திருப்புமுனைகள்
என்.சொக்கன்
பக்கங்கள் : 280
விலை: ரூ.160
மதி நிலைய வெளியீடு
சாலைகளில் திருப்பங்கள் வரும் முன்னர், இடது, வலது அல்லது கொண்டை ஊசி வளைவு வரப்போகிறது என்று அறிவிப்புப் பலகை வைத்து எச்சரிக்கை செய்வார்கள். வாழ்க்கையில் அப்படி கிடையாது. அப்படிப்பட்ட திருப்புமுனை வந்து சென்றபின்னரே அது பற்றி நமக்குத் தெரியவரும். (சில நேரங்களில் அது தெரியாமலேயேகூட போகலாம்). அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நம் திறமை இருக்கிறது.
ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வரும். அந்த கதாநாயகன் ஒரு பேருந்தைப் பிடிக்க ஓடுவார். அந்த பேருந்தில் போனால்தான் அவரால் ஒரு நேர்காணலில் பங்கேற்க முடியும், வேலையும் கிடைக்கும். அப்படி அவர் பேருந்தைப் பிடித்துவிட்டால் என்ன ஆகும், பிடிக்காவிட்டால் என்ன ஆகும் என்று இரு வேறு கிளைகளாக கதை சொல்லியிருப்பார்கள்.
ஆனால் நடைமுறையில் அப்படி இரு பாதைகளிலும் பயணித்துப் பார்க்க நமக்கு வாய்ப்பு கிடைக்காது. உதாரணத்திற்கு, அலுவலகத்தில் நம் மேலாளர் விடுப்பில் உள்ளார். அந்த சமயம், அவரது மேலாளர் நம்மிடம் வந்து - "உடனடியாக ஒரு முக்கியமான கூட்டம் இருக்கிறது. நீ வந்து அதில் பேச வேண்டும்" என்கிறார்.
பெரும்பான்மையோர் என்ன சொல்வார்கள்? "அது பற்றி எனக்குத் தெரியாது. என் மேலாளருக்கு மட்டுமே தெரியும். அவர் வந்தவுடன் இதை வைத்துக் கொள்ளலாமே" என்பர். ஆனால், உயர்வதற்கான வாய்ப்பைத் தேடுபவர்கள், வாழ்க்கையில் உயரவேண்டும் என்கிற லட்சியம்/வெறியோடு இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு ஐந்து நிமிடம் கொடுங்கள், இதோ வருகிறேன் என்று அந்தக் கூட்டத்திற்குச் சென்று ஒரு கலக்கு கலக்கி விட்டு வருவார்கள்.
அப்படி மிகவும் அரிதாகக் கிடைக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதனையாளர்கள் ஆன ஐம்பது பேரைப் பற்றிய புத்தகமே இது. அலெக்ஸாண்டர் முதல் நம் அப்துல் கலாம் வரை; ஷாஜகான் முதல் ஒபாமா வரை, ஒவ்வொருவரைப் பற்றியும் இரண்டிலிருந்து ஐந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறு கட்டுரைகள். இந்த ஐம்பது பேரும் பலருக்கும் தெரிந்தவர்களே. தெரியாத விஷயம் என்னவென்றால், அவர்கள் இந்த நிலைக்கு வரும்முன் என்னென்ன சோதனைகளை எதிர்கொண்டனர், எவ்வளவு தோல்விகளை சந்தித்துள்ளனர், அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகையது என்பதுதான். இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கிறது.
அட இதெல்லாம் அவர்கள் அதிர்ஷ்டம், அதனால்தான் அவர்களால் உயர முடிந்தது, நானும்தான் அந்த ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லலாம். ஆனால், உழைப்பு, லட்சியம், கொள்கை, தொலைநோக்கு என்று பலதும் இருந்தால், அதிர்ஷ்டம் தானாக வரும் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
இந்த அனைத்துக் கட்டுரைகளும், அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும் நமக்கு மிகவும் பயனுள்ளவை என்றாலும் எனக்கு 'நச்'சென்று 'ரீச்' ஆன இரு குறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.
சிட்னி ஷெல்டன்:
இவரது துவக்கக் கால கதைகள் அனைத்தும் பிரசுரமாகாமல் திரும்பி வந்த காரணத்தால், மனமொடிந்து தற்கொலை செய்யப் போனபோது அவர் தந்தை சொன்ன கருத்துகள் மிகவும் அற்புதம். அவை இதோ:
வாழ்க்கை என்பது ஒரு விறுவிறுப்பான நாவல் மாதிரி. அடுத்த பக்கத்தில் என்ன இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அந்த எதிர்பார்ப்பு, சஸ்பென்ஸ்தான் இந்த வாழ்க்கையின் சுவாரசியம். அப்படிப்பட்ட நாவலை முழுக்கப் படிக்காமல், நடுவிலேயே திடுதிப்பென்று மூடி வைத்துவிட்டால் எப்படி?
இதைக் கேட்ட சிட்னி, தற்கொலை முயற்சியை கைவிட்டு, பின்னர் வாழ்க்கையில் வெற்றியாளர் ஆனார் என்பது வரலாறு.
அருட்பெருஞ்சோதி வள்ளலார்:
இந்தக் கட்டுரையில் ஆசிரியரின் கருத்துகள் இதோ:
பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் நம் வீட்டுக் கதவை தட்டுவதில்லை. காற்றில் பலூன் போல் மிதந்து வருகின்றன. அவற்றை நாம் நிமிர்ந்து பார்க்காமல் அலட்சியமாக இருந்து விட்டால், பலூன்கள் நமக்காகக் காத்திருக்காது. ஆகவேதான், எப்போதும் தலைநிமிர்ந்து கவனத்தோடு காத்திருப்பது அவசியமாகிறது. வாய்ப்பு பலூன்கள் தென்படும்போது அவற்றை எகிறிப் பிடித்துவிட்டால், அப்படியே மிதந்து உயரே சென்றுவிடலாம். சிகரம் தொடலாம்.
திருப்புமுனைகள் எப்படியெல்லாம் வரலாம் என்று ஐம்பது உதாரணங்களை இந்த புத்தகத்தில் படித்துவிட்டு, அடுத்து உங்கள் வாழ்க்கையில் வரும் திருப்புமுனையை கண்டறிந்து, முன்னேற வாழ்த்துகள்.
அடுத்த பத்திகளை 'இன்று ஒரு தகவல்' தென்கச்சி குரலில் படிக்கவும்.
இப்படித்தான் ஒருத்தர் பெரிய சூப்பர் மார்க்கெட் தலைவரா இருக்கையிலே, ஒரு நிருபர் அவர்கிட்டே வந்து, உங்க வெற்றியின் ரகசியத்தை சொல்லுங்கன்னாரு. இவரும் சொல்ல ஆரம்பிச்சாரு.
"இந்தக் கடையில் முதலில் நான் பொட்டலம் கட்டும் பையனாகத்தான் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போல்லாம் ரொம்ப நேரம் உழைப்பேன். அதனால் படிப்படியாக உயர்ந்து, விற்பனையாளராக ஆனேன்."
"அப்படியே வளர்ந்து கடை உரிமையாளராகவும் ஆயிட்டீங்க. சரிதானே?"
"இல்லே. அந்த சமயத்தில்தான் முதலாளியோட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"னாரு.
பாருங்க. அதுதான் அவருக்கான திருப்புமுனை.
***
திருப்புமுனை.. இறுதி குட்டிக்கதை நச். :)
ReplyDelete