சென்ற வருடம் காரைக்குடி புத்தக கண்காட்சியின்போது அகப்பட்ட புத்தகம் இது. பொதுவாக, வாங்க வேண்டும் என ஏற்கனவே இறுதி செய்து வைத்திருக்கும் புத்தகங்களைத் தவிர பிறவற்றை வாங்குவதற்குமுன் முன்னுரையை ஒரு இரண்டு நிமிடமாவது வாசிப்பேன். அப்படி வாசித்ததால் வாங்கிய புத்தகம்தான் பா.ராவின் 'குதிரைகளின் கதை'. குமுதம் ஜங்ஷன் இதழில் ‘காந்தி சிலை கதைகள்’ எனும் பெயரில் வெளிவந்த எட்டு சிறுகதைகளின் தொகுப்பிது.
நான் வாசித்தவைகளுள் மிக சிறந்த முன்னுரைகளில் ஒன்றாக பா.ரா இந்த தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையைச் சொல்வேன். காந்தி எனும் மனிதரை மிகுந்த அன்யோன்யத்துடன் அணுகும் குரல் இது. “இந்த கதைகளை பற்றி சொல்ல வந்தேன், கதாநாயகராகவும், துணை பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையை சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவை காட்டி சோறூட்டுவது போல சிலையை காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு அது,”- என்று மிக தெளிவாக இந்த தொகுப்பை பிணைக்கும் திரியைச் சுட்டுகிறார். உண்மையில் இந்த முன்னுரையின் உயரத்தை கதைகள் தொட்டிருக்கின்றனவா எனக்கேட்டால் ஆம் என்றும் சொல்வேன் இல்லையென்றும் சொல்வேன்.
ஆக, அப்பட்டமாகவும் பூடமாகவும் புனைவின் நிகழ்வுகளுக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை பின் தொடரவேண்டும் எனும் சமிக்ஞையை நான் பற்றிக்கொண்டேன். இது தவறான வாசிப்பாக இருக்கலாம். ஆகவே இக்கதைகளின் வழியாக காந்தியைக் கண்டடைய முயற்சிக்கும் அதே வேளையில் கதை பயணிக்கும் பிற கோணங்களையும் முடிந்த அளவிற்கு கவனத்தில் கொள்ள முயற்சிக்கிறேன். விமர்சகர்களுக்காகவோ அங்கீகாரம் வேண்டியோ தான் எழுதவில்லை என்கிறார். இதுவரை (2004 ஆம் ஆண்டின் நிலை) தான் எழுதியவற்றுள் தனக்கு அபாரமான நிறைவளிப்பவை இக்கதைகள் என்று தன் முன்னுரையை முடிக்கிறார் பா.ரா.
மனிதன் பெரும்பாலும் தன் பொருளியல் தேவைகளை பூர்த்தி செய்ய செக்குமாடாக உழைக்கிறான். படைப்பூக்கம் மறைந்து வெறும் இயந்திரம் ஆகிறான். தன் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழக்கிறான். ஆழ்மனதில் அவை எவ்வித பயனுமற்றவை என்று உணர்ந்து, தன் அத்தனை ஆண்டுகால வாழ்க்கையும் பயனற்றது என்று சோர்வடைகிறான். அந்தப் புள்ளியில் அவனுக்குத் தேவை ஒரு பிடிப்பு. கற்பிதமாகவேனும் ஏதேனும் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமே அவன் அந்த நாளைய வாழ்க்கையை கடக்க முடிகிறது. இத்தகைய ஊன்றுகோல் எதுவும் இல்லாதவனின் தவிப்பை விவரிக்கும் கதை, ‘இருளின் நிறம் வெண்மை.
கணக்கு வாத்தியார் மாசிலாமணிக்கு அவருடைய பணி நிறைவளிப்பதில்லை. கூட்டலையும் கழித்தலையும் தவிர அனைத்துமே அன்றாட வாழ்வில் அவசியமற்றவை, கற்பிப்பதும் வீண் என்று நினைக்கிறார். பணி ஓய்விற்கு பின்னர், ‘வாழ்வின் சாயங்கால’ பொழுதில் இலவசமாக ஒயர் கூடை பின்னி அளிக்கும் தன் மனைவியை தனது பற்றுகோல் என கண்டுகொள்கிறார். ஆனால் அவளும் கைவிட்டு போகிறாள். காந்தி கையில் தடியுடன் நிற்கிறார். காந்திக்கு நாடு எனும் ஊன்றுகோல் இருந்தது போல் தன் மனைவிக்கும் வீடு எனும் ஊன்றுகோல் இருந்தது என்று எண்ணுகிறார்.
இந்த கதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் கேள்வி- கஸ்தூர்பா மரணத்தை காந்தி எவ்வாறு எதிர்கொண்டிருக்கக் கூடும்? காந்தியின் அந்திம கால சறுக்கல்களுக்கு காரணம் காந்தியும் தன் ஊன்றுகோலை தொலைத்ததுதானோ என்னவோ என்று தோன்றியது. இறுதியில், இந்த ஆசிரியர் தன்னிடம் பயின்ற மாணாக்கனைச் சந்திக்கும்போது தன் வாழ்விற்கும் பயனுண்டு என்று கண்டுகொள்கிறார். ‘கற்பதைக் காட்டிலும் கற்கும் அனுபவம் அல்லவா முக்கியம்’. இனியுள்ள தூரத்தைக் கடக்க அவருக்கொரு ஊன்றுகோல் கிடைத்து விட்டது.
ஒரு மரபு கவிஞன் தன் தந்தைக்காக காதலை துறக்கும் கதை, ‘பூக்களால் கொலை செய்கிறேன்’. பா.ராவின் இக்கதைகளில் காந்தி என்பதைத் தாண்டி வேறு சில பொது போக்குகளை அடையாளம் காண முடிந்தது. அவைகளில் மிக முக்கியமாக- தமிழ் சினிமா மற்றும் திராவிட அரசியல் மீதான மெல்லிய எள்ளல் அநேகமாக அனைத்து கதைகளிலுமே ஒரு தீன ஸ்வரமாக ஒலிப்பதை கேட்க முடிகிறது. ஒருவகையில் அது பா.ரா. டச் என்றும் சொல்லலாம். இக்கதையிலும் அவைகளுக்கு குறைவில்லை.
காந்தி இக்கதையில் ஒரு காவல்காரர் போல் நிற்கிறார் என்று எண்ணுகிறான் கவிஞன். ஒருவகையில் காந்தி காவல்காரர்தான். மதமாற்றம் செய்துகொண்டால் திருமணத்திற்கு ஒப்புதல் எனும் நிபந்தனை அவனை நோக்கி முன்வைக்கப்படும்போது, காந்தியை தன் தந்தையின் இடத்தில் வைத்து சிந்திக்கிறான். அந்த முடிவிலிருந்து காந்தி அவனை காக்கிறார்.
காந்தியைப் பழிவாங்க எண்ணி மதம் மாறிய ஹரிலாலின் நடத்தை அவரை ஆழமாக புண்படுத்தியது என்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஹரிலால் காதலுக்காக, அன்பிற்காக, மதம் மாறி இருந்தால் அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது.
ஒரு வாசகனாக இத்தொகுப்பில் எனக்கு மிக நெருக்கமான கதைகள் என்று இரண்டைச் சொல்லுவேன்- 'கூறாமல் சன்னியாசம்' மற்றும் 'குதிரைகளின் கதை'. தந்தை இடத்தில் இருக்கும் அண்ணன், அவனுக்குப் பொருந்தாத அழகு கொண்ட அண்ணி. அண்ணியின் அழகால் ஏற்பட்ட தாழ்வுணர்வை அவன் தன் தம்பியுடன் பகிர்ந்து கொள்கிறான். தன் திசையை தானே தீர்மானிக்கும் நதியாக இருக்க வேண்டும் அல்லது திடமான கரையாக இருக்க வேண்டும், இரண்டும் இல்லையென்றால் காலம்தோறும் கரை தொட முயலும் படகாக நதியின் போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான். தன் அண்ணனின் அச்சம் அவனை உறுத்துகிறது. ஒரு அடர் மழை மாலையில் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பௌத்த துறவி ஆகிறான். அவன் ஏன் துறவியானான்? அண்ணனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவனுடைய துறவை எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது? மிக நுட்பமாக பா.ரா அதைக் காட்டி செல்கிறார். துறவுக்கு வீட்டை விட்டு புறப்படும் பெருமழை நன்நாளில் காந்தியின் மேலிருந்த எச்சங்கள் கழுவப்படுவதை பார்க்கிறான். தன் எச்சங்களை கழுவத் துடித்த அந்த மழைக்காக காந்தியை போல் அவனும் காத்திருந்தான் போலும்.
'மூன்று காதல்கள்' கதையில் இரண்டு காதல்கள் போலீஸ் பெருமாள்சாமியின் தங்கைகளுடையவை. மூன்றாவது காதல்? பாகிஸ்தான் பிரிவினையின் நியாயத்தை காந்தியின் பார்வையில் சொல்ல முற்படும் மாய யதார்த்த பாணியிலான கதை. காந்தி சிலை கதைகள் எனும் தொகுப்பிற்காக எழுதப்பட்ட கதை எனும் எண்ணம் தோன்றியது. நேரடி பிரசார நெடியையும் ஒருவர் உணரக்கூடும் என்றாலும் இக்கதையில் பெருமாள்சாமிக்கும் கிழவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள் எனக்கு உவப்பானதாகவே இருந்தன. பாகிஸ்தான் பிரிவினையின் போதிருந்த காந்தியின் மனநிலையை சாமானிய வாசகர் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.
தோல்வியின் நிழலில் தூக்க மாத்திரை உட்கொண்ட ஒருவன் காந்தியின் அண்மையில் மீண்டெழும் கதை, “யுவர்ஸ் ஒபிடியன்ட்லி”. “சாவறது சுலபம் ராசா. இஷ்டம் இல்லாத சட்டையை தூக்கிப் போடறது மாதிரிதான். வாழ்றதுதான் கஷ்டம். கிளியறுதுக்கே காத்திருக்குற சட்டை அது. தச்சி, தச்சி போடணும். தச்சது தெரியாம தைக்கிறதுதான் நமக்கிருக்கிற சவால்” என்று வாழ்வின் ரகசியத்தை ஒரு நாடகீய தருணத்தில் அவனுக்கு உணர்த்துகிறாள் குறி பார்க்கும் கிழவி. காந்தி காணாத தோல்வியல்ல. தொடக்கத்தில் அவர் மும்பையில் பாரிஸ்டராக தோல்வியடைந்தவர்தான். ஆனால் எங்குமே முட்டி நின்றுவிடவில்லை. 'தன் படை வெட்டி சாதல்' மத கலவரங்களால் அன்று நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மனமுடைந்து போனாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் முயன்றார். காந்தியை நான் மிக நெருக்கமாக உணர்வது அந்த புள்ளியில்தான்.
பெரும் கனவுகள் சுமந்து திரியும் மனிதர் ஒருவர் நிர்பந்தத்தின் பேரில் தன் கனவுகளைப் புதைத்து, பொருளாதார பாதுகாப்பிற்காக செயலின்மையின் நிழலில் நின்று காலமெல்லாம் குற்ற உணர்வுடன் வாழ்வை கழிக்கும் நிலை கொடூரமானது. அத்தகைய ஒரு நிலையை உணர்த்தும் கதை, “வாசல் வரை வந்த கனவு”. நீதிபதி கிருஷ்ணசுவாமி தந்தையின் கனவைத் தாங்கி செல்ல தன் கனவை துறந்தவர். விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பியவர். ஆனால் அவரின் தந்தை அன்று எரிந்த விடுதலை வேட்கை தீயில் மகன் காணாமல் போய்விடக்கூடாது என்று அஞ்சுகிறார்.
இரண்டு சரிகளில் எதை, ஏன் நாம் தேர்ந்தெடுக்கிறோம்? நம் மன பலவீனங்களுக்கு ஏதுவாக உள்ள சரியையே மனம் பற்றிக்கொள்கிறது என்று நான் நினைக்கிறேன். எத்தனையோ நிகழ்வுகள் என்னை இன்று அசைத்துப் பார்க்கின்றன. அவைகளுக்கு எதிராக பகிரங்கமாக எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மனம் குமுறும், ஆனால் இறுதியில் அதற்கான துணிவின்றி பின்வாங்கிவிடுகிறேன். வயதேற வயதேற இளமையின் நிராசைகள் மட்டுமே எஞ்சி பூதாகர உருவெடுத்து நம் துயராக மாறுமோ என்னவோ.
இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என நான் கருதும் மற்றொரு கதை- 'குதிரைகளின் கதை'. கதையில் முத்துப்பாண்டி ஒரேயொரு குதிரையை வைத்துக்கொண்டு மெரீனா கடற்கரையில் பிழைப்பு நடத்துகிறான். ஒருவகையில் அவன் நேசித்த மீனாட்சியும் ஒரு குதிரைதான். தந்தையிடம் இருந்த குதிரை முத்துபாண்டிக்கு வருகிறது. முத்துபாண்டி விரும்பிய மீனாட்சி தந்தையுடன் சேர்ந்துக் கொள்கிறாள். “மேலும் காலம் தப்பிய காலத்தில் அதன் இருப்பு கூடுதலாகச் சில விஷயங்களை ஞாபகப்படுத்தக் கூடியது. இழந்த தொன்மங்களின் ஆர்வமூட்டும் முரட்டு நெடி அவற்றில் முக்கியமானது” என்று குதிரைகளை பற்றி எழுதுகிறார் பா.ரா. காந்தி சிலைகூட, காந்தியும்கூட காலம் தப்பிய காலத்தில் நின்று கொண்டு இழந்தவற்றின் முரட்டு நெடியை நமக்கு உணர்த்துபவர்தான்.
இத்தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தக்க பொது அம்சம், கடந்த காலத்தின் மீதான ஏக்கங்கள் மீண்டும் மீண்டும் இக்கதைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொன்மத்தின் குறியீடாக நிற்கும் குதிரைகளைப்போல், பிளாஸ்டிக் யுகத்தில் எஞ்சி இருக்கும் ஒயர் கூடைகளை போல், பங்கெடுக்க முடியாத விடுதலை போராட்டம் போல். காந்தியும்கூட கடந்த காலத்தின் நிழலாகவே இக்கதைகளில் தென்படுகிறார். எனினும் நிகழ்காலத்து சிக்கல்களில் ஒரு படிமமாக அல்லது குறியீடாக காந்தி இக்கதைகளில் வருகிறார்.
“புலவர் ஷேக்ஸ்பியர்” அறுபது எழுபதுகளின் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் வாத்தியாரின்(ர்களின்) கதை. நேரடியாக விவரிக்கப்படவில்லை என்றாலும் திராவிட அரசியல் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவைகளையே இக்கதை சுட்டுகின்றது. குடும்பத்தையும் அரசியல் ஆசைகளையும் சமன்படுத்த முயன்று குடும்ப நலனுக்காக அரசியலை விட்டு ஒதுங்கியவரின் கதை. காந்தி ஒட்டுமொத்த குடும்பத்தையே அரசியலில் இறக்கியவர். தேச நலனுக்கும் குடும்ப நலனுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று கருதியவர். இக்கதையும் சரி, 'வாசல் வரை வந்த கனவை'யும் சரி, வாசிக்கும்போது 'இன்றைய காந்தி' நூலில் ஜெயமோகன் எழுதிய வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. காந்தி ஒரு மோசமான தந்தை எனும் விமர்சனத்திற்கான பதில் என இதை கொள்ளலாம்- மோசமான’ தந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடு ‘மிகச்சிறந்த’ தந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை? நமது யுகம் அயோக்கியத்தனத்தை அரியணையில் அமர்த்தி மகத்தான தியாகங்களில் குறைகண்டுபிடிக்கிறது இல்லையா?
ஒட்டுமொத்தமாக இந்த எட்டு கதைகளின் வழியாக வாழ்வை வெவ்வேறு கோணங்களில் நமக்கு காட்ட முயன்றிருக்கிறார் பா.ரா., அதனூடாக காந்தியையும்கூட. குமுதம் ஜங்ஷன் இதழ் என்பதாலோ என்னவோ குறிப்பிட்ட ஒரு "டார்கெட் ஆடியன்ஸ்" நோக்கி எழுதப்பட்ட கதைகளாக சில நேரங்களில் தென்பட்டது. பாராவின் மிகப்பெரிய பலம் அவருடைய மொழி நடை. அங்கதம் வெகு இயல்பாக அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதை மட்டும் கணக்கில் கொண்டால் கதையின் ஆழத்தையும் அடர்த்தியையும் நாம தவறவிடக்கூடும்.
குதிரைகளின் கதை
பா.ராகவன்
சிறுகதைகள், தமிழ்
கிழக்கு வெளியீடு
-சுகி
No comments:
Post a Comment