'பிரபல வைத்தியனாக இருந்து, காங்கிரஸில் ஈடுபட்டு, சத்தியாகிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்க பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சிலகாலம் உத்தியோகம் வகித்த நான் முதுமை பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்த கிராமத்தில் வாழ்வதற்குப் போய் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உற்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை...அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை..'
- டாக்டர் தி.சே.செள.ராஜன்.
பின்னட்டை
வாசகத்தைப் படித்துவிட்டு நினைவு அலைகள் புத்தகத்தை வாங்கினேன். நான் ஒரு
நாஸ்டால்ஜியா பைத்தியம். பழங்கால வாழ்வு பற்றிய யாராவது ஏதாவது
எழுதியிருந்தாலும் உடனடியாக படித்துவிட வேண்டும் என ஆசைப்படுவேன். அதுவும்
குறிப்பாக, தமிழ்நாட்டின் பழங்கால கதைகள், சமூக பழக்கங்கள், அக்காலகட்டத்து
மனிதர்கள் பற்றி எழுதப்பட்டிருந்தால் அனுபவித்துப் படிப்பேன். நம்
முன்னோர்கள் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள் எனும் சித்திரம் பரபரவென
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வின் அர்த்தத்தை சீண்டிப் பார்க்கிறது.
விஞ்ஞான காலகட்டம், தொழில்நுட்பங்கள் நம் விரல் நுனியில் எனப்
பெருமைப்பட்டுக்கொண்டாலும், ஒரு சமுதாய மனிதனாக நாம் எந்தளவு
முன்னேறிவிட்டோம் எனும் கேள்வியைக் கேட்க வைக்கும் புத்தகம். எண்பது
வருடங்களுக்கு முன்னர் எழுதிய நினைவு அலைகள் ஆகட்டும், ஆயிரம்
வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களாகட்டும், எல்லாமே இப்போது
எழுதப்பட்டவை போல நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன.
புத்தகத்தின் முன்னுரையை கல்கி
எழுதியுள்ளார். இரவு ஒன்றரை மணிக்குப் படிக்கத் தொடங்கி கீழே வைக்க
மனமில்லாமல் காலை ஐந்து மணிவரை படித்து முடித்திருக்கிறார். புத்தகமென்றால்
இதுவல்லவா புத்தகம் என மிகவும் சிலாகித்து எழுதியுள்ளார். கல்கி சொல்வது
போல ஒரு தன்வரலாறு இத்தனை சுவாரஸ்யமாக எழுத முடியுமா எனும் எண்ணம் எனக்கும்
உண்டானது. நூறு வருடங்களுக்கு முன்னான இந்தியாவையும், நமது கிராமங்களின்
வாழ்வையும், இந்திய சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும் அழகாக எழுதியுள்ளார்.
இது ராஜனின் சுயசரிதை மட்டுமல்ல. நமது சமூகப் பின்புலனில்
சத்தியத்தைத் தேட முற்பட்டவரின் கதை. அவ்விதத்தில் காந்தியின் சத்திய
சோதனைக்கு நிகரான நிகழ்வுகள் இதில் உள்ளன. இதைச் சொல்வதற்காகத் தீவிர
காந்தியவாதியான ராஜன் என்னைத் திட்டக்கூடும். ஆனாலும், தனது வாழ்வைப்
புரட்டிப்பார்த்து சாதக அம்சங்களை மட்டும் எழுதி வரலாற்றில் இடம் பெறுவது
ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அப்படிச் செய்யாமல், சமூக நிலைமைக்கு
ஏற்ப தான் சந்தித்த சவால்களையும், காலத்துக்கேற்ப எடுத்துக்கொண்ட சலுகைகளையும்
மிக நேர்மையாகச் சொல்லியுள்ளார்.
ஒரு விதத்தில் சொந்த அனுபவங்கள் மூலம் இதுதான் சரியான வழி
எனக் கண்டடையும் முனைப்பு இந்நூலில் தெரிகிறது. அவ்விதத்தில் காந்தியின்
சுயசோதனைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. அதே சமயம் இங்கிலாந்து, லண்டன்
என காந்தி வாழ்ந்த இடங்களிலெல்லாம் ராஜனும் வாழ்ந்திருக்கிறார்.
காந்தியின் சத்தியாகிரகக் கொள்கைகளில்
ஈர்க்கப்பட்டு தன்னால் முடிந்தவரை இலவச மருத்துவம், தாழ்த்தப்பட்டோருக்கான
சேவை, விவசாயத்துக்கான முன்னேற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
சுயசரிதையை முழுவதாகப் படித்ததும் நமக்கு கிடைக்கும்
சித்திரம் மிக முக்கியமானது. ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அம்மனிதர்
எப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பார் என நம்மால் யூகிக்கும் முகமாக
தன்வரலாற்று சித்திரங்கள் அமைந்திருக்க வேண்டும். சத்திய சோதனையைப் படித்த
எவரும் பிரிவினையின் விளைவை காந்தி எப்படி எதிர்கொண்டிருப்பார் என யூகிக்க
முடியும் - ஏனென்றால் வெள்ளையனை வெளியேற்றப் பாடுபட்டதை விட இந்தியர்களின்
மேன்மைக்காக வாழ்ந்தவர் காந்தி என்பது சத்திய சோதனையின் அடிநாதம். `என்
கதை` படித்தவர்கள் கவிஞர் ராமலிங்க அடிகள் மொழிப்போராட்டத்தை எப்படி
வரவேற்றிருப்பார் என யூகிக்க முடியும். வரலாற்று நாயகர்கள் நம் மனதை
முழுமையாக ஆட்கொண்டதுக்கான லிட்மஸ் டெஸ்ட் இதுதான்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்த தி.சே.செள.ராஜன் மிகவும் வைதிகமான
குடும்பத்தில் வளர்ந்தவர். வெள்ளை கோபுரம் அருகில் இருந்த தேர் பள்ளியில்
படிப்பைத் தொடங்கியதும், திருச்சிக்குச் சென்று கிறிஸ்துவப் பள்ளியில்
மேற்படிப்பு படித்து மருத்துவர் ஆனதையும் சொல்லி தன்வரலாற்றைத்
தொடங்கியிருக்கிறார். வடகலை ஐயங்கார் குடும்பமான ராஜனின் தந்தை
ஸ்ரீரங்கம் அகோபில மடத்தின் ஜீயர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.
வைதிகக் குடும்பத்தில் பிறந்ததால் பல கட்டுப்பாடுகளுக்கு ராஜன்
ஆளாகியுள்ளார் -கடையில் சமைத்த உணவை மட்டுமல்ல , நல்ல மணம் கொண்ட பொரி
கடலையைக் கூட வாங்கிச் சாப்பிடத் தடை இருந்தது.
தனது முதல் வேலைக்காக ராஜன் பர்மா செல்ல வேண்டியிருந்தது. ஆங்கிலேய அரசு
நடத்தி வந்த மருத்துவமனையில் டாக்டராக உத்யோகம் கிடைத்ததில் அவருக்கு
மிகவும் சந்தோஷம். மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு மனைவி மற்றும் பிள்ளையோடு
பர்மாவில் இறங்கிவிட்டார். அக்காலத்தில் பர்மாவில் பல இந்தியர்கள்
வெள்ளையர்களின் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தனர். பர்மா ஷெல் எண்ணெய்
நிறுவனம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை அளித்துள்ளது. அது போல,
மருத்துவ சேவை, பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உத்தியோகங்களுக்கு படித்த இந்திய
மக்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அதனால், பொதுவாகவே
இந்தியர்களுக்கு மதிப்பான வேலை கிடைத்துவிடும்.
ராஜன் சேர்ந்த மருத்துவமனை கிட்டத்தட்ட சவக்கிடங்கு போலக் காட்சி அளித்தது எனக்குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நோயாளிகளே அந்த மருத்துவமனையில் இருந்தனர். பிழைக்கக் கூடியவர்களும் சரியான மருத்துவர்கள் இல்லாததால் நாளைடைவில் நோய் முற்றி இறந்தனர். இந்நிலையில் காலை பத்து மணிக்கு ரவுண்ட்ஸ் வரும் வெள்ளைக்கார பெரிய டாக்டர் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏனோதானோவென சிகிச்சை அளித்துவிட்டு அரைமணிநேரத்தில் வீட்டுக்குப் போய்விடுவாராம். முதலில் நோய் முற்றியவர்கள் இருந்த வார்டில் வேலை செய்த ராஜன் வெள்ளைக்கார டாக்டரிடம் கேட்டுக்கொண்டு பெரிய வார்டுக்கு மாற்றல் வாங்கியிருந்தார். தனது அனுபவத்தை எல்லாம் முழுவதாகப் பயன்படுத்தி சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என நினைத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவேயில்லை. பெரிய டாக்டர் செய்வதுதான் வைத்தியம்; அளிக்கும் மருந்துகள் தான் காயகல்பம். ஒரு முறை நோயாளிக்கு தான் சொல்லாத மருந்தைக் கொடுத்து ராஜன் குணப்படுத்தியதைப் பார்த்ததும் பெரிய டாக்டருக்கு பெரும் கோபம் வந்து கத்திவிட்டார். ராஜனும் பொறுக்க முடியாது அருகிலிருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி எறிந்து கோபத்தில் ராஜினாமா செய்துவிட்டார். இந்தியாவுக்கு திரும்ப எண்ணினாலும், பர்மாவில் தனிப்பட்ட முறையில் க்ளினிக் நடத்தி கொஞ்சம் பொருள் ஈட்டியிருக்கிறார். ஆனால் தனது அனுபவத்தை அதிகப்படுத்திக்கொள்ள லண்டனுக்கு சென்று படிக்க வேண்டும் எனவும், அப்போதுதான் ஆங்கிலேய மருத்துவமனைகளில் தனக்கு மதிப்பு இருக்கும் எனவும் நினைத்து லண்டனுக்குப் புறப்பட்டார். ஆங்கிலேயர் பாணி உடை அணியும் விருப்பமும், பகட்டான வாழ்க்கைக்கான ருசியும் அப்போதுதான் கண்டதாகக் குறிப்பிடுகிறார்.
கடல் கடந்து படிக்கப் போனால்
அக்கால பிராமண சமூகத்தில் விலக்கிவைத்துவிடுவார்கள். அதேபோல, லண்டனுக்குச்
செல்லவேண்டும் என ராஜன் எடுத்த முடிவினால் அவரது குடும்பமே கடைசி வரை
கஷ்டப்பட்டது. பெரும் வைதிகனான ராஜனின் அப்பா, அஹோபில மடத்தின் சீடராக
இருந்தாலும் அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை. சமாஸ்ரயணம் எனச்
சொல்லப்படும் சரணாகதி அடைவதற்கானத் தகுதி பெறவேண்டிய சடங்கை அஹோபில மடம்
அவருக்கு மறுத்தது. தீட்டு பட்ட குடும்பம் என்பதால் பல புண்ணிய
நதிகளுக்குச் சென்று பாவத்தை கழிக்கச் சொன்னார்கள். தனது மகன் கடல் கடந்த
பாவத்துக்காக ராஜனின் தந்தையும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவந்தார்.
அதற்குப்பின்னும் அவருக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லை. அதுமட்டுமல்லாது, மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்துக்கு மருத்துவ சேவை செய்யத் திரும்பிய
ராஜனும் விலக்கிவைக்கப்பட்டார். இத்தனைக்கும், வடகலை தென்கலையார்
வழக்குகளுக்களைத் தீர்த்து வைப்பதற்கும், அஹோபில மடத்துக்குத் தேவையான
தேசிகரின் கர்ப்பகிரகச் சிலை சம்பந்தமான சண்டையையும் தீர்த்து வைத்ததில்
ராஜனுக்குப் பெரும் பங்கு இருந்தது. ஆனாலும், அவரை கடைசி வரை வைதிக
பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 1920 களில் ராஜனுக்கு இந்த நிலைமை
ஏற்பட்டிருக்கிறது என்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடம் என்ன
இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. இத்தனைக்கும்
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ராமானுஜர் ரகசிய மந்திரத்தை அனைத்து குலத்தாரும்
அறிந்துகொள்ள வேண்டும் என்றும், ஸ்ரீமன் நாராயணனுக்கு முன்பாக அனைவரும்
சமம் என்பதையும் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நெறிப்படுத்தியிருந்தார்.
லண்டனில்
1908 ஆம் ஆண்டு முதல் 1912ஆம் ஆண்டு வரை ராஜன் படித்தார். சைவ உணவு
கிடைக்காமல் அசைவு உணவு சாப்பிடப் பழகியதை மறைக்காமல் குறிப்பிடுகிறார்.
வ.வே.சு.ஐயர் அவர்களுடனான நெருக்கம் மூலமாக சுதந்தர போராட்ட உணர்வு
ஏற்பட்டதைக் குறிப்பிடுகிறார். அதற்கு இருபது வருடங்களுக்கு முன்னர்
லண்டனில் தங்கியிருந்த காந்தி உணவு பழக்கங்களில் தனக்கென ஒரு பாதை
வகுத்துக்கொண்டு, வெஜிடேரியனிஸ்ட் எனும் குழுமத்தில் பங்குகொண்டு புது
தரிசனங்களை சோதனை மூலம் அறிந்துகொண்டார் என்பது சிந்திக்கத்தக்கது. அதே
போல, லண்டனில் அக்காலகட்டத்தில் வாழ்ந்த ஆன்மிகவாதிகளோடு பல விவாதங்களில்
காந்தி பங்குகொண்டிருக்கிறார்.
ஊருக்குத் திரும்பிய ராஜனுக்கு தனது
சொந்த சமூகத்திலிருந்து சரியான ஆதரவு கிடைக்கவில்லை. அவர்ளுடனான
இணக்கத்துக்காக பல முயற்சிகளை அவர் எடுத்துக்கொண்ட போதிலும் மடத்தின் ஆதரவு
அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் பொதுஜனங்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல
பெயர் இல்லை. இந்த நேரத்தில் இந்தியாவில் சுதந்தர அலை தீவிரமாக
வீசத்தொடங்கியது. காந்தியாரின் இந்திய வருகை, ஹோம் ரூல் அமைப்பு,
காங்கிரஸின் மாநாடுகள் என பல திசைகளிலும் மக்கள் இந்திய சுதந்தரத்தை
ஆர்வத்தோடு எதிர்பார்க்கத் தொடங்கினர். ஏற்கனவே லண்டனில் ஐயர் அவர்களால்
சுதந்தர இந்திய கனவையும், ஜன சேவை ஆசையும் வளர்ந்திருந்த ராஜனுக்கு இது
நல்ல சந்தர்ப்பமானது. ஆனால், தனது குடும்பத்தின் சுபிட்சத்தையும்
பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையிருந்ததால் மருத்துவ வேலையை விட
முடியவில்லை. காங்கிரஸ் ஆதரவாளனாக பல மாநாடுகளில் பங்குபெற்றார்.
ராஜாஜியின் நண்பரானார். அவர் மூலமாக காந்தியோடு தொடர்பு கொள்ளக்கூடிய
வாய்ப்பும் ராஜனுக்குக் கிடைத்தது. அதனால் காந்தியடிகள் தென்னிந்திய
பயணத்தின் போது அவருடன் அலைந்து பொதுமக்களில் சிக்கல்களை நேரடியாகப்
பார்த்தார். இந்த அனுபவங்களை `தமிழ்நாட்டில் காந்தி` எனும் நூலில்
தொகுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் காங்கிரஸ் மாநாடுகளில்
பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பிரசங்கங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில்
காந்தி இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் குஜராத்தியும், இந்தியும் பேசத்
தொடங்கினார். காற்றில் பரவிய நறுமணம் போல இது வேகவேகமாக இந்தியா முழுவதும்
தொற்றிக் கொண்டது. காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக ராஜன் தமிழில்
உரையாற்றினார். மக்களின் மனதில் நேரடியாகவும் நெருக்கமாகவும் அணுக
முடிந்ததுக்கு காந்தியின் இந்த வழி முக்கியமாக அமைந்தது. `இந்திய ஆங்கிலேயராக`
மேல்தட்டு கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி கடைகோடி கிராமத்து மனிதனோடு
உரையாடத் தொடங்கியது.
காங்கிரஸ் கமிட்டியில் இருந்தாலும் ராஜன்
முழுநேர சேவகராக மாறவில்லை. லெளகீகக் காரணங்களினால் அவரால் பொதுசேவையில்
இறங்க முடியவில்லை. ஆனால், ராஜாஜி முடிவெடுத்ததன் பேரில், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கான ஹரிஜன சேவையமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார். தனது சொந்த
ஜாதியில் சேர்க்கப்படாத ஒருவராகவும், பொது சேவையில் காந்தியின் சீடனாகவும்
மாறியபின்னர் அவருக்குப் பல வாசல்கள் திறந்தன. ஆச்சர்யத்தோடு அவற்றை
ஏற்றுக்கொண்டார்.
சுதந்தரப் போராட்டம் உச்சம் அடைந்து உப்பு
சத்தியாகிரகத்தில் ராஜாஜியுடன் வேதாரண்யத்தில் கலந்துகொண்டு
முதல் முறை சிறைவாசம் சென்றார். ராஜனின் சிறை அனுபவங்களைக் கொண்டு தனியொரு புத்தகமே
எழுதிவிடலாம். தனிமை எனும் கொடுமையைவிட, சிறைவாசம் திருந்துவதற்கான
வாய்ப்பை துளியளவு கூட அளிக்காத இடமாக இருப்பதைப் பதிவு செய்திருக்கிறார்.
வெளிவந்தபின்னர் ராஜாஜியின் துணையோடு தேர்தலில் ஜெயித்து மந்திரி சபையில்
அமர்ந்திருக்கிறார்.
தேர்தலிலும் அவர் சந்திக்காத
அயோக்கியத்தனங்கள் இல்லை. பணத்துக்காகவும், சிபாரிசுக்காகவும் சுயகவுரவத்தை
இழக்கும் சாத்தியங்கள் அதிகம் கொண்டது அரசியல் எனும் முடிவுக்கு
வருகிறார். மெல்ல அதிலிருந்து விலகி ஒரு முழுநேர விவசாயியாக தனது
கிராமத்தில் தஞ்சம் புகுகிறார். அங்கு விவசாயத்தில் பல புதுமைகளை
புகுத்துகிறார். தனது வயலில் சொந்த அனுபவத்தில் மேற்கொண்ட சோதனைகளை மட்டுமே
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
ராஜன் சுயசோதனையும் தேடலும் நிரம்பியவராக புத்தகம் முழுவதிலும் காணக்கிடைக்கிறார். அவரது வாழ்க்கையைப் பற்றிப் படிக்கும்போது, ஒரு மனிதன் தனது பிறப்பு அடையாளங்களை துறப்பதில் இருக்கும் கஷ்டங்கள், அவற்றை மீட்பதிலும் இருக்கின்றன எனும் உண்மை தெரியவருகிறது. அப்படிப்பட்ட சமுதாய நெருக்கடிகள் நிறைந்திருந்ததை நம்முடன் ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்துகொள்கிறார். அதற்காக ராஜன் யாரையும் தூற்றவில்லை. சொல்லப்போனால், தனது தந்தையின் மனதை உடைத்தெறிந்த அஹோபில மடத்தின் தலைவருக்கு மருத்துவச் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளார். அடுத்த தலைவர் தேர்ந்தெடுப்பில் கலந்துகொண்டுள்ளார். ஆனாலும், அவருக்குத் தன் சொந்தங்களும் நண்பர்களும் அளித்த தண்டனை பெரும் ரணமாக இருந்திருக்கும். தேசாபிமானத்தில் நாட்டம் கொண்டிருந்ததில் ஹரிஜன மக்களுக்குக்காகப் பல சேவைகளைச் செய்துள்ளார்.
சிறுவயதில் சிறு விள்ளை தோசை வடை
பிரசாதத்துக்காக ஸ்ரீரங்கம் கோயிலாழ்வாரை தூக்கும் கைங்கரியத்தை
செய்திருக்கிறார். தேசிகரின் சந்நதியை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டி
தென்கலையாருடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். அவர் அனுபவித்த
நிகழ்வுகளைப் படிக்கும்போது கல்கி சொல்வதுதான் தோன்றுகிறது.
`ராஜன்..மனைவியையும் அழைத்துக்கொண்டு சர்க்கார் கடனைக் கழிக்கப் பர்மாவுக்குச் சென்றார். நானும் அவருடன் கூடச் சென்றேன். அங்கே சர்க்கார் ஆஸ்பத்திரியில் எத்தனையோ கஷ்டங்களை அவர் அநுபவித்தார். நானும் கூட அநுபவித்தேன்.மேலதிகாரி மேல் கண்ணாடிக் குவளையையும் தர்மா மீட்டரையும் வீசி எறிந்தார். நானும் பக்கத்திலிருந்த கண்ணாடி வெயிட்டைத் தூக்கி எறிந்தேன்..அவர் கப்பலில் ஏறினபோது நானும் டிக்கட் இல்லாமல் ஏறிவிட்டேன்..`
அந்தளவு நம்மை
இந்த சுயசரிதை ஈர்த்துவிடுகிறது. அவரது சுக துக்கங்கள் நம்முடையதாக
மாறுகின்றன. அவர் எப்படி எழுதியிருக்கிறார் என்பது மறைந்துபோய்,
எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதே நம் முன் நிற்கிறது.
நினைவு அலைகள்
ஆசிரியர் - டாக்டர் தி.சே.செள.ராஜன்
சந்தியா பதிப்பகம்
விலை - ரூ 225
ஆசிரியர் - டாக்டர் தி.சே.செள.ராஜன்
சந்தியா பதிப்பகம்
விலை - ரூ 225
இணையத்தில் வாங்க - நினைவு அலைகள்.
அருமை பைராகி!
ReplyDeleteஅருமை.. சுவாரஸ்யமாகச் சென்றாலும் அந்த காலத்தில் நடந்த கொடுமைகள் கண்முன்னே..
ReplyDeleteமிக மிக முக்கியமான புத்தகத்தை பற்றி எழுதியதற்கு நன்றி பைராகி ஜி
ReplyDelete