அன்சைஸ்
ஆசிரியர்: பா.ராகவன்
பக்கங்கள்: 166
விலை: ரூ.110
மதி நிலையம்.
விமானம் பறக்கத் தயாராகும்போது ஒரு அறிவிப்பு வரும். ”உங்க சீட்-பெல்ட்களை போட்டுக் கொள்ளவும்”. சரின்னு போட்டுக்குவோம். கொஞ்ச நேரம் போனபிறகு, சரி, இப்போ நிலைமை சரியாயிடுச்சு, உங்க சீட் பெல்ட்களை கழற்றி விடணும்னா விட்டுக்கலாம்னு சொல்வாங்க. பிறகு மறுபடி இறங்கும்போதும் அதே மாதிரி போட்டுக்கணும். அதே மாதிரிதான் இந்த புத்தகம் படிக்கும்போதும். விஷயத்தை சொல்றேன். மேலே படிங்க.
அன்சைஸ். பாராவின் கட்டுரைத் தொகுப்பு. மொத்தம் 25 கட்டுரைகள். ஒரே அமர்தலில் மொத்த புத்தகத்தையும் படிச்சி முடிச்சிடலாம். அட 160+ பக்கங்கள்தானேன்னு சொல்லக்கூடாது. அவை சுவாரசியமா இருப்பதால் அப்படி சொன்னேன்.
புத்தகத்தை நகைச்சுவை, சமச்சீர் மற்றும் இதர கட்டுரைகள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முன்னுரை, என்னுரை இரண்டுமே... சாரி சாரி. முன்னுரையை பேயோனும், என்னுரையை பாராவும் எழுதியிருக்கிறார்கள். முன்னுரையிலேயே பின்னர் சிரிப்பதற்காக நம்மை தயார் செய்துவிடுகிறார் பேயோன்.
முதல் பகுதியை படிக்கும்போது கண்டிப்பாக சீட் பெல்ட் போட்டுக் கொள்ளவும். ஏன்னா, சிரிச்சி சிரிச்சி நாற்காலியிலிருந்து கீழே விழ வேண்டியிருக்கும். அதுக்கு, கீழேயே உட்கார்ந்து படிக்கலாமேன்னு சொல்றீங்க. அதுவும் சரிதான். மேலும், தனியாக இருக்கும்போதோ அல்லது தெரிந்தவர்கள் நடுவில் இருக்கும்போது மட்டுமே படிக்கவும். இல்லேன்னா, தெரியாதவங்க நம்மள ‘லூசு’ன்னு நினைக்க வாய்ப்பிருக்கு. அட, இந்த விஷயத்தைப் பற்றியே ஒரு கட்டுரை இதில் இருக்கு. அ.முத்துலிங்கத்தின் புத்தகத்தை பாரா படித்த இடம்/சூழல். இதே போல் பல கட்டுரைகள். எள்ளல்களிலே சிறந்த எள்ளல், சுயஎள்ளல்னு சொல்வாங்க. அந்த சுயஎள்ளல் கட்டுரைகள்தான் இந்த முதல் பகுதி. கல்யாண வீட்டில் சாப்பிட்ட விதம், புதிதாக துணி தைக்கக் கொடுத்த அனுபவம், ராசிக்கல்/ மோதிரங்கள் அணிய ஆரம்பித்த அனுபவம் என அனைத்திலும் வரிக்கு-வரி கலாட்டாதான்.
அடுத்த பகுதி : சமச்சீர். இது கொஞ்சம் ரிலாக்ஸ்டா, மெதுவா, கவனிச்சி படிக்க வேண்டிய பகுதி. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இந்த சமச்சீர் விஷயம் பரபரப்பா பேசப்பட்டு வருது. அதைப் பற்றி பாரா எழுதிய கட்டுரையில் - பத்தாம் வகுப்பு சமச்சீர் சமூக அறிவியல் பாடத்தை படித்தது ஒரு சிறந்த நகைச்சுவை நூலை வாசித்த உணர்வை தருதுன்னு சொல்றாரு. இதற்கு பல உதாரணங்களும் தந்திருக்காரு அந்த கட்டுரையில். தரமே இல்லை, அப்படி இப்படின்னு இவர் திட்டி எழுதியதற்கு பல எதிர்வினைகள் வந்தனவாம். அதனால் தொடர்ச்சியாக பல விளக்கங்களை எழுதியுள்ளார். எப்படி இருக்கலாம் கல்வி?, சமச்சீர் கல்வி என்றால் என்ன என்று மொத்தம் ஐந்து கட்டுரைகள்.
கல்வித் தரம், மெட்ரிக்/சிபிஎஸ்சியில் படிக்கும் மாணவ/மாணவியரின் நிலைமை ஆகியவற்றை சொல்லும்போது இவர் எடுத்துக் காட்டும் முக்கியப் பிரச்னை - ”அறையில் பிள்ளைகளை யாரும் பேச அனுமதிப்பதுகூட கிடையாது”. சரியான பாயிண்ட். ”எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். பேசினால் தண்டனை, உடனே வேறு யார் பக்கத்திலும் மாற்றி உட்கார வைத்துவிடுகிறார்கள். எப்போதும், எங்கேயும் ராணுவ அணிவகுப்பு போல் வரிசையாகவே போக/வர வேண்டும். கல்வியில் பழுதில்லை ஆனால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை”. மொத்தத்தில் இந்த ஐந்து கட்டுரைகளும் கண்டிப்பாக படிக்க / விவாதிக்கப்பட வேண்டியவை.
கடைசி பகுதி : மேலும் சில அனுபவக் கட்டுரைகள். இதில் இவர் வாசித்த சில புத்தக அறிமுகங்களையும் படிக்கலாம். ராமன் ராஜா தமிழில் பொழிபெயர்த்த சீனா - விலகும் திரை, தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரின் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களைப் பற்றிய கட்டுரைகள். யானி’யைப் பற்றி பாரா எழுதிய புத்தகத்தைப் பற்றிய ஒரு அறிமுகக் கட்டுரை, உடனே அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தூண்டுமாறு உள்ளது. அதே போல், காதி கிராமோத்யோக் பவன். ஏதோ ஒரு காலத்தில் தேன் வாங்குவதற்காக போயிருந்த கடை. அதில் கிடைக்கும் பொருட்களைப் பற்றி குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் கட்டுரை ஒரு கண்-திறப்பான்.
மொத்தத்தில் ’A Samiyarmadam Times Best Seller'ஆக வெளிவந்திருக்கும் அன்சைஸ் ஒரு சுவாரசியமான தொகுப்பு.
***
No comments:
Post a Comment