ஸ்ரீரங்கத்துக்
கதைகள்
சுஜாதா
உயிர்மை
Photo Courtesy/To buy:NHM
ஆம்னிபஸ்சில் மறுபடியும் சுஜாதா எழுதின புத்தகம்.
போன வாரம் ரொம்ப உக்கிரமான வாரம் - வெயில் பற்றிச் சொல்லவில்லை. என்னுக்குள் ஏகப்பட்ட கேள்விகள், அதிலும் இருத்தல் பற்றிய கேள்விகள். இத்தனைக்கும் என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான தேவைகள் எல்லாம் நிறைவேறியுள்ளன. ஆங்காங்கே சின்னச்சின்னதாய் நிறைய தோல்விகள், ஏமாற்றங்கள். எல்லாம் என்னுடைய முடிவுகள், என்னுடைய தவறுகள். இது அவ்வபோது எழும் Existential crisisதான். சென்ற வாரம் கொஞ்சம் அதிகமாகிவிட்டது.
வருடபிறப்புக்கு ஊருக்கு செல்லும்போது, இந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்று படித்தேன். இந்த சுயபுராணத்துக்கும் புத்தகத்திற்க்கும் இருக்கும் ஒரே தொடர்ப்பு சொந்த ஊர் நினைவுகள். அதுவும் சின்ன வயதில் இருக்கும்போது இருந்ததுபோல் இல்லாமல் இப்போது வேகமாகவே மாறி வரும் ஊர். நம் ஊர் நம்மிலிருந்து அந்நியப்படும்போது நாமும் எங்கோ அழிந்துக் கொண்டே வருகிறோம் என்கிற பயமும் அதிகமாகி விடுகிறது.
“ஸ்ரீரங்கத்துக் கதைகள்” என்ற இந்த தொகுப்பில் மொத்தம் 34 சிறுகதைகள் காலவரிசைப்படி தொகுப்பட்டுள்ளன. இதில் முதல் கதை 1974லும் கடைசி கதை 2003லும் எழுதப்பட்டுள்ளது. முன்னுரையில் சுஜாதா இந்த கதைகளைத் தனிப்பட்ட சிறுகதைகளாகப் படிக்கச் சொன்னாலும், கதைத் தொகுப்பை மொத்தமாகப் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகள்... உணர்வுகள், அவ்வளவே.
நாஞ்சில் நாடனுக்கு அவர் வாழ்ந்த நாஞ்சில் நாடு அவரது கதைகளின் கதை களம், ஆர்.கே நாராயணுக்கு மால்குடி, கி. ராஜநாரயணனுக்கு கோபல்ல கிராமம். அதுபோல சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம். தனது இளவயது ஞாபகங்கள் அந்த ஊரின் நகர வளர்ச்சியில் அழிந்து வந்தாலும் தனது காலத்தில் இருந்த நினைவுகளை ஒரு template ஆக வைத்துக் கொண்டு இந்தக் கதைகளைப் புனைந்திருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை இந்தக் கதைகளுடன் நம்மைக் கண்டிப்பாகப் பொருத்திப் பார்க்க முடியும், எதாவது ஒரு கதையிலாவது நம் பிம்பம்த்தைக் காண முடியும். நகர வாழ்வில் இருந்துவரும் மக்களுக்கு இந்தக் கதைகள் கொஞ்சம் அந்நியமாக இருந்தாலும், அவர்களும் இந்த கதைகளின் உத்தியை ரசிக்க முடியும்.
கதைகள் மூலம் நாம் அறிந்துகொள்வது என்ன ? மனித மனதின் நிலையாமை, அதன் கோபம், பாசம், துரோகம், நட்பு இன்ன பிற. இது எப்போதும் மாறுவது இல்லை, இல்லையா? இந்த எல்லா கதைகளிலும் ஒ.ஹென்றித்தனமான முடிவு இருந்தாலும், அது கதைக்கு சுவாரசியம் கூட்டுகிறதேயன்றி, கதையை இழுத்து நிறுத்த முற்படுவதில்லை. இந்தக் கதைகளின் மாந்தர்களை நாம் கண்டிப்பாக நிகழ்கால வாழ்வில் பார்க்கலாம் - என்ன கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம்.
“ராவிரா” கதையில் மனைவியின் துரோகத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் ராவிரா ஆகட்டும், “திண்ணா” கதையில் சிறு வயது முதல் பாசுரம் படித்து சொற்பொழிவு நடத்தும் “திண்ணா” கடைசியில் சினிமாவில் production-in-charge ஆக போவதாகட்டும், எல்லாம் காலத்தின் கட்டாயமல்லாமல் வேறு என்ன?
“சேச்சா” கதையில் மனிதனின் நிலையாமை பற்றி பேசுகிறார். ஏழை குடும்பத்தில் இருந்து வரும் சேச்சா, நன்றாக படித்து வேலைக்கு வருகிறார். ஆனால் அவரின் தந்தையை போலவே, மிக இளவயதில் இறந்து விடுகிறார். “குடுமி” கதையில் யார் வற்புறுத்தியும் தனது குடுமியை எடுக்க மறுக்கும் ராகவன், இதனால் அமெரிக்கா போகும் வாய்ப்பை இழக்கிறான். ஆனால் மனம் தளராமல் குடுமியை எடுக்க மறுக்கிறான். அதே சமயம் தன்னுடைய காதலான கணிதத்தை விடாமலிருக்கிறார்.
இந்தக் கதைகளில் சுஜாதாவின் பாட்டியும் ஒரு அங்கமாக தொடர்ந்து வருகிறார். இதில் இரு கதைகள், “மறு” கதையில் காசைத் திருடிவிட்டு அதை மறைத்து விடுகிறார். பாட்டியின் கடைசி காலத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதே மாதிரி “காதல் கடிதம்” கதையில் சுஜாதா எழுதாத கடிதத்துக்கு (காதல்), பாட்டி எப்படி அதில் இருந்து விடுவிக்கிறார், என்பதை விவரிக்கறார்.
இந்த கதைகளில் Calf loveஉம் வருகிறது, விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும் வருகிறது. “பாதரசம்” கதையில் பதினொரு வயது பாலகன் இருபத்தியொரு வயது பெண்ணை விரும்புகிறான். அதே மாதிரி “குண்டு ரமணி” கதையில் தனது குழந்தையை இழந்துவிட்டு தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் குண்டு ரமணியை இந்தக் கதை உக்கிரமாக கடைசியில் விவரிக்கிறது.
தொகுப்பில் உள்ள கதைகளில் அங்கங்கே திருவாய்மொழியும், ஆழ்வார்கள் விஷ்ணுவை புகழ்ந்து பாடிய பாடல்களும், கதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. கடைசி சில கதைகளில் சில பாசுரங்கள் கதையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கதைகளைப் படித்துவிட்டு இவற்றில் வரும் இரு வரி பாசுரங்களைப் படித்தால் கதைகளை இன்னும் மிக அருகில் பார்க்க முடிகிறது.
No comments:
Post a Comment