* பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாடினால்?
* பாகிஸ்தானின் வளம் மிக்க பல ஜீவ நதிகள் இந்தியாவுக்கு சொந்தமானதாக இருந்தால்?
* சானியா மிர்சா இந்தியாவின் மருமகளாகவே இருந்தால்?
இப்படி பல கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம். இதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஆகாமல் இருந்தால் நடந்திருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் பிரிந்தே ஆகவேண்டும் என்று உறுதியுடன் இருந்த ஒரே நபர் - ஜின்னா. சுதந்தர இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என்று அடம் பிடித்து, காந்தி, நேரு, படேல், மவுண்ட்பேட்டன் ஆகிய அனைவரும் பலமுறை எடுத்துச் சொல்லியும், பாகிஸ்தானை தனியாக பிரித்துக் கொண்டு போனார். அப்படிப் போனவர் அடுத்த வருடமே, அதாவது செப். 11, 1948ல் மரணமடைந்து விட்டார். அப்போது மவுண்ட்பேட்டனிடம் ஒரு அதிகாரி - ”இன்னும் கொஞ்ச காலம் ஜின்னா இருந்திருந்தால், பாகிஸ்தானை எங்கேயோ கொண்டு போயிருப்பார்” - என்றாராம். அதற்கு மவுண்ட்பேட்டன் சொன்னது - ”இவர் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவார் என்று தெரிந்திருந்தால், பிரிட்டிஷ் அரசாங்கம் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டிருக்காது”.
பாகிஸ்தான். 1947ல் இந்தியாவிலிருந்து பிரிந்து போனதிலிருந்து தற்போது அதிபராக இருக்கும் சர்தாரி வரையிலான கதை. நூல் பிடித்தாற் போல் வரலாறு பாடம். நடுவில் எங்கேயும் ‘Take diversion' இல்லை. பாட்டு இல்லை. ஆனால் சண்டை மட்டும் உண்டு(!!).
பாகிஸ்தான் பற்றி பேசும்போது காஷ்மீர் பற்றி பேசாமல் இருக்கமுடியுமா? இந்த காஷ்மீர் பிரச்னை எப்படி ஆரம்பித்தது என்ற விளக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதாவது, உடல்நிலை காரணமாக ஓய்வெடுக்க காஷ்மீருக்கு போக விரும்பினாராம் ஜின்னா. ஆனால், மன்னர் ஹரிசிங், ஜின்னாவின் காலடிகூட ஸ்ரீநகரில் படக்கூடாது என்று கூறிவிடவே ஜின்னாவிற்கு பயங்கர அவமானம் & கோபம். எப்படியும் காஷ்மீர் சில நாட்களில் பாகிஸ்தானோடு இணைந்துவிடும் என்று நினைத்திருந்தாலும், இந்த அவமானத்தைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமே. அதனால் அவர்கள் கண்டுபிடித்ததே ஒரு ரகசிய வழி. காஷ்மீரோடு போரிட வேண்டும். ஆனால் அதில் பாகிஸ்தானின் கை உள்ளது என்று யாருக்கும் தெரியக்கூடாது. இதற்காக பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருந்த ஆதிவாசிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்களை காஷ்மீருக்கு அனுப்பினார். அவர்கள் ஸ்ரீநகருக்குப் போவதற்குள் இந்த தகவலை கேள்விப்பட்ட இந்தியா அவர்கள் படையை அங்கே அனுப்ப, அந்த ஆதிவாசிகள் அலறி அடித்துப் பின்வாங்கினர். ஆனால், அவர்கள் கைப்பற்றிய இடம் ‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்’ என்று இன்றளவும் பாகிஸ்தான் பிடியிலேயே உள்ளது என்பது செய்தி.
ஜின்னாவுக்குப் பிறகு ஒருசில வருடங்களில் ஏகப்பட்ட பிரதமர்கள் மாறிவிட்டனர். (1948-1957 வரை மொத்தம் 6 பேர்!). ஆகவே நிலையான ஆட்சி என்ற பேச்சே கிடையாது. 1958ல் ஆட்சிக்கு வந்தவர் அயூப்கான். பாகிஸ்தானுக்கு நல்லது செய்தது இன்று வரை அயூப்கானைத் தவிர வேறு யாருமில்லை என்கிறார் ஆசிரியர். 1958 முதல் 1969 வரை அசைக்கமுடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அயூப்.
பின்னர் நடைபெற்ற முக்கியமான சம்பவம் - தாஷ்கண்ட் ஒப்பந்தம். உலக நாடுகளின் நிர்ப்பந்தத்தால் இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கான போரை நிறுத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான். சோவியத் யூனியனில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அயூப் கையெழுத்திட்டது பாக் அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவேயில்லை. அயூபை தூற்றியவாறே, கண்டனப் புரட்சியும் செய்தனராம்.
அடுத்தது, பங்களாதேஷ் பிறந்த விதம். அப்போது நடந்த படுகொலைகளைப் பற்றி படிக்கும்போதே கொடூரமாக இருக்கிறது. உலக நாடுகளைப் போல் இந்தியாவும் தன் குரலை தைரியமாக வெளிப்படுத்தியது - யெஸ். பங்களாதேஷ் வேண்டும். இந்த சமயத்தில் நடந்த போர் மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி ஓரிரு அத்தியாயங்கள் விரிவாக வருகின்றன.
இதன் பிறகு ஜியா, பூட்டோ, பேனசிர் எல்லாரும் வந்து போனபிறகு வந்தவர் முஷரஃப். பொருளாதாரச் சீர்திருத்தம், வறுமை ஒழிப்பு, மக்களின் கல்வி ஆகிய விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்தியது இவர் மட்டும்தானாம். பிறகு வழக்கம்போல் ஜனநாயகம் மலரும், இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று சொல்லி அதிபராகப் பதவியேறியவர் ஆசிஃப் அலி சர்தாரி. இந்த நிமிடம் வரை அது வரவில்லை என்று புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர்.
பாகிஸ்தான் வரலாற்றில் அனைத்து முக்கியமான சம்பவங்கள், ஆட்சியாளர்களைப் பற்றியும் அறிவதற்கு ஏற்ற புத்தகம்.
***
No comments:
Post a Comment