தன்னுடன் பழகிய பல கலைஞர்களைப் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை எழுதியுள்ளார். பிரமிள் மீது இன்றுவரை நீடித்திருக்கும் கவர்ச்சி, அவரது வித்தியாசமான குணாதிசயங்களைப் பற்றிப் படித்துள்ளதால் இந்த புத்தகத்தை வாங்கினேன்.
மாறாத பழக்க வழக்கங்களும், தடம் புரளாத மன சஞ்சலங்களும் இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. கலைஞர்கள் அவ்வகையினரில் தனித்துவமானவர்கள். பல சமயங்களில் இத்தகைய குணமே அவர்களது அடையாளமாகவும், மக்கள் மறக்காததாகவும் ஆகிவிடுகிறது. கலை என்பதே விசித்திரத்தின் பெட்டகம் எனும் கூற்று அதற்கு ஏதோ ஒரு பூடகமான அர்த்தத்தைக் கொடுத்து விடும். ஆனால் அதுதான் உண்மை. கலை என்பது இதுதான் எனும் வரையறை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை வெளியாகிறது. ஒன்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வெவ்வேறு வரையரைகள் கொடுக்கப்படுகின்றன. பெளதிகத்தின் theory of everything என்பதை முடிவு செய்ய விஞ்ஞானிகள் துடிப்பது போல, எதையாவது சொல்லி இது தான் கலை என நிர்ணயித்துவிட முடியாதா என காலங்காலமாய் முயற்சி நடந்துவருகிறது.
இதுவரை கலைக்குதான் வெற்றி.
குருவாகவும், ஆண்டவனாகவும் மாறிவிடும் கலைஞர்கள் இருந்தாலும் கூட, கலைஞர்களும் மனிதர்கள் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. தீவிரமான மனநிலையில் உயிரைக் கொடுத்து போராடும் குணம் கொண்ட போராளிகள். அவர்களே தப்பிக்க நினைத்தாலும், கலை அவர்களை விடாது. தத்தளிக்கும் லெளகீக வாழ்வில், நாகராஜன் போல, புதுமைப்பித்தன் போல, கலைஞர்களாக வாழ்ந்து வருபவர்கள். மழை வருமுன் மண்வாசத்தைக் கைப்பற்றும் வேட்கை. எதற்காகவோ தீவிரமாக அடித்துக்கொள்வது போலத் தோன்றி பெரும் வில்லனாகக் கூட சித்தரிக்கப்படுபவர்கள்.
இப்படிப்பட்ட குழப்பமான குணாதிசயம் கொண்டவர்களை எழுத்தில் சாதாரணமாகப் படம் போட்டுக் காட்டிவிட முடியாது. எழுதுபவரின் அகத்தின் துளி விழாமல் இந்த சித்திரம் முழுமையடையாது. சுந்தர ராமசாமி எழுதிய நினைவோடை முழுவதும் இப்படிப்பட்ட அளவீடுகள் விரவிக்கிடக்கின்றன.
முதல் வரியைப் பாருங்களேன்:
சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன்.
மேற்சொன்னதில் மிக மிக நுணுக்கமான ஒப்பீடு இருக்கிறது. நினைவோடை முழுவதும் பிரமிளைப் பற்றி விதந்தோதவில்லை. மாறாக, அவரது முரண்பட்ட குணங்களையும், அவரருகே நெருங்கி வந்த நேரங்களையும், விலகி தூரப்போன நாட்களையும் தெளிவாகப் படம் பிடித்துக்காட்டியுள்ளார். அதனால், சுந்தர ராமசாமியின் நினைவில் பெரிய பிசகு இருக்கக்கூடாது. ஆனால், சிறு பிசகுகள் சாத்தியம். அவரது பார்வைக்கோணமும் நடுநிலையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சுந்தர ராமசாமி எனும் மனிதர் பிரமிள் என்பவரைப் பற்றி நினைத்துச் சொல்லும் விஷயங்கள். சுராவின் சொந்த விருப்பு வெறுப்புகளும் பிரமிள் பற்றிய கண்ணோட்டத்துக்குக் குறுக்கே வந்திருக்கலாம். அப்படிப்பட்ட பார்வையும் இந்த புத்தகத்தில் வருவதால்தான் - எழுதுபவரின் அகத்தின் துளி சிறிது தெளிக்காமல் நினைவோடைகள் சாத்தியம் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
பிரமிளைச் சந்திக்கும் சமயத்தில் சுந்தர ராமசாமி சற்று பிரபலமாகிக்கொண்டிருந்த எழுத்தாளர். எழுத்தின் தீவிரம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பிரமிளின் கவிதைகளை கவனித்திருக்கிறார். சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் படித்து திருகோணமலையிலிருந்து பல கடிதங்களை பிரமிள் எழுதியுள்ளார். செல்லப்பாவிடம் சுந்தர ராமசாமி பற்றி நிறைய கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால்,அவர்களது முதல் சந்திப்பு நினைக்கும் படியாக இல்லை. செல்லப்பா வீட்டில் பிரமிளுக்கு வணக்கம் சொன்னபோது, பிரமிள் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டிருந்தாராம். அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் பேசும்போது, சம்பிரதாயமான முகமன் தனக்குப் பிடிக்காது எனப் பிரமிள் சொல்லியுள்ளார்.
இப்படியாக மெல்ல பிரமிளின சித்திரம் நமக்கு வெளிப்படுகிறது. கூடவே சுந்தர ராமசாமியின் இலக்கிய பணிகளும். பொதுவாக இலக்கிய வட்டாரத்தில் பிரமிளைப் பார்த்திருக்காதவரைக் கூட அவரது குணாதிசயங்கள் சென்றடைந்திருந்தது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமானப் பார்வை, வெட்டித் திருப்பும் கழுத்து, சட்டென அபிப்ராயத்தைக் கொட்டுவது என அவரது உடல்மொழியும் பரபரப்பும் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஆனால், எந்த நொடியில் எப்படி நடந்துகொள்வார் எனச் சொல்லமுடியாது என்கிறார் சுந்தர ராமசாமி.
ஓரிடத்தில் கூட நிலையில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தாலும், செல்லப்பா பிரமிளுக்குப் பக்கபலமாக இருந்துள்ளார். ஆனால் அதே சமயம் கா.நா.சு கொத்திக்கொண்டு போய்விடுவாரோ என பிரமிளைப் பாதுக்காப்பாக வைத்திருந்தார். இலக்கிய வட்டத்தில் இதெல்லாம் மிகவும் சகஜம் எனக் குறிப்பிடும் சுந்தர ராமசாமி, செல்லப்பாவுடன் நெருக்கமாக இருந்ததால் தனது ஆப்த் நண்பரான நம்பிக்கு பிரமிளை மிகவும் பிடிக்கும் என்கிறார். ஏனென்றால் நம்பியின் இலக்கிய இடத்தை கா.நா.சு அங்கீகரிக்கவில்லை என்பதால் இருக்கலாம் என்கிறார். இது போல, பிரமிளின் வாழ்க்கை மட்டுமல்ல தமிழ் இலக்கிய உலகுகூட நுண் சிடுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. நம்பியிடம் திடுமென சண்டை போட்டு விலகிச் சென்ற பிரமிள், உடனடியாக மீண்டும் இணைந்துகொண்டார் என்பதை மிகுந்த ஆச்சர்யத்தோடு பகிர்கிறார் சுரா.
புத்தகம் முழுவதும் பிரமிள் மிகவும் நிலையில்லாத மனிதராகவே தென்படுகிறார். அதுவும் வெங்கட் சுவாமிநாதனுடன் மிகுந்த அன்னியோன்னியத்தோடு பழகினார் பிரமிள். தில்லியில் வசித்து வந்த வெங்கட் சுவாமிநாதனுக்கு பிரமிளைப் பார்ப்பதற்கு முன்னரே பெரும் ஈர்ப்பு இருந்திருக்கிறது. தில்லிக்கு வரவழைத்து தன்னோடு சில மாதங்கள் பிரமிளைத் தங்க வைத்திருந்தார். கிட்டத்தட்ட தங்க தாம்பாளத்தில் தாங்காத குறைதான். சினிமா, நாடகம், இசை நிகழ்ச்சி என அவர்கள் பல இடங்களுக்குப் போயிருந்தார்கள். சிறு இடைவெளிக்குப் பிறகு சுந்தர ராமசாமி வீட்டில் வெங்கட் சாமினாதனை சந்திக்கும்போது பிரமிள் குழந்தையைப் போல குத்தித்தோடினார். இப்படி அதீதமான உணர்வுகளால் உந்தப்பட்டிருந்தாலும், பிரமிளால் காயம் பட்டவர்கள் மிக அதிகம் என்கிறார் சுரா.
ஒரு கட்டத்தில், அதாவது ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு முன்னர் அவருடனான உறவு முழுமையானத் துண்டானது எனச் சொல்கிறார்.
நான் ஒரு பேட்டியில், தமிழில் மேஜர் பொயட்டே இல்லை, மைனர் பொயட்ஸ்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அது அவரைக் குறித்துச் சொன்னதாகத்தான் அவர் நினைத்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. என்றாலும் அவர் ஒரு மைனர் பொயட்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இவரை மேஜர் பொயட் என்று சொன்னால் கம்பனை என்னவென்று சொல்லுவீர்கள். பாரதியை என்னவென்று சொல்லுவீர்கள். அவர்களைச் சுட்டுவதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமே. சிவராமூ கவிதைகள் அதிகமாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை. ஒருவேளை அவர் தன் முழுக் கவனத்தையும் கவிதைகளுக்கு மட்டுமே செலவழித்திருந்தாரென்றால் அப்படி ஆகியிருக்கக்கூடும். இன்னொரு வகையில் சொல்வதானால் அவரது சுபாவத்தினால் அதிகமும் நஷ்டமடைந்தது அவர்தான். பாரதியோடு எல்லாம் அவரை ஒப்பிடவே முடியாது. முதலாவதாகப் பாரதி அளவுக்கு இவருக்கு, சமுதாய அக்கறை கிடையாது. எந்தத் தேசத்திலிருந்து வந்தார், அந்தத் தேசத்தின் இன்றைய நிலை என்ன? அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு பற்றித்தான் அதிகமும் பேச முற்படுகிறார். ஆனால் அப்படியான ஒருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாடு இருக்கிறதே அதுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது. ஓயாமல் பிறரைக் கொத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பாம்பு, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பைப் பற்றித்தான் நான் எப்போதும் சிந்தித்து வருகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும், அதுபோல்தான் சிவராமூவின் செயல்களும்.
என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல் ஒரு தொழிலாக அதைச் செய்பவர்கள் வேறு யாருமே கிடையாது.
எந்த மாதிரியான உறவு இது என கணிக்க முடியாததால் இந்த நினைவோடை இன்றும் முக்கியமாகிறது. ஏற்ற இறக்கங்களுடன் பயணம் செய்யும் உறவுகள். இன்னொரு முறை இவர்களுடன் வாழ்வு ஒன்று வாய்த்தால் இந்த புத்தகத்தில் வரும் ஒவ்வொருவரும் இதையே மீண்டும் செய்வார்கள் எனத் தோன்றுகிறது. பிரிவும், கோபமும் கொண்ட நாட்களில் துவேஷம் பெரிதாக வளர்ந்திருந்தாலும், கருத்து சார்ந்த உரையாடல்களுக்கு இவர்களைத் தவிர பெரும் கலைமனம் கொண்ட கூட்டம் தமிழில் அமைந்திருக்காது. ஒருவிதத்தில் வெறுப்பு இருந்தாலும், தீவிரமாக சண்டை போட்டுக்கொண்டாலும், கலையின் ஏதோ ஒரு மந்திரச் சாவியை அடைவதற்கான வழி ஒவ்வொருவரிடமும் இருந்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. படைப்பு மனதையும் கவனத்தையும் சிதறிக்ககூடிய முறிவுகளையும் தாங்கிக்கொள்ளும் திடம் இவர்களுக்கு இருந்தது. மனம் குவிந்து கலை வெளிப்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வேட்கையும் அமைந்திருந்தது.
நான் வாசித்த எந்த ஒருவரின் குறிப்புகளை விட பிரமிள் நினைவோடை ஒரு அடி முன்னால் நிற்கிறது. ஒரு காலகட்டத்தில் படைப்பு மனங்களை ஒருசேர படிக்கத் தந்திருப்பதால் பெரும் மனவெழுச்சியுடன் இந்த புத்தகத்தை நாம் படிக்க முடியும். யார் மீதும் பக்க சார்ப்பு ஏற்படாத வண்ணம் இந்நிகழ்வுகளிலிருந்து நாம் தூர இருக்கிறோம் என்றாலும், தமிழ் இலக்கிய உலகின் சூழலை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இடத்தில் சுந்தர ராமசாமி சொல்கிறார் - முன்னர் புதுமைப்பித்தன், நாகராஜன், சிட்டி போன்றோர் ஆங்கிலத்திலேயே மடல் எழுதிக்கொள்வர். நாங்கள் தமிழ் எழுத்தாளர்கள் இல்லியா, ஆங்கிலத்தில் எழுதினால் என்னமோ போல இருக்கிறது - என எழுதியுள்ளார். ஆச்சர்யமாக உள்ளது. இன்று நாமிருக்கும் இலக்கியம்/இலக்கியமற்ற தமிழ் சூழலை நினைத்துப்பார்த்தால் ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழில் எழுதுவதும் குறைந்துவருகிறது. இப்படி பல ஒப்பீடுகளை வாசகர் செய்துகொள்ளலாம்.
பொறாமையும், அற்பத்தனங்களும் நிறைந்திருக்கும் நிகழ்வுகள் பலவற்றை சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். மேன்மையும், உள்ளொளி தரிசனங்களும் தீற்றுக் களாக வெளிப்படும் அதே மனதில் இப்படிப்பட்ட ஆழமான கசப்புகளும் கழிவுகளும் வெளிப்படுகின்றன. அதைத் தொகுப்பதன் மூலம் நான் எதை சாதிக்கிறோம்? மனித உறவின் அத்தனை சாத்தியங்களையும் பதிந்துகொண்டே வருவதும் எதனால்?
தலைப்பு - நினைவோடை:பிரமிள்
எழுத்தாளர் - சுந்தர ராமசாமி.
விலை - ரூ 50/-
இணையத்தில் வாங்க - நினைவோடை : பிரமிள்
No comments:
Post a Comment