மலையாள இலக்கியங்களின் ஒரு
முக்கிய அங்கமாகவும், மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களில்
மிக முக்கியமானவருமாக இருக்கும் வைக்கம் முகமது பஷீரின் ஒரு குறுநாவல்தான் மதிலுகள்.
அவர் வைக்க ஆசைப்பட்ட பெயர் ‘பெண்ணின் மணம்’.
ஒரு மிகப்பெரும் பரிசை விட சிறிய புன்னகை நம்மை நெகிழ்த்திவிடுவதில்லையா?
அதுபோலத்தான் இந்தப் புத்தகமும். மிகச்சிறியது
எனினும் ஏற்படுத்தும் தாக்கமும் பாதிப்பும் அதிகம். ’நானே
பூங்காவனமும் பூவும்’ இது நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு
வரி, இதுதான் பஷீர். அவர், அவர் சார்ந்த நிகழ்வுகளின் கோர்வை அவ்வளவுதான். அதிலொரு
சம்பவம் இந்த மதிலுகள்.
ஒரு போராட்டத்தில் பஷீர்
சிறைசெல்ல நேர்கிறது. அங்கு அவர் காணும் வார்டர்களின்
அட்டூழியங்கள் பணத்தினால் கைதிகளுக்குக் கிடைக்கும் சௌகர்யங்கள் போன்றவற்றை விவரிக்கிறார்.
அங்கு யாரும் தன்னளவுக்கு ஈடில்லை என்று நினைக்கிறார். தனக்கான ஒரு ரோஜாத் தோட்டத்தை அங்கு உருவாக்கி, அவைகளுடனும்
அங்கிருக்கும் மரங்களுடனும் உறவாடித் திரிகிறார். புரட்சி,
போராட்டம் என்றெல்லாம் கடந்து வந்த பாதையை யோசித்துப் பார்க்கையில் ஒரு
பெரும் மகிழ்ச்சியொன்றை இழந்ததன் சுவடுகள் அவரை ரணமாக்குகின்றன.
பெண், தான் கடந்துவந்த பாதையில் குறுக்கிடாத ஒரு இன்பமாக அவர் கருதுகிறார்.
ஒரு பெண்ணின் மணத்துக்காகவும் ஸ்பரிசத்துக்காகவும் ஏங்குகிறார்.
தினம் தினம் பேருந்திலோ வேறெங்காவதோ பெண்களைப்பார்த்து விட்டு அவர்களைத் தொலைத்துத்
தவிப்பதல்ல இந்தத் தவிப்பு. அதுவரை பெண்ணின் மணம் காணாத ஒரு தவிப்பு. பெண்கள் சிறைக்கும் ஆண்கள் சிறைக்கும் இடையே இருந்த ஒரு ஓட்டை அடைக்கப் பட்டிருக்கும்
சுவடைக் கண்டு வருந்துகிறார். அப்போது மதிலுக்கு அப்புறத்திலிருந்து
ஒரு குரல் கேட்கிறது. மதிலே சாட்சியாக இருவரும் காதலிக்கிறார்கள்.
முகம்பார்க்காத காதல். ஒரு நேசம். கதையின்
நுட்பமான பகுதியே, அந்த இடைப்பட மதிலின் பூச்சலில் பஷீர் அந்தப் பெண்ணின் மணத்தை உணருகிறார்.
அது, அவர் வளர்க்கும் ரோஜாக்கூட்டங்களின் மணத்தை விட அவருக்கு மகிழச்சி தரக்கூடியதாக
இருக்கிறது.
அவள் பெயர் நாராயணி, அவளுக்கு ஒரு ரோஜாச்செடியைப் பரிசளிக்கிறார். அது மதிலுக்கு
அப்பால் நன்றாக வளர்கிறது இவர்களின் காதலைப்போல. தன்னை விரும்புகிறவன்
தன்னைத்தான் விரும்புகிறானா இல்லை தன் நிலையில் யார் இருந்தாலும் விரும்புவானா என்றறிய
விரும்புகிறாள். தானொரு அழகியில்லை, தானொரு
அதிர்ஷ்டமற்றவள் என்றெல்லாம் கூறுகிறாள். எல்லாப் பெண்களையும்போல
தன்னை விரும்புபவனை இழக்க விரும்பாத ஒரு மனம். இறுதியில் இருவரும்
சிறைக்குள் ஓரிடத்தில் சந்திக்க முடிவெடுக்கிறார்கள்.
வேதனையின் துளிகளால் நாவல்
முடியும்போது ஒரு துன்பத்தின் நிழலை மனதில் பரப்பி விடுகிறது. விரும்பிய ஒரு பொருள் கிடைக்காமல் போகும்போது ஏற்படும் துக்கத்தை பிரதிபலிக்கிறது
இந்த நாவல். மொழிபெயர்ப்பு அவ்வளவு உவப்பாக இல்லையென்றாலும் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாக இருக்கிறது கதை. இதை ஒரு சினிமாகவும் அடூர் கோபாலகிருஷ்ணன்
எடுத்திருக்கிறார். வெறும் 52 பக்க ஒரு குறுநாவல் ஒரு வெற்றிச் சித்திரமாக ஆனதில் அடூருக்கு
இருந்த சோதனைகள் என்னென்ன என்பதை அவர் ஒர் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது பின்னிணைப்பாக
கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பெரும் சவாலாகக் கருதியது பஷீரை திரையில் பிரதிபலிக்கத்தான். அந்த திரைக்காவியம் யூ-ட்யூபில் கூட காணக் கிடைக்கிறது.
குறுநாவல் | மொழிபெயர்ப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 70 | விலை ரூ. 50
இணையத்தில் வாங்க: உடுமலை
கேள்விப்பட்டிருக்கிறேன்! உங்கள் விமர்சனத்தைப் படித்ததில் முதலில் புத்தகதைப் படித்துவிட்டு பிறகு படத்தைப் பார்ப்பது நல்லது போல் தெரிகிறது
ReplyDelete