விருட்சம் இதழில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. அதிலும் குறிப்பாக, முதலிரண்டு ஆண்டு இதழ்களில் வெளிவந்தவை. 1992--ஆம் ஆண்டு பதிப்பு. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளை எழுதியவர்கள் : வண்ணநிலவன், அழகியசிங்கர், சுரேஷ் குமார் இந்திரஜித், காசியபன், ஐராவதம், ஆனந்த், மா. அரங்கநாதன், ஸ்டெல்லாபுரூஸ், பாரவி, ஆர். ராஜகோபாலன், நகுலன், கோபிகிருஷ்ணன், தமிழவன், இரா. முருகன், எம். யுவன், ஜெயமோகன், ரவீந்திரன், க்ருஷாங்கினி, விட்டல்ராவ், அசோகமித்ரன், அஜித் ராம் ப்ரேமிள்.
இப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே? ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.
இப்படி ஒரு தொகுப்பைப் பார்க்கும்போது இது போன்ற முயற்சிகளுக்கு ஏற்பட்ட கதியை நினைத்து வருத்தப்படுவது நியாயம்தானே? ஏனென்றால் இன்றும் அழகியசிங்கர் 'நவீன விருட்சம்' என்ற சிற்றிதழை நடத்துக் கொண்டிருக்கிறார், அது ஒன்றும் அவ்வளவு சுகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமான ரான்ட் பதிவின் பிற்பகுதியில் வருகிறது.
இந்த தொகுப்பில் ஆனந்த் எழுதியுள்ள 'இரண்டு முகங்கள்' ஒரு அருமையான கதை.
அந்த காலத்தில் வித்தியாசமான பாத்திரங்களைச் சித்தரித்தாலே நல்ல கதையாக வந்துவிடும் போலிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி நினைவுகளாய் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையில் உறியடியில் எப்போதும் ஜெயிக்கும் கோவிந்த பிள்ளை ஒரு அருமையான பாத்திரம், சிறப்பான வர்ணனைகள் -
'உறி மேலும் கீழும் ஏறி இறங்குவது ஒரு லயத்தில் இயங்குவது போலவும், அவருடைய அசைவுகள் அதே லயத்தை மேற்கொள்ளுவது போலவும் இருக்கும். உறியின் லயம் அவர் லயத்தை நிர்ணயிக்கிறதா அல்லது அவரது லயம், உறியை இழுப்பவர்களை பாதித்து, அந்த லயத்துக்குத் தகுந்தவாறு உறி ஏறி இறங்குகிறதா என்று நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது".
காசியபனின் 'தமிழ்ப்பித்தன் கதை' வண்ணநிலவன் போல் வெவ்வேறு குணம் கொண்டவர்களை நினைத்துப் பார்க்கும் கதை, ஆனால் இந்த நினைவுகளில் நெகிழ்ச்சி மிகுந்திருப்பதால், வண்ணநிலவன் கதையில் உள்ள அங்கதம் நம்மை ஈர்க்கும் அளவுக்கு காசியபனின் மானுடம் ஈர்ப்பதில்லை.
இதே மாதிரிதான் ஆர். ராஜகோபாலனின் 'எங்கிருந்தோ' என்ற கதையும். தாயி என்ற மிகவும் மென்மையான பாத்திரத்தை விவரிக்க ஒரு சிறுகதை.
வண்ணநிலவனின் 'ஞாயிற்றுக் கிழமை'யில் தனஞ்ஜெயனை வெளியே கிளம்பவிடாமல் தடுக்கும் ஒவ்வொரு பாத்திரமும் குறைந்தபட்சம் ஒரு கதைக்காவது உரியவர்கள் - தன் பெயரை அழகேசன் என்று எழுதியதற்காக வருத்தப்படும் அளகேசன் (சைக்கில், சிங்கல் டீ என்பதெல்லாம் அவனது பிரத்யேக இலக்கணங்கள்), "இந்த ஜார்ஜ் புஷ் இந்த மாதிரி பண்ணிட்டானே?" என்று அங்கலாய்க்கும் தங்கக்கனி மிஸ்ரா (அப்பா பெயர் பரமசிவம் மிஸ்ரா, அண்ணன் பெயர் ராமலிங்கம் மிஸ்ரா, தம்பியர் ஆசீர்வாதம் மிஸ்ரா மற்றும் வள்ளிநாயகம் மிஸ்ரா), கதை கட்டுரைகள் எழுதும் அம்ருதவர்ஷன் (கட்டுரைகளில் கலை இல்லை என்று அதை மட்டும் தொடுவதில்லை) மற்றும் அவனது செமினாரினி மனைவி, "கந்தா... கடம்பா... கதிர்வேலா.." என்று முருகனை உச்சரித்தவாறிருக்கும் ஜோன்பூர் இருசப்பப் பிள்ளை, ஜலதோஷம் முதல் எலும்பு முறிவு வரை அனைத்துக்கும் காயத்தைப் பொடி பண்ணி தேனில் குழைத்து சாப்பிடச் சொல்லும் பாடகலிங்கம் பிள்ளை, எல்லா பொருட்களுக்கும் இடமும் விலையும் கேட்கும் மாறாந்தை மன்னர் மன்னன், வீட்டுக்கு யார் வந்தாலும் போட்டது போட்டபடி இருக்க, நாற்காலியை அருகே இழுத்து அமர்ந்து 'வேலி ஓணான் தலையைத் தலையை ஆட்டுகிற மாதிரி ஓயாமல் தலையை ஆட்டுகிற' மாமனார்!
இதற்கு அடுத்த கதை எதுவாக இருந்தாலும் கஷ்டம்தான் - தன் மாடுகளைக் கட்டிப் போட்டிருப்பவனால் சீரழியும் சிறிய தெருவில் இருப்பதன் துன்பங்களைப் பேசும் அழகிய சிங்கரின் 'தெரு'வை அடுத்து வரும் சுரேஷ் குமார் இந்திரஜித்தின் 'விரித்த கூந்தல்' ஒரு புதிரான கதை. நமக்குப் புரியாத உண்மைகள் நம்மை அச்சுறுத்துகின்றன என்ற ஒரு உளவியல் சிக்கலை மிக அழகாக உணர்த்தும் கதை - வாழ்வின் புதிர்த்தன்மைக்கு விடை சொல்ல அவசரப்படாமல், புதிராய் இருப்பதையே ஒரு ஆழ்ந்த புரிதலாக மாற்றும் கதை.
பாரவியின் தீனி கொஞ்சம் அறிவுஜீவித்தனமான கதை. பின்னணி விஷயங்கள் தெரிந்தவர்கள் இதை ரசித்துப் படிக்கலாம், மற்றவர்களுக்கும் கதை புரியும், ஆனால் என்னவோ எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் வரலாம், தமிழவனின் ' ஒரு பூனையும் லெதர்பை வைத்திருப்பவர்களும்' என்ற கதையும் இப்படிதான். நாம் புரிந்து கொண்டதற்கும் அப்பால் இதில் என்னவோ விஷயம் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் கதை. அப்போது இருந்ததை விட கலவரங்கள் அதிகமாக அறியப்படும் இந்த நாட்களில் நேற்று நடந்த விஷயத்தைச் சொல்வது போல் தாக்கம் கூடியதாக இருக்கிறது கதை - இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை என்ற எண்ணமே வருவதில்லை. ஆனால், கதை புரியவில்லை. இதனால் இந்த இரு கதைகளும் மோசம் என்று சொல்வதற்கில்லை. நேரடி கதையாகச் சொல்ல முடியாத எதையோ சொல்கிறார்கள், அது என்ன என்ற புதிரும் கதையில் உள்ள உண்மையின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும்.
இவற்றோடு இரா. முருகனின் சங்கை, எம். யுவனின் 'மலையும் மலை சார்ந்த இடமும்' ஜெயமோகனின் 'காட்சி' - இவை எல்லாமே பூடகமான கதைகள். நம் அன்றாட அனுபவத்தில் நாம் எதிர்கொள்ள முடியாத விஷயங்கள், அனுபவங்கள். யதார்த்ததைக கொண்டு நாம் உணர முடியாத ஏதோ ஒரு உண்மையைச் சுட்டுகின்றன. ஆனால், இப்போது இந்த மாதிரி கதைகளை யாரும் எழுதுவதாகத் தெரியவில்லை. இதில் பெரும்பாலான கதைகளில் உள்ள பூடகம் என்பது புலப்படும் உலகத்தை விவரிக்கும் பூடகம், இன்று பூடகமாக எழுதப்படும் விஷயங்களில் பெரும்பாலானவை அகம் சார்ந்ததாக இருக்கின்றன என்று தோன்றுகிறது.
மா. அரங்கநாதனின் 'ஏடு தொடங்கல்' ஐந்து பக்கத்தில் ஒரு மிகச் சிறிய கதை. 'வேடிக்கைப் பார்க்கப் போன இடத்தில் இம்மாதிரி நிகழுமென்று அவன் எதிர்பார்த்திருக்க முடியாது. வேடிக்கை என்றும் அதைச் சொல்ல முடியாது. பரவசமூட்டும் ஒரு விஷயம்," என்று துவங்கும் இந்தக் கதை இன்னதென்று சுருக்கமாகச் சொல்லிவிட முடியாது. வாசிப்பில்தான் இதன் அழகு தெரிகிறது. ஸ்டெல்லா ப்ரூஸ் எழுதிய 'தெருவில் ஒருவன்', இதைவிடச் சிறிய கதை. இரண்டு பக்கங்கள்தான், ஆனால் இதில் உள்ள குரூரம், மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருப்பதால், மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உண்மையாகவே ஸ்டெல்லா ப்ரூஸ் பிரமாதமாக எழுதியிருக்கிறார்.
நகுலனின் தில்லைவெளி, கோபி கிருஷ்ணனின் மொழி அதிர்ச்சி - இந்த இரண்டு கதைகளும் அடுத்தடுத்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. நகுலன் எவ்வளவு நளினமாக எழுதுகிறார்! சிக்கலான கதையாக இருந்திருக்க வேண்டும், வாசிக்கும்போது மிகவும் இயல்பாக இருக்கிறது. கோபி கிருஷ்ணனின் கதையும் அப்படியே - வார்த்தைக்கு வார்த்தை ரிலேக்ஸேஸன் என்று ஒருத்தர் சொல்வாரில்லையா, அந்தக் கதை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பது ஒரு தேய்வழக்கு. இந்தக் கதை உண்மையாகவே அதைச் செய்கிறது.
ரவீந்திரனின் 'துணி' ஒரு தையல் கடையில் வேலை செய்யும் பெண்ணைப் பற்றிய கதை. பாசாங்குகள் இல்லாத கதை, மிகவும் இயல்பாக அதில் உள்ள இயந்திரத்தன்மையை விவரித்திருக்கிறார். க்ருஷாங்கினியின் மற்றொன்று கதையும் இதில் உள்ளது போன்ற நேயத்தை எதிர்பார்ப்பது குறித்தே பேசுகிறது, ஒரு சிறுமியின் பார்வையில். ரவீந்திரனின் கதையில் உள்ள நுட்பம் இதில் இல்லை, ஆனால், அப்போதே இந்த மாதிரி மென்மையான மனிதர்களைப் பற்றிய கதைகளை எழுதுவது ஒரு பாணியாக மாறிவிட்டிருப்பதை உணர முடிகிறது.
ஐராவதம் எழுதிய 'பெண் புத்தி' அது எழுதப்பட்ட காலத்தில் உயர் தட்டு அறிவுஜீவித்தனத்தைப் பகடி செய்வதாக இருந்திருக்கலாம், ஆனால் இது போன்ற பல கதைகளை நாம் படித்துவிட்ட காரணத்தால் இப்போது அலுப்பாகதான் இருக்கிறது, எழுதப்பட்ட காலத்தில் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.
விட்டல்ராவின் சின்னவாடு, சாமியாராய்ப் போன ஒரு நண்பனைச் சந்தித்த அனுபவத்தை விவரிக்கிறது, அசோகமித்திரனின் கடிகாரம் காலத்தின் மீதான தியானம். மெல்லிய நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கும் இந்த இரு கதைகளும் எந்தத் தொகுப்பிலும் இடம் பெறக்கூடிய நேர்த்தி கொண்டவை.
தொகுப்பின் கடைசி சிறுகதை, அஜித் ராம் ப்ரேமிள் எழுதியது. 'அசரீரி' ஒரு அறிவியல் புனைவு. அமெரிக்காவில்தான் அதிக அளவில் அறிவியல் புனைவுகளை எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவியலானாலும் சரி, மிகுபுனைவானாலும் சரி, அவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சியில்தான் ஈர்ப்பு. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வருகிற மாதிரி என்னென்ன உபகரணங்கள் நம் வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்படுத்துகின்றன என்றுதான் யோசிக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் மேலே போனால் அதனால் ஏற்படும் அகவுணர்வின் மாற்றங்கள். ஆனால் தமிழ் கதைகளில் சுஜாதா தவிர வேறு யாருக்கும் இந்த மாதிரியான அக்கறை இல்லை. யோக வாசிட்டத்தில் வருகிற மாதிரி ஆன்மீகத்தில் அறிவியலை ரொம்ப இயல்பாகக் கலந்து விடுகிறார்கள். இதைத் தவறென்று சொல்லவில்லை. ஒரு பொது இயல்பாகச் சொல்கிறேன், ப்ரேமிளும் இதையே செய்கிறார். சுஜாதாவால் இதைச் செய்ய முடியவில்லை என்பதுதான் அவரது வெற்றியும் தொல்வியுமாக இருக்கிறது.
ப்ரேமிளின் நடை அசத்தல். "சுவர்கள் சுருங்கி அருவருப்பான காலாகாலங்களின் சீழ் திரளை கட்டி நாறிக் கொண்டிருந்தது வேணுகோபாலின் ஹிருதய குகை. 'சீ' என்றபடி அதன் பிலத்தை விட்டுப் பின்வாங்கி வெளியேறுவதற்காக தலை நிமிர முயன்றார் வேணுகோபால். "நான் பிராமணன். இது என் ஹிருதயமல்ல. இது நரகம்'.
இந்த மாதிரியெல்லாம் ஒரு அறிவியல் புனைவில் எழுத நம்மவர்களால் மட்டும்தான் முடியும்.
விருட்சம் கதைகள், 1992
- தொகுப்பாசிரியர் - அழகியசிங்கர்
விலை ரூபாய் இருபது
விருட்சம், சென்னை 33.
பிற்சேர்க்கையாக ரான்ட்:
'விருட்சம் 11-வது இதழில் (ஜனவரி - மார்ச் 1991) தற்செயலாக ஆரம்பித்த விஷயம் 21 கதைகளின் தொகுப்பு நூலாக அமையும் என்பதை எதிர்பார்க்கவில்லை" என்று முன்னுரையில் எழுதுகிறார் அழகியசிங்கர். ஏறக்குறைய இரண்டாண்டுகள் விருட்சம் என்ற ஒரு சிற்றிதழில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் தொகுப்பு இந்நூல். 1992ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இதில் உள்ள எழுத்தாளர்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். வண்ணநிலவன், அசோகமித்திரன், ப்ரேமிள் தொடங்கி தமிழின் மிக முக்கியமானவர்களின் சிறுகதைகள் இதில் இருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளில் இவ்வளவு நல்ல சிறுகதைகளைக் கொடுத்த அழகியசிங்கர், இன்றும் நவீன விருட்சம் என்ற சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கிறார் - ஆனால் அதில் இந்த வேகம் இல்லை. அண்மைய இதழில், "இதை தொடர்ந்து நடத்தத்தான் வேண்டுமா? தேவையில்லை, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடலாம்" என்று எழுதுகிறார் அவர் . இன்று இதில் இருக்க வேண்டிய எழுத்தாளர்கள் யாரும் எழுதுவதாகக் காணோம். தமிழில் எல்லா முயற்சிகளும் இப்படிதான் தொய்வடைந்து ஓயுமோ என்றும் தெரியவில்லை - "ஆரம்பிக்கும்போது எதையோ சாதிப்பதுபோல் நினைத்துக் கொள்வார்கள். பிறகு அதெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும்".
இவ்வளவு நல்ல துவக்கத்தைக் கொடுத்த விருட்சம் இன்றும் சிறந்த கதைகளையும் கவிதைகளையும் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா? விருட்சம் இல்லாவிட்டால், அதைப் போன்ற வேறொரு பத்திரிக்கையாவது இருக்க வேண்டாமா? தரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் விரிவான ஒரு களத்தை உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து செயல்படக்கூடிய நிதானமாக, தம் துவக்கங்களின் வேகத்தை மாற்றிக் கொள்வதில் ஏதோ ஒரு இடத்தில் தவறு ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது தனிப்பட்ட மனிதர்களின் குறையாக தெரியவில்லை, ஏனென்றால் ஏறத்தாழ எல்லா துவக்கங்களும் இது போல் முடிவுக்கு வந்து விடுகின்றன. குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் வெளிப்பாட்டு சாதனமாக துவங்கும் சிறுபத்திரிக்கைகள் தம் பார்வையை விரித்துக் கொள்வதில்லை. தொடர்ந்து எழுதும் அந்தச் சிறு குழுவினரின் உற்சாகம் குறைந்ததும், எழுத ஆளின்றி முடங்கிப் போய் விடுகின்றன.
ஆளுமை சார்ந்த மோதல்கள், கருத்து வேறுபாடுகள், லாப நஷ்டக் கணக்குகள் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில முயற்சிகளின் தோல்வியாக வேண்டுமானால் முடியலாம். ஆனால், தமிழில் இன்றும் ஒரு சிறுபத்திரிக்கையும்கூட விரிவான வாசக வரவேற்பைப் பெறும் வகையில் தன்னை உருவாக்கிக் கொள்ளவில்லை - எந்த மொழியிலும் தேர்ந்த இலக்கிய வாசகர்கள் சில ஆயிரங்களே இருப்பார்கள் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலத்தில் பல இதழ்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவிலான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கின்றன. தமிழில் எதுவும் தலையெடுக்கவில்லை என்பதை யோசிக்க தனி நபர் மற்றும் குழு அரசியலைத் தாண்டிச் செல்ல வேண்டும். நம் அறிவு சூழலில் ஏதோ ஒரு குறை இருக்கிறது.
இத்தனை ஆண்டு கால அனுபவத்துக்குப் பின் இன்று அழகியசிங்கர் எழுதுகிறார், "ஒரு சிறுபத்திரிக்கை என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதை என்னால் இன்றுகூட யூகிக்க முடியவில்லை. இலக்கியத் தரம் என்பதற்கு என்ன அளவுகோல் என்பதும் புரியவில்லை". இந்த அளவுகோலை எந்த ஒரு தனி நபரும் உருவாக்கிக் கொடுக்க முடியாது. நபருக்கு நபர், குழுவுக்குக் குழு அளவுகோல்கள் மாறுபடுவதுதான் இயல்பு. ஆனால் எது இலக்கியம் என்ற ஒரு குறைந்தபட்ச புரிதலாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்ற முத்தரப்பினரிடையே இருக்க வேண்டும். இங்கு இது இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம். ரசனை விமரிசனமா கோட்பாட்டு விமரிசனமா என்ற மாய வேட்டையில் நாம் மோசம் போய் விட்டோம்.
'எனக்குப் பிடிக்காதது, எனக்குப் புரியாதது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது - இதெல்லாம் இலக்கியம் இல்லை, இதையெல்லாம் கண்டித்தால் தப்பில்லை,' என்ற புள்ளியில்தான் இங்கிருக்கும் பாமர வாசகனும் தேர்ந்த விமரிசகனும் ஒருமித்த கருத்துடன் இணைகின்றனர். ஒரு பெரும்பாறையாய் நிற்கும் பேசப்படாத இந்த நம்பிக்கையில் மோதி மூழ்கிப் போகின்றன, நம் உற்சாக வெள்ளோட்டங்கள்.
இந்தப் பாறையை உடைப்பதில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது, குறைந்தபட்சம் இதன் கனபரிமாணங்களையாவது நாம் அடையாளம் காண வேண்டும். இதைச் செய்யாத எந்த முயற்சியும் தோற்பது உறுதி. ஆனால், 'எனக்குப் பிடிக்காதது, எனக்குப் புரியாதது, என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது' - இதை விட்டால் வேறு எப்படி எந்த ஒரு குறிப்பிட்ட படைப்பையும் மதிப்பிட முடியும் என்ற கேள்வி எழலாம். பிடிக்கிறது, புரிகிறது, எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது - என்பனவற்றில் ஏதேனும் ஒன்றுகூட பாராட்டப் போதுமான காரணமாக இருக்க முடியும், ஆனால் பிடிக்கவில்லை, புரியவில்லை, இதை ஒப்புக் கொள்ள முடியாது என்பதில் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிராகரிப்பது தவறு. அதைச் செய்யுமும் இதில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா என்று பார்க்கலாம் - முன்னரே எழுதியதுதான்:
- அர்த்தமுள்ள ஆவணப்படுத்துதல்.
- படித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் தன்மை. எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் ஆக்கங்களில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாசகர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.
- ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து (ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றில்லை, பார்வையில் காலப்போக்கில் மாற்றம் இருக்கலாம், ஆனால் படைப்பூக்கத்தின் மையம் பெரும்பாலும் மாறுவதில்லை)
ஏறத்தாழ எல்லாருடைய எழுத்தும் இதில் ஏதோ ஒரு புள்ளியில் சேர்ந்து விடும் - ஆனால், இலக்கியம் என்பது எப்போதும் புதியதை நோக்கிய பயணம் என்பதால் இந்த விஷயத்தில் மற்றவர்கள், அல்லது அந்த எழுத்தாளர், இதுவரை சொல்லாத எதைப் புதிதாகச் சொல்கிறார் என்பது அடுத்தகட்ட வரையறையாக இருக்கலாம்.
எது எப்படியானாலும் இந்த திசையில் நாம் யோசிக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment