ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும்
லட்சியம் பல தடைகளைத் தாண்டி வெற்றிபெறும்போது அது சாதனையாகிறது. தடைகள் என்பது பெரும்பாலும் திசைதிருப்புதல்களாகவே அமையும். இலவசமாக கொடுக்கப்படுவதில் வெறுக்கப்படுவது அறிவுரைகள் மட்டுமே. நமக்கான பாதையில் ஒவ்வொரு சிக்னலிலும் ஒருத்தர் நின்று கொண்டு அவர்களின் பாதையை
நமக்குள் திணிப்பார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று
லட்சியம் நோக்க நடந்துகொண்டிருக்கும் நமக்கு வேறொரு வழி போகும் ஒரு சொகுசுப் பேருந்து
மனதிலொரு சஞ்சலத்தை ஏற்படுத்தும். அந்த கணத்தில் சரியாக எடுக்கப்படும்
ஒரு தவறான முடிவு நம்மை வேறொரு பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.
இந்த நாவல் சுற்றிவருவது
ஒரு குடும்பம், குறிப்பாக ஒருவனை மட்டுமே. முகுந்த். முகுந்தனின் கிரிக்கெட் ஆசை. நம் நாட்டில்
தேசப்பற்றினை பொங்கிவழியச்செய்யும் வஸ்துக்களில் கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஒரு முக்கிய
இடமுண்டு. சச்சினை கடவுளாகக் கும்பிடுவதிலிருந்து மகனுக்கு சச்சின்
என்று பெயர்சூட்டுவது வரை எல்லாமே இதில் அடக்கம். நான் கூட அதே
மதம்தான். எங்கள் மதம் கிரிக்கெட், எங்களுக்கான
கடவுள் சச்சின். இருபத்தி மூன்று வருடங்களாக பள்ளி, கல்லூரி, வேலை என்று இடங்களும், கடமைகளும் மாறுந்தோறும் எனக்குள் திணிக்கப்படும் பிரச்சினைகளை சமாளிக்கவேண்டிய
கட்டாயங்களில், ஆறுதல் சொல்ல யாருமற்ற அரைவட்ட நிலவொளிகளில்,
பலநாட்களை கடந்து வந்திருக்கிறேன். சொல்ல விஷயங்கள்
பலவிருந்தும் கேட்க யாருமற்ற ஒரு தனிமையில் இதயச்சிறைகளில் துயரத்தின் ஓலம் எதிரொலிக்கும்
வேளைகளில், கதறி அழவிரும்பாத ஆண்மையில், இவற்றையெல்லாம் மறக்க ஒரு நேரக்கடத்தியாக அறிமுகமாகி ஒரு போதையாகி பின்னர்
அதுவே ஒர் மருந்தாகவும் ஆனதெனக்கு கிரிக்கெட். முக்கியமாக சச்சின்.
முகுந்த், நன்றாக கிரிக்கெட் ஆடக்கூடிய ஒரு வளர்ந்த, கல்லூரி செல்லும்
சிறுவன், இளைஞன். நன்றாய்ப் படிக்கும் ஒருவனுக்குத்
தம்பியாகவும், படிப்பு மட்டுமே வாழ்வை உயர்த்தும் எனுமொரு உயர்கொள்கை
கொண்ட தந்தைக்கும் மகனாகவுமானவன். லட்சியத்தின் போக்கில் நமக்காக
வாய்ப்புகள் வருவதென்பதரிது. முகுந்தனின் விளையாட்டுத்திறனை அறிந்து
பல்கலைக்கழக அணியில் ஆட வாய்ப்பு வருகிறது. அதுவும் பம்பாய்க்கு
சென்று. படிப்புதான் உன்னை உயர்த்தும் என்று தடை போடுகிறார் அப்பா.
வேறு வழியில்லை லட்சியத்தை விட்டு வேறு வேலை பார்ப்போம் என்று மனதொடிந்த
நிலையில் ஆர்த்தி மூலமாக ஒரு வாய்ப்பு வருகிறது. முகுந்த் பொய்
சொல்லி பம்பாய் செல்கிறான், கிரிக்கெட் ஆட.
ஒரே ஆறுதலாக இருக்கும் அம்மா, அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் அண்ணன், ஒழுங்காக பயிற்சிக்கு
செல்லமுடியாததால் திட்டும் கோச், நன்றாக பவுலிங் போடுவதால் தன்னை
வெறுக்கும் சக விளையாட்டுக்காரன் என அனைத்தும் பாதகங்களாகி வெறுப்பிற்கு இட்டுச்செல்கிறது
முகுந்தனை. அந்த சமயங்களிலெல்லாம் அதிகமாக நேசிக்கிறான் கிரிக்கெட்டை.
தனது இயலாமைகள் மாறும் எனும் கனவோடு.
பொய் சொல்லி பம்பாய்க்கு
சென்று கிரிக்கெட் ஆட, முதலிரண்டு மேட்ச்களில் முகுந்தன்
தான் மேன் ஆப் த மேட்ச். மும்பையில் தூரத்து உறவுக்காரியான மாடர்ன்
லல்லி மேல் காதலாகிறான். முந்தைய எல்லா சிக்கல்களின்போதும் பொறுமைகாத்து
தனக்கான நாள் வருமென காத்திருந்தவன் லல்லியிடம் மயங்கி தனக்கான நாளை வீணடிக்கிறான்.
முகுந்தன் இல்லாது அவன் ஆடும் அணி தோற்கிறது. அவளிடம்
பெற்ற முத்தமும், அவளின் ஸ்பரிசமும் முகுந்தனைத் தொலைக்கிறது.
ஒவ்வொருத்தனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ,
தோல்விக்குப் பின் நிச்சயம் ஒருத்தி இருப்பாள். இந்த போதையிலிருந்து விடுபட்டவன் எப்படி லட்சியத்தை அடைகிறான் என்பதே மிச்சம்.
லட்சியத்தை மிக நேசிக்கும்பொருட்டு
எந்தத் தடையோ மனப்பிறழ்ச்சியோ வந்தாலும் அந்த உயர் லட்சியம் நம்மை சரியான பாதைக்கு
இழுத்துவிடும். ஒரு சுய-முன்னேற்றத்தனமான
கதையாகத் தோன்றினாலும் சொல்லப்பட்ட விதம் நடுவில் எங்கும் இடைநிறுத்த முடியாத அளவு
சுவாரஸ்யமானது. சில புத்தகங்களைப் படிக்கும்போது நாயகனோடு நம்
மனம் பயணப்படும். சில புத்தகங்களில் மட்டுமே நாயகனாகவே தன்னை
பாவித்துக் கொள்ளும். அத்தகைய வகையில் நான் கடந்து வந்த பாதையை ஒவ்வொரு பக்கத்திலும் நினைவூட்டிய ஒரு புத்தகமிது. கிரிக்கெட்டை காதலிப்பவர்களுக்கு நிச்சயம் பரிந்துரைப்பேன்.
நாவல் | சுஜாதா | பக்கங்கள் 168 | விலை ரூ. 115
இணையத்தில் வாங்க: கிழக்கு
No comments:
Post a Comment