விழுப்புரத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் வளவனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் பாவண்ணன். இந்த ஊரானது என் அம்மா வளர்ந்த ஊர் என்பதால் அவர் கதைகளை வாசித்து, அங்கங்கே அவரைப் பற்றியும் வாசித்ததை விட அவரைப் பற்றி சிறுவயது முதல் என் உறவினர்கள் வாயிலாக நிறைய கேள்விப்பட்டதுண்டு.
வளவனூர் கிராமம் என்றால் திரைப்படங்களில் காட்டும் வயல்வெளிகள், தோப்பு துறவுகள் சூழ்ந்த பசுஞ்சூழலும் இல்லை, வானம்பார்த்த கள்ளிக்காடுமில்லை. பரபரப்பான விழுப்புரம் - பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் சத்திரம் பஸ் ஸ்டாப் விட்டு இறங்கினால் தென்னந்தோப்பு அதைக் கடந்தால் வரும் ஒரு யூகலிப்டஸ் தோப்பிற்கு முன்னதாக என் தாத்தா வீடு. வீட்டின் முன்னால் நூறு மீட்டர் தூரத்தில் சினிமாத்தனமான ஒரு அழகான ரயில் நிலையம். காலை-மாலை வேளைகளில் மட்டும் ஊரெங்கும் புகை மணம் பரப்பி கடந்து செல்லும் பாசஞ்சர் வண்டிகள், அவ்வப்போது தடதடத்துச் செல்லும் கூட்ஸ் வண்டிகள், ரயில் பாதையைக் கடந்தால் எப்பவும் காய்ந்து கிடக்கும் அந்த ஊரின் எப்போதோ நீர்நிறைந்திருந்ததாக எல்லோரும் சொல்லும் ஓர் ஏரி. கொஞ்சம் சின்ன டவுன் என்று சொல்லத்தக்க பெரிய கிராமம்.
வீட்டிலிருந்து சிவன் கோயில் போகும் வழியில் மணமணக்கவும் சுடச்சுடவும் கமர்கட் செய்து விற்கும் வீடு சென்று கடலை மிட்டாய்களும், கமர்கட்டுகளும் வாங்கும் போது எதிர்சாரியில் இருக்கும் ஒரு வீட்டைக் காட்டி மாமா சொல்லுவார், “இதுதான் பாவண்ணன் வீடு. உங்க பெரிய மாமாவோட க்ளாஸ்மேட்டுடா. பெரிய ரைட்டர் இப்போ”. அவர்கள் வீட்டில் தைத்த துணியொன்றை வாங்கி வர ஒருமுறை படியேறிச் சென்ற நினைவும் மங்கலாக உண்டு.
இவரது சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு ஈடாக இவர் கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த பதினைந்துக்கும் மேலான நூல்கள் பேசப்படுகின்றன. மொழிபெயர்ப்பிற்காக அகாதமி விருதும் பெற்றவர். கவிதைகளையும், நாட்டுப்புறப் பாடல்களையும் ஒரு மொழியினின்று மொழிபெயர்க்கும் அளவிற்கு மொழித்தேர்ச்சி பெறுதல் என்பது அசாதாரண காரியம் என்றே தோன்றுகிறது.
காவ்யா வெளியீடாக 1992’ஆம் வருடம் தொகுக்கப்பட்ட பாவண்ணனின் “நேற்று வாழ்ந்தவர்கள்” சிறுகதைத் தொகுப்பு வழக்கம்போல சமீபத்தில் ஒரு பழைய பேப்பர் கடையில் கிடைத்தது. இப்போது இந்தப் புத்தகம் சந்தையில் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. இணையத்தில் தேடியபோது நிறைய நூலகங்களின் கேட்டலாகில் தட்டுப்படுகிறது.
இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஏனோ அதன் வரிசையில் வாசிக்காமல் என் மனம் போன போக்கில் முன்னும் பின்னும் புரட்டிப் புரட்டித்தான் படித்தேன். ஒவ்வொரு கதையும் இறுதியில் ஒரு மனசைத் தைக்கும் துன்பத்துடனே பெரும்பாலும் நிறைகிறது. கதை மாந்தர்கள் யாரும் ஃபேண்டஸி ஆசாமிகள் அல்லர். பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களின் முகத்தில் அறையும் அவலமே கதை.
பாவண்ணன் எழுதுவது போல் நேரடியாகக் கதை சொல்லும் ஒருத்தரை நான் இதுவரை வாசித்ததில்லை என்றே சொல்வேன். கதைக்கென இவர் ரொம்பவெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டிப் பிரயத்தனப்படவில்லை. இவரது கதைககளன்கள் பெரும்பாலும் நம் சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையே.
பெரிதாக ஜெர்க் அடித்து, ஆஹா ஓஹோ என்று சிலாகிக்கத்தக்க சொற்களை உபயோகித்து, பெரும் வர்ணனைகளைக் கொண்டு கதையை அலங்கரிக்கும் வேலையே இல்லை. சற்றும் பாசாங்கற்ற ஒருநடை தொகுப்பில் உள்ள அத்தனைக் கதைகளிலும். கதாசிரியனை எங்குமே முன்னிறுத்தாத கதைகள். படிக்கப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது.
“வேஷம்” கதையில் அச்சேயாகாமல் வெளியாகும் ஒரு புத்தகக் கதைவழி இந்த தேசத்தின் சரித்திரத்தைப் போகிற போக்கில் சொல்லும் லாவகத்தில் துவங்குகிறது சிறுகதைத் தொகுப்பு.
இல்லாமையின் உச்சத்தில் வாய்க்கு ருசியாக உண்ண வக்கில்லாமற் போகும் மாசக்காரியான ஆந்தாயி கதை அவள் பிள்ளைகள் பிசையும் மீன்குழம்புச் சோறோடு சேர்த்து நம் மனசையும் பிசைவது. ”கல்” உடைக்கும் மீனாவின் கதை முடிவு நம் முகத்தில் அறைந்தால், கல் விட்டெறியும் குப்புசாமியின் “தர்மம்” நம்மை நகைக்க வைக்கிறது.
”மரணம்” கதைநாயகன் குப்புசாமியுடன் பாராட்டும் நட்பு நம்மில் ஒவ்வொருவரும் வாழும் காலகட்டத்தில் யாரோ ஒருவருடன் பாராட்டிய ஒரு நட்பை நினைவுறுத்தும். எத்தனை நெருங்கிய நண்பனானாலும் அவனையும், “வீட்டுக்கெல்லாம் வராத”, என்று சொல்ல முடிவது என்னவொரு அவலம்? சமூகத்தின் ஏற்றத்தாழ்வை கதையின் போக்கில் தொட்டுச் செல்கிறார் பாவண்ணன். போதனை, புரட்சி போன்ற சமாசாரங்களெல்லாம் இல்லாமல் நெருடாமல் உள்ளதை உள்ளபடி பகர்கிறார். இக்கதையின் இறுதிப் பத்தி இல்லாமலேயே கூட கதை நிறைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
”நேற்று வாழ்ந்தவர்கள்” கதை பற்றி நிறைய பேசலாம். குதிரை வண்டி ஓட்டுபவனான பார்த்தசாரதியின் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை அவனது அன்பான மாமனின் மகளை மணக்கும்போது மேலும் ஆசிர்வாதம் நிறைந்ததாய்த் தோன்றுகிறது. திருமணத்திற்குப் பிறகு சீர்செய்ய முடியாத படிக்கு அவன் வாழ்க்கை சின்னாபின்னமாவதும், அதைச் சீர்செய்யக் கையாலாகாத திடீர்த் தருணமொன்றில் அவன் பூணும் திரும்பி வரவியலாத துறவறமுமே கதை. இந்தத் தொகுப்பின் சில கதைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றியே வருவதால் அக்கம்பக்கத்து கிராமங்களின் பெயர்களைக் கதைகளில் வாசிக்கையில் மனசு ரொம்பவும் சந்தோஷப்பட்டது.
என் தாத்தாவின் முதலாளியும் நண்பருமான ரெட்டியாரும் கூட பார்த்தசாரதியின் கதையில் வருகிறார். அவர் மகள்களைக் கோலியனூர் கோயிலுக்குத் தன் குதிரை வண்டியில் பார்த்தசாரதி அழைத்துச் செல்வதாகச் செல்கிறது கதை.
விடுமுறை நாள் ஒன்றின் மாலைப் பொழுதொன்றில் குடும்பத்துடன் ரெட்டியார் வீட்டிற்கு மரியாதை நிமித்தம் நாங்களெல்லாம் சென்றிருந்தோம். பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் பெரிய தோட்டத்தினிடையே ஒரு வசதியான மாளிகை வீடு. காபி, பலகார உபசரிப்புகள் எல்லாம் முடிந்து நாங்கள் விடை பெற்ற போது வாயிலில் நின்றிருந்த குதிரை வண்டியில் ஏற்றி எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ரெட்டியார்.
அன்று எங்களுக்கு வண்டியோட்டியது பார்த்தசாரதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
நேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்
சிறுகதைத் தொகுப்பு
காவ்யா வெளியீடு.
201 பக்கங்கள் / விலை.ரூ.26/- (1994 பதிப்பு)

Thanks for posting about my favorite writer Paavannan. As you rightly remarked, "பாவண்ணன் எழுதுவது போல் நேரடியாகக் கதை சொல்லும் ஒருத்தரை நான் இதுவரை வாசித்ததில்லை என்றே சொல்வேன்." I like him precisely for this trait. Unfortunately, most of his books are not available for sale over net.
ReplyDeleteஅருமை... வளவனூர்...பெயரை அச்சில் பார்த்த மாத்திரத்தில்...மனசு றெக்கை கட்டி பறந்தது.ஏதேதோ..அழகான நினைவகள்.கட்டுரை அருமை.மீண்டுமொருமுறை அழகான வாழ்த்துகள் 💐 கட்டுரையாளருக்கு.!
ReplyDelete