எம்.ஆர்.ராதா. காலத்தின் கலைஞன்
ஆசிரியர்: மணா
பக்கங்கள்: 216
விலை: ரூ.130
உயிர்மை பதிப்பகம்.
* நான் டெக்னிக்கல் பின்னணி உடையவன் அல்ல.
* நான் இசையை ரசிப்பவன் மட்டுமே.
* நான் ஒரு சாதாரண மசாலா ரசிகன் மட்டுமே.
சிக்கலான அல்லது பிரச்னைக்குரிய திரைப்பட விமர்சனம்னா மேற்சொன்ன Disclaimer உடன்தான் அந்தப் பதிவையே துவக்குவார்கள். இதுக்கு நிறைய உதாரணங்களை பார்த்திருக்கலாம். அதே போல் இந்தப் புத்தகத்திலும் ஒரு பலமான ‘டிஸ்கி’ உள்ளது. அதாவது:
* இந்தப் புத்தகத்தில் வரும் விஷயங்கள் குறித்து சிலருக்கு மாறுபாடான கருத்துகள் இருக்கலாம்.
* ராதாவின் முகத்தை இருட்டடிக்க முயல்வது இந்தத் தொகுப்பின் நோக்கமல்ல.
ஏன் இப்படி? இவர் நல்லவரா? கெட்டவரா? மேலே படிங்க.
எம்.ஆர்.ராதா. நடிகர்கள் அனைவரும் தங்கள் குருவாக / முன்மாதிரியாக சொல்வது சிவாஜியை என்றால், அந்த சிவாஜி சொன்னது ராதா’வையாம். அவர் மட்டுமல்ல, நடிகர் மோகன்லால், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் யாரென்றால், அது ராதாதான் என்று சொன்னாராம். அப்படி ராதா திரையில் என்ன செய்தார்? திரைக்கு வெளியே எப்படி இருந்தார்? இதைப் பற்றி பல பேர் - மனோரமா, சத்யராஜ் என பதினைந்துக்கும் மேற்பட்டவர்களின் கருத்துகள் இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்படி ராதாவைப் பற்றி பலரும் பேசுவதால், பற்பல தகவல்கள், சம்பவங்கள் திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் வருகின்றன. நான் மிகவும் எதிர்பார்த்த ஒருவர் - கலைஞர் கருணாநிதி. அவருடைய கருத்துகள் இதில் இல்லை.
இவரது நாடக வாழ்க்கை படுசுவாரசியம். அந்தக் காலத்தில் புரட்சிகரமாக இவர் எழுதி, நடித்த நாடகங்கள் பலமுறை அரசால் தடை செய்யப்பட்டன. ஆனால், இவரோ நாடகத்தில் தலைப்பை மாற்றி, சிற்சில காட்சிகளை மாற்றி அதே கருத்துகளோடு மறுபடி அதே நாடகத்தை போடுவாராம். ரத்தக் கண்ணீர். ராதாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற நாடகம். இன்று வரை அவரது வாரிசுகளால் மேடையேற்றப்படும் நாடகம். இந்த நாடகம் திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு மிக அருகில் இவரைக் கொண்டு சென்றாலும், அந்த செல்வாக்கை தன் சொந்த லாபத்திற்காக / வளர்ச்சிக்காக ஒரு நாளும் பயன்படுத்தியதில்லை. பெரியார், சம்பத் ஆகியவர்களுடன் தொடர்பு அதிகமாகி, ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ என்று ஒரு நாடக சபாவை துவக்கினார் ராதா.
இவர் மேடையேற்றிய நாடகங்களின் எண்ணிக்கையை பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ரத்தக் கண்ணீர் - 3000+ நாட்கள். தூக்குமேடை, லட்சுமிகாந்தன் - தலா 700 நாட்களுக்கும் மேல். இவரது முற்போக்குக் கருத்துகள் அங்கங்கே கலவரத்தை உண்டு பண்ணுமாம். அப்படி கலவரம் நடந்த இடங்கள் : 18.
நாடகக் கம்பெனிகள் பலவற்றில் பணியாற்றினாலும், ராதாவின் தனித்த குணம், தன் மனதில் தோன்றியவற்றை அதன் எதிர்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அந்த நேரத்திய உணர்வோடு பேசி விடுகிற குணம் இவரைப் பற்றிய முரட்டுத் தோற்றத்தை மற்ற நடிகர்களிடம் உருவாக்கிவிட்டதாம். நடிகர்களைப் பற்றி மட்டுமல்ல, பெரியார், அண்ணா பற்றிய கருத்துகளையும் தைரியமாகச் சொல்வாராம். இவரது பேச்சுக்களையும் அவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல், இவரது வெளிப்படைத் தன்மையை பாராட்டுவார்களாம். இப்படி யாராவது இருக்க முடியுமா இந்த காலத்தில்?
’உன் நெற்றியும் என் நெற்றியும் எந்தக் கோடும் இல்லாமல் சுத்தமாக இருக்கிறதே, இதற்குக் காரணம் பெரியார்தாம்பா’ என்று வசனம் பேசியபோதும், ‘பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறாயே, அப்படி அவர் என்னத்தைச் சாதிச்சார்? என்று கேட்டாராம். அண்ணாவைப் பற்றியும் ஒரு கமெண்ட். ‘தளபதி தளபதி என்கிறீர்களே, அண்ணா துரை எத்தனை போர்க்களங்களைச் சந்தித்தார்?’.
ராதாவின் திரைப்பட வசனங்கள் என ஒரு அத்தியாயம் முழுக்க பல உதாரணங்கள். அவற்றிலிருந்து சில நச்:
* ஊருக்கு ஒரு லீடர். அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம். நான்சென்ஸ்.
* தொழிலாளிக் கட்சி, முதலாளிக் கட்சி, சாமியார்க் கட்சி இப்படி எல்லாரும் பிசினஸில் புகுந்துட்டான். வேற ஒண்ணுக்கும் லாயக்கில்லை. பிளக்காட்ர்ஸ்.
* இந்தப் பொதுநலம், தியாகம், பரோபகாரம் இதெல்லாம் இப்ப பேஷனாப் போச்சு. அது போலித்தனமான வாதம். அதை நம்பாதே.
* பாரின்ல நீராவில கப்பல் விடறான். நீங்க நீராவியில் புட்டு செஞ்சு வயித்துக்குள்ளே விடுறீங்க.
எம்.ஜி.ஆரை சுட்டதைப் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். ராதாவே - சுட்டான், சுட்டேன், அவ்வளவுதான் என்றாராம். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தலைவர்கள், இரு நடிகர்களுக்கிடையே நடந்த தகராறை பெரிதுபடுத்தாதீர்கள். அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.
இதைத் தவிர ராதாவின் திருமண வாழ்க்கை, நாடக அனுபவங்கள் என பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
கடைசியா இந்தப் புத்தகத்திலிருந்து தெரிவது என்னன்னா, எம்.ஆர்.ராதா திரையில் மட்டுமே நடித்தார், திரைக்கு வெளியில் யாருக்கும் பயப்படாமல் தன் மனதிற்கு சரியெனப் பட்டதை சொல்வது & செய்வது என்றிருந்தார். அதனாலேயே பெரியார், அண்ணா என அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானார். இவரைப் போல் திரைக்கு வெளியில் நடிக்காமல் வேறு யாராவது இருந்தார்களா/ இருக்கிறார்களா? யோசிக்கவே வேண்டாம். இந்த புத்தகத்தை ஒரு முறை படிங்க.
***
ஊருக்கு ஒரு லீடர். அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம். நான்சென்ஸ்.
ReplyDelete* தொழிலாளிக் கட்சி, முதலாளிக் கட்சி, சாமியார்க் கட்சி இப்படி எல்லாரும் பிசினஸில் புகுந்துட்டான். வேற ஒண்ணுக்கும் லாயக்கில்லை. பிளக்காட்ர்ஸ்.// ஹாஹாஹா...
மலேசியா வந்திருந்தபோது அவர் பேசிய பேச்சு பொக்கிஷம்.. சீனிமா பார்க்காதிங்க, கெட்டுப்போவிங்க.. அங்கே நல்லவனா இருப்பவன் நல்லவன் அல்ல, கெட்டவனா இருப்பவன் கெட்டவன் அல்ல.. புள்ளகுட்டிகள படிக்கவையுங்க, அந்த ஊரில் இருந்து விடுதலையாயிட்டீங்க, இங்கே எல்லாம் இருக்கு, இனி நல்லா இருப்பீங்க.’
இதை அவர் சொல்ல நானே கேட்டேன்.. என் பள்ளியில். அப்போது எனக்கு வயது 10. அன்று மக்கள் அலையலையென திரண்டு, எம்.ஜி.ஆரை ஏன் சுட்டீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, பதிலுக்காக காத்திருந்தார்கள். அத்தருணத்தில் அவரிடமிருந்து உதித்த வாசகங்கள் இவை.