The Elegance of Hedgehog
நான் கல்லூரியில் படித்த நாட்களில் ஆர்வம் இருக்கும் மாணவர்களுக்காக சில பிரத்யேகத் தலைப்புகளில் மாலை வகுப்புகள் நடக்கும். சொல்லப்போனால் வகுப்பில் கற்றுக்கொள்வதை விட மாலை ஒன்றாக உட்கார்ந்து விவாதிக்கும்போது நிறைய புரிந்தது போலிருந்தது. ரெண்டு மாதங்கள் மேலை தத்துவம் பற்றிய வகுப்பில் சேர்ந்திருந்தேன். பசி முற்றிய மாலை வேளையில் நமது இருப்பின் அர்த்தம் என்ன என தர்க்க ரீதியாகப் பேசிப்பார்ப்பது சங்கடம் அளிக்கும் என்றாலும் ஏதோ ஒன்று ஈர்த்தது. 'வேலைக்காகாத' விவாதங்கள் எனப் பலரும் அபிப்ராயப்பட்டாலும், நம்மை உணரக் கூடிய தருணங்கள் இவ்விவாதங்களில் உண்டு.
தத்துவ விவாதங்களில் முதல் கேள்வி முக்கியமானது. நாம் பார்க்கும் உலகுக்கும், நமது மூளையில் உணரும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய கேள்வி. நம்மைச் சுற்றி இருக்கும் மேஜை, நாற்காலி, கரும்பலகை எல்லாமே பருப்பொருட்களால் ஆனவை. ஆனால் நமது மூளை அவற்றை உணர்வுகளாகப் பதிந்து புரிந்துகொள்கிறது. இதையே தலைகீழாகப் பார்த்தால் - நமது மூளையை நம்ப வைத்தால் போதும், நம்மைச் சுற்றியுள்ள உலகம் காலியாக இருந்தாலும் கவலை இல்லை. டிஸ்னி லேண்டில் இருப்பது போன்ற பிம்பத்தை சமையலறையில் இருக்கும்போது உருவாக்கிவிடலாம்.
நாம் அனைவரும் 'மேட்ரிக்ஸ்' படத்தைப் பார்த்திருப்போம். அதில் திடுமென ஹெலிகாப்டர் ஓட்டவும், கராத்தே பயிற்சி செய்யவும், காதலிக்கவும் மூளையில் பயிற்சிகளை தரவிறக்கம் செய்வார்கள். அது போல நமது மூளைக்கும் - உடம்புக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதுதான் தத்துவத்தின் முதல் படி. நமது இருப்பை நிர்ணயிப்பதும் இந்த புரிதலில்தான் உள்ளது.
இப்படியெல்லாம் பேசினால் நமது கண்டிஷனை சந்தேகிப்பார்கள். இப்படிப்பட்ட தத்துவ விவாதங்கள் கறிக்கு உதவாது என்பதே நடைமுறை (சில தத்துவ பேராசிரியர்களை விட்டுவிடுவோம்). ஆனால் நடைமுறையில் தத்துவத்தைப் பற்றிக்கொள்ளாமல் வாழ்க்கையே கிடையாது. ஆனால் சதா சர்வ காலமும் தத்துவத்தையும், கறிக்கு உதாவாத விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க முடியாது. நம்மில் பலர் காசுக்காக ஒரு வேலையும், நமது ஈகோவை சாந்தப்படுத்த ரெண்டாவது வேலையும் செய்கிறோம். பெரும்பாலும், நாம் ஆர்வமிகுதியில் செய்யும் வேலை நமது அகத்தை நமக்குக் காட்டிவிடும் வல்லமை கொண்டது. அதனாலேயே நாம் அதன்பால் ஈர்க்கப்படுகிறோம், அதே சமயம் விலகவும் செய்கிறோம்.
ஒருவிதத்தில் தத்துவ அறிமுகம் நம்மைப் பற்றிய கேள்விகளை எழுப்பச் செய்கிறது. அதையும் மீறி நாம் உலகத்தோடு பொருந்தப்பார்க்கிறோம். வெளிப்படையாகத் தெரியும் வித்தியாசங்களைத் தாண்டி, நமது அகத்தில் தெரியும் வித்தியாசங்கள் முக்கியமாகின்றன. நான்கு ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் புத்திசாலித்தனமாகப் பேசிவிடுகிறாள் என வைத்துக்கொள்வோம். அந்த நால்வரில் ஒருவராக நாம் இருந்தால் இதை எப்படி எடுத்துக்கொள்வோம்? அதைப் பற்றிய விவாதங்களை நாம் மேற்கொள்ளும் போது நம்முள் ஒளிந்திருக்கும் அந்நியன் வெளிப்படும் சாத்தியம் உள்ளது. ஆனால், சமூகத்தோடு ஒத்துப்போவதற்காக நாம் ஒரு வெளிவேஷம் கட்டிக்கொள்கிறோம். அதை எத்தனை சாமர்த்தியமாகச் செய்கிறோம் என்பதே நமது அடையாளமாக உள்ளது.
ஒவ்வொருவர் செய்யும் வேலைக்கு ஏற்றார்போல அவரது ஆர்வங்களும் மூளையும் இருக்கும் என்பது ஒரு பொது நம்பிக்கை. பெரிய நிறுவனத்தின் மேலாளர் மற்ற துறைகளில் முட்டாளாக இருந்துவிட்டால் நாம் கவலைப்படுவதில்லை. ஆனால், அதே நிறுவனத்தின் காவலாளி சார்புத் தத்துவம் பேசினால் நாம் எத்தனை வியப்படைவோம்? அவரை ஏளனம் செய்யவும் தயங்க மாட்டோம். எழுத்தாளர்களே இதற்கு சரியான உதாரணம். சுந்தர ராமசாமியைப் பற்றித் தெரியாதவர் அவரது துணி கடைக்கு வரும்போது, தத்துவ விவாதங்கள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வார்? இதனால் வணிகம் கூட பாதிப்படையலாம். அதனால் இலக்கிய விசாரங்களை கடையில் வைத்துக்கொள்ளாமல் இரு விதமான வாழ்க்கையை அவர் வாழலாம்.
சரி நாவலுக்குள் நுழைவோம்.
ரெனே மிஷல் எனும் 54 வயது அடுக்குமாடிக்கட்டிட ரிசப்சனிஸ்ட் பெரும் படிப்பாளி. ஆனால் தனது வேலைக்கு சிக்கல் வந்துவி டுமோ என எண்ணி அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருப்பவர். அதே கட்டிடத்தில் பன்னிரண்டு வயது பலோமா எனும் சிறுமியும் வசிக்கிறாள். அவளும் பெரிய படிப்பாளி, ஆனால் தனது பதிமூன்றாவது பிறந்தநாளில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். அதீத அறிவிருந்தாலும், வாழ்க்கைக்காக சில அட்ஜெஸ்ட்மெண்டுகளை செய்து கொள்ள வேண்டும் என்பதே அவளுக்குப் பிடிப்பதில்லை. கூடுதலாக, அவளது அப்பா தனது பல நண்பர்களைக் அறிமுகப்படுத்தி சமூகத்தோடு இணையச் சொல்வது அவளுக்குப் பிடிப்பதில்லை. மேம்போக்கான வேஷம் போடும் மனிதர்களாக எல்லாரையும் பார்க்கிறாள்.
டால்ஸ்டாய், பிரெஞ்சு தத்துவ மேதைகள், தேர்ந்த இசைக் கலைஞர்கள் பற்றிய ஆர்வம் மிக்கவளாக ரெனே இருக்கிறாள்.ரெனேவின் ஆர்வங்களைத தெரிந்துகொண்டாலும் பலோமா அவளுடன் நேரடியாகப் பேசுவதில்லை. அபார்ட்மெண்டில் வாழும் ஒசு எனும் உணவு விமர்சகருக்கும் பலோமாவுக்கும் சினேகிதம் உண்டாகிறது. ரெனே பற்றி ஒசுவிடம் பலோமா பகிர்ந்துகொள்கிறாள். ரெனேவின் மேதமை பற்றி அவரிடம் நேரடியாகக் கேட்காமல் இருக்க முடிவு செய்கிறாள். அவளுக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தை ரெனேவும் பகிர்ந்துகொள்ள ஒசுவின் அப்பார்ட்மெண்டில் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்கிறார்கள். பொதுவாக இலக்கியம், இசை, சினிமா என தேர்ந்த ரசனை மூவரையும் இணைக்கிறது.
போலியான சமூகத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கும் பலோமாவுக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது. வாழ்க்கையில் சுகத்தை மட்டும் தேடினால் போதுமென இருக்கும் கூட்டத்தை எரிச்சலோடு எதிர்கொள்கிறாள். கிட்டத்தட்ட ஒவ்வொரு சந்திப்பிலும் இதைப் பற்றிய விசாரங்கள் நடக்கின்றன. அதுவும் நம்முள் இருக்கும் ரசனையை கொன்றொழித்துவிட்டு சுகத்தைத் தேடினால் போதுமென மொன்னையான சமூகமாக ஏன் மாற வேண்டும் எனக் குழம்புகிறாள். அதீதமான அறிவும், சிந்திக்கும் திறமையும் ஏன் எள்ளி நகைக்கப்படுகின்றன? சுரணையற்றை முட்டாளாக மாறினால் மட்டுமே சமூகத்தின் நம்மை ஏற்றுக்கொள்வார்களா? எனும் குழப்பமும் பலோமாவுக்கு ஏற்படுகிறது.
இக்கட்டத்தில் நாவல் விவாதங்கள் நிரம்பிய ஒன்றாக மாறிவிடுகிறது. தத்துவமும், சிந்தனைத் திறனும், அறிவும் மட்டுமே நமது அடையாளமாக இருக்க முடியும். சமூகத்தோடு எப்படி இயைந்து போகிறான் என்பது ஒரு அடையாளம் கிடையாது என மூவரும் திடமாக நம்புகிறார்கள். தத்துவச் சிக்கல்களாக இருந்தாலும், நாவல் நடைமுறை சிக்கல்களையும் இணைத்துப் பேசுகிறது. தத்துவத்துக்கும், சிந்தனை முறைகளுக்கும் நடைமுறையில் சரியான பிரயோகங்கள் உண்டா? அதாவது சமூக அடையாளத்தில் இவற்றுக்கான மதிப்பீடு என்ன? முள்ளம்பன்றி போல தேர்ந்த ரசனையோடு இருந்தாலும், மொன்னையான வெளிப்பாடு மூலம் சமூகத்தோடு இணைந்துகொள்ள வேண்டுமா?
முரியல் பார்பேரி எனும் பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய இந்த நாவல் விற்பனையில் சக்கை போடு போட்டது ஐரோப்பிய மனதின் அடிப்படையோடு உறவாடுவதால் எல்லா தரப்பினரையும் இந்த நாவல் கவர்ந்தது. மிடுக்கான தோற்றமும், சாப்பாட்டு மேஜை நாகரிகமும் தெரிந்தால் மட்டுமே சமூகத்தில் ஏற்றுக்கொள்வர் எனும் மேன் மக்கள் வாதத்தை இந்த நாவல் உடைக்கிறது. மனிதர்களை அளக்க வேறொரு கருவி தேவைப்படுகிறது. புற அடையாளங்களால் ஒரு மனிதனை கீழ்மைப்படுத்தும் முறையை எதிர்க்கிறது. தத்துவமும் நமது சிந்தனை முறையும் எப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியும் எனக் காட்டுகிறது.
சொல்லிவைத்தது போல ஐரோப்பாவின் அனைத்து மொழியிலும் இந்த நாவல் பிரபலமானது. தத்துவ மாணவளான முர்ரியல் பார்பேரி தன்னை சதா தொந்திரவு செய்து வந்த கேள்வி முன்வைத்துள்ளார். தத்துவமும், தர்க்கமும், சிந்தனையும் ஏன் சமூக கட்டமைப்பின் அடையாளமாக பார்க்கப்படுவதில்லை எனும் கேள்வி அவளது இளமைப்பருவம் முழுவதும் அலைக்கழிய விட்டதாம்.
அதே சமயம், நாவலின் முடிவில், வாழ்வின் மீதிருக்கும் பிடிப்பும், நாம் விட்டுச்செல்லும் உலகமும் இந்த வாழ்வை ருசிகரமாக ஆக்குகிறது எனப் புரிந்துகொள்கிறாள் ரெனே. ப்லோமாவுக்கு இது புரியவில்லை. ஆனால் ஒரு விபத்தில் ரெனே மரணமடையும்போது, அவளது இருப்பு சூனியமானது உணர்கிறாள். யாருக்கும் பயன்படாதவள் போலிருந்தவள் தனது வாழ்வில் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டாக்கியுள்ளார் எனப் புரிந்துகொள்கிறாள்.
தலைப்பு - The Elegance of Hedgehog
எழுத்தாளர் - முரியல் பார்பேரி.
கட்டமைப்பு - நாவல்.
இணையத்தில் வாங்க - The Elegance of Hedgehog
No comments:
Post a Comment