செய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே
ஆசிரியர்: P.V.R.K.பிரசாத். இ.ஆ.ப (ஓய்வு)
தமிழில்: கலைமாமணி டாக்டர் P.B.ஸ்ரீனிவாஸ்
பக்கங்கள்: 410
விலை: ரூ.150
வானதி பதிப்பகம்
PVRK.பிரசாத்.இ.ஆ.ப(ஓய்வு). இந்தியாவில் பல்வேறு இடங்களில் பற்பல பதவிகள் வகித்தவர். 1979-84 வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். அந்த காலகட்டத்திற்கு முன் அவர் இருந்த விதம் - சிகரெட், குடி, சீட்டுக்கட்டு - ஜாலியான வாழ்க்கை. திருப்பதி பாலாஜி முன் பதவியேற்றதிலிருந்து அடுத்த இருபது ஆண்டுகள் (இன்று) வரை அவருடைய வாழ்க்கை - தலையில் குடுமி, நெற்றியில் நாமம். ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரம் வரை பூஜை, பக்தி, பாடங்கள். இவரது சக-கல்லூரி மாணவர்கள், இன்றைய கோலத்தைப் பார்த்து, நம்ம பிரசாத் இப்படி மாறுவான்னு நான் நினைக்கவேயில்லை என்று சொல்கிறார்களாம். மேலும் இவரது குடும்பம், குழந்தைகள் அவர்களின் திருமணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அட, இது PVRKPயோட சொந்தக் கதை பற்றிய புத்தகமா? பதில்: அப்படி சொல்ல முடியாது. மேலே படிங்க.
1979-84 ஆண்டுகளில் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். ( நன்றி: விக்கி http://en.wikipedia.org/wiki/List_of_Chief_Ministers_of_Andhra_Pradesh) ஒவ்வொருவர் வந்ததும் அவர்களது அடிப்பொடிகள் பற்ற வைக்கும் முதல் பதவி/மனிதர் - EDஆக இருக்கும் PVRKPயைப் பற்றிதான். திருப்பதியில் ஏதோ ஒரு திட்டத்தில் ஊழல் நடக்கிறது, ED பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். அவரை மாற்றி வேறொருவரை நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்களாம். சில பேர் வேண்டுமென்றே வழக்குகள் தொடர்ந்து, அவரை இடமாற்றம் செய்துவிட வேண்டும் என்று முயற்சித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் வெற்றி பெற்று, ஒவ்வொரு முதலமைச்சரையும் சந்தித்து, தன் நிலையை / நடவடிக்கைகளை விளக்கிச் சொல்லி தனது பதவிக்காலம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிருக்கிறார். சென்னா ரெட்டி, N.T.ராமா ராவ் அவர்களைப் பற்றி, அவர்களோடு இவர் பேசிய சம்பவங்களையெல்லாம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
அப்போ, இது ஆந்திராவின் அரசியல் கதையா? பதில்: அப்படியும் சொல்ல முடியாது. மேலே படிங்க.
திருமலையில் பக்தர்களின் வசதிக்கென எந்தவொரு திட்டத்தை நிறைவேற்ற PVRKP முயற்சித்தாலும் அதற்கு தடையாக இருந்தவர்கள் உள்ளூர் ரவுடிகள்.
* சாலையை அகலப்படுத்துதல்
* கடைகளை அப்புறப்படுத்துதல் (அவர்களுக்கு வேறொரு நல்ல இடத்தில் கடை வைத்துக் கொடுத்தார்)
* பழைய கட்டிடங்களை இடித்தல் (அவர்களுக்கும் இன்னொரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தல்)
* மலை முழுவதும் சுற்றித் திரிந்து பக்தர்கள்/பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்துவந்த மாடுகளைப் பிடித்து ஓரிடத்தில் வைத்து பால் பண்ணை துவக்குதல்
போன்ற திட்டங்கள் அனைத்திலும் ரவுடிகள் தொந்தரவுதான். சில முறை PVRKP மேலேயே கல்லடிகள் விழுந்திருக்கின்றன. சுற்றி இருந்தவர்கள் காப்பாற்றினாலும், ஒரு தடவை ஒரு கல் தலையை பதம் பார்த்ததாம். இப்படியாக பல அதிரடி சம்பவங்கள். ஒவ்வொரு தடவையும் தன் நேர்மையான நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவைப் பெற்று தன் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் இவர்.
அப்போ, இது தாதாக்களை அடக்கும் ஒரு ஹீரோவின் கதையா? பதில்: அப்படியும் சொல்ல முடியாது. மேலே படிங்க.
த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற மடங்களின் தலைவர்கள், ஜீயர்கள், ராமகிருஷ்ணா மடம் போன்ற இதர துறவிகளின் நிர்வாகங்கள் அனைவரும் பாலாஜியின் மேல் கொண்டுள்ள பக்தியின் காரணமாக அவ்வப்போது திருப்பதி வந்து செல்வார்கள். சேவை நேரம், கோயில் நடவடிக்கைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இப்படி எதைச் செய்யவேண்டுமென்றாலும் ஒரு அரசு அதிகாரி உடனடியாக செய்ய முடியாது. மேற்சொன்னவர்களை ஆலோசித்து, சாஸ்திர, சம்பிரதாய, ஆகம நியமங்களின் விதிகளையே பின்பற்ற வேண்டியிருக்கும். இதற்காகவே, பல்வேறு சமயங்களில் பல தலைவர்களை சந்தித்து பேசத் துவங்கிய PVRKP மெல்ல பக்தி மார்க்கத்தில் இழுக்கப்பட்டார். பல ஊர்களில் பல கோயில்கள் / மடங்களுக்கு முறையாக உதவி செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆகியவற்றுக்கு இவர் சென்று வந்த அனுபவங்களைப் படித்தால் ஆன்மிகவாதிகளுக்கு புல்லரிப்பு ஏற்படும்.
அப்படின்னா, இது ஆன்மிக / இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் புத்தகமா? பதில்: அப்படி சொல்ல முடியாது. மேலே படிங்க.
திருமலை திருப்பதி தேவஸ்தானம். 15000 பணியாளர்கள் (1980 சமயத்தில்). 25க்கும் மேற்பட்ட துறைகள். ஒரு நிர்வாக அதிகாரிக்கு எவ்வளவு வேலை இருக்கும்? இந்திய ஜனாதிபதி முதல் சிறு MLA வரை கோயிலுக்கு வந்து போகும் அரசியல்வாதிகளுக்கு தரிசன ஏற்பாடு, அந்த சமயத்தில் இதர சேவை/ தரிசனத்திற்க்கு காத்திருப்பவர்களுக்கு தொந்தரவு ஏற்படா வண்ணம் திட்டமிடல், அவர்களுக்கு பாதுகாப்பு, பிக்பாக்கெட் / திருடர்களிடமிருந்து பக்தர்களுக்கு பாதுகாப்பு, வயதானவர்களுக்கு / நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவமனை வசதிகளை செய்து கொடுத்தல், பால் / தண்ணீர் / உணவு / தங்கும் இடங்கள் ஆகியவற்றை எந்தவொரு தடங்கலுமின்றி அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் மற்றும் இவற்றில் தினந்தோறும் வரும் பிரச்னைகளைத் தீர்த்து வைத்தல். இவற்றில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதென்று இவர் சொல்லும் உதாரணங்களைப் படித்தால்தான் புரியும்.
அப்போ, நம்ம சகாயம் மாதிரியான ஒரு பரபரப்பான அரசு அதிகாரியின் தினசரி அலுவல்களைப் பற்றிய கதையா? பதில்: உங்களுக்கே தெரியும். மேலே படிங்க.
தாசர்கள் மற்றும் அன்னமாச்சாரியாவின் கீர்த்தனைகளைப் பரப்பிய மிகவும் வெற்றிகரமான திட்டம் ‘தாச சாஹித்யா ப்ராஜெக்ட்’. தெலுங்கு மற்றும் கன்னடப் பாடல்களை, எம்.எஸ். அம்மா போன்ற புகழ்பெற்ற பாடகர்களின் குரலில் பதிவு செய்து, கேசட், குறுந்தகடு, புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிட்டு, பல ஊர்களில் பல விழாக்களில் TTD சார்பாக கடைகளைப் போட்டு, அவற்றின் மூலமாக பக்தியைப் பரப்பியதில் PVRKPக்கு கண்டிப்பாக ஒரு முக்கியப் பங்குண்டு. இதற்காக, பல அரிய பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி, அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் பேசுதல், மேலும் கன்னடப் பாடல்களைப் புரிந்து கொள்வதற்காக கன்னடம் எழுத படிக்க & பேசக் கற்றுக் கொண்டாராம் PVRKP. அன்று ஒரு சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், இன்று மிகப்பெரிய திட்டமாக உருவெடுத்துள்ளது என்றும் கூறுகிறார்.
அப்படின்னா... வெயிட். கேள்வி & பதில் இனிமே வேண்டாம். மேலே படிங்க.
410 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் மேலே சொன்னதைத் தவிர இன்னும் பலப்பல விஷயங்கள் இருக்கின்றன. கடவுள் இருக்குன்னு நம்பறவங்க, கடவுள் இல்லைன்னு சொல்றவங்க, கடவுள் இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்றவங்க அனைவரும் படிக்கக்கூடிய புத்தகம் இது. இந்தியாவின் மிகப் பணக்கார தெய்வத்தின் கோயிலின் புகழ்பெற்ற திட்டங்கள், மக்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள், அதில் எவ்வளவு அரசியல் தலையீடுகள் & சிக்கல்கள் இருக்கின்றன என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்தாலே புரியும்.
இந்தப் புத்தககத்தின் மூலம் தெலுங்கு. பெயர் : நா அஹம் கர்த்தா ஹரி கர்த்தா. பொருள்: நான் எதையும் செய்யவில்லை; அனைத்தையும் அந்த ஹரியே செய்கிறான். கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டதை, அழகு தமிழில் மொழிபெயர்த்தவர் கலைமாமணி டாக்டர். திரு.P.B.ஸ்ரீனிவாஸ் அவர்கள்.
***
நான் இல்லை, திருமலைத் தலைவனே
ReplyDeleteதலைப்பே படிக்கத்தூண்டுகிறது ...
மிக அருமையான விமர்சனம். அருமையான புத்தக அறிமுகத்திற்கு நன்றி. திரு.PVRK பிரசாத் என்னுடைய அப்பாவின் மிக நெருங்கிய நண்பர். பிரசித்தி பெற்ற திருப்பதிக் குடைகளை தமிழ் நாட்டின் பல கோவில்களும் பெற வழி செய்தவர்.
ReplyDelete