது வருடங்கள் கழித்தும் நாவலில் இருக்கும் புத்துணர்ச்சி, இன்றைய எழுத்தாளர்கள் பல பேரிடம் இருப்பது இல்லை.
இந்த எட்டு நாவல்களில் முக்கியமாக மனித மனதை பல்வேறு கோணங்களிலிருந்து பதிவு செய்கிறார், முக்கியமாக மனித மனத்தின் சிதைவு. ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் (schizophrenia, Bipolarity Disorder) போன்ற மனநோயை விரிவாக இந்த நாவல்களில் காணலாம்.
அதுவும் “விளிம்பு” என்ற குறுநாவலை மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த கதையின் நாயகன் மனச் சிதைவுக்கு ஆளாகிறான், அதைத் தொடர்ந்து அவனுக்குள் நடைபெறும் போராட்டமே இந்தக் குறுநாவலை இழுத்துச் செல்கிறது, கடைசியில் ஒரு சிறுகதையின் திருப்பத்துடன் முடிகிறது. ஆனால் நாவலை வாசித்துவிட்டு கொஞ்சம் பொறுமையாக, இணையத்தை திறந்து அந்த நோயை பற்றி வாசித்தோமானால் தான் இந்தக் குறுநாவலின் மொத்த பரிணாமமும் புரியும். இப்போது கையில் இணையம் இருப்பதால் உடனே எடுத்து எல்லாவற்றையும் படித்து முடித்துவிட முடிகிறது. ஆனால் கதை எழுதப்பட்ட காலங்களில் இதை நிறுத்தி யோசித்து பார்க்கும்போது ஒரு பிரமிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
“அப்ஸரா” என்ற கதையும் முன் சொன்ன கதை மாதிரியேதான், ஆனால் வேறு ஒரு மனநோயை பற்றி பேசுகிறது, அதை புரிந்து கொள்ளாமல் அறியாமையில் இருக்கும் போலீசைச் சாடுகிறது. இந்த இரு நாவல்களில் வரும் கதைநாயகர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்பதையும் மிகக் கூர்மையாக ஆராய்கிறார். அது ஒரு கண்ணாடிப் போல் அந்த நாயகர்களை பிரதிபலித்துக் காட்டுகிறது.
“6961” என்ற நாவல், மேல்தட்டு வர்கத்தின் possessiveness பற்றி பேசுகிறது. தன் மனைவி மேல் மிகுந்த வெறி கொண்ட ஒருவன், அவனுடைய கார் டிரைவர்க்கும் மனைவிக்கும் தொடர்பு என்று நினைத்து டிரைவரைக் கொன்று விடுகிறான். ஆனால் அதை பற்றிய குற்ற உணர்ச்சி கொஞ்சம்கூட இல்லாமல் இருக்கிறான். அவன் மனைவி அவனை விட்டு விலகிப் போகிறாள். இந்த நாயகி ஆதவன் கதாபாத்திரம் போல், தன்னுடைய எண்ணங்களை பதிவு செய்கிறாள், ஆனால் அது நாவலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்கிறது. கடைசியில் மனைவியே கணவனைக் கொன்று விடுகிறாள்.
“சிவந்த கைகள்”, “கலைந்த பொய்கள்” இந்த இரண்டையும் ஒரு தொடர்ச்சியான நாவல் என்று சொல்லலாம். இந்த கதையின் கரு என்னைப் பெரிதாக கவரவில்லை என்றாலும், சந்தர்ப்பவசத்தில் குற்றம் செய்யும் ஒருவனின் மனநிலையை நாவல் முழுவதும் காணலாம். முதலில் பொய் சொல்லி வேலையில் சேரும் விக்ரம், அதைக் கண்டுபிடித்துவிட்ட ஈஸ்வரனை கொல்வதோடு “சிவந்த கைகள்” முடிகிறது. அடுத்த “கலைந்த பொய்களில்” அதை ஈஸ்வரனின் மகள் எப்படி கண்டு பிடிக்கிறாள் என்பது வருகிறது.
6961, மற்றும் மேற்சொன்ன இரண்டு நாவல்கள் மேல்தட்டு பெண்களின் மனநிலை, அவர்களின் நடைஉடை பாவனை பற்றி விரிவாக பேசுகின்றன. இந்த ஒன்பது நாவல்களில் பெண்கள் அறிந்தே மற்ற ஆண்களுடன் உறங்குகிறார்கள். இந்தக் கதைகளை அந்தக் கால பெண்கள் (இந்த காலத்திலும்தான்) எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று அறிய ஆவல் ஏற்படுகிறது. அதிலும் சில இடங்களில் சுஜாதா பயன்படுத்தியிருக்கும் சொற்பிரயோகம் வியக்க வைக்கிறது. உதாரணமாக, 6961இல் விமலா- ராஜேஷ் மணம் செய்துக் கொண்டு ஹனிமூன் செல்கிறார்கள். சுஜாதா வார்த்தைகளில் - “ஹோட்டலுக்கு சென்றார்கள். உடைகளை மாற்றிக் கொண்டார்கள். கேட்டான் மறுத்தாள். லெமன் 1-25 ஜூஸ் குடித்தார்கள்”.
“விழுந்த நடசத்திரம்” சினிமா எடுத்து நாசமாய் போன ஒரு மத்திய தட்டு குடும்பத்தை பற்றி பேசுகிறது, சினிமாவில் நிறைய காலம் இருந்த சுஜாதாவின் அனுபவத்தை இதில் காணலாம். “ரோஜா” கதை கொஞ்சம் வித்தியாசமானது. எங்கோ ஒரு தொழிலாளர் போராட்டத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், தொழிற்சங்க தலைவர் இறந்து விட்டனர் என பல இடங்களில் நாம் படித்து இருப்போம். அவர்களின் வாழ்வை கொஞ்சம் பின்னோக்கி இழுத்து சென்று இதில் காண்பிக்கிறார்.
இந்த நாவல்கள் காலத்தை கடந்து நிற்கவில்லை என்று இயல்பாக புறக்கணித்து விட முடியும் (சில பேர் அமைத்த விதிமுறைகள்படி). ஆனால் இந்த நாவல்களில் முக்கியமாக நகர் வாழ்வின் நெருக்கடிகள், மனித மனதின் நீங்கா ஆசைகள், அவனின் அசிங்கங்கள் (அப்படி என்று ஒன்று இருக்கா என்ன?) இவை மிக நுண்ணியமாக எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்துக்கு மனுஷ்யபுத்திரன் எழுதிய பதிப்புரையில் இருந்து கடைசி வரிகளை மேற்கோள் காட்டி இதை முடிப்பது பொருத்தமாக இருக்கும் - “இந்த குறுநாவல்கள் அதன் கதையம்சத்தை தாண்டி அதன் வெளிப்பாட்டு முறையின் அழகியல் சார்ந்த பரவசத்திற்காகவும் அவதானிப்பின் நுட்பத்திற்காகவும் என்றென்றும் வாசகனை ஈர்க்கக் கூடியவை”
No comments:
Post a Comment