A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai Maugham Michael McCarthy O.Henry Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks Stephen King Swami Tejomayananda Upamanyu Chatterjee William Sydney porter dhan gopal mukerji mark tully okakura kakuzo saggi steven weinberg vikram seth ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

8 Apr 2013

Zen - Images, Texts and Teachings, edited by Miriam Levering and Lucien Stryk

ஒரு காலத்தில், என் இருபதுகளின் ஆரம்பங்களில், எக்கச்சக்கமான ஜென் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இருத்தல் குறித்த கொதிப்பான அந்த நாட்களில் ஒரு நாள் இரவின் கனவில் ஜென் குரு ஒருவர் காட்சியளித்து, "Am I absurd or profound?" என்று ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்டு, துரிதமான மூன்று ட்ரம் பீட்களில் என் கவனத்தைச் சின்முத்திரையிட்ட தன் இடக்கரத்தின்பால் ஈர்த்து ஞானத்தை வழங்கினார். அதன்பின் என் நாட்கள் இன்னும் கொதிப்பாயின. வழக்கமாகக் காப்பி குடித்ததும் வாசிக்கும் ஹிந்து பேப்பரில் "இந்த இடம் எந்த இடம்?" என்ற கேள்வியை திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தேன். குமிழ் மண்டை கொண்ட சின்னஞ்சிறு பச்சை மனிதர்கள் எவரும் "ஆத்துக்குப் போலாம் வாடா கண்ணு!" என்று என்னை அழைத்துச் செல்ல அண்டவெளியிலிருந்து வருகை தரவில்லை. ஐந்தரை மணிக்கே தண்ணீர் வரிசையில் குடத்தைப் போட்டு இடம் பிடித்து பம்ப் அடிப்பது, ஏழரை மணிக்குள் ரயில் பிடிப்பது, முதல் மூன்று தேதிகளில் மளிகை சாமான் பில்லை செட்டில் செய்வது, ரேஷன் கடையில் அரிசி வந்திருக்கிறதா என்று பார்ப்பது என்பது மாதிரியான அன்றாட கவலைகள் என் இருத்தலியல் கொதிப்பை முடிவுக்குக் கொண்டு வந்தன.

இன்றைக்குக் கொஞ்ச நாட்களாக ஜிமெயில் சாட்டில் ஒரு நண்பர் பச்சை விளக்கைப் பொருத்திக் கொண்டு "Do Something" என்று எப்போதும் ஆணையிட்டிருப்பதைக் காண்கிறேன். கொந்தளிப்பெல்லாம் அடங்கி சமர்த்தாக அலுவலகம் போய் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த என்னைப் பார்க்கும்போது, "இதென்னடா மரவட்டை வாழ்க்கை!" என்று அப்போது அமெரிக்கா சென்றிருந்த என் அத்தானுக்கும் அதுபோல் தோன்றியிருக்க வேண்டும். கர்ம சிரத்தையாக Miriam Levering and Lucien Stryk தொகுத்த "Zen - Images, Texts and Teachings" என்ற இந்த காபி டேபிள் புத்தகத்தை வாங்கி வந்து அதில், "Do Something! Anything!" என்று செவ்வெழுத்துகளில் எழுதி பரிசளித்தான் அவன். அழுகையைக் காட்டிக் கொள்ளாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். வழக்கமான ஜென் புதிர்கள் ஹைக்கூகள் காமெடி கதைகள் போக அவ்வளவு அருமையான புகைப்படங்கள் இதில் இருப்பது தனிச் சிறப்பு. 


சமகால தமிழ்சூழலில் ஜென் பௌத்தம் கோமாளித்தனத்துக்கும் ஹைப்பர் புத்திசாலித்தனத்துக்கும் இடையிலான ஒரு காலி மனையை ஆக்கிரமித்திருக்கிறது. இது இரண்டும் இல்லாமல் ஆன்மிகமாக இதை அறிந்தவர்களின் ஜென்னில் ஒரு சின்னத்தம்பி சாயல் உண்டு. இருபுறமும் திறந்திருக்கும் கிணற்று வாளியின் கொள்திறன், அபத்த தூண்டுதல்களையும் அச்சு அசலான உண்மைகளாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம், அகல விரிந்த கண்கள், அதீதமான அழகுணர்வு இந்த நான்கும் இருந்தால் நிலவொளி படர்ந்த தார் ரோட்டு இரவின் அழகைக் குலைக்காமல், தவளைகள் குளத்தில் குதிக்கும் மௌனத்தைக் கலைக்காமல், புத்தர் எதிரில் வந்தால் தயக்கமில்லாமல் அவரை வெட்டிச் சாய்த்துவிட யாரும் தயாராகி நிற்கலாம். தமிழில் எப்போது ஜென் இலக்கியமாக அறியப்பட்டதோ அப்போதே அதற்கு சாவு மணி அடித்து கிரிக்கெட்கள் சிர்ப்பி மூங்கில் குருத்துகள் முளைத்துவிட்டன.

ஆனால் ஒரு ஆன்மிகவாதியாக ஜென் பௌத்தத்தின் கோன்களையும் ஹைக்கூக்களையும் கடுமையான தத்துவங்களும் கோட்பாடுகளும் லேயர் லேயராக அடுக்கப்பட்ட கேக்கின் மேலிருக்கும் ஐஸிங்காக நாம் அறிவதே அதற்கு நியாயம் செய்வதாக இருக்கும். நமக்கு இந்தப் புரிதல் இல்லாவிட்டால்,

நேற்றிரவல்ல
இப்பகலல்ல
பூசணிப் பூக்கள் பூத்தன

என்ற பாஷோவின் ஹைக்கூ வெறும் அழகுணர்வு சார்ந்த வியப்பாக நின்று போகிறது.

"கோசோ கூறினார் : "ஒரு உதாரணத்தைத் தருவதானால், இது சன்னலின் வழியே செல்லும் எருமையைப் போன்றது. அதன் தலை, கொம்புகள், உடல் எல்லாம் உள்ளே புகுந்து விட்டன. ஆனால், வால் மட்டும் ஏன் நுழைய முடியவில்லை?""

என்ற கோனும்,

"உள்ளே நுழைந்தால், சாக்கடையில் விழும்;
திரும்பச் சென்றால், செத்தே போகும்.
இச்சிறு வால்,
எவ்வளவு பெரும் வியப்புக்குரியது!"

என்ற அதன் விளக்கமான மூமோனின் கவிதையும் யாரோ நம்மை கேலி செய்து சிரிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. அது உண்மையாகவும் இருக்கலாம்.

"பூனையைக் கொல்கிறான் நான்சென்" என்று ஒரு கதை. "யாராவது ஜென் சொல் சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பூனையைக் கொன்று விடுவேன்," என்கிறார் நான்சென். யாருக்கும் தக்க ஜென் சொல் தெரிவதில்லை. நான்சென் பூனையைக் கொன்று விடுகிறார். ஜோஷு அன்று மாலை மடம் திரும்பியதும் நான்சென் தன் சாகசத்தை அவரிடம் சொல்கிறார். ஜோஷு பதில் எதுவும் சொல்வதில்லை. தன் கால்களில் அணிந்திருந்த செருப்புகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டுகிறார். "ஜோஷூ, நீ மட்டும் அப்போது இங்கே இருந்திருந்தால் அந்தப் பூனையை நான் காப்பாற்றியிருப்பேன்," என்று சத்தம் போடுகிறார் நான்சென்.

இதற்கு மூமோனின் பாஷ்யக் கவிதை:

"ஜோஷு மட்டும் அங்கிருந்திருந்தால்
ஏதாவது செய்திருப்பான்.
அவன் மட்டும் கத்தியைப் பறித்திருந்தால்
நான்சென் தன் உயிருக்குக் கெஞ்சியிருப்பான்"

எனக்கு என்னவோ இந்த மாதிரி வீரச் செயல் எதுவும் நடந்திருக்கும் என்ற நம்பிக்கையில்லை. அப்போதும்கூட ஜோஷு செருப்பைத் தலையில் வைத்துக் கொண்டு "என்னமோ போடா மாதவா!" என்று வேறு பக்கம் போயிருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

சிட்னி மார்கன்பெஸ்ஸர் என்று ஒரு தத்துவர் பற்றி ரசமான ஒன்று சொல்வதுண்டு. இல்லாமல் போகவில்லை என்று சொன்னால் இருக்கிறது என்று அர்த்தம், இல்லையா? இந்த மாதிரியான டபுள் நெகட்டிவ்கள் பாசிடிவ் பொருள் தருவதுபோல், டபுள் பாசிடிவ்கள் நெகடிவ் பொருள் தருவதில்லை என்றாராம் ஒருவர். "Yeah, yeah" என்று பதில் சொன்னார் மார்கன்பெஸ்ஸர்.

ஜென் புதிர்கள் நாமரூபத் தோற்றங்களைத் தாண்டிச் செல்லச் சொல்கின்றன. ஜென் கதைகளும் அப்படியே. தர்க்கத்துக்கும் மொழிக்கும் நம் எதிர்பார்ப்புகளுக்கும் எதிரான போக்கு அதற்குண்டு. ஒரு நுட்பமான தளத்தில் ஜென் டபுள் பாசிடிவ்களைப் பயன்படுத்தி மொழியால் கட்டமைக்கப்பட்ட அத்தனையையும் மறுப்பதை உணர முடிகிறது.

ஆன்மிக சம்பந்தமான விஷயங்களில் சாஸ்திரம் சம்பிரதாயம் சாமியார் போன்றவற்றில் பக்தி பாவம் நமக்குப் பழக்கப்பட்ட ஒன்று. ஜென் அது அத்தனையையும் இன்னும் அதீதமான தளத்துக்குக் கொண்டு சென்று கேலி செய்கிறது. சாதாரண வாழ்க்கையில் ஏதோ ஒரு மாயம் நிகழ வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், ஜென் அப்படி ஒரு மாயம் உண்டு, ஆனால் அந்த மாயம் சாதாரண விஷயங்கள் சாதாரணமாக இருப்பதை அறிவதில்தான் இருக்கிறது என்று சொல்கிறது.

"மாசறு பொன்னைக் காண விரும்பினால், நீ அதை நெருப்பில் தேடு" என்று சொல்லும் மூமோன்தான் ஒரு பலசாலியை விவரிக்கும்போது-

கால்களால் நறுமணம் வீசும் கடலை உதைக்கிறான்,
தலையைக் குனிந்து நான்கு தியான சொர்க்கங்களையும் பார்க்கிறான்.
அவனது உடலுக்கு இருக்க இடமில்லை-
..................................

கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்.

என்று எழுதுகிறார்.

ஜென் கற்பதற்குமுன் மலைகள் மலைகளாக இருந்தன,
தண்ணீர் தண்ணீராய் இருந்தது. ஜென் கொஞ்சம் புரிந்ததும்
மலைகள் மலைகளாயில்லை, தண்ணீர் தண்ணீராயில்லை.
ஜென் இப்போது புரிந்ததும் அமைதி என்னை நிறைக்கிறது,
மலைகளை மலைகளாய், தண்ணீரை தண்ணீராய்ப் பார்க்கிறேன்.

என்ற ஏழாம் நூற்றாண்டு கவிதை ஜென் தத்துவத்தை ஏறத்தாழ சுருக்கமாக விவரித்து விடுகிறது. வாழ்க்கையில் யாரும் பிரச்சினைகள் வேண்டாம் என்று ஒதுங்க முடியாது, அதற்காக யாரும் நாளெல்லாம் தண்ணீர் பம்ப் வரிசையில் சந்தோஷமாக நின்று கொண்டிருக்கவும் முடியாது. நம் அனைவருக்கும் ஏதோ ஒரு மாயம் தேவைப்படுகிறது, அந்த மாயத்தை சொற்களால் கற்பனை செய்து கொள்கிறோம், அதில் சிறிதளவாவது அனுபவப்பட விரும்புகிறோம். உலகத்தில் எதுவும் எப்போதும் மாறாது. மலைகள் மலைகள்தான், தண்ணீர் தண்ணீர்தான். மாசறு பொன் நெருப்பில்தான் இருக்கிறது என்பதை உணரும்போது நமது உள்ளம் ஓரளவுக்காவது பண்படுகிறது. அது தனக்குப் பழக்கப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சமாவது நெகிழ்ந்து கொடுத்தால், சாதாரண விஷயங்கள் சாதாரணமாக இருக்கும்போதும் அதில் உள்ள மாயம் நம் மனதை அழகாலும் அமைதியாலும் நிறைக்கலாம்.

""புத்தன் என்பது என்ன?" என்று தைபை ஒரு முறை பாஸோவிடம் கேட்டான். "மனமே புத்தன்," என்றான் தைபை," என்ற கதைக்கு அப்போது,

"இனியும் புத்தன் எதுவென்று கேட்டால்
களவாடிய பொருட்களுடன் உன் களங்கமின்மையைச் சொல்பவன் நீ "

என்ற விளக்கத்தைவிடப் பொருத்தமான தரிசனம் நமக்கும் சாத்தியப்படலாம். எல்லாம் அப்படியே இருக்கும்போதும் எல்லாம் மாறிவிட்டது என்று உணரலாம்.

அல்லது மாறாவிட்டால்தான் என்ன என்றும் சொல்லலாம். 


Zen - Images, Texts and Teachings
Miriam Levering and Lucien Stryk
Amazon


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...