சிறப்புப் பதிவர் : P. சங்கர்.
நான் ஏற்கனவே இலவசக் கொத்தனார் அவர்களின் வெண்பா நூலினை படித்துள்ளேன். மிகவும் நுட்பமான தகவல்களையும், விளக்குவதற்குச் சிரமமான சேதிகளையும், எளிய தமிழில் புரியும்படி விளக்குவதில் அந்நூல் ஒரு நன்னூல். அதனால் "சா(ஜா)லியா தமிழ் இலக்கணம்" என்ற இந்நூலினை கையில் எடுக்கையில் மிகவும் அதிக எதிர்பார்ப்புடனேயே எடுத்தேன். என் எதிர்பார்ப்பினை இந்நூல் நிறைவு செய்ததா என்றால், பல மடங்கு அதிகமாகவே நிறைவு செய்துள்ளது எனலாம்.
தமிழ் இலக்கணம் என்பது, அரசாங்க விருது பெரும் கலைத் திரைப்படங்களைப் போல மிகவும் வறண்ட தலைப்பாகும். என் பள்ளிக்காலங்களில் நான் இலக்கணம் படித்தபோது, அதற்கென பரிந்துரைக்கப் பட்ட பாட நூல்கள் இலக்கணத்தை கற்பித்ததை விட அதன் மேல் ஓர் (இங்கு நுண்ணரசியல் ஒளிந்துள்ளது) அருவருப்பையே அதிகம் ஏற்படுத்தின. இலக்கணத்தை அறிந்து கொள்ள நான் பெரும்பாலும் பாடல்களை (இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் முதலியன) மனனம் செய்து கொள்வேன், ஆசிரியர்களின் விளக்கத்தைப் படிப்பதை இயன்றவரை தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவை பெரும்பாலும் கண் அராவும். ஆனால் இந்நூல் மிகவும் அற்புதமாக எளிய தமிழில் இந்த விதிகளை விளக்குகின்றது. இந்நூல் என் பள்ளிக்காலத்தில் கிடைத்திருந்தால் மிக மிக உறுதுணையாக இருந்திருக்கும்.
இந்நூல் ஓராண்டு + சில மாதங்கள் முன்பே கிடைத்திருந்தால், என் திருமணத்தின் தாம்பூலப் பையில் இதையும் ஒரு பரிசாக இணைத்திருந்திருப்பேன். அநேகமாக என் பள்ளிக்கு இந்நூலை ஒரு நூறு எண்ணிக்கை வாங்கி அளித்தாலும் அளிப்பேன் என்று நினைக்கிறேன். இந்நூலைப் படிக்கும்போது ஓர் எட்டாம் வகுப்பு மாணவன் மன நிலையிலேயே படித்தேன். இது இன்னும் அனுபவித்து படிக்க ஏதுவாக இருந்தது.
தமிழ் இலக்கணத்தில் நீ என்னபடித்தாய் என்று என்னிடம் யாராவது கேட்டால், என்னென்ன தலைப்புகள் தோன்றுமோ அத்தனையையும் இந்நூல் விளக்கி இருக்கிறது. இவ்வளவு சிறிய நூலுக்குள் இடக்கரடக்கல், குழூஉக்குறி போன்றவையும் கூட விளக்கப்பட்டுள்ளன. ழகர, ணகர, ரகர வேற்றுமைகள் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் பயன்படுத்தப் படும் சொற்களின் அட்டவணை, இந்த வேற்றுமைகளை வைத்து விளக்கப்பட்டுள்ளது. இது தமிழில் எழுதப் படிக்க சிரமப்படும் எந்த மாணவருக்கும் உறுதியாக உதவும்.
இந்நூலில் இருந்திருக்கலாம் என்று கருதிய ஒன்று, தொல்காப்பியப் பாடல்களை கடைசியில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்திருக்கலாம். இந்நூலின் ஆசிரியரோடு நான் முரண்படும் ஒரேயொரு இடம் "வாழ்த்துக்கள் என்பது தவறு" என்பது. இதில் நான் எதிர்க்கட்சி, பிழை இல்லை என்று கருதுகிறேன். அதே சமயம், "வாழ்த்துகள்" என்றே நான் எழுதுகிறேன் ஆனால் வலி மிகுபவர்களைத் தவறென்று சொல்ல மாட்டேன்.
உங்களுக்கு தமிழ் படிக்கத் தெரிந்தால், நீங்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் இது. நான் தமிழ்நாட்டுப் பாட நூல் கழகத் தலைவரானால், மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, மிதிவண்டி என்று பணத்தை வாரியிறைப்பதற்கு பதிலாக இந்நூலை கண்டிப்பாக இலவசமாகக் கொடுத்திருப்பேன். தமிழ் படிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதற்கு இத்தகைய நடைமுறைத் தமிழ் நூல்கள் அவசியம் தேவை. நீங்களும் வாங்கிப் படியுங்கள், உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு வாங்கிப் பரிசளியுங்கள்.
இணையத்தில் வாங்க: கிழக்கு பதிப்பகம்.
***
நன்றி..
ReplyDelete