தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு நகர்வு, ஒட்டுமொத்தமான அணுகுமுறை என விளக்குகிறார். முழுமையான என்பதை holistic என்பதன் தமிழாக்கமாகப் பார்க்கலாம். மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை மையமாகக் கொண்டது மதநோக்கு/தத்துவ நோக்குள்ள ஆன்மிகம். அண்டத்தில் மனிதனின் இருப்புக்கு அர்த்தம் என்ன? உண்மையில் எல்லயற்ற பரிமாணம் கொண்ட பிரபஞ்சத்துக்கும் சராசரியாக எண்பது வருடம் வாழ்ந்து செல்லும் மனிதனுக்கும் என்ன உறவு இருந்துவிட முடியும். புலன்களின் சங்கமமான அகத்தில் `தான்` எனும் இருத்தலின் உணர்வில் பிற அனைத்தையும் வரையறை செய்ய விழைகிறான் மனிதன். தனது இருப்புக்கு முன்னால் சிறு குருவியின் இருப்பையும், ஒரு கருப்புத்துளையின் இருப்பையும் நிர்ணயிக்கப் பார்க்கிறான்.
ஆம்னிபஸ்ஸில் எழுதும் பாஸ்கர் ஒரு இலக்கிய விவாதத்தில் கூறியது - தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து பிரபஞ்சாகார தரிசனங்களை எட்டிப் பிடிப்பதுதான் இலக்க்கியத்தின் பிரதான நோக்கம். அவ்வகையில் தனிப்பட்ட அனுபவங்களை மானுடப் பொதுமைக்கான தத்துவமாக மாற்றும் கலையே இலக்கியம் எனச் சொன்னார். அடிப்படையான அக எழுச்சிகளுக்குக் காரணத்தை அறிந்துகொள்ளாவிட்டால், ஒரு கதையோ நாவலோ அந்தந்த சூழ்நிலைக்குள்ளாகவே முடங்கிப் போய்விடும் அபாயம் உள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் காலத்தை கடந்து நிற்கும் சாத்தியத்தை முழுமெய் நோக்கு எனவும் சொல்லலாம். தத்துவத் தளத்தில் மீனின் வயிற்றில் கடல் என்பது ஒரு முழுமெய்யானப் பார்வையைத் தரும் உண்மை.
ஒரு வகையில் எல்லாவகையான கலையும் முழுமெய் நோக்குக்கானத் தேடல் எனச் சொல்லலாம். இலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்னவாக இருக்க முடியும்? காலத்தைத் தாண்டிய கூற்றுகளையும், மனித அகத்தின் ஆழங்களையும் தொடமுடிவதே இலக்கியத்தின் ஆன்மிகசாரமாக இருக்க முடியும்.
பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் அறிதலை மனிதன் அறம் என வகுத்திருக்கிறான். Please can I want some more என ஆலிவர் ட்விஸ்ட் எனும் அநாதைச் சிறுவன் ஏந்திய பாத்திரத்தை நிரப்ப நமது காவிய மணிமேகலையின் அட்சயப்பாத்திரம் என்றும் காத்திருக்கும். மணிமேகலைச் சூழலில் பஞ்சம் பட்டினி எதிர்க்க மணிமேகலை புறப்பட்டாள் என்றால் அவளுடைய காலத்தோடு நிற்கவில்லை.
இலக்கியத்தை வெறும் அரசியலாக அல்லது கருத்தியலாக மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் பேதங்களையே இலக்கியம் என்று காண நமக்குச் சொல்லித்தருகிறார்கள். அப்படிப் பார்க்கும் ஒருவன் உடனடியாக இலக்கியத்தின் பெரும் பகுதியை இழந்துவிடுகிறான். சமகாலப் பிரச்சனையிலிருந்தும், தன் சுயத்திலிருந்தும் இலக்கியத்துள் இறங்குவது இயல்பானதே. ஆனால் அவற்றை இலக்கியத்தை அளக்கும் இறுதிக் கருவிகளாகக் கொண்டால் பிறகு இலக்கியத்தில் அடைவது நமது அன்றாடத் தேவைகளினாலும் நமது அகங்காரத்தாலும் அள்ளப்படும் சிறு பகுதியைப் பற்றியே. (பக்: 15)
ஜெயமோகனிடம் குரு நித்யா கேட்கிறார் - தமிழின் தொல்பிரதி என்ன? ஒரு காலகட்டத்தின் பண்பாட்டின் நுனியில் நிற்பவர்கள் தொகுக்கும் நீதி உணர்வுகளை அவர்களுக்குப் பின்வருபவர்கள் கைபற்றுகிறார்கள். குல அறமாகவோ, தேசத்தின் அரசியல் நீதியாகவோ அவை மாறுகின்றன. இப்படி ரிலே ரேஸ் போல இன்றுவரை கைமாற்றப்பட்டு வரும் நீதி உணர்வு என்பது ஜெமோ சொல்வது போல, கடவுள்களும் கனவுகளும் முளைக்கும் சேற்றுமண். இப்படி காலம் காலமாகக் கைமாற்றப்பட்டு வரும் நீதி நமது அகத்தில் தேங்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் அதைத் தொட்டுப் பேசும் இலக்கிய படைப்பை நமதெனக் கொண்டாடுகிறோம்.
`தோற்கடிக்கப்பட்ட அன்னை` எனும் கட்டுரை நமது பண்பாட்டில் அன்னையின் சித்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. தாய் வழிச் சமூகங்களிலிலும், கட்டற்ற பாலியல் சுதந்தரத்தை அனுபவித்த அக்காலகட்டப் பெண்களிலும் இல்லாத கட்டுப்பாடு நமது சமூகத்துள் நுழைந்த அவலத்தைப் பற்றிப் பேசுகிறது. பரத்தையர் சமூகம் மட்டுமல்ல தேவதாசிகள் குலமும் பெண்வழிச் சமூகத்தின் எச்சங்கள். ஆண்கள் தேவையை ஓரளவுக்கு மேல் அனுமதிக்காத இக்குழுமங்களின் இன்றைய நிலைமை பற்றி சொல்லவேண்டுமா என்ன? அவளது உடம்பின் அணுக்கள் விதைகளாக மாறி நம் காலடி மண்ணிலிருந்து முளைத்தெழுந்தபடியே உள்ளன என்கிறார் ஜெயமோகன். மீண்டும் மீண்டும் அன்னையரைப் பற்றி நாம் எழுதுவதற்கும் இதுதான் காரணம். தவறிழைக்கப்பட்ட நீதியின் தரப்பில் என்றும் அவர்களது பாதத்தடம் அழுத்தமாகப் பதிந்திருக்கும். தமிழ் இலக்கியத்தின் ஆதாரம் அன்னையரின் சித்திரத்தில் உள்ளது.
அதே `கண்காணா இணைநதி` எனும் கட்டுரையில் நமது மரபில் பெண்மைக்குள் இருக்கும் உக்கிரத்தைப் பற்றி பேசுகிறார். நீலி, ஒள்வையார், ஆண்டாள், கண்ணகி என ஒவ்வொருவரும் பெண்மையை நிராகரித்தபடி தங்களை நிறுவியுள்ள பெண்கள். இளவயதில் முதுகிழவியைப் போலிருந்த ஓளவையார், உலக ஆடவருக்கான பெண்ணல்ல நான் கண்ணனின் பெண் என ஆண்டாள், பெண்மையின் குறியான முலையை பிய்த்தெறிந்த கண்ணகி என ஒவ்வொருவரும் அறமீறலின் போதெல்லாம் பெண்மையையே துறக்கத் துணிந்தவர்கள். ஒரு ஆணாக இச்சித்திரம் மிகவும் உக்கிரமானது. ஆணின் பார்வையில் பெண்மையின் உக்கிரத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. அறத்தின் குலக்கொழுந்தாக அன்னையர் இருக்கும்வரை இந்த உக்கிரம் தான் அவர்களது அரண். அதைக் கண்டு பயப்படுவதும், வெளிக்கொணராதவண்ணம் இருத்தலும் ஆண்களுக்குத் தேவை. அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசும் படைப்புகள் நமது ஆன்மிக சாரத்தைப் பற்றிப் பேசுபவையாக இருக்கின்றன.
பஷீர் மற்றும் சிவராம் காரந்தை ஜெயமோகன் பார்க்கச் சென்ற அனுபவங்கள் மிக ருசியானவை. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாக அன்றைய ஜாம்பவான்களைச் சந்திக்கச் சென்றிருக்கிறார் ஜெமோ. அவர்களது தேடலும், கவலைகளும் செயல்பட்ட தளத்தில் ஜெமோவின் அக்காலகட்ட தேடல் இல்லாததால் சந்திப்புகளில் சில சமயம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, சிவராம் காரந்தின் சமூக செயல்பாடுகளும், இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய வழக்குகளும் ஜெமோவைக் கவரவில்லை. அவை புனைவெழுத்தாளனுக்குத் தேவையில்லாத வேலை என்பதே அவரது எண்ணம். இலக்கியத்தின் சாரம் சார்ந்த கேள்வியை அவர்களிடம் விவாதிக்கும் மனநிலையில் இருந்திருக்கிறார். அழியாத நீதியே இலக்கியத்தின் இலக்கு என பஷீரும், அறத்தின் முடிவற்ற தேடலே இலக்கியம் எனவும் ஒரே பொருள்வரும்படியான இரு கூற்றுகளை அவர்களிடம் பேசி அடைந்திருக்கிறார்.
ஒருவரிடம் அறச்சீற்றமாக வெளிப்படும் , மற்றொருவரை களப்பணியாளராக மாற்றும், வேறொருவரின் கவித்துவ தரிசன வழியாக வெளிப்படலாம், ஏன் அங்கதமாகக் கூட நீதியுணர்வு வெளிப்படலாம் என ஜெமோ தெரிவிக்கிறார். எப்படியாகினும் அக்குரல் ஆழ்ந்த வேரைக் கொண்டதாக இருப்பது மட்டுமே ஆன்மிகப் பார்வையின் சாரம் என்கிறார்.
மணிமேகலையும், கீதையும், ஆலிவர் ட்விஸ்டும், கந்தசாமிப்பிள்ளையும், இடாக்கினிப் பேய்களும், எங்க வீட்டுக்கு ராஜா வந்திருந்தார் எனச் சொல்லும் குழந்தையும், குற்றத்தை மறைக்க முடியாமல் தவிக்கும் ரஸ்கல்நிகாஃபும், குற்றம் செய்திடுவோமோ எனப் பதற்றப்படும் பாபுவும், குற்றத்தின் பலனெனத் தெரியாமல் தவிக்கும் பண்டாரமும், ஏய் இதுதானாயா நியாயம்? எனச் சட்டையைப் பிடித்து உலுக்கும் கும்பமுனியும், அட்சயப்பாத்திரமாக மாறும் கெத்தல் சாகிப்பும், பலநாள் பசியையும் மறந்து தனது மொழியைப் பேசாதுபோனாலும் மானுட மொழியைப் பேசுபவனுக்கு யாம் உண்போம் என ரொட்டியைப் பகிர்ந்துகொடுப்பதும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் அகிலஸ்ஸிடன் பிள்ளையின் பிணத்தை யாசகம் கேட்டு வந்த கிழ அரசருக்காக கண்ணீர் உகப்பதும் நமது அகத்துடன் உரையாடுவது நீதியுணர்வினால் இல்லாமல் வேறென்னவாம்?
ஆழ்நதியைத் தேடி
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
உள்ளடக்கம்: கட்டுரைகள்
விலை: ரூ 60/-
இணையத்தில் வாங்க: ஆழ்நதியைத் தேடி
No comments:
Post a Comment