ஆம்னிபஸ் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் காதலர் தின வாழ்த்துகள்.
`அந்தக் கல்திண்ணையின் சூடும், கல்-மையும் கூட இப்போதும் உணரமுடிகிறது. என்னுடைய அண்ணன் மகளுடைய கல்யாணம் முடிந்து, ஒவ்வொருத்தருக்காகக் கணக்கு முடித்து ரூபாய் கொடுத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த உச்சிப் பகல் அது. தபால்காரர்கள் வருகிற நேரமும் அதுதானே. கல்யாண வீட்டுக்குத் தபால் கொண்டு வருகிற அவருடைய முகத்தில் கூட, கல்யாண வீட்டு அலுப்பும் சந்தோஷமும் இருக்கிற மாதிரித் தோன்றும். அவர்தான் `மனுஷா மனுஷா` பார்சலைக் கொடுத்தார். அதைச் சுற்றி முடிச்சுப் போட்டிருந்த டொயின் நூலின் தடிமன் இந்த வரியை எழுதும் விரல்களில் மீண்டும் தட்டுப்படுகிறது. மனம் எதை எதை எல்லாம், தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்துக் கொண்டு அல்லல்படுகிறது பாருங்கள்.`
- மனுஷா மனுஷா முன்னுரையில் வண்ணதாசன்
`அந்தக் கல்திண்ணையின் சூடும், கல்-மையும் கூட இப்போதும் உணரமுடிகிறது. என்னுடைய அண்ணன் மகளுடைய கல்யாணம் முடிந்து, ஒவ்வொருத்தருக்காகக் கணக்கு முடித்து ரூபாய் கொடுத்துவிட்டு நான் உட்கார்ந்திருந்த உச்சிப் பகல் அது. தபால்காரர்கள் வருகிற நேரமும் அதுதானே. கல்யாண வீட்டுக்குத் தபால் கொண்டு வருகிற அவருடைய முகத்தில் கூட, கல்யாண வீட்டு அலுப்பும் சந்தோஷமும் இருக்கிற மாதிரித் தோன்றும். அவர்தான் `மனுஷா மனுஷா` பார்சலைக் கொடுத்தார். அதைச் சுற்றி முடிச்சுப் போட்டிருந்த டொயின் நூலின் தடிமன் இந்த வரியை எழுதும் விரல்களில் மீண்டும் தட்டுப்படுகிறது. மனம் எதை எதை எல்லாம், தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்துக் கொண்டு அல்லல்படுகிறது பாருங்கள்.`
- மனுஷா மனுஷா முன்னுரையில் வண்ணதாசன்
இதுதான் வண்ணதாசன்! அவரது படைப்புகளின் தன்மையை தனது வாழ்விலிருந்தே பெற்றுக் கொண்ட கலைஞன். படைப்புகளுக்காக வேண்டி அவர் `படைப்பதில்லை`. பத்தே கதைகள் கொண்ட இத்தொகுப்பில் உள்ளவை அவர் சொல்வது போல தேவையோடும் தேவையில்லாமலும் ஞாபகம் வைத்து அல்லல்படுபவர்களின் கதைகள்தான். ஞாபகம் என்றொன்று இல்லையென்றால் வண்ணதாசன் எனும் கலைஞன் நமக்குக் கிடைக்காமலேயே போயிருப்பார். அதே சமயம் ஞாபகம் இருப்பதால் தான் தேவையில்லாதவற்றைக் கொண்டும் நாம் அல்லல்படவேண்டியுள்ளது. அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றின் பின்புலத்தையும் முன்னுரையில் வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
பெண் ரசிகையின் நட்பால் தனது குடும்பத்தில் உண்டான குழப்பங்களின் காலத்தில் எழுதப்பட்ட தொகுப்பு என்பதால், பல நினைவுகள் மிகவும் அந்தரங்கமானவை எனக்குறிப்பிடுகிறார். சாப்பிட்டேன், குளித்தேன், வேலைக்குப்போனேன் என்பதுபோல இக்கட்டான அக்காலகட்டத்தில் கதைகளும் எழுதியிருக்கிறார்.
எனக்கு மிகவும் பிடித்தது `சொல்லமுடிந்த கதை` எனும் கவிதையைச் சொல்லவேண்டும். குன்னம்குளம் டொமினிக் கதைசொல்லியின் நண்பர். ஒவ்வொரு நாளும் சாராயக்கடையிலிருந்து டொமினிக்கை (அப்படி மொட்டையாகக் கூப்பிட்டால் கோவம் வரும்!) அவரது விடுதியில் விடும் பொறுப்பு கதைசொல்லிக்கு. சின்னச் சின்ன கவிதை நொடிகளுக்காக வாழ்க்கையை வாழ்பவர்களில் டொமினிக் முதன்மையானவர். எதன் மீதும் அபிப்ராயம் சொல்லாமல், வாயப்பொத்திக்கொண்டு கவிதை எழுதும் கதைசொல்லியின் மீது டொமினிக்குக்கு அபிரிதமான கோபம். அதைவிட நிறையாத அன்பும் உண்டு. விடுதிக்குப் போவதற்கு முன் தரையில் விழுந்து கிடக்கும் முந்திரப்பழங்களை சேகரிப்பது அவர்கள் பழக்கம். உன் கவிதை நாசமாகப் போகட்டும் என வாழ்வின் கவிதைக் கீற்றைப் பிடிக்கத் தெரியாத கதைசொல்லியைத் திட்டுகிறார் டொமினிக். அப்பேச்சில் கலந்த முந்திரப்பழங்களின் நெடி போல அன்பும் சிநேகிதமும் பரவியதாகத் தெரிவிக்கிறார்.
இக்கதையை முழுவதுமாகச் சொல்லப்போவதில்லை. ஆனால் இது ஒரு அனுபவம். எண்ணற்ற தத்துவங்களையும் தரிசனங்களையும் சொல்லத் துடிக்கும் கதைசொல்லியின் வேகம் தெரிவதில்லை. மாறாக, வாழ்வே ஒரு தத்துவம். அதில் சிநேகமும் அன்பும், விடைபெற்றபின் எஞ்சும் வாசமும் சொல்பவை ஏராளம். ஏதோ ஒரு கட்டத்தில் நாம் சந்தித்த/சந்திக்கப்போகும் நண்பன் குன்னங்குளம் டொமினிக் போல் திவட்டாத அன்பை செலுத்துபவனாக இருந்துவிட்டால் போதும். டொமினிக் சொல்வது போல நாசமாய்போகட்டும் கவிதைகள்.
அவனுடைய நதி, அவளுடைய ஓடை - பெண்களைப் பற்றிய கதை. வண்ணதாசனின் பெரும்பாலான கதைகள் பெண்களைப் பற்றியதாக இருந்தாலும், இக்கதையில் வரும் ஈஸ்வரி போல ஆண்கள் மத்தியில் தனது மதிப்பென்ன என சதா சிந்திப்பவர்கள் கிடையாது. அவரவர்க்கு ஒரு உலகம். ஒரு அந்நிய ஆடவனாக இல்லாமல், பெண்களின் உலகை எட்டிப்பார்த்து எழுதியதில் இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தது இக்கதை. ஒரு பெண்ணுக்குள் பெரிய உலகம் என்றால், அவர்கள் கூடி அமர்ந்து பேசும்போது என்னென்னவெல்லாம் நடக்கும்? விழுந்து விழுந்து சிரிப்பதும்,முந்தின தினம் நடந்தவற்றின் சாரம் வெளிப்படும் பாங்கு, முழங்கால் மட்த்து உட்கார்ந்து அடுத்தவீட்டுக்காரியின் நீண்ட நகங்களை நீவிவிட்டபடி பேசுவதும் எத்தனை சுவாரஸ்யம். அதிலும், சிரித்து சிரித்து கண்களின் கண்ணீர் கசிவதும், இருவர் மட்டும் பேசும்போது திடுக்கென கொப்பளிக்கும் கண்ணீரும் அவர்களது உலகங்களின் ரகசியங்கள், ஈஸ்வரி இவற்றையெல்லாம் வேடிக்கப் பார்ப்பதோடு, வேறு மனிதர்களுக்கு முன்னால் மரியாதையுடன் இருகிவிட்டு பின்னர் நெகிழ்ந்தது போல அவரவர் வசத்தில் தரையில் உட்காருவதும் பூ உதிர்வதுக்கு சமமானவை. ஈஸ்வரி தனக்குக் கிடைத்த வாழ்வோடு மற்றவர்களின் வாழ்வைப் பொருத்திப்பார்த்து வியப்படையும் தருணங்கள் அற்புதமானவை. `நீங்களா உட்காருங்கன்னு சொல்ல வேண்டாம். எழுந்திரிக்கும்போது எழுந்துக்கட்டும்..அவங்களா உட்கார்ந்தாபோதும்னு தோனும்போது உட்கார்ந்துப்பாங்க` என ஈஸ்வரி சொல்லும் இடத்தில், அவளது நினைவு முழுவதும் பிறந்தவீட்டுக்குச் சென்றுவிடுகிறது. ஈஸ்வரியின் அப்பா வரும்போது ஆச்சி, அம்மா எல்லாரும் எழுந்து நின்றாலும், அவள் நின்றுவிட்டாளா எனப் பார்ப்பது கதையில் மிக இயல்பாக அமைந்துவிட்டது.
`கிளைகள் இலைகள்`, `அப்பால் ஆன..` கதைகள் நட்புக்குள் நெகிழும் சந்தர்பங்களையும், எதிர்பாராத நேரத்தில் ஜென்ம விரோதியாகிப்போகும் தருணங்களையும் படம்பிடிக்கின்றன. இயல்பாக பூக்கவேண்டிய நட்புக்குள், சந்தர்ப்பங்கள் எப்படிப்பட்ட குழப்பங்களை திணித்துவிடுகின்றன? அப்பால் ஆன ராஜியின் இயல்பு தான் `அவனுடைய நதி, அவளுடைய ஓடை` ஈஸ்வரிக்கும் என்றாலும், இரு பாத்திரங்களின் நுண்மையான வேறுபாட்டை ஒரே ஒரு வரியில் காட்டிவிடுகிறார் வண்ணதாசன். ஆச்சர்யமான விஷயம். முன்னாள் காதலன் நண்பனாகும்போது, அவனைத் துரத்திவிட்டது ராஜிதான் எனத் தெரியவருகிறது. கணநேரத்தில் `அவனைப் போகச்சொல்லுங்கப்பா` எனச் சொன்னவள், பின்னொரு நாள் நண்பனாக சந்தித்து, அவனது மனைவி இல்லாத சமயத்தில் `நீங்களாவது என்றைக்கும் ஒரேமாதிரி இருக்கணும்` எனச்சொல்கிறாள். இருவர் வாழ்விலும் சந்தோஷத்துக்குக் குறைவில்லை என்றாலும், ஏதோ ஒரு முள்.
மனிதர்களுக்குள் இருக்கும் உறவின் அனைத்து சாத்தியங்களையும் வண்ணதாசனின் கதைகளில் பார்க்க முடிகிறது. ஆக்ரோஷமான விரோதமாக இருந்தாலும், வெறுக்கத்தக்க காதல் தோல்வியாக இருந்தாலும் ஏதோ ஒரு காலத்தில் வாழ்வின் ரணங்கள் ஆறிவிடுகின்றன. புதுவகை உறவில் பழையது ஜனிக்கிறது. எப்படியேனும் எங்கேனும் ஒட்டிக்கிடக்கப் பார்க்கும் மனிதர்களின் கதைகள். உறவின் புனிதம், தனிமனித சுரணை போன்றவையெல்லாம் அடித்துச் செல்லப்பட்டு அன்பும், அந்நியோன்யமும் தழைத்துவிடுகிறது. மண் வேறு, காலம் வேறு, உறவு வேறு ஆனால் பிரியம் எப்போதும் ஏதோ வகையில் மனிதர்களைப் பிணைத்துவிடுகிறது.
மனுஷா மனுஷா
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
இணையத்தில் வாங்க - மனுஷா மனுஷா
No comments:
Post a Comment