”நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக் கொள்கிறார்கள்”
சென்ற புத்தகவிழாவில் நண்பர் அப்புவின் புத்தகத்தைப் பொறுக்கப் போனவன் மதி நிலையத்தில் “குற்றியலுலகம்” புத்தகத்தைப் புரட்டினதும் கண்ணில் பட்ட முதல் ட்வீட் இது.
தலையைப் வலப்பக்கவாட்டில் சாய்த்து வலக்கண்ணை மூடி வான் நோக்கியவாறே என் அலமாரியில் ரொப்பி வைத்திருக்கும் படிக்காத பல புத்தகங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ”ஹார்ட் டிஸ்கை என்னா பாரா சார், நான் அலமாரியையும் ரொப்பி வெச்சிருக்கேனே!”. இந்த பாவத்தை எதைச் செஞ்சு சரிகட்ட என்ற யோசனையில்.... ஒரே வழிதான் இருக்கு. இந்த புத்தகத்தையும் வாங்கி அலமாரில அடுக்கிடுவோம் என்று அந்த சின்னஞ்சிறு புத்தகத்தையும் அள்ளிக் கொண்டென்.
நானறிந்த வரையில் தாங்கள் போட்ட ட்வீட்டுகளின் தொகுப்பைப் புத்தகமாக வெளியிட்டவர்கள் மூவர். முதலில் பேயோன் 1000 வெளியிட்டார் பேயோன். அடுத்தது பா.ராகவனின் இந்தப் புத்தகம், மூன்றாவதாக நம் அன்பர் வேதாளம் ஈ’புத்தகமாக வெளியிட்ட இனியவை 140. பாராவும் பேயோனும் ஒருத்தரே என்ற ஊரறிந்த ரகசியம் நிஜம் என்றால் இப்படிப் புத்தகங்களை வெளியிட்டவர்கள் இருவர் எனலாம் :)
இந்தப் புத்தகங்களுக்கான வாசகர் வட்டம் எப்படியிருக்கும், அதை எப்படி அனுமானித்து தைரியமாக இவ்வகைப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமே. ட்விட்டரைத் தெரியாதவர்களுக்கு புதுவகையிலான ‘கண்டெண்ட்’ கொண்ட இந்த வகைப் புத்தகம் எவ்வகையில் சுவாரசியம் ஏற்படுத்தும் என்பது முதற்கேள்வி. ட்விட்டர் நன்கு பரிச்சயம் உள்ளவர் ஒருத்தர் தான் முன்னமே படித்த ட்வீட்ட்டைப் புத்தக வடிவில் வாங்கிப் படிப்பாரா என்பது அடுத்த கேள்வி. பாரா போல பிரபல எழுத்தாளர் என்றால், “அட, நம்ம ரைட்டர் எதோ புச்சா ஏதிருக்காருபா”, என்று சிலப்பலர் வாங்கலாம். எனவே, எனிவே.... இப்படிப்பட்ட ஒரு புத்தகம் வெளியிட்டமைக்கே மனதார பாராட்டிக் கொண்டு புத்தகத்தைப் புரட்டினால், அடடா! அடடா! நோட் பண்ணுங்கய்யா நோட் பண்ணுங்கய்யா என்று நிறைய ட்வீட்கள். சரியாத்தேன் புத்தகத்தை வாங்கியிருக்கோம்.
எழுத்து என்பது கை பழகிய நுட்பம் எனினும் ட்விட்டரில் நூற்று நாற்பதில் தான் சொல்ல வந்ததை ‘நச்’ என்று சொல்வது பெரிய சவால்தான் என்று பாரா முன்னுரையில் குறிப்பிடுகிறார். சொக்கனும் இதை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சமீபத்தில் எங்கோ இதைப் படித்தேன்: ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளரிடம் கேட்டார்களாம் - “நீங்கள் எழுதுவது எல்லாமுமே எப்படி சுவாரசியம் நிறைந்ததாக இருக்கிறது?”, என்று. “படிக்கையில் ஆயாசம் ஏற்படுத்தும் அனைத்தையும் வெட்டிவிட்டே ஒரு பதிவை / புத்தகத்தை நான் வெளியிடுகிறேன்”, என்றாராம் அவர். படிக்க ரொம்பவும் சாதாரணமாகத் தெரிந்தாலும் அந்த எழுத்தாளர் சொன்னது எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய விஷயம்.
”நாப்பது வார்த்தை மொதல்ல எழுதுங்க. அதுலருந்து பிடிவாதமா பன்னண்டு வார்த்தையை எடுத்துடுங்க. உங்க மெயில் எவ்ளோ க்ரிஸ்ப்பா இருக்குன்னு அப்போதான் புரியும்”, என்று இதையேதான் அலுவலக நண்பர் குமரகுருவும் அலுவலக மடல்களை வரையும்போது சொல்லுவார்.
”இங்கே இணையத்தில் நான் காணும் பல சீரியஸான இலக்கிய விவாதங்கள் எல்லாம் ஆதித்யா சேனலில் வெளியிடப்படுவதற்கான அத்தனைத் தகுதிகளையும் முழுமையாகப் பெற்றுள்ளவையாகத் தெரிகின்றன”
இப்படி எழுதினால் 165 character என்று தலையில் தட்டுகிறது ட்விட்டர். ”இங்கே”, “அத்தனை”, “முழுமையாக” ஆகிய வார்த்தைகளை நீக்கினாலும் 140’ல் அடங்கிவிட மாட்டேன் என்கிறது.
பல இணைய இலக்கிய விவாதங்கள் ஆதித்யா சேனலில் வெளியிடத் தகுதி வாய்ந்தவையாக உள்ளன
என்று அதை உருமாற்றினால் 120’;லேயே அடங்கிவிடுகிறது. அதைத்தான் தன் ட்வீட்கள் நெடுக செய்திருக்கிறார் பாரா. தேவையற்ற வார்த்தைகளை வெட்டினால் கச்சிதமாகச் சொல்ல வந்தது மாத்திரம் எப்படி அழகாக வந்து விழுகிறது பாருங்கள்.
பாராவின் ட்வீட்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு விதத்தில் நம் ஒவ்வொருவரையும் தொடுகிறது; ஏதேனும் ரசனை சார்ந்தோ அல்லது ஒரு வலியைப் பகிர்வதன் வாயிலாகவோ. உதாரணமாக வெவ்வேறு மனப்பகிர்வுகள் இரண்டினை இந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்து காணமுடிகிறது:
ஆழ யோசித்தால் புற்றுநோய் மட்டுமே கடவுளையும் விஞ்ஞானத்தையும் சேர்த்து தோற்கடித்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது
இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை?
அங்கங்கே நிறைய பொறுத்துக் கொள்ளத்தக்க மொக்கைகளும் உண்டு. சில ட்வீட்கள் ஜென் வகைபோல, நமக்குப் புரிவதில்லை. குறையொன்றுமில்லை பாட்டின் பேரில் என்ன கோபமோ பாராவுக்கு, இசை தவிர்த்து அதில் ஏதுமில்லை என்கிறார் (நான் தப்பாய்ப் படித்தேனோ?). எம்.எஸ்’சும், ராஜாஜியும் பாடலில் தெரியவில்லை என்கிறாரா? நமக்குப் புரியலை.
மற்றபடி சினிமா, இலக்கிய, அரசியல், கிரிக்கெட் என்று ஆல்-ரவுண்ட் ட்வீட்கள் புத்தகம் முழுதும் உண்டு. பீச் ஸ்டேஷனில் கையிலெடுத்தால் தாம்பரம் வருமுன் இரண்டுமுறைகள் வாசித்துவிடத்தக்க வகையில் புத்தகத்தின் சைஸும், சுவாரஸ்யமும்.
குற்றியலுலகம் | பா.ராகவன் | மதி நிலையம் | 80 பக்கங்கள் | ரூ.40/-
இணையம் மூலம் புத்தகத்தை வாங்க: கிழக்கு
நம்ம வள்ளுவரின் ட்வீட்கள் தான் என்றிருந்தேன்... இந்த ட்வீட்கள் ரசிக்க வைக்கிறதே... புத்தக அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDelete