சில புத்தகங்களுக்கு ஆம்னிபஸ்சில் விமர்சன அறிமுகம் எழுதாமல் ஆம்னிபஸ்சை நாங்கள் ஆரம்பித்த நோக்கம் நிறைவேறாது என நினைத்துக் கொள்வேன். பெரும் இலக்கியங்களெல்லாம் இல்லை அவை. என்னைப் போன்ற ஒரு சராசரி வாசகனை நெருக்கமாகத் தொட்ட சில புத்தகங்கள். தொட்டால் தொடரும், கரையெல்லாம் செண்பகப்பூ, சிலநேரங்களில் சில மனிதர்கள் மற்றும் இன்னபிற. பொன்னியின் செல்வனையும் அடிக்கடி நினைப்பதுண்டு. May be, பொன்னியின் செல்வனுக்கு ஆம்னிபஸ் ஒரு வாரம் முழுக்க ஒதுக்கவேண்டியிருக்கலாம். பார்ப்போம்.
சரி, இன்றைய புத்தகத்திற்கு வருவோம். கிட்டத்தட்ட ஒரு வீம்புக்குத்தான் இந்தப் புத்தகத்தை மறுவாசிப்பிற்குக் கையில் எடுத்தேன். பலவருடங்களுக்கு முன் படித்தது.
வீம்பு? அதைப் பின்பு பார்ப்போம்.
சுஜாதாவைப் பொருத்தமட்டில் அவர் எழுத்துகளில் குறைந்தபட்சம் 50% புத்தகங்களை நான் வாசித்திருக்கலாம். சுஜாதாவின் ‘க்ளைமாக்ஸில் சரேல் திருப்பம்’ தரும் சில சிறுகதைகளை வாசிக்கும்போது எனக்கும் தோன்றுவது, ”ஓகே, இதுபோல என்னைப் போன்றவர்களால்கூட எழுதமுடியும்” என்று. ஒரு நல்ல உதாரணம் “கால்கள்” சிறுகதை. ஆனால் இந்தவகைக் கதைகள் ஒரு டைம்லைன் நிர்பந்தத்தினாலோ அல்லது அவர் நல்ல ஃபார்மில் இல்லாத நேரத்திலோ எழுதியிருக்கக்கூடும்.
மற்றபடி புனைவு, கட்டுரை என்று எதை எழுதினாலும் அந்த எழுத்து என்றும் சாகாத ஜீவனுடன் இருக்கும்படிக்கே சுஜாதா எழுதியிருப்பதாக நான் முழுசாய் நம்புகிறேன். நல்ல உதாரணம் மாதவ சோமனின் இந்தப் புத்தக அறிமுகம் < சுஜாதாவின் புதிய பக்கங்கள் >. நாற்பத்தி ஐந்து வருடமான கட்டுரைகளை இன்றும் ரசிக்க முடிகிறது. இன்றைய புத்தகத்தைப் பேசாமல் என்னத்துக்கு இந்த தகவல்களெல்லாம்? எல்லாம் அந்த வீம்புடன் தொடர்புடைய தகவல்களே.
ஓகே, லெட்ஸ் கண்டின்யூ.
இந்தக் கட்டுரைகள் ஒருபுறம் என்றால் இன்றும் புத்தகவிழாக்களில் சுஜாதாவின் புனைவுகள் டாப் செல்லர்களாக இருக்கின்றன. புனைவு எழுத்தின் ஸ்பெஷலிஸ்ட் சுஜாதா என்பதற்கு என்வரையில் டாப் உதாரணங்கள், “பிரிவோம் சந்திப்போம்” மற்றும் “கரையெல்லாம் செண்பகப்பூ”.
பிரிவோம் சந்திப்போம் வெளியாகி இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்தே நான் வாசித்தேன். இதோ இப்போது இரண்டாவது வாசிப்பை அந்தப் புத்தகம் வெளியாகி முப்பது வருடங்கள் நிறைந்த நிலையில் வாசிக்கிறேன். சமீபத்தில், ஒரு 200 பக்க அளவு கொண்ட ஒரு புத்தகத்தை இத்தனை வேகத்தில் நான் வாசித்ததில்லை. முன்னரே படித்த கதைதான், தெரிந்த முடிவுதான். இருந்தாலும் சுஜாதாவின் எழுத்துநடை நம்மைக் கட்டிப் போடுகிறது.
இங்கே "ஆ!" புத்தகத்திற்கு விமர்சனம் எழுதும்போது, கதைக்குள் நம்மை அநாயசமாகப் பயணிக்க வைக்கத்தக்க விஷுவலைஸேஷன் எஃபெக்ட் தருதல் (அ) காட்சிப்படுத்துதலைத் திறம்படச் செய்பவர் சுஜாதா என்று குறிப்பிட்டேன். மின்னஞ்சலில் ”வாட் டூ யூ மீன் பை காட்சிப்படுத்துதல்”, என்று கேட்டார் நட்பாஸ். அப்போது அவருக்கு நான் சரிவர பதில் சொன்னேனா தெரியவில்லை.
இதோ இந்தப் புத்தகத்தை வாசிக்கையிலும் சொல்கிறேன். சுஜாதா ‘காட்சிப்படுத்துதலின்’ மாஸ்டர். பிரிவோம் சந்திப்போம் திரைப்படமாக சமீபத்தில் வெளிவந்தது, ஆனந்தத் தாண்டவம் என்ற பெயரில் (இடையில் “த்” சேர்த்தார்களா என்பதை நானறியேன்). திரைப்படத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் சொல்கிறேன். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப சில மாறுதல்கல் செய்யும் தேவை தவிர்த்து அந்தத் திரைப்பட இயக்குநருக்கு திரைக்கதை எழுதுவதற்கு தனியே வேலையே இருந்திருக்காது என்பது திண்ணம். அத்தனை கச்சிதமாக திரைக்கதை, வசனம், காட்சியமைப்பு என்று எல்லாமுமே ப்ரீலோடடாக இந்தக் கதையில் உண்டு.
ஒரு குட்டியூண்டு உதாரணம் இதோ:
கதைநாயகன் ரகு அப்பாவிடம் கோபமாக இருக்கிறான். அப்பா வெளியே புறப்படுகிறார்.
“ரகு மறுபடி அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு அப்பாவின் பெருமூச்சு கேட்டது. ‘நான் ஆபீஸ் போறேன். மத்தியானம் ஒரு மணிக்கு வருவேன்’, கதவு சாத்தப்படும் சப்தமும் வாசலில் செருப்பை மாட்டிக் கொண்டபின் அவர் சற்று நேரம் தயங்கி பின்பு கதவைச் சாத்துவதும் கேட்டது.”
நமக்கு ரொம்பவும் பழக்கமான ஒரு காதல் கதை. மேல்தட்டு வகுப்பைச் சேர்ந்த வளர்ந்த குழந்தையான கதைநாயகி மதுமிதா. பாபநாசத்தில் சீனியர் எஞ்சினியர் ஆபீசரான அவள் அப்பா. அவருடைய ஜூனியர் எஞ்சினியரின் மகனான எஞ்சினியர் கதைநாயகன் ரகுபதி. பெண் வீட்டு விருப்பத்துடன் / அனுமதியுடன் காதல், எப்போதும் எச்சரிக்கை பாவனையில் இருக்கும் ரகுவின் அப்பா, வேலை கிடைத்து சென்னை விஜயம், இடையில் வந்துசேரும் அமெரிக்க ராதாகிஷன், மதுவைப் பெற்றவர்கள் செய்யும் துரோகம், சண்டை, அழுகை, வீட்டில் பிடித்துவைத்த பிள்ளையாய் அமெரிக்க மாப்பிள்ளையை மணந்துகொண்டு மது அமெரிக்கா பறப்பதற்கு ஆயத்தமாவது என்று நிறைகிறது பிரிவோம் சந்திப்போம் - பகுதி 1.
நமக்குப் பழக்கமான சுஜாதாத்தனமான எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் தகவல்கள், வவேசு ஐயர், ஆம்ஃபிட்டமின் அல்லல்கள், ஆயிரம் வயலின்கள், காதல்ங்கறது Nature's way of ensuring pregnancy என்று மகனிடம் பேசும் அப்பா, மஞ்சள் ரவிக்கையினூடே தெரியும் நெஞ்சு என்று எல்லாமுமே உண்டு. இவற்றையெல்லாம் தாண்டி சுஜாதாவின் சுவாரசிய நடை என்னும் விஷயம் அந்த 200 பக்கங்களையும் நம்மை எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் படிக்க வைத்துவிடுகிறது.
அசாத்திய புனைவு ஆற்றல், பல்துறை ஞானம், அதைச் சரிவர தன் கதைகளில் இடைச்செருகி படிப்போரைச் சிலாகிக்க வைத்தல், தொய்வின்றி கதை சொல்லும் மந்திரவித்தை என்று சுஜாதாவிடம் சொல்ல இருநூற்று ஐம்பது ப்ளஸ்கள் உண்டு. இது பகுதி -1’தான். அமெரிக்காவிற்கு மேல்படிப்பிற்காக ரகு பயணப்படும் பகுதி -2 இன்னமும் சுவாரசியம் மிகுந்தது. நம்ம லைப்ரரியில் அந்தப் புத்தகத்தைக் காணலை. கிடைத்தவுடன் வாசித்துவிட்டு அந்தப் புத்தகத்தையும் பார்ப்போமே. சிறு இடைவெளிக்குப் பின்....
ஓக்க்கேய்...! அந்த வீம்பு விவகாரம் இதோ இதுதான் :)
..... ஜெயகாந்தனும் சுஜாதாவும் பெருவாரியான கலவையான இலக்கியநாட்டமோ பயிற்சியோ அற்ற வாசகர்களை நோக்கி எழுதினார்கள். ஆகவே அவர்கள் அந்த வாசகர்களின் புரிதலையும் அவர்களின் ரசனையையும் கருத்தில்கொண்டு எழுத நேர்ந்தது.முரணியக்கத்தில் அவர்களின் தரப்பு பலவீனமானதாகவும் வாசகர் தரப்பு வலுவானதாகவும் இருந்தது.
வாசகர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்களுக்காக எழுதப்படும் ஆக்கம் அந்தக் காலகட்டத்தைத் தாண்டியதும் அடுத்த காலகட்ட வாசகர்களுக்கு அன்னியமானதாக, சலிப்பூட்டுவதாக ஆகிவிடும். லா.ச.ராவும் சுந்தர ராமசாமியும் பழைமையானவர்கள் ஆவார்கள். ஆனால் ஜெயகாந்தனைப் போன்றவர்கள் ஒரு தலைமுறைக்குள் பழையவர்களாக ஆகிவிடுவார்கள்.
< ஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா? - பதிவில் ஜெயமோகன் >
ஜெயகாந்தனை நான் நிறைய வாசித்தவனில்லை. சிநேசிம, காத்திருக்க ஒருத்தி, ஹரஹர சங்கர - இவை மூன்று தவிர்த்து நான் ஜெயகாந்தனை வாசித்த நினைவில்லை. அதனால் ஜெயகாந்தன் குறித்த பார்வைக்கு, “நோ கமெண்ட்ஸ்”. ஆனால் சுஜாதா விஷயத்தில் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாததால்தான் அந்த மறுவாசிப்பும், இந்தப் பதிவுமே!
பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா
464 பக்கங்கள்
விலை ரூ. 260/-
அன்புள்ள கிரி,
ReplyDeleteபிரிவோம் சந்திப்போம் பதின்ம வயது நாஸ்டால்ஜியா வகையைச் சேர்ந்த நாவல்தான் (நீங்கள் சொன்னபடி நடைதான் கட்டி இழுத்து வைத்திருக்கிறது).
//ஆனால் சுஜாதா விஷயத்தில் இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாததால்தான் அந்த மறுவாசிப்பும், இந்தப் பதிவுமே! //
இதற்கு இந்த நாவலை எடுத்துக்கொண்டிருக்கவேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். நீங்கள் quote செய்த பாராக்களை அங்கீகரிப்பது போல இருக்கிறது!
இதற்கு பதிலாக வேறு நாவல்களை மறுவாசிப்பு செய்திருக்கலாம் - காகித சங்கிலிகள், கரையெல்லாம் செண்பகப்பூ, ஏன் நிர்வாண நகரம்...
சிவா கிருஷ்ணமூர்த்தி
//அந்தக் காலகட்டத்தைத் தாண்டியதும் அடுத்த காலகட்ட வாசகர்களுக்கு அன்னியமானதாக, சலிப்பூட்டுவதாக ஆகிவிடும்//
ReplyDeleteபாஸ்... நான் யூத்து பாஸ்... யூத்து. எனக்கே புடிச்சிருக்குன்றேன்....
:))))))))))))
பாஸ், நீங்க யூத்துதான். ஆனால் எப்போ? அப்போ! நாவல் வந்தபோது! இப்போ?!!!
Deleteசிவா கிருஷ்ணமூர்த்தி