ரமணி சந்திரனை தொடர்ந்து புறக்கணிக்கும் ஆம்னிபஸ் தளத்தை நாங்களும் புறக்கணிப்போம் என்று மிரட்டல் விடுத்த ரமணி சந்திரன் கொலைப்படை மாதருக்காய் இந்தமுறை ரமணி சந்திரன் நாவலுக்கு விமர்சனம்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் மயிலை சாய்பாபா கோயிலுக்குக் குடும்பத்துடன் போயிருந்தேன். கோயிலின் தியான மண்டபத்தில் நன்கு பரிச்சயமான முகமாக ஒரு அம்மணி அமர்ந்திருந்தார்.
அம்மாவிடம் கேட்டேன், “அவங்களை எங்கயோ பார்த்தாப்போல இருக்குல்ல?”
“டேய், ரமணி சந்திரன்’டா அவங்க. பிரபல நாவலாசிரியர்”
நாங்கள் மாதவரத்தில் இருந்தபோது பொன்மணி அக்கா ரமணி சந்திரன் நாவல், தொடர்கதை என்று எங்கே வந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் படிப்பார். நான் ரமணி சந்திரன் கதை ஒன்றையும் அதுவரை வாசித்ததில்லை. ஓகே, யாரோ ஒரு பெண் எழுத்தாளனி என்று நினைத்துக் கொண்டு, “இருக்கட்டும் இருக்கட்டும்”, என்று அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.
சென்ற வருடம் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்த போது நம் புத்தகத்தைப் பதிப்பித்த பதிப்பாளரின் ஸ்டால்களுக்குப் போயிருந்தேன். அவர்கள் ஸ்டால்களை ரமணி சந்திரன் புத்தகங்கள்தான் முழுக்க முழுக்க அலங்கரித்துக் கொண்டிருந்தன. நம்ம பதிப்பாளரின் தாய்ப் பதிப்பகமான “அருணோதயம்” ரமணி சந்திரன் எழுதத் தொடங்கிய காலந்தொட்டு அவர் புத்தகங்கள் ஒன்று விடாமல் பதிப்பிப்பவர்கள். கொஞ்சம் மாற்றிச் சொன்னால், ரமணி சந்திரன் “அருணோதயம்” தவிர்த்து வேறு பதிப்பகங்களுக்கு எழுதுவதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள் இதுவரை வந்துள்ளன. அவற்றில் பாதிக்குப் பாதி இருபது பதிப்புகளைக் கண்டவை.
தொடர்ச்சியாக ஒரே பதிப்பகம். நூற்று சொச்ச நாவல்கள், அவற்றில் பாதிக்கும் மேல் இருபது பதிப்பிற்கு மேலாக என்பதை ஒரு பெரும் சாதனையாகவே அன்று என்னிடம் சொன்னார் சோலையப்பன் சார்.
இணையத்தில் ரமணி சந்திரன் சீண்டல்களை அவ்வப்போது பார்க்கலாம். பாலு மகேந்திரா படம் பார்ப்பவர்கள் மெகா சீரியல்களை அடிக்கும் கிண்டலுக்கு ஒப்பாக, இலக்கிய விவாதங்களுக்கு இடையே ஏதேனும் உஷ்ண தருணத்தில் யாரேனும் சொல்வார், “போங்கய்யா! உங்க இலக்கியமும் ஆச்சு நீங்களும் ஆச்சு. நான் ரமணி சந்திரனைப் படிக்கப் போறேன்". இப்படிப் படிக்கும்போதெல்லாம் ரமணி சந்திரன் நாவல் ஒன்றையேனும் படித்தே தீரவேண்டும் என்று தோன்றும்.
இப்படிப்பட்ட விவாதம் ஒன்று அன்று நினைவுக்கு வர, பப்ளிஷரிடம் “ரமணி சந்திரன் எழுதின பெஸ்ட் புக் மூணு குடுங்க சார்”, என்று கேட்டேன்.
”அவங்க புக் எல்லாமே எங்களுக்கு ஸ்பெஷல் அண்ட் பெஸ்ட்’தான் சார்”, என்று சிரித்தவர், “ஏம்மா! சார் கேக்கறார் பாரு. எது அவங்க பெஸ்ட் புக்கு? மூணு புக்கு எடுத்துத் தா”
மயங்குகிறாள் ஒரு மாது, கீதா, சாந்தினி மூன்று புத்தகங்களையும் எடுத்துக் கொள்ளச் சொன்னார் பப்ளிஷரின் மகள்.
கிட்டத்தட்ட ஒருவருட காலம் நம் அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்த “மயங்குகிறாள் ஒரு மாது” புத்தகத்தை இப்போதுதான் எடுத்தேன்.
முன்னுரை, என்னுரை, மதிப்புரை, பதவுரை எல்லாம் இல்லை. பாலகுமாரன் நாவல் கணக்காய் வாசக பாராட்டுரை ஒன்றுடன் தொடங்குகிறது நாவல். இலங்கையிலிருந்து ரமணி சந்திரனின் தீவிர வாசகர் ஒருவர் எழுதுகிறார்...
எப்படித்தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்களோ என்று ஒரே வியப்பு. இந்தியாவுக்கு வர முடிந்தால் உங்களைச் சந்திக்க முடியுமா? சந்தித்து கோடிக் கணக்கான நன்றிகள் சொல்ல வேண்டும். உங்களுடைய பேனாவுக்கும் கைக்கும் கோடி முத்தம் கொடுக்க வேண்டும். ப்ளீஸ் கட்டாயம் பதில் போடுங்கள். உங்களுடைய பதிலையாவது எழுதி என் ஆசையை நிறைவேற்றுங்கள்நான் நேரில் சந்தித்துவிட்டு, “ஓ அப்படியா?” என்று கடந்து சென்றுவிட்ட ஒரு எழுத்தாளரைச் சந்திக்க, அவர் பேனாவுக்கு முத்தம் தர இந்த வாசகர் என்ன ஒரு பெருவிருப்பத்துடன் இருக்கிறார் என்று எனக்கு வியப்பாகவும் அதே சமயம் அன்று கோயிலில் பார்த்தபோது ரமணி சந்திரனுக்கு ஒரு வணக்கமாவது சொல்லியிருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.
இந்த நாவல் பற்றி ஒரு வாசகரின் கண்ணீர் மல்கும் மற்றொரு விமர்சனத்தில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது.
இதை நான் எப்படி படித்தேன் என்று நன்றாக நினைவு இருக்கின்றது. கண்களில் நீர் வழிய வழிய தலையனை முழுவதையும் ஈரமாக்கி, கண்களை கண்ணீர் மறைக்க எனக்கே நடந்தது போல நினைத்து அவ்வளவு சோகமாக படித்தேன்.
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பாலகுமாரன் நாவல்களை புரட்டும்போது இப்படி ஒவ்வொரு நாவலுக்கு முன்னும் நாலு கடிதம் நம்மை வரவேற்பதை வாசித்திருக்கிறேன்.
சரி, கதைக்கு வருவோம்.
உல்லாசம், உற்சாகம், இனிமை, மகிழ்ச்சி, குதூகலம், சந்தோஷம், கலகலப்பு இன்னும் இப்படி என்ன வார்த்தையெல்லாம் உங்களுக்குத் தெரியுமோ அப்படிப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படியொரு வாழ்க்கை நம் கதைநாயகிக்கு. மூன்று அத்தியாயங்கள் “எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை” என்று செல்லும் கதையில் திடீரென்று வில்லன் எண்ட்ரி. கதைநாயகியை வில்லன் கடத்திக் கொண்டு சென்று சிலப்பல நாள்கள், வாரங்கள் அவளை ஓரிடத்தில் அடைத்து வைத்து, அவள் அனுமதி எதிர்பார்த்துக் காத்திருந்து, பின்னர் அனுமதியின்றியே அவளை அடைந்து, அவள் கர்ப்பவதியாகி, வீடு திரும்புகிறாள்.
அன்பான அப்பா, பாசமான அம்மா, பிறந்தநாள் முதல் தனக்கெனவே என்று நினைத்திருந்த நாயகன் என்று எல்லோராலும் கைவிடப்பட்டு, மீண்டும் தன்னை அடைந்தவனையே சந்திக்கச் செல்ல, மீண்டும் சிறை, குழந்தை, வில்லன் மனந்திருந்துதல், சுபம்.
ராஜேஷ்குமார், பிகேபி, பாலகுமாரன், கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், எஸ்.ரா., ஜெமோ என்று ஒருத்தரிடம் இன்னொருத்தரை அறிந்து நூல் பிடித்து வாசிக்கத் துவங்கி இப்போது இதெல்லாம் பெஸ்ட் ரைட்டிங், இதெல்லாம் ஆவாத கதை என்று கட்டம் கட்டும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இது சாதாரணக் கதையாகத் தெரிகிறது.
ஆனால் 1980’ல் எழுதப்பட்டு 2011 வரை இருபது பதிப்புகள் பார்த்து உலகளவில் தமிழர்களிடையே சக்கை போடு போடும் ஒரு புத்தகம் இது. இது மட்டுமல்ல நான் வாங்கிய மற்ற இரு புத்தகங்களும் கூட 1977’ல் எழுதப்பட்டு இதுவரை இருபது பதிப்புகள் கடந்தவை.
இப்படியொரு வாசகர்களா என்ற கேள்விக்கும் அந்தக் கண்ணீர்மல்கும் வாசகரே பதில் சொல்கிறார்...
இந்த கதைகளில் மாமியார் மருமகள் சண்டைகள் வருவதில்லை, வருமானத்தினை எண்ணி எண்ணி செலவு பண்ணும் வறுமை வருவதில்லை, நம்மை சுற்றிலும் நெருக்கும் சமுதாய பிரச்சனைகள் வருவதில்லை, வருவதெல்லாம் ஒரு அழகான கதாநாயகி, ஒரு பணக்கார கதாநாயகன், அவர்களின் கருத்து வேற்றுமைகள்/ஒற்றுமைகள், அவர்களை சுற்றி நிகழும் சில பல நிகழ்ச்சிகள்,குழந்தை பெற்ற பின் கல்யாணம் அல்லது கல்யாணம் செய்த பின் குழந்தை (இது எல்லாம் அரசியல்ல சகஜம்மப்பா), அன்பு, காதல், அப்புறம் ஒரு இன்ப வாழ்வு. எத்தனையோ பெண்களுக்கு இவைகளில் பல மறுக்கப் பட்டு இருக்கலாம், அவர்களின் உணர்ச்சிகளின் வடிகாலாக இந்த புத்தகங்களை படிப்பவர்களாக இருக்கலாம்.
வேறென்ன நான் சொல்ல?
பிகு: ஆம்னிபஸ் 365 முடிவதற்குள் சாந்தினியும், கீதாவும் படித்து விமர்சனம் பதியவேணும் :)
மயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்
அருணோதயம் பதிப்பகம், 5/3 கௌடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை -14. தொபே: 044- 28132791
232 பக்கங்கள் / விலை ரூ.100/-
இணையம் மூலம் புத்தகம் வாங்க: உடுமலை
நன்றாக விமர்சனம் செய்கிறீர்கள்... நானும் முன்பு கிரேஸிதான்.. இவர் மட்டுமல்ல, லட்சுமி, அனுராதா என இன்னும் பலர்.. எல்லாம் ராணிமுத்து மயத்தால் வந்த மயக்கம். பராவாயில்லை, வாசிப்புப்பழக்கத்திற்கு உரமிட்ட புத்தகங்கள் இவயெல்லாம்.. தொடர் வாசிப்பில் உள்ளோம் என்பதில் பெருமையே.
ReplyDeleteதத்துவார்த்த கருத்துகளோ, அறிவியல் கலப்புகளோ, ஆச்சர்யப்படத்தக்க தகவல்களோ எதுவும் இல்லாத கதை தான்.சொல்லப்போனால் அத்தனை கதைகளிலுமே ஒரே மாதிரியான கதைப்போக்குதான். ஆயினும் இத்தனை பெண்களை எப்படி கவர முடிந்தது என்று பார்த்தால், பெண்கள்,தங்கள் வாழ்வில் தவற விட்ட வாழ்வின் இனிமைகளை கண் முன்னே காட்டும் ஒரு கவித்துவமான கதையும், அருமருந்தான அவர்களின் எழுத்து நடையுமே. நெஞ்சில் நிற்கும் எழுத்தே சிறந்த எழுத்து...தெரியும்தானே? அப்படிப்பார்த்தால், நிச்சயமாய், நூற்றுக்கு நூறு சதம் ரமணி சந்திரன் அம்மாவின் எழுத்துகள் யாவுமே சிறந்த எழுத்துகளே..
ReplyDeleteஇது ஆண்களுக்குப் புரிவது கடினம் என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை!
- அனு
வாங்க விஜி! உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி
ReplyDeleteஅனுஜி,
ரமணி சந்திரன்’னு சொன்னதும் வந்துட்டீங்க. வாங்க வாங்க! ரொம்ப சந்தோஷம்.
//நெஞ்சில் நிற்கும் எழுத்தே சிறந்த எழுத்து...தெரியும்தானே? அப்படிப்பார்த்தால், நிச்சயமாய், நூற்றுக்கு நூறு சதம் ரமணி சந்திரன் அம்மாவின் எழுத்துகள் யாவுமே சிறந்த எழுத்துகளே..
இது ஆண்களுக்குப் புரிவது கடினம் என்பதில் எந்தவொரு ஆச்சர்யமும் இல்லை//
நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் ப்ளீஸ்.
மக்கள் சொன்ன தீர்ப்பே இருக்கும்போது நான் சொல்ல என்ன இருக்கு’ன்னுதானே நான் சொல்லியிருக்கேன் :))))